Search This Blog

28.5.08

மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம்

மத உரிமைகளுக்காக. அவற்றை நிறைவேற்றுவதற்காக கன்னியாகுமரி முதல் கராச்சி வரை, அலைந்து.. பல்வேறு மடங்களையும் நேரில் அடைந்து, மடாதிபதிகளையும் மாநாட்டுக்கு அழைத்த கஷ்டமான காரியத்தை விளக்கினேன்.

டெல்லியில் இந்துமகாசபை என்ற இடத்தில் மாநாடு நடந்தது.

யார் யார் கலந்து கொண்டனர்? கல், காடு, மலை, வெயில் என கடந்துபோய் நாங்கள் சந்தித்த பாரதத்தின் நூற்றுக்கணக்கான மடங்களிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை கராச்சி சிந்துநகர மடப்ரதிநிதியை தவிர.

சின்ன வருத்தம்தான் அதற்காக என்ன செய்வது? பேருக்குக் கூடிய அந்த மாநாட்டில்.

'‘Freedom of religion and maintaining religious institutions " வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கலைந்தோம் எங்கே? கலைவதற்குக்கூட ஆட்கள் இல்லை.

இதன் பிறகும் சளைக்காமல் மடங்களுக்கான தனியுரிமை குறித்து..Parliament Bill கொண்டுவர ஏற்பாடு செய்தோம். புது பார்லிமென்ட் வந்த பிறகு அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஸ்வதந்த்ரம் பெற்று பாகிஸ்தான் - இந்தியா என தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவான நமது தேசத்தில் 'All are equal. All religions are equal" என்று பிரகடனப்படுத்தப் பட்டது. அதாவது Secular Srate அரசமைப்பு சாசனம் அறிவித்தது.

அதாவது எத்தனை மதங்கள் எத்தனை தர்மங்களை பின்பற்றினாலும் இந்த தேசத்தின் பொதுதர்மம் All are equal என்பதுதான்.

நமது மதாசாரப்படி தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான் அரசனும் தர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும் ஏன் பகவானேகூட தர்மத்துக்கு, தர்ம நெறிமுறைகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக்கலாச்சாரம் கற்றுத்தருகிறது.

இதனைத்தான் 'தர்மவிகிக்ரமம்" என்கிறோம் அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு.

இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் ஓர் இடம் கதையைப் படிக்கும்போதே அந்த ஊரின் பெயர்க் காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு. என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.

அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார்.

ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும்போது அவனை சந்தித்தார்.

என்ன ஜலந்தர்?.. நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே? எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்? இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ? என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்.. 'நான் பார்வதி தேவியை அடையமுடியுமா?’...எப்படி? என கேட்கிறான்.

அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார்.

சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர் எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார் நீ என்ன பண்ணு.. சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலகயோசனையை காதுகொடுத்து கேட்டபின்,

அப்படியே.. சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான் இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க.. அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான் அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர், பார்வதி.. தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து 'ஸ்வாமீ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள் கைலாயத்தில் இப்படி...

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்? கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள் தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப் பார்த்த விஷ்ணு.. 'நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள் நாமே ஜலந்தராக உருவெடுத்து அவனை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து.. கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

'ஆஹா.. என் கணவர் வந்துவிட்டார் என சந்தோஷம் பொங்கிய பிருந்தா.. தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...

'நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்.. சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்.. பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா? வேதத்தின் மயக்கத்தை.. பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன் தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?.. என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான்.. பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா.. உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...

அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார் 'நான்தான் பக்தையே... என அறிமுகம் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி.. பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய் பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான் உனக்கு சாபமிடுகிறேன் கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்.

அதாவது கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதை சொல்லும் நீதி.

இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் ஆகமரீதியாக இன்னும் இது உயிர் வாழ்ந்து வருகிறது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So according to constituion Brahminsm is antistate .

அதனால்.. மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம் (நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் நான் சொல்வது கொள்கை தத்துவத்தை மட்டும்) என்பது நமது அரசியல் தர்மத்துக்கு அப்பாற்பட்டது.

---------- அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் - நூல்: "இந்து மதம் எங்கே போகிறது?"
---------- நன்றி : "நக்கீரன்" - 30.11.2005

0 comments: