Search This Blog

16.5.08

பெண்களை முட்டாளாக்கி விட்டோம்

ஆணின்மீது பெண்ணுக்கு எப்படி ஆதிக்கம் இல்லாமற் போய்விட்டது என்பது குறித்துச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். மக்கள் பூரண சுதந்திரர்களாக வாழ்ந்து பண்டைக்காலத்து இவ்வித அடிமைமுறைத் திருமணம் ஏற்பட்டிருக்கக் கூடுமென்று நம்மால் நினைக்க முடியவில்லை. தனிவுடைமைச் சுதந்திரம் இல்லாதபோது தனக்கே பிள்ளை பிறக்க வேண்டுமென்கிற நிர்ப்பந்தம் உதித்திருக்க இடமே இல்லை. என்றைக்குத் தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக்கொள்ள உரிமை ஏற்பட்டதோ, அதன் பிறகுதான் திருமண முறையும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடிச் சேமித்துவைக்கும் உரிமை ஏற்பட்ட பிறகுதான் வெளியே பொருள்தேடிச் செல்லும்-போது தான் சேமித்து வைத்துள்ள பொருளைப் பாதுகாக்கவும், தான் வந்தபோது தனக்குச் சிரம பரிகாரம் செய்யவும் ஒரு ஆள் தேவையாயிருந்தது. எந்த ஆணும் மற்றொரு ஆணுக்கு இவ்விதமான உதவி செய்ய முன் வந்திருக்கமாட்டான். எனவே, இவ்வேலைக்கு ஒரு பெண்ணைத்தான் நாடவேண்டியிருக்-கிறது. முதலில், பெண் ஒருவனது சொத்துக்குப் பாதுகாப்பாக அமைந்த பிறகு, அவனுக்குச் சொத்துமானாள். பிறகு அந்தச் சொத்துக்கு வாரிசு தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. வாரிசு தேட ஆரம்பித்த காலத்தில்தான், தன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்ததாக இருக்கவேண்டும் என்கிற காரணத்தால் அவளைத் தனக்கே உரிமை-யாக்கிக்கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு புருஷனை நாடாமல் இருக்கும்படி செய்யவும் ஆன நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மனித சுபாவம் இப்படித்தான் இருக்கும். அதாவது, தான் தேடிய பொருளைத் தனது இறப்புக்குப் பிறகு அனுபவிக்கப்போகும் வாரிசு, தனக்கே பிறந்ததாக - தன் இரத்தத்திலிருந்து தோன்றிய-தாக இருக்கவேண்டும் என்று நினைப்பது இயற்கையின் பாற்பட்டதே ஆகும். எனவே பெண் அடிமையாக்கப்படவும், அவளது இயற்கை ஆதிக்கம் பறிமுதல் செய்யப்படவும் ஆணுக்கு மட்டுமே சொத்துரிமை கொடுக்கப்-பட்டதுதான் காரணமாகும். ஆணுக்கு மட்டும் நிபந்தனை ஏதும் இல்லாமைக்கும் இதுவே காரணம்.

இன விருத்திக்காகவும் ஒருத்தி ஒருவனோடு கூடி வாழவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இல்லை. மனித சுபாவமும் - தன் மனைவி எவ்வளவுதான் அழகாயிருந்தாலும், வேறு பெண்ணை நாடும் நிலையில்தான் இருக்கிறது. எனவேதான், அவனால் மனைவியைத் தவிர்த்து வேறு வைப்பாட்டிகளை வைத்துக்கொள்ளவும், ஒரு மனைவி இருக்கும்போதே பல பெண்களை மணந்துகொள்ளவும், ஒரு மனைவி இறந்த பிறகு, அவளுக்குக் கரும காரியம் நடத்தும்-போதே வேறு பெண்களைப் பற்றிச் சிந்திக்கவும் முடிகிறது. இவற்றிலிருந்து, ஒருத்தி ஒருவ-னோடுதான் சேர்ந்து குடும்பம் நடத்திவரவேண்டுமென்று இயற்கை நியதி ஒன்றும் இல்லையென்று அதி திடமாய்ச் சொல்லலாம். மற்ற ஜீவராசிகளையும் எடுத்துக் கொண்டால் புறாக்களைப் போன்று சில - ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்தே வாழ்ந்து வர வேண்டிய நியதிக்குள்ளாக்கப்பட்டனவாகவும்; சில, ஒன்று இறந்து விட்டால் மற்றொன்றும் இறந்துபட வேண்டும் என்ற நியதிக்குள்ளாக்கப்பட்டனவாகவும்; பெரும்பான்மையானவை ஆடு, மாடுகளைப் போல் சமயம் நேர்ந்தபோது கூடிப் பிரிந்து வாழ்ந்துவரக்கூடியனவாகவும் காணப்படுகின்றன. மனித ஜீவனும் ஒருவன் ஒருத்தியோடு தான் வாழ்ந்து வர வேண்டு-மென்ற நியதிக்குள்ளாக்கப்பட்டு இருந்தால் தாசி வீடுகள் இருக்க நியாயமே இல்லை.
ஆகவே, ஏதோ சில நிர்ப்பந்தங்களுக்காகத் தான் இத்திருமண முறை ஏற்பட்டிருக்க வேண்டுமென்பது பெறப்படுகிறது. திருமண முறை வந்ததெப்போது? உடைமை எல்லாம் ஆணுக்குத்தான் என்கிற நிலை ஏற்பட்ட பிறகு தான் இத்திருமண முறையும் வந்திருக்க வேண்டும். ஆணுக்குத்தான் சுதந்திரம்; ஆணுக்குத்-தான் சொத்து; ஆணுக்குத்தான் வீடும் வாழ்க்கையும் என்று சம்பிரதாயம் ஏற்பட்ட பிறகு இதற்கேற்பத்தான் சமுதாயத்-தையும் அமைக்க வேண்டியதாயிற்று.

நாம் பெண்களை முட்டாள்களாக்கி விட்டோம். பெற்றோர்களை மீறியும், சமூகக் கட்டுப்பாடுகளைப் பற்றியும் ஆண்கள் காரியம் ஆற்ற முன்வருவதுபோல் பெண்கள் முன்வருவதில்லை. வயதுவந்த பிறகு தகப்பன் சொல் கேட்கவேண்டிய அவசியம் என்ன என்று - ஆண்கள் சுலபத்தில் தீர்மானித்துவிடுகிறார்கள். ஆனால், பெண்களில் 100-க்கு ஒருவர் - ஆயிரத்துக்கு ஒருவர்கூட அப்படி முன்வருவது கஷ்டமாயிருந்தது. பெண்களுக்கு விடுதலை பற்றிய அறிவு போதவில்லை. அவர்களுக்கு விடுதலை உணர்ச்சி உண்டாக்க எவ்வித முயற்சியும் இதுகாறும் செய்யப்படவில்லை. அவர்களுக்குச் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கான வசதி கொடுக்கப்படவில்லை. ஒரு வயது வந்த பெண்ணை, ‘உனக்கு எப்போதம்மா கலியாணம்?’ என்று கேளுங்கள். அவள் நாணிக் கோணி - ‘அதெல்லாம் எனக்-கென்ன தெரியும்? எங்கள் அப்பா அம்மாவைக் கேளுங்கள்’ என்று தான் கூறுவா-ளேயல்லாது, வேறுவிதமாகப் பதில் கூறமாட்டாள். அந்த மாதிரிப் பக்குவத்தில்தான் நாம் அவர்களை வளர்க்கிறோம்.

பெண்களை வெளியில் செல்ல விடுவதில்லை; பிறருடன் தாராளமாகப் பழக அனுமதிப்பதில்லை. ‘சன்னலின் அருகே நிற்காதே! வாசலில் யார் போகிறார்கள் என்று எட்டிப் பாராதே! ஆண்கள் வந்தால் அடுப்பங்கரைப் பக்கம் ஓடிவிடு’ என்றெல்லாம் கூறி அவர்களை ஒன்றும் தெரியாத முட்டாள்களாக்குகிறோம். இவை மாய்ந்துபோய், பெண்களுக்கு உண்மையான விடுதலை வரவேண்டும். தற்காலத்தில் தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக்கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதையும், நைசான நகைகள் போட்டுக் கொள்வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக்கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர - ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்-கவில்லை. போதிய உரிமை வேட்கையுடைய பெண்களும் தம்மை எங்கு உலகம் தூற்றுமோ என்று அஞ்சி பேசாமல் இருந்துவிடுகிறார்கள். இது தீது. ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த விதத்திலும் வேற்றுமை இருக்கக் கூடாது. பெண்கள் வெறும் மிருக இனம்போல் நடத்தப்படும் இந்நிலை ஒழிந்தேயாக வேண்டும்; தாமாக ஒழித்துக் கொள்ள முயற்சிக்கமாட்டார்கள்; முன் வரமாட்டார்கள். ஆண்கள்தான் முன்வந்து, விட்டுக் கொடுத்து, பெண்களைச் சமநிலைக்குக் கொண்டுவரவேண்டும்.

தாய் தந்தையர், ஆண்களைவிட மேலாகப் பெண்களுக்குத்தான் அதிகப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ‘சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் கெட்டுப் போய்விடுவார்கள்’ என்று நினைத்து அவர்களை எந்நாளைக்குமே அடிமைத் தளையில் கட்டிப்போட்டு வைத்திருப்பது என்பது முடிவில் பெருங் கேட்டையே விளைவிக்கும். வீட்டில் பெண்களை இருளில் அடைத்து வைத்திருந்துவிட்டு வெளியில் கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்றால், அவர்கள் வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். பார்த்துப் பழக்கம் இராததால் அவர்கள் மிரட்சியோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

- ‘விடுதலை’, 11.10.1948

0 comments: