Search This Blog

13.5.08

அண்ணா பாதையில் பெரியார்' வந்துவிட்டாரா?

சென்ற மாதம் 30-ஆம் தேதி நான் கும்பகோணம் நிதி அளிப்புக் கூட்டத்தில் பேசுகையில் நான் ஒரு கடவுள் உண்டு என்றும், அதனை கும்பிடும்படிக் கூறினேன் என்றும் எல்லா பத்திரிகைக்கார அயோக்கியர்களும் பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள். `மெயில்' போன்ற பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகள்கூட இந்த அயோக்கியத்தனமான வேலையைச் செய்து உள்ளது. `ஆனந்த விகடன்' கார்ட்டூன் போட்டு உள்ளான். ``கண்ணீர்த்துளி'' (கண்ணீர்த் துளி என்றால், தி.மு.க.வைக் குறிப்பிடுகிறது.) பத்திரிகை ஒன்று, `அண்ணா பாதையில் பெரியார்' வந்துவிட்டார் என்று ஈனத்தனமான முறையில் சேதி வெளியிட்டுள்ளது.

``கண்ணீர்த்துளிகள்'' அதுவரை ஒரு கடவுள் உண்டு என்று கூறினார்களாம்! நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம்! இன்றுதான் தவறை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கின்றேனாம்! பத்திரிகைகாரன்களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத்தான் ஆகிவிடுகின்றான். நானும் மானங்கெடத்தான் இவர்களைப் பற்றிப் பேசுகின்றேன். ஒருவனுக்காவது மான ஈனத்தைப் பற்றிய கவலையே இல்லையே. நான் கும்பகோணத்தில் என்ன பேசினேன். நான் இங்கு குறிப்பிட்டது போலத்தான் அங்கும் கடவுள், மதம் இவை பற்றிப் பேசினேன். நம் கடவுள் கடவுள், மதம் இவை பற்றிய முட்டாள்தனங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். உங்களுக்கு கடவுள் இருந்தாக வேண்டுமென்று எண்ணுவீர்களேயானால் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனது இயக்கத்தைச் சார்ந்த எங்கள் தோழர்களுக்கெல்லாமும் கடவுள் நம்பிக்கை கிடையாது. அதுபோலவே நீங்கள் இருந்தாக வேண்டும் என்று நான் என்றும் கட்டாயப்படுத்த வரவில்லை. கடவுள் இல்லையென்றுகூற, அதன்படி நடக்க ரொம்ப அறிவு வேண்டும், தெளிவு வேண்டும். எப்படி இல்லை? என்று எந்தவிதக் கேள்விகள் கேட்டாலும் தெளிவுபடுத்தக் கூடிய முறையில் அறிவாற்றல், ஆராய்ச்சி வன்மை வேண்டும். இவையெல்லாம் நம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்றதென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடவுள் இருக்கின்றது என்று கூற அறிவு தேவையில்லை. சுத்தமடையன், அடிமுட்டாள்கூட கடவுள் நம்பிக்கை உள்வனாக இருக்கலாம். அறிவுக்கு வேலையே இல்லை, அப்படி கடவுள் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற நீங்கள் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்; உலகத்தில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து இருப்பது போலவாவது நடந்து கொள்ளுங்கள் என்றுதான் விளக்கம் சொன்னேன்.

இன்று உலகில் 250 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் 100 கோடி மக்களுக்குக் கடவுள் கிடையாது. ரஷ்யாக்காரர்கள் 20 கோடிப் பேர்கள். அவர்கள் கம்யூனிஸ்ட்கள்; அவர்களுக்குக் கடவுள் இல்லை. பைபிளைக் கையில் எடுத்துக் கொண்டு வீதியில் நடப்பதுகூட குற்றம். சீனாக்காரன் 40 கோடிப் பேர். அவர்களுக்குக் கடவுள் இல்லை. ஜப்பானியர் எட்டுக் கோடி, சயாமில் ஒன்றரை கோடி, பர்மாவில் இரண்டு, இரண்டரைக் கோடி மற்றும் திபேத், சிலோன் ஆகிய நாட்டில் வாழும் மக்களுக்கெல்லாம் கடவுள் இல்லை. இவர்கள் எல்லாம் பவுத்தர்கள், அவர்களுக்கு கடவுள் கிடையாது. மற்றபடி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் ஏராளமான அறிவாளிகள், நாஸ்திகக் கருத்து உடையவர்களாக இருக்கின்றார்கள். இப்படி கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் ஏறக்குறை 100 கோடிக்குக் கம்மியில்லாமல் உள்ளார்கள். அதுபோலவே கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஏறக்குறைய 120 கோடிக்குமேல் உள்ளார்கள். கிறிஸ்தவர்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் உலகத்தில் 60, 65 கோடிக்குமேல் உள்ளார்கள். அதுபோலவே முஸ்லீம் மக்கள் 40, 45 கோடிக்கு மேல் உள்ளார்கள். இதையெல்லாம் இந்துக்கள் என்று கூறப்படுகின்ற நம் காட்டுமிராண்டிகள் இந்த நாட்டில் ஏறக்குறைய 25 கோடிக்குமேல் உள்ளோம். இவர்களை நான் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் என்ற கணக்கில் சேர்க்கவில்லை. இவர்கள் கிறிஸ்தவர், முஸ்லீம்கள் தங்கள் கடவுளுக்கு இலக்கணம் வகுத்து வரையறைப்படுத்தி இருப்பதுபோல் இல்லாதவர்கள்; தெளிவில்லாக் காட்டுமிராண்டிக் காலத்துக் கடவுள் கொள்கையையே கைக் கொண்டு ஒழுகுபவர்கள்.


--------------- தந்தைபெரியார் -"விடுதலை" 25-11-1959

0 comments: