சட்டரீதியாக ஜாதியை ஒழிப்பதற்குப் பதவி களைத் தூக்கி எறியவும் தயங்க மாட்டோம் என்றார் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஆ. இராசா.
மன்னார்குடியையடுத்த மேலவாசல் கிராமத்தில் நேற்று (19.5.2007) நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
எனக்கு மொழிப்பற்றோ நாட்டுப்பற்றோ எதுவும் கிடையாது. எனக்கு உள்ளதெல்லாம் மனிதப் பற்றுதான் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டு அய்ம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கம்பியில்லாத் தந்தி வரும் தொப்பிக்குள் ரேடியோ வரும் என்றெல்லாம் சொன்னவர் அய்யா!
விஞ்ஞானச் சிந்தனையாளர் பெரியார்!
அத்தகைய விஞ்ஞானச் சிந்தனை உடைய தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழாவில் தொலைத் தொடர்புத் தொழில் நுட்பத் துறையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முதல் நிகழ்ச்சியாகக் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கு மனப்புழுக்கம் ஏற்படும் பொழுதெல்லாம் அழைத்துப் பேசி ஆறுதல் பெறக் கூடிய மூலிகைத் தோட்டம்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவார். திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தயாரிக்கப்பட்டவன் நான்.
உலகின் பல நாடுகளிலும் அடிமை முறையிருக்கிறது. அந்த நாட்டு அடிமைத் தன்மைக்கும் நம் நாட்டில் உள்ள அடிமைத் தன்மைக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. அந்த அடிமைத்தன்மைக்கு பிறப்போடு முடிச்சு போடப்படுவதில்லை. கல்வி உரிமை மறுக்கப்படவில்லை வாழ்வுரிமை மறுக்கப்படவில்லை.
பிறப்போடு கூடிய இழிவு
ஆனால், இந்த நாட்டில் நம் பிறப்போடு இழிவுத் தன்மை முடிச்சுப் போடப்பட்டுள்ளது இதனை முறியடிக்கும் பெரும் போரில் ஈடுபட்ட தலைவர்தான் தந்தை பெரியார்.
இந்த நாட்டில் அது அரசி-யலாக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி, தந்தை பெரியார் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு யாரும் நடைபோட முடியாது. பெரியாரைத் தடை செய்து விட்டு சமூக இயலார் இயங்கவே முடியாது.
பிரஞ்சுப் புரட்சிக்கு ரூசோ, வால்டேர் காரணமாக இருந்தனர். பொதுவுடைமைத் தத்துவத்துக்குக் கார்ல் மார்க்ஸ் கரு கொடுத்தார். லெனின் செயல் வடிவம் கொடுத்தார். எந்தப் புரட்சியையும் ஒரே ஒருவர் தன் வாழ்வில் நடத்தி வெற்றி பெற்றது கிடையாது. அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல கருத்தையும் உருவாக்கி, அதனைச் செயல்-படுத்தியும் காட்டி அதன் பலனையும் தம் கண்ணெதிரில் கண்ட புரட்சியை நடத்திய ஒரே தலைவர் உலகத்தில் தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே!
தந்தை பெரியாரின் தர்க்கம்
தந்தை பெரியார் அவர்களின் தர்க்கவியலுக்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். பெரியார் திரைப்படத்தில்கூட அந்தக் காட்சி இடம் பெற்றுள்ளது சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் கடவுள் கல் என்று பெரியார் சொன்ன நேரத்தில், அதில் மந்திரம் சொல்லப்பட்டுள்ளதால் அதற்குச் சக்தியிருக்கிறது என்று ஒரு பார்ப்பனர் கூறுகிறார்.
அதற்குப் பெரியார் பதில் கூறுகிறார். ஒரு மொட்டைப் பாறையை மந்திரம் சொல்லி கடவுளாக்க முடியுமானால், ஒரு பறையனுக்கு மந்திரம் சொல்லி அவனை உயர் ஜாதியாக ஆக்க வேண்டியதுதானே என்கிறார். பெரியாரின் தர்க்க வாதத்துக்கு முன் எல்லாம் நொறுங்கிப் போய்விடும் (பலத்த கைதட்டல்).
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் வருவ-தற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்.
திருத்தப்படக் கூடாத அரசமைப்புச் சட்டம்!
இன்றைக்கு அந்த அரசமைப்புச் சட்டம் கேள்விக் குறிக்கு ஆளாகியிருக்கிறது. சிலர் நினைக்கிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் அண்ணல் அம்பேத்கர் உடலோடு கட்டிப் பிணைக்கட்டப்பட்டுள்ளது. அதனை மாற்றியமைக்கலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அரசமைப்புச் சட்டம் குறித்து அதே அம்பேத்கர்தான் சொன்னார். `நான் ஒரு வாடகைக் குதிரையாகப் பயன்படுத்தப்பட்டேன்!’ என்றார். அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவதிலும் முதல் நபராக நான் இருப்பேன் என்றும் மாநிலங்களவையில் முழங்கினாரே!
பார்ப்பனர்களுக்கு பாரதம் தேவைப்பட்டது + ஒரு வியாசரை அழைத்தனர் + வியாசர் பார்ப்பனரல்லர். அவர்களுக்கு இராமாயணம் தேவைப்பட்டது. ஒரு வால்மீகியை அழைத்-தார்கள் + வால்மீகி பார்ப்பனர் அல்லர். அவர்களுக்கு ஒரு அரசமைப்புச் சட்டம் தேவைப்-பட்டது + நான் தேவைப்பட்டேன் என்றவர் அம்பேத்கர்.
பெரியாரின் தீர்மானம்
1973 டிசம்பரில் தந்தை பெரியார் கூட்டிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைப்பற்றி பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் இங்கு எடுத்துக் கூறினார். அந்தத் தீர்மானத்தை அம் மாநாட்டில் முன்மொழிந்தவர் நம் ஆசிரியர் பெருந்தகை எனவும் குறிப்பிட்டார். அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று மாற்றப்பட வேண்டும் என்பது அந்தத் தீர்மானமாகும்.
அப்படி ஒரு மாற்றம் வருவதற்கு நிச்சயமாக நாங்கள் துணை நிற்போம்! மாறாக எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இந்தப் பதவிகளையெல்லாம்கூட தூக்கி எறிந்து, தந்தை பெரியார் காண விரும்பிய அந்த ஜாதியற்ற சமூகம் படைக்கப் பாடுபடுவோம்’’ என்று குறிப்பிட்டார்.
நன்றி: :"விடுதலை" 20-5-2007
Search This Blog
20.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment