திண்டுக்கல்லில் பெரியார் சிலை திறந்த நேரத்திலே கலைஞரை வைத்துக் கொண்டு எங்களையெல்லாம் வைத்துக் கொண்டு அய்யா அவர்கள் சொன்னார்கள்.
எனக்கு மட்டும் அல்ல - சிலை
பகுத்தறிவாளர்களுக்கு சிலை வைக்கவேண்டும். எனக்கு மட்டுமல்ல,பகுத்தறிவாளர்கள் எல்லோருக்கும் சிலை வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சொன்னார். எங்கள் பெருமைக்காக அல்ல.
இந்த கொள்கையை சொன்னவன் வெற்றி பெற்றிருக்கின்றான்
இந்தக் கொள்கையைச் சொன்னவன் வெற்றி பெற்றிருக்கின்றான் என்பது வருங்காலத் தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்திருக்கிறார்கள் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.
இந்த சிலையின் கீழே கடவுள் மறுப்பு வாசகங்களைப் போட்டிருக்கின்றோம் - பெரியார் சொன்ன அந்த கடவுள் மறுப்பு வாசகங்கள். உடனே இன எதிரிகள் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் - நெருக்கடி காலத்திலே.
நீதிபதி இஸ்மாயில் சொன்ன பதில்
இவைகள் எல்லாம் வைக்கக் கூடாது, எடுக்கவேண்டும் என்று நீதிமன்றத்திற்குச் சென்று சொன்னார்கள். ஆனால், நீதிபதி இஸ்மாயில் அவர்கள் அங்கே ஒரு நம்பிக்கையாளராக இருந்தால்கூட, நியாயத் தராசை சரியாகப் பிடித்த காரணத்தால் நீதிபதி அவர்கள் சொன்னார்கள். ஒரு தலைவருக்கு சிலை வைக்கும்பொழுது அவருடைய கொள்கை என்னவோ அதைத்தான் அவருடைய சிலை பீடத்தின் கீழே போடவேண்டும் என்று எதிர் பார்க்கவேண்டுமே தவிர, பெரியாருக்கு சிலை வைக்கும்பொழுது சங்கராச்சாரியாருடைய மேற்கோளையா போடுவார்கள் என்று தெளிவாகக் கேட்டார்கள்.
சிலை உங்களைப் போலவே இல்லீங்களே!
தந்தை பெரியார் அவர்களுக்கு முதல் சிலை வைக்கப்பட் டது. அதை ஒருவர் வந்து பார்த்துவிட்டு பெரியாரிடம் போய் சொன்னார். அய்யா உங்களுடைய சிலை உங்களைப்போன்று இல்லையே, கொஞ்சம் வேற்றுமையாக இருக்கிறதே என்று சொன்னார்கள்.
உடனே அய்யா அவர்கள் அதற்கு பதில் சொன்னார். சிலை என்னை மாதிரி இருக்கவேண்டுமே என்று அதை பார்க்காதீர்கள். சிலைக்குக் கீழே இருக்கின்ற வாசகம் என்னுடைய வாசகம்தானா என்று பாருங்கள், அதுதான் ரொம்ப முக்கியம்.
அய்யா அவர்கள் சொன்ன வாசகம்தான்
இதை அய்யா அவர்கள் சொன்னார்கள். கடவுள் இல்லை, கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுள் இல்லை, கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை என்று தெளிவாகச் சொன்னார்.
நன்றாக நினைத்துப் பாருங்கள். இன்றைக்கு இந்தக் கொள்கையைக் கேட்கும்பொழுது பலருக்கு கொஞ்சம் கடினமாகக் கூட இருக்கலாம்.
உண்மையாகக் கடவுளை நம்பக் கூடியவர்கள் உண்டா?
ஆனால், அதே நேரத்திலே இன்றைக்கு உண்மையாகவே கடவுளை நம்பக் கூடியவர் ஒருவர் கூட இல்லையே. அப்படி இருந்திருந்தால் யாரும் கோவிலை பூட்டியே வைத்திருக்க மாட்டார்கள். பூட்டி வைக்கப்பட்ட உண்டியல்கள் கூட காணாமல் போகிறது. அதைக் கண்டு பிடிக்கக் கூட கடவுளை மற, மனிதனை நினை, காவல்துறையை நினை என்று சொல்லக் கூடிய அளவுக்குத்தானே இருக்கிறது.
எல்லா கடவுள்களுக்கும் மெட்டல் டிடக்டர்
ஆகவே இன்றைக்குத் திருப்பதி வெங்கடாஜலபதி உட்பட எல்லா கடவுள்களையும் பார்க்க வேண்டுமானால் மெட்டல் டிடக்டர்களுக்குள்ளேதான் பக்தர்கள் அனுமதிக்கப்படு கிறார்கள் மதுரையில் ஆற்றிலே கள்ளழகர் இறங்கினாலும், மீனாட்சி சுந்தரரேசுவரருக்கு திருமணம் நடக்கும்பொழுதும் பக்தர்கள் மெட்டல் டிடக்டர் உள்ளே நுழைந்துதான் வருகின்றார்கள் என்று சொன்னால் கடவுளுக்கு இல்லாத சக்தி இவைகளுக்கு இருக்கிறது.
தன்னையே காப்பாற்றிக் கொள்ளாதவன்
கடவுள் சர்வசக்தி படைத்தவன். அவன் பார்த்துக் கொள்வான் என்றால் விட்டார்களா?
பெரியார் ரொம்ப எளிமையாகக் கேட்டார். தன்னையே காப்பாற்றிக் கொள்ளாதவன் உன்னை எங்கே காப்பாற்றப் போகிறான்? முதலில் அதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? என்று எளிமையாக கேட்டார்.
பெரியார் யாரையும் சிந்திக்க வைப்பார். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல அவருடைய நோக்கம். மக்களை பண்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.
மகாத்மாவைவிட பரமாத்மாவாக
தந்தை பெரியார் சொன்னார். நான் மட்டும் கொஞ்சம் கடைசி நேரத்தில் கடவுள் என் கனவில் வந்தார் என்று சொல்லியிருந்தால் என்னை மகாத்மாவைவிட பரமாத்மாவாக ஆக்கியிருக்க மாட்டானா?
ஒவ்வொரு பார்ப்பனர் வீட்டிலும் என் படம் தொங்கும்
என்னுடைய படம் ஒவ்வொரு பார்ப்பான் வீட்டிலும் தொங்குமே. ஒவ்வொரு பாப்பாத்தியும் என் படத்திற்கு முத்தம் கொடுப்பார்களே என்று அவருக்குரிய வயதுக்கு அனுபவத்திற்கு அவர் வேடிக்கையாக, நகைச் சுவையாக சொன்னார்.
எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால், நண்பர்களே, மக்கள் அவர்மீது பழி தூற்றப்படுவதைப்பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. ஒரு நல்ல புரட்சியாளனுக்கு அதுதான் அடையாளம். கொள்கையிலே சமரசம் செய்துகொள்ள அவர்கள் ஒருக்காலும் சம்மதித்தது கிடையாது.
சிலையைப் பார்க்கும் பொழுது உள்ளத்தில் உறுதி
எனவே இந்த சிலையைப் பார்க்கும்பொழுது உங்களுக்கு உள்ளத்தில் உறுதி பிறக்கவேண்டும். முயற்சியால் வெல்ல முடியும் என்ற எண்ணம் வரவேண்டும். இந்த சிலையைப் பார்க்கும் பொழுது உங்களுக்குத் தன்மான உணர்வு பெறவேண்டும். இனமான உணர்வு பெறவேண்டும்.
கூனன் நிமிர்வான்
குருடன் விழிபெறுவான்
மனிதா நீ சிந்திக்கப் பிறந்தவன். செயலாக்கம் செய்ய பிறந்தவன். தன்னம்பிக்கையோடு வாழ்! தன்மானத்தோடு வாழ்! தலைவிதி என்று உன் அறிவை சுருக்கிக் கொள்ளாதே என்ற அந்த வீர உணர்வு இருக்கிறதே அது உங்களை மிகப் பெரிய அளவுக்கு நிமிர்த்தும்.
எனவே இந்த சிலையைப் பார்த்தால் கூனன் நிமிர்வான், குருடன் விழி பெறுவான் என்று சொல்லக் கூடிய அளவிற்கு கருத்துத் துறையை இந்த நாட்டிலே உருவாக்கியிருக்கின்றார்கள்.
---------ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் 26-4-2008 அன்று அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையிலிருந்து "விடுதலை" 7-5-2008
Search This Blog
8.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment