Search This Blog

16.5.08

தந்தைபெரியாரின் "பைத்தியக்காரி"

என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும், என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து-விடுகிறேன். உடனே அய்யாவின் அந்தப் புன்னகை முகம் என் கண்முன் தோன்றி,

“பைத்தியக்காரி, இவ்வளவுதானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்து எடுத்துச் சொல்விவந்த கருத்துகளை உன்னிடத்திலேயே காணமுடியவில்லையே! நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைப்பிடிப்பவளாய் இருக்கப்போ-கிறாயோ! சாதாரணப் பெண்களைப் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே! என்றாவது ஒரு நாள் எனக்கு இந்த நிலை ஏற்படும். இயற்கையை வெல்ல முடியாது. அப்போது எப்படி நீ இருக்கவேண்டும் என்று எத்தனை முறை உனக்கு உன்மனம் நோகாத வண்ணம் வேடிக்கைப் பேச்சாகவே சொல்லிச் சொல்லிப் பக்குவப்படுத்தி வைத்தேன். என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், மற்றவர்களுக்கும், உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் நடந்துகொண்டு என் மனத்திற்கு வேதனை தருகிறாயே!”

என்று சொல்லுவதுபோல் தோற்றம் அளிக்கும்.

உடனே நான் “இல்லை - இல்லை - மன்னித்து விடுங்கள். உங்கள் வார்த்தையை மீறி இன்று அல்ல என்றுமே நடக்க மாட்டேன்” என்று மனதால் நினைத்துக் கொண்டு நானே ஒரு சிரிப்பும் சிரித்துக் கொண்டு என் உள்ளத்தை இரும்பைப் போல கடினமாக ஆக்கிவிடுவேன். அப்போதுதான் என் மனதில் அமைதியும் ஒரு நிறைவும் பெறும்.

-------------- தந்தை பெரியார் மறைந்த சில நாட்களில் மணியம்மையார் எழுதியது (‘விடுதலை’, 4.1.1974)

0 comments: