Search This Blog

20.5.08

கலைஞர் ஆட்சி பற்றி தந்தைபெரியாரின் கணிப்பு






எனக்கு வயது 91. ஆண்டுகள் 91 முடிந்துவிட்டது.

17.9.70வது நாள் முதல் 92வது ஆண்டு துவங்குகிறது.

91வது ஆண்டு எனக்கு உற்சாக மாகவே கழிந்ததுடன், மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன், வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம்போல் எனக்குத் தோன்றுகிறது.
மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதல்களுக்கு இணங்குபவர்கள் போல் மக்களைக் காண்கிறேன்.

மேலும் மாறுதலடையுங்கள்

அதாவது, கடவுள், மதம், ஜாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதலடைய பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காணுகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவுக்கும் காரணமாகும்.

இந்த நிலையில் நான் எனது 92வது பிறந்த நாள் சார்பாக மக்களுக்கு தெரிவித்துக்கொள்வதெல்லாம் மனம் துணிந்து மேலும் மாறுதலடையுங்கள் என்பதேயாகும்.
நான் இந்த நிலை அடைந்ததற்கும், மக்களை இந்த அளவுக்கு நான் வேண்டுவதற்கும் முக்கியமான காரணம் இந்த இரண்டு மூன்றாண்டுகளாக நமது நாட்டில் நடந்து வந்த ஆட்சியேயாகும்.

பார்ப்பனர் சூழ்ச்சிகள் தவிடுபொடி ஆயின

நமது நாட்டு ஆட்சியானது பகுத்தறிவு ஆட்சி என்பதோடு, எந்தவித மாறுதலுக்கும், எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியே யாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டிருக்கிறது. இது இயற்கையின் காரணம் என்றாலும் மக்கள் இன்ப வாழ்வு வாழ்கிறார்கள் என்று திருப்தியடையத் தக்கதாகவே இருந்து வருகிறது. எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.

இவற்றை ஏன் பெருமையாக குறிப்பிடுகிறேனென்றால் பதவி வெறியால் தூண்டப்பட்ட எதிரிகள், எதிர்க் கட்சிகள் “தங்கள் சமுதாயத்திற்கு ஆபத்து வந்துவிட்டது” என்று கருதி பயந்து கிடக்கும் நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் இந்த ஆட்சியை அழிக்கச் செய்த, செய்து வருகிற இமாலயப் பிரயத்தனங்கள் தவிடு பொடியாகி வருவதுடன் எவ்விதத் தடையுமின்றி ஆட்சியின் காரியம் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதுதான்.

பத்தாண்டுகளுக்கு இதே ஆட்சி

இந்த நிலையில் நான் எனது 92வது ஆண்டு செய்தியாக மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்கு பாதுகாத்து வரவேண்டுமென்பதே ஆகும்.

தேசம் மிருகப் பிராயத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது. யாரும், எப்படிப்பட்டவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காணமுடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத் தக்கதாய் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சிதான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆளமுடியும்?

----------------- தந்தை பெரியார் பிறந்தநாள் ‘விடுதலை மலர்’, 17.9.1970

0 comments: