Search This Blog

19.5.08

நாராயண பிள்ளைக்கும் இராமசாமி ஐயருக்கும் சம்பாஷணை

நாரா: வாரும், வாரும், இராமசாமி ஐயரே வாரும். ஏது வெகுநாளாக உம்மைக் காண்பதரிதாகி விட்டது.

இரா: நோக்கென்ன வேலை, ஏதாவது வீண் வம்பு பேசிக் கொண்டு வீட்டிலிருக்கும் வேலையற்றவர்தானே.

நாரா: ஆமாம், நான் வேலையில்லாதவன்தான் உமக்கென்ன வேலை.
இரா: எனக்கு வேலையில்லையா, இது தேதிகாலமல்லவா, எத்தனையோ கல்யாண வீடுகள், எத்தனையோ திதி வீடுகள், ஊருக்கு ஒருவன்தானே நான், உம்மைப் போலிருந்தால் என்ன காரியம் நடக்கும்?

நாரா: திதி வீட்டிலும் கல்யாண வீட்டிலும் உமக்கென்ன வேலை?


இரா: ஆம் காணும், உம்மைப் பார்த்தால் மகா பயித்தியக்காரரைப்போல தோன்றுகிறது. கல்யாண வீடுகளில் என்னைப் போல பிராமணர்களல்லாது என்ன காரியம் நடக்கும்? திதி வீடுகளில் அந்தணரில்லாது ஆவது என்ன? எச்சுகாரியங் களுக்கும் நாங்களல்லவோ முன்னிருக்க வேண்டும்? இம்மாதிரி யான காரியங்களுக்கு நான் போயிருந்தேன், இன்றைக்கு ஒரு எழவுமில்லை, உம்மிடத்தில் வந்து அகப்பட்டுக் கொண்டேன்.

நாரா: ஐயா! பலே, பலே, நீர் சொன்ன வார்த்தை நன்றா யிருக்கிறது. அந்தணரில்லாத காரியம் ஆவதொன்றுமில்லை யென்று சொன்னீரே, நீர் யார் உம்முடைய ஜாதியென்ன?

இரா: என்னாங்காணும் என்னை உமக்குத் தெரியாதா? என்னைக்குயவனென்றா மதித்திருந்தீர்.
நான் பிராமணனல்லவா, பிராமணத் தூஷணை ஆகாதுங்காணும், பிராமணனென்றால் உமக்கேன் வயிற்றெரிச்சலாயிருக்கிறது.

நாரா: ஐயரே கோபப்படாதீர், பிராமணனென்ற ஜாதி ஒன்றுண்டா? உண்மையாய்ச் சொல்லும்.

இரா: என்னாங் காணும் ஆனால் பிராமணச்சாதி இல்லையா.

நாரா: உண்டு, உண்டு, நீர் என்ன ஜாதி நன்றா யோசித்துச் சொல்லும்.

இரா: நான் பிராமணன்.

நாரா: நன்றாய் யோசித்துப் பாரும், உம்முடைய ஜாதி சொல்ல உமக்குத் தெரியவில்லையா? பிராமணச் சாதியென்று பொது வாகச் சொல்லாதீர், வட மச்சாதியா, வாத்திமாச் சாதியா, வேறென்ன ஜாதி உம்முடைய ஜாதியைச் சொல்ல உமக்கு வெட்கமாகயிருந்தாலதை விட்டு விடும். பிறப்பால் பிராமணனா? கருமத்தால் (அனுட்டானத்தால்) பிராமணனா? எவன் பிர்ம்ம ஞானத்தை அடைந்து மஹானாயிருக்கிறானோ அவனன்றோ பிராமணனாவான்? நீர் தரித்திருக்கும் முப்புரிநூலால் பிராமணனென்றால் அறிவாளிகள் ஒப்புக் கொள்வார்களோ? முப்புரி நூல் தரித்துக் கொள்ளும் வகுப்பினர் பலருண்டு, உம்மையெப்படி மதிக்கிறது? பிராமணனென்று பெயர் வைத்துக் கொண்டு பிதற்றித்திரியும் உங்களையல்லாது சுப காரியங்கள் செய்யின் அது ஏற்காதோ? அவ்வகுப்பினர்க்குள்ளே கற்றறிந்த வர்களை அக்காரியங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டு செய்யின் அஃது இடர்படுமோ? ஏன் செய்யலாகாது? அந்தக் காலமும் வருங்காலமாகிவிட்டது. இதுவரைக்கும் எங்களை ஏமாற்றிக் கொண்டிருந்ததை மறந்து விடுங்கள், உங்கள் பொறாமையை விட் டொழியுங்கள்.

இரா: என்னாங்காணும், சொல்லாதெல்லாஞ் சொல்லுகிறீர், பிராமணனை நிந்திக்காதீர். உலகத்தில் பிராமணனை உயர்வாகவே வைத்திருக்கிறார்கள்; நீர் ஒருவர் மட்டும் பிராமண னாகாதென்றால் பொருத்தமாகுமா? எது வேணாமோ சொல்லும் காலத்திற்கேற்ற கோலமாயிருக்கிறது - என்று முணு முணுத்துக் கொண்டு பெருநடையாக நடந்து விட்டார்.

----- வேளைக்கிழார் - "திராவிடன்" 27.06.1917 பக்கம் 3
`

0 comments: