Search This Blog

21.5.08

சாதி ஒழியாவிட்டால் நாம் எல்லாம் "தேவடியாள்" மக்கள் தான்

இன்றைய தினம் இங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தினை ஏற்பாடு செய்ததற்கு முக்கியக் காரணம் தி.மு.கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற முனிசிபாலிட்டியில் அறிஞர் அண்ணாவின் படத்தினையும், கலைஞர் அவர்கள் படத்தினையும் திறந்து வைக்கும் விழாவிற்கு வருகை தந்ததை முன்னிட்டு, இதனை இவ்வூர் கழக நண்பர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். எனக்கு முன் அறிஞர்கள் பலர் இன்றைய ஆட்சி பற்றியும், கலைஞரவர்களின் பெருமையினைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள். அவர்களைப் பின்பற்றியே நானும் சில வார்த்தைகள் சொல்லலாம் என்று கருதுகின்றேன்.

இன்றைய தினம் நமக்குக் கிடைக்காத அரசு – ஆட்சி அமைந்திருக்கின்றது. அதன் மூலம் நாளுக்கு நாள், நாம் வளர்ந்து வருகின்றோம். முதலில் தி.மு.கழகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.கழகத்தில் உள்ள பல தோழர்களுக்கே அதன் அடிப்படைப் கொள்கை தெரியாது. தி.மு.கழகம் என்பது ஜஸ்டிஸ் கட்சி தான். இந்த நாட்டில் முதன் முதல் பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பதவி – உத்தியோகங்களில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக, பெரியார்களான தியாகராய செட்டியார் டி.எம். நாயர் ஆகியோரால் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதாகும்.

அந்த ஜஸ்டிஸ் கட்சிப் பதவி – உத்தியோகம் தவிர சமுதாயக் துறையில் சரியாகப் பணியாற்றவில்லை என்கின்ற காரணத்தால் நானும், அண்ணாவும் அதில் நுழைந்தோம். ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களின் தொல்லைக்கும், ஈடுகொடுக்க முடியாமல் போனதால், அதிலிருந்தவர்கள் எல்லாம் முக்கியமானவர்கள் விலக ஆரம்பித்தனர். அப்போது நான் அதற்குத் தலைவனாக வேண்டியதாயிற்று. அண்ணா செயலாளரானார். நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும் அண்ணா அவர்கள் "ஜஸ்டிஸ் கட்சி"
என்கிற பெயர் இங்கிலீஷ் மொழியில் இருப்பதோடு அது மக்களுக்குப் புரியாமல் இருக்கின்றது.

"ஜஸ்டிஸ் கட்சி" என்றால் பணக்காரர்கள் கட்சி என்கின்ற எண்ணம் மக்களிடம் இருக்கின்றது. அதனை மாற்றி சமுதாயத்திற்குத் தொண்டாற்றக்கூடிய இயக்கமாக ஆக்க வேண்டுமென்று சொன்னார். எனக்கும் அந்த எண்ணமிருந்ததால் நான் அதை ஒத்துக் கொண்டேன்.
அதன் பின் 1944- இல் சேலத்தில் நடைப்பெற்ற "ஜஸ்டிஸ் கட்சி" மாநாட்டில் அண்ணாதுரை தான் பெயரை "திராவிடர் கழகம்" என்று மாற்றினார்.

அந்த மாநாட்டில் தான் அண்ணாவின் திட்டம் என்கின்ற பெயரால் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. "திராவிடர் கழகம்" என்றால் சுயமரியாதை இயக்கம் கொள்கையும், ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையும், சேர்ந்ததாகும். அதில் அண்ணா பல தீhமானங்கள் கொண்டுவந்தார்.

திராவிடர் கழகத்தில் இருப்பவர்கள் அரசாங்கத்தில் பதவி வகிக்கக் கூடாது சர் - ராவ்சாகிப் போன்ற பட்டங்களை உபயோகப்படுத்தக் கூடாது. அரசியல் சம்பந்தமான எந்த தேர்தல்களிலும் ஈடுபடக்கூடாது. தற்போது பதவியிலிருப்பவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமாச் செய்துவிட வேண்டும் என்கின்ற தீர்மானம் அங்குதான் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்று ஜாதி ஒழிப்பாகும்.

ஜாதி ஒழிய வேண்டுமானால் கடவுள் - மதம் - சாஸ்திரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு அண்ணா அவர்கள் இக்கொள்கைகளை நிறைவேற்ற திராவிடர் கழகம் போதாது.

அதை விடத் தீவிரமாகப் போக வேண்டும் என்று இதிலிருந்து பிரிந்து தி.மு.கழகம் என்கின்ற அமைப்பைத் துவக்கினார். திராவிடர் கழகத்தைவிட அதில் அதிகமானது தேர்தலில் நிற்பது என்கின்ற ஒன்றுதானாகும். இது தவிர மற்ற கொள்கைகள் அனைத்தும் இரண்டிற்கும் ஒன்றுதானாகும். திராவிடர் கழகம் எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்தலில் ஈடுபடாது. இந்த இரண்டு இயக்கங்களின் கொள்கைகளில் மிக முக்கியமானது சாதி ஒழிப்பு. இன்றைய அமைப்பில் சாதி ஒழிப்பில் நாம் வெற்றி பெற முடியாது.

இந்தியா முழுவதும் ஜாதி ஒழிய வேண்டுமென்று தொண்டாற்றுவதற்கு
இந்த ஓர் அரசியல் கட்சி ஒன்று தான் இருக்கின்றது. மற்ற அத்தனையும் கம்யூனிஸ்ட் உட்பட ஜாதியைக் காப்பாற்றக் கூடியவையே ஆகும். நம்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி பணக்காரனுடன் ரகளை செய்து அவனிடம் பணம் பிடுங்குவதை, வயிறு வளர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்படுகின்றதே தவிர, மனித இழிவைப் பற்றி அதற்குக் கவலை இல்லை.

அந்தக் கட்சியே அப்படி என்றால் மற்றக் கட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.காங்கிரசின் கொள்கை சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதேயாகும். அதனால் தான் காமராசர் உள்ளத்தில் சாதி ஒழிய வேண்டும் என்றிருந்தாலும், வெளியே சொல்ல முடியாமல் இருக்கிறது. சொன்னால் காங்கிரசில் அவர் இருக்க முடியாது. நம் மக்களுக்கு இருக்கிற இழிவு, சூத்திரத் தன்மை நாலாம் சாதித் தன்மைகள் ஒழிக்கப்பட வேண்டுமானால் சாதி ஒழிக்கப்பட்டாக வேண்டும். சாதி ஒழிக்கப்பட்டால் இவற்றில் எதுவும் ஒழியாது. சாதி ஒழியாவிட்டால் நாம் எல்லாம் "தேவடியாள்" மக்கள் தான். வைப்பாட்டி மக்கள் தான்.

அந்தத் தேவடியாள், வைப்பாட்டி யார் என்றால், இதோ இருக்கிற நம் தாய்மார்கள் ஆவார்கள். இன்றைய சட்டப்படி, நாம் அத்தனை பேர்களும் சூத்திரர்கள். பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் தான்.
கொஞ்சம் வெள்ளையாகச் சொல்லுகிறேன். அவர்கள் மறைத்து சொல்கிறார்கள். சாதியை ஒழிக்க இவர்களால் தான் முடியும். இவர்கள் போனால் அடுத்து வருபவன் சாதியை நிலை நாட்டக் கூடிய கொள்கை உடையவனாகவே இருப்பான். நம் சாதிக்கு அடிப்படைகள் எவையோ, சாதியை உண்டாக்கிய கடவுள்- மதம் எவையோ சாதியை பிரசாரம் செய்கின்ற புராண இதிகாசங்கள் எவையோ அவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்கின்றோம்.

இன்றைக்கு நாம் ஓர் அளவிற்கு முன்னேறி இருக்கின்றோம். 50 -வருஷத்திற்கு முன் எல்லோரையும் பார்ப்பான், சூத்திரன் என்று தான் அழைத்துக் கொண்டிருந்தான். அதை நம்மவன் பெருமையாகக் கருதிக் கொண்டிருந்தான். இன்று நம் தொண்டின் காரணமாக அந்த நிலைமாறி விட்டது. இவர்கள் வந்ததற்குப்பின், இந்த உணர்ச்சி வந்தபின் நம்மக்கள் எத்தனை பேர்கள் படிக்கிறார்கள் எத்தனை பேர்கள் உத்தியோகங்களில் இருக்கிறார்கள்!

பார்ப்பானை சாமி என்று கூப்பிட இப்போது தானே நம்மவன் வெட்கப்படுகின்றான்.தி.மு.கழகக் கொள்கை நம் சமுதாயத்தில் இருக்கிற இழிவு நீங்க வேண்டும். யாவருக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டும் என்பது தான். காமராசர் ஆட்சிக்கு வருகிற அன்று வரை நம்மவன் சாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று தானே இருந்தது. நம்மவன் படிக்கக் கூடாது என்று தானே பள்ளிக்கூடங்களைப் பார்ப்பான் மூடினான். வெள்ளைக்காரன் ஆட்சி 120 – வருடங்கள் நடந்தும் நம் மக்கள் 100-க்கு
9- பேர்கள் தானே படித்திருந்தார்கள்.

காமராசர் வந்தபின் தான் நம்மக்கள் படிக்க முடிந்தது. இவர்கள் வந்த
பின் அதை அதிகமாக்கி இருக்கின்றனர். உயிருக்குத் துணிந்தது, இன்றைய
தினம் இந்தத் தி.மு.கழகம் ஒன்று தான் சமுதாயத்துறையில் மற்ற உலகமக்களைப் போல நம் மக்களும் ஆக வேண்டும் என்று தொண்டாற்றுகிறது. தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்து என்ன செய்தது என்று கேட்பீர்கள். நம்மவர்களுக்கு மளமளவென்று உத்தியோகம் கொடுக்கிறார்கள். ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். இந்த அய்க்கோர்ட் தோன்றி இத்தனை நாளைக்கு ஒருவர், இருவர் தான் பார்ப்பனரல்லாதவர் ஜட்ஜாக இருந்தனர்.

இன்றைக்கு பார்ப்பான் 4- பேர்கள் பார்ப்பனரல்லாதார் 10 – பேர்கள் இருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதம் போனால் பார்ப்பான் 2 – பேர்கள் தான் இருப்பான். பார்ப்பனரல்லாதார் 12 - பேர்கள் இருப்பார்கள். இதனால்
நம் மக்களுக்குப் பல நன்மைகள் உண்டு. நம் வக்கீல்களுக்கும் பல நன்மைகள் ஏற்படும். காங்கிரஸ் காலத்தில் சமுதாயத்தைப் பற்றிப் பேச முடியாது. அவர்களுக்குச் சமுதாயத்தைப் பற்றிய கவலையே கிடையாது. இனி வரப் போகும் காலத்தில் தாய்மார்களுக்குச் சமஉரிமை வர வேண்டும்.

ஜாதியில் எப்படி பார்ப்பான் - பறையன் என்று ஒதுக்கி வைத்திருக்கிறோமோ அதுபோல பெண்களை நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். 100- கலெக்டர்கள் இருந்தால் 50 – பேர்கள் பெண்கள் இருக்க வேண்டும். 20 – ஜட்ஜீகள் இருந்தால 10-பேர்கள் பெண்களாக இருக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குச் சமவாய்ப்புக் கொடுக்க வேண்டும். அது இவர்களால் தான் முடியும். மனுதருமத்தை மாற்றியமைப்பது தான் இவர்கள் இலட்சியம். அவர்கள் உங்கள் ஒட்டை எதிர்பார்த்தால் மறைத்துச் சொல்கின்றார்கள்.
எனக்கு உங்கள் ஓட்டு தேவை இல்லை என்பதால் வெள்ளையாக எடுத்துச் சொல்கின்றேன்.


பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிற
நம் சமுதாய இழிவை நீக்க வந்த ஸ்தாபனம் தி.மு.கழகமாகும். அமைச்சர்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள். இதில் ஒருவருக்குக் கூட கடவுள் நம்பிக்கைக் கிடையாது. நாளைக்கு நாங்கள் கிளர்ச்சி செய்யப் போகிறோம். இவர்களுக்குப் பயந்து கொண்டு தான் சும்மா இருக்கிறோம் என்றாலும், நாளைக்குக் கிளர்ச்சி செய்யத்தான் போகின்றோம்.

நாமும், நம் தாய்மார்களும் ஏன் கோயிலுக்குள் கர்ப்பகிரஹம் இருக்கிற இடத்திற்குப் போகக் கூடாது? பார்ப்பான் மட்டும் போகலாம் - நாம் ஏன் போகக் கூடாது? பார்ப்பானைவிட நாம் எதில் மட்டமானவர்கள்? நம்மை
விட அவன் எதில் உயர்ந்தவன்? அவனுக்கிருக்கிற உரிமை நமக்கு மட்டும் ஏன் இல்லை? இந்த உரிமையைப் பெறுவதற்காக நாளைக்கு நாம் போராடத்தான் போகிறோம். இந்த மந்திரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் நம்மைச் சிறையில் அடைத்தாலும் அடைக்கக் கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எல்லாவற்றிற்கும் துணிந்து தான் ஆரம்பிக்க இருக்கின்றேன். நமக்கு வேண்டியது நம் இழிவு ஒழிய வேண்டும். மற்ற மக்களைப் போல சமமாக வாழ வேண்டும் என்பதுதானாகும்.

07-06-1969 அன்று தஞ்சையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு "விடுதலை" - 20-06-1969 "பெரியார் களஞ்சியம்" - தொகுதி : 18 . "ஜாதி – தீண்டாமை"- பாகம் :12 என்ற நூலில் இருந்து… பக்கம் :287 - 291

1 comments:

Samikkannu said...

I am running 58 now; during my schooldays, i.e. some 40years before,I had been an ardent follower of Periyar and Annadurai;as soon as the DMK ascended to the throne in 1967, it bared its true class character, i.e.,it portrayed its real motto of protecting the interests of the landlords and the capitalists; just two incidents at KILAVENMANIIN THANJAVUR AND THE SIMPSON STRIKE IN CHENNAI OPENED MY EYES; though the 'BRAHMINs' in THIRUGNANASAMPANTHAM ,District Secretary of the then composite Thanjai and P.RAMAMURTI, the veteran communist leader could not stop them from coming to the rescue of the DRAVIDIAN farm and industrial workers, the Saviours of the Dravidians took sides on the Dravidian and the Brahmin landlords and cpitalist;those two tragedies shook my faith in them which led me to turn to the very same 'POONOOL' COMMUNISTS WHOM I USED TO TREAT WITH UTTER CONTEMPT IN THOSE DAYS;PERHAPAS THIS WAS THE CASE WITH SO MANY YOUNGSTERS OF THAT PERIOD WHO WERE ALSO QUITE HONEST IN THEIR EARLIER COMMITMENT TO THE CAUSE OF 'PERIARISM'!
KILAVENMANI AND UTHTHAPURAM ARE THE TWO REMARKABLE MILESTONES IN THAMIZHNADU TO CLEARLY DEMARCATE WHO THE REAL FIGHTERS FOR THE CAUSE OF THE DALITS AND OTHER BACKWARD CLASSES ARE!
It is really a pity that still a vast section of our masses are easily carried away by the misleading propaganda of the so-called 'champions' of the Dalits and Dravidians! and here lies the significance of the power of the print electronic media including the blogospheres on the internet like yours!
A.V.Samikkannu,Pappireddippatti post&taluk, Dharapuri district,
Thamizhnadu.