இந்து மதம் என்றால் எத்தனை எத்தனையோ விமர்சனக் கணைகள் அதன்மீது!
அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. அடிமுட்டாள்தனத்தில் அதன் மாளிகை எழுந்-திருக்கிறது. அதன் அங்குலம் அங்குலமான இடம் ஒவ்வொன்றுமே ஆபாசத்தில் திளைத்து, அநியாயத்துக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு இருக்கிறது. விபச்-சாரத்தைத் தொழிலாளக் கொண்டவர்கள்கூட அதனிடம் சலாம் வைத்து புறமுதுகிட்டு ஓடவேண்டும்.
ஒழுக்கம், அறப்பண்பு, நன்னடத்தை இவற்றை மக்களிடம் பரப்பிய கவுதமப் புத்தர் - அவர் உருவாக்கிய அமைப்பு - சீலங்கள் அத்தனையையும் தவிடு பொடியாக்கிட இந்து மதம் மிகவும் கேவலமான ஒரு கலாச்சாரப் படைப்பாகக் ``கிருஷ்ண அவதாரத்தை’’க் கற்பித்தது.
இதுபற்றி என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா இவ்வாறு கூறுகிறது.
``புத்த பிரான் அற மொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்-பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ``கிருஷ்ண லீலா’’ கதையின் நோக்கம்.
புத்தர் கொள்கைகளின் சொல் வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது’’ என்று மிகச் சரியாகக் கணித்தது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.
இந்த வகையில் இன்றைய சின்னத்திரை, பெரிய திரை ஆபாச ஆலமரத்துக்கு விதையே இந்து மதத்தின் கிருஷ்ண அவதாரம்தான்.
அண்ணல் அம்பேத்கர் எழுதிய ``ராமன், கிருஷ்ணன்-பற்றிய புதிர்கள்’’ என்ற நூலில் கிருஷ்ணனைப்பற்றி எழுதியவை இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கத்தக்கவை!
``கிருஷ்ணன் - இவன் ஒரு காமவெறியன். பல பெண்களுடன் உறவு கொண்டவன். ருக்மணி என்ற மனைவி இருந்தும், ராதா என்ற பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தான். கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகளும், 16,108 வைப்பாட்டிகளும், 1.80 லட்சம் குழந்தைகளும் இருந்தனர்’’ (பக்கம் 338) என்று அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைக் களவாடியதும், மரத்தின் உச்சியில் அமர்ந்து குளிக்கும் பெண்களின் உடல்களை இரசிப்பதும்தான் ஒரு கடவுள் வேலையா? இந்தக் கடவுளி-டத்தில் பக்தி செலுத்துபவர்கள் எந்தத் தாக்கத்துக்கு, உணர்ச்சிக்கு ஆளாவார்கள்?
ஒரு பக்தை - அவருக்கு ஆண்டாள் என்று பெயர். கண்ணான அந்தக் கிருஷ்ணனைக் காதலனாக வரித்துக் கொண்டு வருந்தி வருந்தி எழுதிய பாடல்கள் தாம் எத்தனை! எத்தனை!! அதில் வழிந்தோடும் குடலைப் புரட்டும் ஆபாசச் சாக்கடையை எது கொண்டு சாற்றுவது!
திருப்பாவை மட்டுமல்ல - ஆண்டாள் ``நாச்சியார் திருமொழி’’ என்ற பக்திப் பாசுரத்தையும் `அருளி’யுள்ளார்.
`கொக்கோகம்’ வெட்கித் தலை குனிய-வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பாடல்:
``முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால் - என்
கொங்கை கிளர்ந்து குமைத்து
குதூகலத்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே!’’
நாச்சியார் தன்னுடைய காதலனாகிய கண்ணனிடம் கொண்ட காதல் அவள் எண்ணப்படி நிறைவேறாமல் தாம் பட்ட உள்ளுணர்வோடு கூடிய துன்பத்தின் மிகுதியைக் குயிலிடம் கூறுவதாகப் பாட்டடிகள் அமைந்துள்ளன.
``நான் முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றிருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற்றிருந்தேன். கண்ணனாகிய காதலன் வந்து என்னை புணராமையால் இவைகளின் அழகையெல்லாம் இழந்தேன்.
கண்ணனைப் புணர வேண்டுமென்ற ஆசை மிகுதியால் என்னுடைய மார்புகள் மகிழ்ச்சியால் உந்தப் பெற்று, பெருத்து, உணர்ச்சி வசப்பட்டு என்னுடைய உயிரைத் துன்பப்படும்படிச் செய்கின்றது. இவைகளை அழகிய குயிலே கூறுவாயாக!
மேலும் நாச்சியார் பாடுகின்றார்:
கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோராச் சோர்வேனைக்
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு
இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
என்னாகத்து இளங்கொங்கை
விருப்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புங்குதற்கு எனப்
பரிவுடைமை செப்புமினே!
இந்தப் பாட்டடிகளின் அருவருப்பை ஒரு பெண் வெளிப்படையாக இப்படிப் பாடு
வாளா என்பதை எண்ணிப் பாருங்கள். பாட்டடிகளின் கருத்து பின்வருமாறு அமைகின்றது.
கண்ணனின் பிரிவுக்கு ஆற்றாமல் வருத்தம் மிகுந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது. அக்கண்ணீர் மார்பின் முலைகளில் படிந்து முலைகளின் முனைகள் வழியாகத் துளித்துளியாக வழியும்படி வருத்தம் அடைகின்ற நான் காம நெருப்பால் சுடப்பட்டுத் தென்றலுக்கு ஆட்பட்டு துன்பமடைந்து இங்கிருப்பேன்.
என் மார்பின் இளைய முலைகளை கண்ணன் விரும்பி நாள்தோறும் என்னைக் கூடும்படி விருப்பங் கொண்டு நான் இங்கு இருப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.
எந்தக் கேடு கெட்ட பெண்ணும் தம் காமவெறியை இப்படி வெளிப்படுத்துவாளா?
சாக்கடையைச் சந்தனம் என்பதும், மலக்காட்டை மலர்க்காடு என்பதும் முடை நாற்றத்தை முல்லை மணவாசம் என்பதும்தான் பக்தியும் - பார்ப்பனீயமும் அதன் ஒழுக்கமும் போலும்!
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
வெறிந்து என்னழலைத் தீர்வேனே!
என்றும் பாடுகிறார் ஆண்டாள்!
அந்தரங்கத்தில் கூட நடக்க முடியாத ஆபாசச் சேற்றை அள்ளி எறிகிறார் ஒரு பெண் பக்தை.
இந்து மதத்தின் கடவுள்கள் அவற்றின் தோற்றம் நடப்புகள் என்று எடுத்துக் கொண்டாலும் எல்லாம் காட்டுவிலங்காண்டித்தனமான விரகதாபத்தின் வெளியீடுகளும் - வழியல்களும்தான்.
`ஓம்’ என்னும் தாரக மந்திரமானாலும் சரி, சிவலிங்கம் என்று சொல்லப்படுவதானாலும் சரி எல்லாமே ஆண் - பெண் புணர்ச்சிகளை மையப்படுத்தும் சமாச்சாரங்கள்தாம்.
கடவுளே மோகினி அவதாரம் எடுப்பது, அந்த மோகினியைக் கண்டு இன்னொரு முழு முதற்கடவுள் சபலப்படுவது - கூடுவது - பிள்ளையைப் பெறுவது என்கிற தன்மையில் இந்து மதம் என்ற குட்டை சேறும் சகதியுமாக, கும்பியும் நாற்றமுமாக மனித நாகரிகத்தில் மூக்கைத் துளைக்கிறது.
ஒழுக்கத்தை ஒழித்து, மனிதனின் மலிவான உணர்வுகளைத் தூண்டி மீன் பிடிப்பது தான் இந்து மதத்தின் அணுகுமுறை.
கோயில் தேர்களிலும், கோபுரங்களிலும் செதுக்கப்பட்டு இருக்கும் ஆபாசத்தை முதலமைச்சர் மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை ஏன் பார்க்கிறீர்கள் என்று இந்து முன்னணியினர் கேட்டது சமாதானமாகி விடுமா? பார்ப்பதற்காகத்தானே செதுக்கி வைத்துள்ளீர்கள்? கோயிலுக்கு மக்களை ஈர்ப்பதற்கு இந்தக் கேவலமான உபாயத்தைத்தானே கையாண்டிருக்கிறீர்கள். அதனைச் சுட்டிக்காட்டினால் வெட்கப்படுவதற்குப் பதில் வெட்டிப் பேச்சுப் பேசுவதில் நியாயம் இருக்க முடியுமா?
இந்து மதத்தின் இதிகாசங்களும், புராணங்களும் கூட இதே கெதியில்தான் - சுருதியில்-தான்.
மகாபாரதத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது வாசகர் ஒருவர் `ஹிந்து’ நாளேட்டில் எழுதிய (17.12.1988) ஒரு கடிதம் தான் நினைவிற்கு வருகிறது. சென்னையைச் சேர்ந்த டி.அய். சுந்தரம் என்பவர்தான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.
தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயு புத்ரா (பீமர்) ஆசியோடு குந்திக்கு, தர்மர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப்பற்றி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே, அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்று தான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது - மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?
நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே, 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால் அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா? அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் `புருஷ லட்சணம்’ என்று அவர்களிடம் கூற முடியுமா? நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் எனவே, நள்ளிரவு சினிமாக்களை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது.
- இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
ஹிந்துவில் கடிதம் எழுதியவர் ஒன்றும் பெரியார் தொண்டரல்லர். கருஞ்சட்டை வீரருமல்லர் - பக்தர்தான் - அதுவும் `ஹிந்து’ ஏட்டில் எழுதியிருக்கிறார் என்பதைக் கவனிக்க-வேண்டும். இந்துக்கள் இதற்கெல்லாம் என்ன பதிலை வைத்துள்ளார்கள்?
ஒருத்திக்கு ஒருவன் என்கிற உன்னத வாழ்வு தமிழர்களுக்கு உள்ளது. அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது ஆரியப் பார்ப்பனர்களுடையது. ஆரியர்களின் கலாச்சார சின்னம் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி வகை-கள்! தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் தைப் பொங்கல் நாள் என்னும் வேளாண்மை விழா - அவர்கள் வேறு - நாம் வேறு - வேறுபடுத்திப் பாருங்கள் - நம் வேரின் ஆழம் என்ன என்று தெரியும்!
------- நன்றி: "உண்மை" 16-31 ஜனவரி2007
Search This Blog
19.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment