Search This Blog

29.5.08

27 சதவிகித இட ஒதுக்கீடு: சரியான தீர்ப்பா?






சட்ட வல்லுநர்கள் எழுப்பும் சர்ச்சை


மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யும் 93 ஆவது அரசியல் சட்ட திருத்தமும், அதையொட்டி கொண்டு வரப்பட்ட தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பிலுள்ள முக்கிய சாரம்சம் இட ஒதுக்கீடு, ஜாதி அடிப்படையில் இருப்பது தவறல்ல. மத்திய அரசின் வேலை வாய்ப்பு சம்பந்தமாக உள்ள கிரீமிலேயர் முறை, கல்விக் கூடங்களுக்கும் பொருந்தும். சிறுபான்மையினர் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு கிடையாது என்ற அரசியல் சட்டப் பிரிவு (30) சரியே என்கிறது.

இந்தத் தீர்ப்பை வரவேற்பவர்களில் பலரும் அதிலுள்ள கிரீமிலேயரை முற்றிலுமாக நீக்கவேண்டும் என்கின்றனர். ஒரு சாரர், இத்தீர்ப்பு அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்கின்றனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும், கிரீமிலேயரை முற்றிலும் நீக்கவேண்டும் என்றே சொல்கிறார்.

மத்திய அரசின் கல்வி நிலையங்களில் 57 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட சமூகநீதி இந்தத் தீர்ப்பின் வாயிலாக கிடைத்துள்ளது. ஆனால், கிரீமிலேயர் ஒன்றைப் புகுத்தி, இட ஒதுக்கீட்டின் அம்சத்தையே சிதைத்துவிட்டனர். கிரீமிலேயரானது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் இல்லாத ஒன்று.

முதலாம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்தபோது, கிரீமிலேயர் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அது ஏற்கப்படாமல் போனதால், தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தற்போது உச்சநீதிமன்றம் திணித்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்.

மேலும், பொருளாதார அளவுகோல் ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. கிரீமிலேயரால் ஒரே குடும்பத்திற்குள் வேற்றுமைகள் வளரக் கூடும். அதாவது, ஒரு வீட்டிற்குள்ளேயே ஒருவர் பின்தங்கியவராகவும், மற்றொருவர் முன்னேறியவராகவும் கருதப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இதனால் பின்தங்கியவர் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கவும், முன்னேறியவருக்கு மறுக்கப்படுவதுபோலவும் ஒரு ஆபத்தான நிலைமையை இத்தீர்ப்பு ஏற்படுத்தும்.

ஊழியர்களுக்கு எல்லாம் நிரந்தர வருமானம் உண்டு. ஆனால், விவசாய - கூலித் தொழிலாளர்களுக்கு நிரந்தர வருவாய் கிடையாது. ஆகையால், இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. இது மண்டல் குழுவின் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஏழையாக இருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்யலாமே தவிர, கல்வியில் கொண்டு வந்து திணிக்கக் கூடாது. பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் எல்லாம் கல்வியிலும் முன்னேறி இருப்பார்கள் என்று உச்சநீதிமன்றம் எதை வைத்து கணித்தது? அதனிடம் அதற்கான புள்ளி விவரங்கள் ஏதும் இருக்கிறதா? ஏதோ குத்துமதிப்பாக கணக்குப் போட்டு கிரீமிலேயரை வெளியேற்ற வேண்டும் என்று கூறுவது சரியல்ல.

இப்போதுதான் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதற்குள் அவர்களில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களே 27 சதவிகிதத்தையும் அபகரித்துக் கொண்டார்கள் என எதை வைத்து உச்சநீதிமன்றம் தீர்மானித்து இருக்கிறது என்பது புரியவில்லை.

இதைவிட பெரிய கொடுமை, பட்ட மேற்படிப்புக்கு இட ஒதுக்கீடு கூடாதாம். கல்வி என்பது அனைவரும் பெறவேண்டிய ஒன்றாகும். வருமானம் அதிகமுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று கூற உச்சநீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தன் வரம்பை மீறி அது செயல்படுகிறது.

இட ஒதுக்கீடு அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்கிறபோது, உயர் வருமானம் உள்ள பிற்படுத்தப்பட்டோரை இட ஒதுக்கீட்டில் இருந்து நீக்கவேண்டும் என்பது எந்த அடிப்படையில் நியாயம்?

எந்தப் புள்ளி விவரங்களையும், ஆதாரங்களையும், சட்ட விதிகளையும் கொண்டு இந்த கிரீமிலேயர் எழுதப்படவில்லை. ஆகையால், அதை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கவேண்டும். இந்தக் கல்வி ஆண்டே அனைத்து மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும் என்கிறார் கி. வீரமணி.


---------- நன்றி: "ராணி", 25.5.2008

0 comments: