Search This Blog

9.5.08

25 கி.மீ. நீளமான ஒன்று வழிபாட்டுத் தலமாக இருக்க முடியுமா?

நீதிபதிகளின் அறிவார்ந்த வினாக்கள்

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அமலாக்கலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.

ஒரு திட்டத்தைத் தொடங்கி ஓராண்டு காலம் பல பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து வழக்குப் போடு வதும், அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பதும் எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

ஒரு திட்டத்தை வகுப்பதற்கு எவ்வளவு காலம், எத்தனை மனிதச் சக்திகள், பொருள் செலவாகி இருக்கும் என்பதை எண் ணிப் பார்க்கவேண்டாமா? முறைப்படி சம்பந்தப்பட்ட அறிவியல் துறைகளையும், நிபுணர்களையும் கலந்து ஆலோசித்துதான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் தலைமை யில் விற்பன்னர் குழுவும் நியமிக்கப்பட்டு அந்தக் குழுவும் இப்பொழு துள்ள ஆறாவது வழித்தடத்திலேயே திட்டத்தை நிறைவேற்றிட பரிந்துரை செய்துள்ளது.

இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எந்தவித அறிவார்ந்த சரக்குகளும் கைவசம் கிடையவே கிடையாது.

கடைசியில் இவர்கள் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருப்பது இந்து மத மக்களின் நம்பிக்கை - இராமன் பாலம் என்பதாகும்! அதனை இடித்தால் அது மத உணர்வைப் புண்படுத்துவதாகும் என்று ஓலம்விட ஆரம்பித்துவிட்டனர்.

சாதாரண இராம.கோபாலனும், அம்பிகளும் சொல்லும் இந்த வாதத்தை புகழ்பெற்ற வழக்கறிஞர்களான சோலி சொராப் ஜியும், பராசரனும் உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கின்றனர் என்றால், இந்தப் பரிதாபத்தை என்னென்று சொல்வது!
கெட்டிக்கார வழக்கறிஞர்களாக இருந்தாலும் எடுத்துக் கொண்ட வழக்கில் பசை இல்லையென்றால் அவர்கள்தான் என்ன செய்வார்கள்!

உச்சநீதிமன்ற நீதிபதி இரவீந்திரன் பேர் பெற்ற இந்த வழக்கறிஞர்களை நோக்கி எழுப்பிய வினாக்கள் பகுத்தறிவின் அடிப்படை யிலானவை.

பூமித் தாயை வணங்குகிறோம்; அதற்காக அதனைத் தோண்டக் கூடாதா? இமயமலையைக் கூட வணங்குகிறோம். அதற்காக இமயமலையைத் தொடக்கூடாதா? மதுராவில் உள்ள கோவர்த்தன மலையில் வழிபடுகிறோம். அதற்காகக் கோவர்த்தன மலையை எதையும் செய்யக்கூடாது என்று கூறுவதா? மக்கள் புனிதமான தாகக் கருதுவதால் அங்கு கட்டுமானப் பணிகள் எதையும் மேற் கொள்ளக் கூடாதா? 25 கி.மீ. நீளமான ஒன்று வழிபாட்டுத் தலமாக இருக்க முடியுமா? என்று அடுக்கடுக்காக அறிவார்ந்த கணைகளை தொடுத்துள்ளனர் நீதிபதிகள். மிகவும் கெட்டிக்காரர்கள் என்று பெயர் வாங்கிய சோலி சொராப்ஜியும், பராசரனும் அவைகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரும் பதில் சொல்ல முடியாது; நீதிபதிகள் கூட பதில் சொல்ல முடியாது என்று சொன்னதிலிருந்து என்ன தெரிகிறது? நீதிபதியிடம் சரணடைந்து விட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

மலைகள், மரங்கள்பற்றி கவலைப்படவில்லை; ராமன் பாலம் பற்றியே கவலைப்படுகிறோம்; மக்களின் நம்பிக்கை அது என்று திருப்பித் திருப்பி சொன்னதையேதான் சொல்லிக் கொண்டிருந்தனர்.

நம்பிக்கை - அதற்குமேல் ஒன்றும் இல்லை என்று சொல்ல ஆரம்பித்தால், அதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளுமேயானால், அதற்குப்பின் நாட்டில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் கைகொள்ள முடியாது.

அடுத்தவன் வீட்டைக்கூட என் வீடு - அது என் நம்பிக்கை என்று சொல்ல ஆரம்பித்துவிடுவான். அது ஓர் ஆபத்தான ஆயுதம்; தப்பித் தவறிக்கூட அதனை அனுமதிக்கவே கூடாது.


நீதிமன்றம்முன் சட்டமும், ஆதாரமும், விதிகளும், திட்டங் களும் பேசப்படவேண்டுமே தவிர, அவற்றின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றமும் பரிசீலிக்க வேண்டுமே தவிர, அய்யோ, பாவம், கொஞ்சுகிறார்கள் (S.O.S) அலறுகிறார்கள் என்பதற் கெல்லாம் தலையாட்டக் கூடாது - அவற்றிற்கு அங்கு வேலையும் இல்லை.

அப்படியே பார்த்தாலும், மத உணர்வு புண்படுகிறது என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனைப் பேர் அப்படி சொல்லுகிறார்கள்? அந்தத் திட்டம் நிறைவேறியே தீரவேண்டும் என்று கருதுகிறவர் களின் மனம் புண்படுவதுபற்றி ஏன் பேசுவதில்லை?

ஒரு வளர்ச்சித் திட்டத்தை முடக்கப் பார்க்கும் மூட நம்பிக்கை யாளர்களுக்கு நல்ல புத்திமதியை நீதிமன்றம் சொல்லுமா?

----நன்றி: 08-05-2008 "விடுதலை" தலையங்கம்

0 comments: