Search This Blog

26.5.08

தொழிலாளர் சங்கம்

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி என்பவன் - நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான முறையில் தொழில் செய்பவன்தான் தொழிலாளி.

நீங்கள் அப்படியில்லை. ஏதோ ஒரு முதலாளியின் கீழ் தினக் கூலிக்கமர்ந்து உங்களுக்கு எவ்வித சுதந்திரம் இல்லாமல் முதலாளி சொல்லுகிறபடி செய்துவிட்டு, அதன் பலன் முழுவதும் அவரே அடையும்படி செய்து, உங்கள் ஜீவனத்திற்குக்கூட போதுமானதாயில்லாத கூலியை வாங்கிப் பிழைக்கிறீர்கள். ஒரு முதலாளிக்குக் கீழ் வேலை செய்து கூலி வாங்குபவன் எவ்வளவு பெரிய கூலிக்காரனானாலும் அவன் கூலிக்காரன்தான்; அடிமைதான்.
தொழிலுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? தொழிலின் பலனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? தொழிலின் அருமை, உங்களுக்கு ஏதாவது தெரியுமா? காலையில் பட்டறைக்குள் நுழைந்தால் மாலை வரை அவன் சொல்லுகிறபடி உழைக்க வேண்டியது! வாரம் ஒரு முறை கூலி வாங்கிக்கொள்ள வேண்டியது! தெருக்களில் கூலிக்கு மூட்டை தூக்கி அவ்வப்போது கூலி வாங்கும் நபருக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்! அவர்கள் தங்களுக்குக் கூலி போதாது, அதிக பாரமாயிருக்கிறது இன்னும் சேர்த்துக் கொடு என்று முதலாளியைக் கேட்பதற்கும் - நீங்கள் சங்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு செய்யும் தீர்மானங்களுக்கும் என்ன வித்தியாசம்? சில சமயங்களில் கூலிக்காரனாவது தான் தூக்கும் சாரத்தையும், தூக்கிக் கொண்டு செல்லும் தூரத்தையும் அறிந்து கூலி அதிகம் கேட்கிறான். நீங்க அதுகூட இல்லை. உங்க தொழிலின் அருமை இன்னதென்றுகூட உங்களுக்குத் தெரியாமல், முதலாளியைப் பார்த்து, நீ இவ்வளவு ரூபாய் கொள்ளையடிக்கிறாயே; நீ இவ்வளவு சுகப்படுகிறாயே! என்ற பொறாமையின் மேல் - ஏன் எனக்கு இன்னும் கொஞ்சம் கூலி சேர்த்துக் கொடுக்கக்கூடாதா? என்று பல்லைக் காட்டிக் கெஞ்சுகிறீர்கள். தனித் தனியாய்க் கெஞ்சுவதற்குப் பதில் நாலு பேராய்ச் சேர்ந்து கெஞ்சுவதைத் தொழிற்சங்கம் என்கிறீர்கள். அதுவும் உங்களுக்குக் கெஞ்சிக்கேட்க சக்தி இல்லாமல் - உங்கள் தொழிலிலோ, கஷ்டத்திலோ கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒருவரை, உங்கள் சங்கத் தலைவராகவும், காரியதரிசியாகவும் சில சமயங்களில் நிர்வாகஸ்தர்களாகவும் வைத்துக்கொண்டு கூலியை உயர்த்தும்படிக் கேட்-கிறீர்கள்.


ஒரு முதலாளியிடம் வேறு ஒருவன் போய், அய்யா, உங்களிடம் உள்ள கூலிக்காரர்களுக்குக் கூலிபோதவில்லை; கொஞ்சம் சேர்த்துக் கொடுங்கள் என்று கேட்டால் - அந்த முதலாளிக்கு, கூலிக்காரனிடம் என்ன மதிப்பு இருக்கும்? அதுபோலவே, உங்கள் சவுகரியத்திற்கு வேறொருவன் போராடுகிறான் என்றால் உங்களுக்கு உங்களுடைய தேவை இன்னதென்று கூடத் தெரியவில்லை என்பதுதானே பொருள்? பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் உபாத்தியாயரிடம் போய், எனக்கு வயிறு வலிக்கிறதென்று எனது தாயார் சொன்னார்கள்; ஆதலால் இன்று எங்களுக்கு லீவு கொடுங்கள் என்று கேட்பது போலவே - நீங்கள் வேறொருவரை உங்கள் சங்கத்திற்குத் தலைவராக வைத்துக்கொண்டு காரியங்களைச் செய்வதும், உங்களுக்குச் சம்பந்தமில்லாதவைகளைப் பின்பற்றுவதுமாகும். வெளியிலிருந்து உங்களுக்கு தலைவராய் வருபவர்களுக்கு - முதலாவது உங்கள் வேலையிலுள்ள கஷ்டமும், உங்களுக்கு இருக்கும் கஷ்டமும் எப்படித் தெரியும்?

உதாரணமாக, இதுசமயம் நமது நாட்டுத் தொழிலாளர் சங்கத் தலைவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்காவது உங்கள் தொழிலின் அருமை தெரியுமா? உங்கள் கஷ்டத்தின் கொடுமை தெரியுமா! அவர் தனது கீர்த்திக்காக உங்களுக்குத் தலைவராய் இருப்பார். அவர் ஒரு தொழிலும் செய்யாமல் மாதம் 500, 1000, 5000, 10,000 என்று பொது ஜனங்களின் பணத்தை உங்கள் முதலாளிகளைப் போலவே கொள்ளையடித்துக் கொண்டு, சுகபோகம் அனுபவித்துக்கொண்டு, தனது சுயநலத்தை நாடிக் கொண்டிருப்பவராயிருப்பார். அவர்களால் உங்களுக்கு எந்த விதத்தில் அனுகூலம் கிடைக்கக் கூடும்? அவர்களைக் கண்டால் உங்கள் முதலாளிகள் எப்படி மதிக்கக்கூடும்? இதே முகாந்திரங்களால்தான் நமது நாட்டுத் தொழி-லாளர் சங்கங்கள் இதுவரை உருப்படியாகாமல் போயின.

அனேக இடங்களில் வேலை நிறுத்தம் (Strike) - வெளியேற்றம் (Lock-out) நிகழ்கின்றன. இவைகள் ஏற்பட்டு என்ன பலன் கிடைத்தது? எவ்வளவு தொழிலாளிகளுக்கு வேலை போய் கஷ்டம் உண்டாயிற்று? இவற்றை எந்தத் தலைவர் கவனித்தார்? எவ்வளவு தொழிலாளிகள் தம் தலைவர்களின் வார்த்தைகளைக் கேட்டதின் பலனாய், வயிறாரக் கஞ்சி இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்? மற்றும் பல தலைவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு உங்கள் முதலாளிமார்களிடம் உத்தியோகம் பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவதைப்போல, வெளியார்களை உங்கள் சங்கத் தலைவர்களாக வைத்திருக்கின்றீர்கள்.

----------- தந்தைபெரியார் அவர்கள் நாகையில் 25.5.1926இல் ஆற்றிய சொற்பொழிவு, "குடிஅரசு"- 30.5.1926
)

0 comments: