Search This Blog

16.5.08

வினோபா பாவேவும் - பெரியாரும்

வினோபா பாவே: ஜாதி ஒழிப்பும் என்னுடைய முக்கியக் கொள்கைகளில் ஒன்று. தேர்தல் சண்டையில் கலந்துகொள்ளாமல் சமுதாயப் பணி செய்வதைப் பாராட்டுகிறேன். நான் இராமாயணம் - எந்த நூலையும் பிரமாதமாகக் கொள்வதில்லை. தவறான கருத்துகள் இருந்தாலும் ஒரு சில நல்ல கருத்துகளும் இருக்கின்றன. தவறான கருத்துகளை விட்டுவிட்டு நல்ல கருத்துகளை எடுத்துக் கொள்ளலாம். இராமாயணத்தைச் சாதாரண நூலாகவே நான் கருதுகிறேன். ஜாதியை ஒழிக்கும் பணியில் உள்ள நீங்கள், இதுபோன்ற நூல்களையும், கடவுள்களையும் ஒழிக்கிறேன் என்கிறீர்கள். நமக்கு முக்கியமான கருத்துகளை மாத்திரம் வற்புறுத்தி, மற்றவைகளில் தளர்த்திக் கொடுப்பதன் மூலம் அதிகக் கூட்டமான மக்கள் நம் பக்கம் திரும்பக்கூடும். நமது குறிக்கோள் ஜாதியை ஒழிப்பது. அதை மாத்திரம் வற்புறுத்தினால் போதும். கடவுள்-களையும் புராண ஆதாரங்களையும் (ஜாதி ஒழிய வேண்டுமென்பதற்காக) ஒழிக்கக் கிளம்பினால் புராண ஒழிப்பு, கடவுள் ஒழிப்பு வேலையாகவேதான் இருக்க நேரிடும். புராண, இதிகாசங்களில் உள்ள நல்ல கருத்துகளை வைத்துக்கொண்டே ஜாதியை ஒழிக்கலாம்.

பெரியார்: இராமாயணம் நீதிநூல் என்பதற்கு அதில் ஒன்றும் இல்லை; நீதி கற்பிக்கக்கூடிய தன்மையில் அதில் ஒன்றுமே கிடையாது; நல்ல கருத்துகள் இருப்பதாக ஒன்றும் இல்லை. இரண்டொருவருக்கு வேண்டுமானால் நல்ல கருத்துகளை மாத்திரம் எடுத்துக்கொள்ள முடியலாம். நாம் பொதுமக்கள் என்பவர்களை மனத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். விஷத்தின்மீது சர்க்கரை பூசிக்கொடுத்தால் எத்தனை பேருக்கு சர்க்கரையை மட்டும் சாப்பிட்டுவிட்டு விஷத்தைத் துப்பிவிடக்கூடிய சக்தி இருக்கும்? மக்களுக்கு நீதி நூல் தேவையென்றால், உங்களைப் போன்றவர்கள் புதிதாக எழுதித் தரலாம். அந்த இதிகாசங்களை எழுதியவர்களும் உங்களைப் போன்ற மனிதர்கள் தானே? அதுவும் அந்தக் காலத்து மனிதர்கள்!
ஜாதியொழிய வேண்டுமானால், அதற்கு ஆதாரமாக இருக்கின்ற இராமாயணம், பாரதம், மனு போன்ற புராண இதிகாசங்கள், கடவுள்கள் எல்லாம் ஒழிந்தே தீரவேண்டும். ஒரே ஆண்டவன் என்பவன்கூட ஜாதிக்கு ஆதாரமாயிருந்தால் ஒழிந்தே தீரவேண்டும். இராமாயணம், பாரதம் போன்ற புராணங்-களிலும் இராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள்களிடத்திலும் மற்றும் பதிவிரதை என்று சொல்லப்படுகிறவர்களிடத் திலும் கொஞ்சங்கூட யோக்கியத் தன்மையோ, நாணயமோ காணப்படவில்லை. அதைப் படிக்-கின்ற மக்களுக்கும் அதிலிருந்து நாணயமோ, ஒழுக்கமோ வந்ததாகவும் இல்லை. நான் கடவுள் என்று ஒன்று உண்டு என்று புரிந்து கொள்ளவும், அந்த ஒரு கடவுளை நம்பவும் முடியாவிட்டாலும், ஒரு கடவுள் உண்டு என்-கிறவர்களிடம் - இல்லையென்று மறுத்துப் பேச வரவில்லை. ஆனால், ஜாதிக்கு ஆதாரமாக இருக்கிற மனுதர்மம் போன்ற சா°திரங் களையும், ஜாதிக்கு ஆதாரமாக இருக்கிற இதிகாசங்களையும், ஜாதிக்கு ஆதாரமாக இருக்-கிற இராமன், கிருஷ்ணன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்களையும் வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியாது. நான் வால்மீகி, கம்பராமாயணம் போன்ற நூல்களைப் படித்தே கூறுகிறேன்.


(இராமாயணத்திலுள்ள ஆதாரங்களை எடுத்துக் காட்டியதுபோது)

வினோபா பாவே: நான் துளசி இராமாயணமும், மராட்டி இராமாயணமுந்தான் படித்துள்ளேன். அவைகளில் அப்படி இல்லை.

பெரியார்: நீங்கள் ஏழெட்டு மாதங்களாகத் தமிழ்நாட்டில், எனது சமுதாய மக்களுக்கு, சாதியொழிய வேண்டுமென்ற கருத்தைச் சொல்லி வருவதைக் காண மகிழ்ச்சி அடைகிறேன். இதைப் பத்திரிகைக்காரர்கள் போடுவதே யில்லை; ஜாதியொழிய வேண்டுமென்ற கருத்தை மறைக்கவே பார்க்கிறார்கள்; அவரவர்களுக்கு வேண்டிய சங்கதிகளை மாத்திரம் போடுகிறார்கள். நான்தான் எனது பத்திரிகையில் நீங்கள் சொல்லும் - ‘ஜாதியொழியவேண்டும்’ என்ற கருத்துகளைப் போடுகிறேன்.

வினோபா பாவே: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்யவேண்டும். அதிக நிலதானம் கிடைக்க உதவி செய்யவேண்டும்.

பெரியார்: என்னால் கூடுமான உதவிகளைச் செய்கிறேன். நான் கொண்டுள்ள வேலை அதாவது, ஜாதி ஒழிப்பு முக்கியமானது. நான் அரசியல் பற்றிக் கவலைகொள்ளாதவன். அரசியலில் ஈடுபடமுடியுமானால் நீங்கள் செய்துவரும் வேலையையும், இனி செய்யப்போகும் வேலையையும் சேர்த்து, சட்டத்தின் மூலம் ஒரே வரியில் உத்தரவு போட்டு விடலாம். ஆனால், ஜாதி ஒழிப்பு வேலை அவ்வளவு இலேசானதல்ல. அதனால்தான், அந்த முக்கியமான வேலையை நான் மேற்கொண்டு செய்கிறேன். நான் அதையே எல்லாவற்றையும் விட முக்கியமானதாகக் கருதுகிறேன்.

(திருச்சி மாவட்டத்தில் கால்நடையாகச் சுற்றுப் பயணம் செய்த ஆச்சார்யா வினோபா பாவே அவர்களும், பெரியார் அவர்களும் (19.1.1957) காலை 10.45 மணிக்கு திருச்சி தேசியக் கல்லூரியில் சந்தித்தார்கள். சுமார் 2 மணி நேரம் உரையாடினார்கள்).

-------------------------- "விடுதலை" - 20.1.1957

0 comments: