டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் புகழ்பெற்ற ஒன்றாகும். பெரிய பதவியில் உள்ளவர்கள், பிரமுகர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக சேர்க்கப்படுவது இந்த மருத்துவமனையில்தான்.
இந்த மருத்துவமனை அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் மிகக் கடுமையான அவப்பெயரை வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய நிலையில், இந்த மருத் துவக் கல்லூரி மாணவர்கள் மிகக் கேவலமான வகையில், அருவருக்கத்தக்க வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
போராட்டங்கள் தடை செய்யப்பட்ட அந்தக் கல்லூரியின் வளாகத்துக்குள்ளேயே கல்லூரியின் மின்சாரம், தளவாட சாமான்களைப் பயன்படுத்திக்கொண்டு சட்ட விரோதமாகப் போராட்டங்களை நடத்தினார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதையும் புறக்கணித்தனர். அந்த அளவுக்கு "மனிதாபிமானத்துடன்" அவர்கள் நடந்துகொண்டிருக்கின்றனர். அதைவிடப் பெரிய கொடுமை, அவர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்திற்குச் சம்பளமும் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாகும். இவ்வளவுக்கும் பின்புலமாக பின்பலமாக இருந்தவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபால் என்ற ஆந்திர மாநிலப் பார்ப்பனர் ஆவார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது பார்ப்பன உணர் வோடு, அவர் ஓய்வுக்குப் பிறகும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டவர்.
65 வயதுக்குமேல் இந்தப் பதவியில் நீட்டிக்கக் கூடாது என்று இன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அந்தப் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபால் நீக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் தாராள உதவியால் மீண்டும் அந்தப் பதவியில் உட்கார்ந்துவிட்டார். நம் நாட்டின் நியாயமும், நீதியும், பொது ஒழுக்கமும் எந்தத் தரத்தில் போய்க் கொண்டு இருக்கின்றன என்பதற்கு இவையெல்லாம் கண்கண்ட க(ச)ட்சிகள்.
இப்பொழுது வெளிவந்துள்ள இன்னொரு தகவல் நம் மூச்சையே நிறுத்தக்கூடியதாக உள்ளது. அந்தக் கல்லூரியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் திட்டமிட்ட வகையில் அவமதிக்கப்படுவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளன.
இதுபற்றிய புகார்கள் வந்தபோது பேராசிரியர் எஸ்.கே. தோரட் தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட விசாரணைக் குழு தன் அறிக்கையைக் கொடுத்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்பதற்காக ஆசிரியர் அம்மாணவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை; அவர்களின் தேர்வுத் தாள்கள் சரியாகத் திருத்தப்படுவதில்லை; எதிர்பார்த்த மதிப்பெண்களைவிடக் குறைவாக மதிப்பெண்கள் தரப்படுகின்றன. தேர்வு அதிகாரிகள் மாணவர்களின் ஜாதி களைத் தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் போடுவதுவரை அங்கே நடைபெற்றுவருகிறது. வகுப்பு அறை களிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஜாதி ரீதியான இழிவுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்கிற தகவல்களையெல்லாம் திரட்டி விசாரணைக் குழு அறிக்கையாகத் தந்துள்ளது.
இதை ஒரு சாதாரண பிரச்சினையாக அரசு அலட்சியம் செய்துவிடக் கூடாது. இது மிகப்பெரிய பிரச்சினையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவு கூறும் - தீண் டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ், இதற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டியவர்கள் ஆவார்கள்.
இந்தியாவின் தலைநகரத்திலே - அதுவும் ஒரு மருத்துவக் கல்லூரியிலே இந்த மனித உரிமை மீறல், தீண்டாமைக் கொடுமை என்றால், இதனை எப்படி அனுமதிக்க முடியும்?
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பின்னணித் திரையில் இருந்து இயக்கிய ஒருவர்தான் மீண்டும் இயக்குநராக நீதி மன்றத்தால் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது ஜீரணிக்கப்பட முடியாத ஒன்றாகும்.
இதுபோன்ற அறிக்கைகள் முக்கியத்துவம் பெறாமல் போவது உண்டு. அந்தப் பட்டியலில் இந்த அறிக்கை இடம்பெற்றுவிடக் கூடாது. உரிய தண்டனையிலிருந்து ஒருவர் கூடத் தப்பித்து விடக் கூடாது. மத்திய அரசு - குறிப்பாக மத்திய மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இதில் முக்கிய கவனம் செலுத்துவார் என்று நம்புகிறோம்.
------------- 12-5-2008 "விடுதலை" தலையங்கம்
Search This Blog
12.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment