Search This Blog

15.5.08

தனது செல்வாக்கை சொந்த நலனுக்காக பயன்படுத்தாதவர் இராம. சுப்பையா

திராவிட இயக்கத்தின் முரசமாக - போர்வாளாக - தொல்லைகள் பல தாங்கிய தீரராக - தியாகச் செம்மலாக - என் போன்றோர்க்கு அண்ணனாக விளங்கி மறைந்தும் மறையாமல் வாழ்கின்ற அண்ணன் இராம.சுப்பையா அவர்கள் - காரைக்குடியில் திராவிட இயக்கத்தை வித்திட்டு வளர்த்து அதை வீழ்த்துவதற்கு பெரும் படை சுற்றிலும் வளைத்த போதும், கலங்காமல், அக்காலத்தில் தனி ஒருவராக நின்று பெரியாரின் நினைவை, அண்ணாவின் சொல்லை, எங்களைப் போன்றவர்களின் தோழமையை படைக்கலன்களாகக் கொண்டு - வெற்றி பல கண்ட வீரர் - என்றைக்கும் எங்களைப் போன்றவர்களால் அண்ணன் என்று அன்பொழுக அழைக்கப்பட்டவர் - இராம.சுப்பையா அவர்கள் நூறாண்டு வாழ்ந்து அவருடைய நூற்றாண்டு விழா நடைபெற்றிருந்தால் மகிழ்ச்சி மேலும் எங்களுக்குப் பெருகியிருக்க முடியும். ஆனால் எங்களோடு இருந்து அருந்துணை புரிந்து மொழி வாழ - இனம் வாழ - இயக்கம் வாழ - வழிகாட்டக் கூடிய அந்த வாய்ப்பை முழுமையாக அவர்களிடமிருந்து நாங்கள் பெற முடியாமல் இயற்கை அழைத்துக் கொண்டது என்றாலுங்கூட, அவருக்கு முடிவில்லை - மரணம் இல்லை - வீழ்ச்சி இல்லை - என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்வார் என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் இந்த அரங்கம், இந்த மேடை விளங்கிக் கொண்டிருக்கின்ற காட்சியை நான் காணுகிறேன்.

தனது செல்வாக்கை சொந்த நலனுக்காக பயன்படுத்தாதவர்

இராம. சுப்பையா அவர்கள் ஒரு ஏழைத் தொண்டர் - காட்சிக்கு. ஆனால் காரைக்குடி வட்டாரத்திலே செல்வாக்குமிக்க ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தச் செல்வாக்கு பணத்தால் அல்ல, பண்பால். அவருடைய மக்கள் ஆதரவால் - அவருக்கு குவிந்த பக்க பலங்களால் - அவருடைய ஒழுக்கத்தால், நாணயத்தால், நேர்மையால் ஏற்பட்டது என்றாலுங்கூட அந்தச் செல்வாக்கை தன்னுடைய சொந்த நலனுக்காக பயன்படுத்த வேண்டு மென்று ஒரு கணமும் எண்ணாதவர். தனக்கு, தன்னுடைய குடும்பத்தாருக்கு தன்னுடைய பிள்ளைகளுக்கு, மக்களுக்கு, ஏற்படுகின்ற செல்வாக்கெல்லாம் குவிகின்ற வளம் எல்லாம் அவர்களுக்கு ஏற்படுகின்ற பெருமையெல்லாம் தன்னுடைய குடும்பத்திற்கு அல்ல - தான் எந்த இயக்கத்தை சொந்தக் குடும்பமாக எண்ணிக் கொண்டிருக்கிறாரோ, அந்தச் சுயமரியாதைக் குடும்பத்திற்கு, அந்தத் திராவிட இயக்கத் திற்கு அவைகள் எல்லாம் வலுவேற்ற வேண்டியவை, வளம் ஏற்ற வேண்டியவை, பயன்படக் கூடியவை, பயன்பட வேண்டியவை என்றே வாழ்நாள் முழுதும் எண்ணினார்.

அப்படி எண்ணியவாறே நடந்தார். எத்தனையோ தொண்டர்களை இந்த இயக்கம் கண்டிருக்கின்றது. தீக்குளித்த தொண்டர்களை - தியாகம் செய்த மறவர்களை - துப்பாக்கிக் குண்டுக்கு பலியான தோழர்களை இந்த இயக்கம் கண்டிருக்கின்றது. நானும் நம்முடைய வீரமணி அவர்களும் பேராசிரியர் அவர்களும் ஒரு களத்திலே நேரடியாகவே கண்டோம். போலீசார் துப்பாக்கியை நீட்டிய போது, படபடவென்று துப்பாக்கி ரவைகள் பாய்ந்து வந்து பலருடைய உயிரை மாய்த்த போது, தர்மபுரியைச் சேர்ந்த ஒரு இளைஞர், இதே அண்ணா சாலையில் மறைமலை அடிகள் பாலத்தைத் தாண்டி கொஞ்ச தூரத்திற்கு அப்பால் தன்னுடைய சட்டையை கழற்றி நெஞ்சைக் காட்டி சுடு என்று சொன்ன அந்தக் காட்சியை எங்கள் கண்களால் கண்டோம். அப்படிப்பட்ட களங்களைச் சந்தித்த வீரர்கள், தொண்டர்கள், தியாகிகள், மறவர்கள் கொண்ட இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.

அவர்களையெல்லாம் உறுதி மிக்க, உரம் மிக்க, வலுமிக்க, வைராக்கியமிக்கவர்களாக அணி சேர்த்த பெருமை அய்யாவுக்கு உண்டு, அண்ணாவுக்கு உண்டு என்றாலும், அந்தப் பெருமைகளுக்கு எள் அளவும் குறைந்ததல்ல, அண்ணன் இராம.சுப்பையா போன்ற தியாகிகளுடைய பெருமை என்றால் அது மிகையாகாது.

இங்கே காரைக்குடியை நினைவுபடுத்திய நேரத்தில் கல்லக்குடியையும் சேர்த்து நினைவுபடுத்தினார்கள். நானும், அவரும் பல ஆண்டுக் காலம் பழகியவர்கள் என்றாலுங்கூட, காரைக்குடி வட்டாரத்துக்கு கழகக் கூட்டங்களுக்கு பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு பலமுறை சென்றுள்ளேன் என்றாலுங்கூட, மூன்று மாத காலம் சேர்ந்து வாழக்கூடிய ஒரு அருமையான சந்தர்ப்பத்தை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எங்களுக்கு வழங்கினார்கள். நூறாண்டு விழா அண்ணனுக்குக் கொண்டாடுகின்ற நேரத்தில் எங்களை மூன்று மாதம் ஒன்றாக பழகச் சொல்லி - ஒன்றாக இருக்கச் சொல்லி - ஒன்றாக உரையாடச் சொல்லி - ஒன்றாகத் தொண்டாற்றச் சொல்லி - திருச்சி சிறைச்சாலையிலே எங்களை வாழ வைத்த மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கு நான் தாமதமாக ஆனாலுங்கூட இன்றைக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மூன்று மாதம் சிறை தண்டனை கிடைத்தது வேடிக்கையான கதை

கல்லக்குடி போராட்டம் முடிந்து ஆறு மாதம் எனக்கு சிறைச்சாலை. அண்ணன் ராம.சுப்பையா அவர்களுக்கு மூன்று மாதம் சிறைச்சாலை. எப்படி அவருக்கு மூன்று மாதம் கிடைத்தது என்றால், அது ஒரு வேடிக்கையான கதை. எங்களை கல்லக்குடியிலே தண்டவாளத்திலே படுத்திருக் கும்போது கைது செய்து அழைத்துச் சென்று காவல் நிலையத்திலே வைத்திருந்தார்கள். அப்படி வைத்திருந்த போது, அங்கே ஒரு அதிகாரி, பெரிய போலீஸ் அதிகாரி, கொஞ்சம் ஞாபக மறதி உள்ளவர் போலும். எனவே நாங்கள் எத்தனை பேர் என்று அவருடைய உதவி அதிகாரியிடத் திலே கேட்டார். அவர் முப்பது பேர் என்றோ, இருபத்தைந்து பேர் என்றோ எண்ணிச் சொன்னார். இந்த அதிகாரி அதை நம்பாமல், தானே ஒரு முறை தன்னுடைய கையிலே உள்ள தடிக்கம்பைப் பயன்படுத்தி எங்களை யெல்லாம் எண்ணிப் பார்த்து சரி முப்பது, இருபத்தைந்து என்று குறித்துக் கொண்டார். ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அவருக்கு ஞாபக மறதி. மறுபடியும் எண்ணினார். இப்படி எங்களை கல்லக்குடியிலிருந்து அரியலூர் சப்-ஜெயிலுக்கு அழைத்துப் போகிற வரையில் எண்ணி யெண்ணி பார்த்துக் கொண்டேயிருந்தார். நான் பல திரைப்படங்களிலே அந்தக் காலங்களிலே பார்த்து வியந்திருக்கிறேன், இப்படியும் நடக்குமா என்று. திடீரென்று அவருக்கு - அவருடைய மேலதிகாரியிட மிருந்து போன் வரும். இவர் போலீஸ் ஸ்டேஷனில் எழுந்து நின்று தான் பேசுவார். ஏனென்றால் பேசுவது பெரிய அதிகாரி. அவர் போனில் தான் பேசுகிறார் என்பதைப் பற்றி நினைவு கொள்ளாமல் எழுந்து நின்று பேசுவார். அப்படிப் பட்ட ஒரு அதிகாரி. ஒரு நகைச்சுவை காட்சியை அங்கே நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒவ்வொரு வரிசையாக எண்ணி - பத்து பத்து பேராக போய் உட்காருங்கள் என்று எங்களை யெல்லாம் அதிகாரி உட்காரச் சொன்னார். அப்படியே உட்கார்ந்தோம். அப்போது கஸ்தூரிராஜ் என்று ஒருவர் மணப்பாறையைச் சேர்ந்தவர், எங்களோடு வந்து கைதானார். அப்படி உட்காரும்போது அந்தக் கஸ்தூரி ராஜூக்கு என்ன ஆசை என்றால், என் வரிசையிலே வந்து உட்கார வேண்டுமென்று. என் வரிசைக்கு ஆறு மாதம். மற்றவர்களின் வரிசைக்கெல்லாம் இரண்டு மாதம், மூன்று மாதம். அந்த ஆறு மாதத்திலே ஒருவர் சிக்கிக் கொள்ள அண்ணன் இராம.சுப்பையா அவர்கள் மூன்று மாதத்திற்கு தள்ளப் பட்டு, அவர் கல்லக்குடி போராட்டத்தில் மூன்று மாத சிறைவாசம் என்று முத்திரை குத்தப்பட்டார். ஆனால் காவல் நிலையத்தில் நாங்கள் அமர்ந்து எங்கள் எண்ணிக்கை அதிகாரி சரிபார்க்கிற வரையில், அந்த எண்ணிக்கை சரி தானா என்பதற்கும், எது 20? எது 23? என்பதை யெல்லாம் எடுத்துச் சொல்வதற்கும் போலீஸ் அதிகாரிக்கே உதவி செய்து கொண்டிருந்தவர் அண்ணன் ராம.சுப்பையா அவர்கள். அப்படிப்பட்ட ஒரு தொண்டுள்ளம். அந்த அளவிற்கு ஒரு பெரும் உள்ளம், அன்பு உள்ளம். அதற்குப் பிறகு நாங்கள் அண்ணனோடு அரியலூர் போய்ச் சேர்ந்தோம். அரியலூரிலே ஒரு பழைய மண் சட்டியிலே மஞ்சள் நிறத்திலே சோறு போட்டு படுக்கச் சொன்னார்கள், படுத்தோம். இரவெல்லாம் நான், கஸ்தூரி ராஜ், முல்லை சத்தி, அண்ணன் ராம. சுப்பையா, இன்னும் ஐந்தாறு பேர் ஒரேயொரு செல்லில் அதுவரையிலே அந்தச் செல்லிலே நாங்கள் அடைபடுகின்ற வரை, அதிலே அடைக்கப் பட்டிருந்தவர்கள் சாராயம் காய்ச்சிய பெண்கள். அவர்கள் அங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் அங்கிருந்து வெளியே அனுப்பி விட்டு எங்களை உள்ளே அடைத்தார்கள். எங்களால் இடம் இருந்தாலுங்கூட உள்ளே இருக்க முடியவில்லை. காரணம், அவ்வளவு மோசமான நாற்றம் அந்தச் செல்லுக்குள் இருந்தது. என்ன செய்யலாம் என்று அந்த இரும்புக் கதவின் கதவுகளுக்கு வெளியே நானும் அண்ணன் ராம. சுப்பையாவும், மற்றவர்களும் மூக்கை மாத்திரம் வெளியே நீட்டிக் கொண்டு, நல்ல காற்று அங்கே வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும் என்று அதிலே இரவு முழுவதும் நின்று கொண்டே இருந்தோம்.

சொன்னால் நீங்கள் மிகைப்படுத்திச் சொல்வதாக நினைப்பீர்கள். நான் இதையெல்லாம் கூட "நெஞ்சுக்கு நீதி"யிலே எழுதவில்லை. குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். நான் நின்று நின்று களைத்துப் போனேன் என்று கருதிக் கொண்டு, அண்ணன் ராம. சுப்பையா அவர்கள் கீழே உட்கார்ந்து கொண்டு என் காலைப் பிடிக்கவே தொடங்கி விட்டார். நான் யார், என் வயது என்ன, அவர் யார், அவர் வயது என்ன, அவரைப் பார்த்து கட்சிக்கு வந்தவன் நான், அவரை விட இளையவன் நான், ஆனால் என் காலை அமுக்கி விட்டு வலி போக்க அவர் முயன்றார் என்றால், ஈடுபட்டார் என்றால், அதற்குப் பெயர் தான் தொண்டு - அதற்குப் பெயர் தான் அண்ணன் ராம.சுப்பையா என்று சொன்னால் அது மிகையாகாது. (கைதட்டல்)

இப்படி அவர் மூன்று மாதம், நான் ஆறு மாதம் என்று தண்டனை பெற்று அடைபட்டிருந்த நேரத்தில், மூன்று மாதம் கழித்து சிறைக்குள்ளே சிறைக்காவலர்கள் உள்ளே வந்து, உங்களுக்கெல்லாம் மூன்று மாதம் முடிந்து விட்டது, விடுதலை என்று சொன்னார்கள். விடுதலை என்றால், சரி வீட்டிற்குச் சென்று பிள்ளைகுட்டிகளை, மனைவியை, தோழர்களைப் பார்க்கலாம் என்று தானே புன்னகை பூக்கும். ஆனால் அண்ணன் அழ ஆரம்பித்து விட்டார். உங்களை யெல்லாம் விட்டு விட்டு நான் எப்படிப் போவேன் என்று சிறைச்சாலைக்குள்ளேயே அழுதார். அது வெறும் கண் கலக்கம் அல்ல, கண்ணீர் விட்டே அழுதார். நாங்கள் எல்லாம் அவருக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. சிறைச்சாலைக்குள்ளே அவர் ஆற்றிய அரும் பெரும் தொண்டு இருக்கிறதே, அதை நான் சொன்னால் ஒரு காலத்தில் மீண்டும் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிட்டால் நீங்களும் பழகிக் கொள்ளலாம் என்பதற்காகச் சொல்லுகிறேன்.

நேரிடுமோ என்று பயப்படாதீர்கள், நேரிட்டாலும் நேரிடலாம். இப்போது இங்கே சொல்லவில்லையா, தம்பி முத்துராமன் - நாங்கள் வாழையடி வாழையாக இந்தக் குடும்பம் தியாகம் செய்யவே பிறந்த குடும்பம் என்று - அதனால் பதவிக்காகவே பிறந்த குடும்பம் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இப்படிப்பட்ட தியாகங்களுக்கும் தயாராக இருந்தால் தான் இந்தப் பதவி பெறுவதற்கு நாம் தகுதியானவர்கள் என்பதற்காகச் சொல்லுகிறேன். அப்படிப்பட்ட ஒரு காலம் வந்தால், ராம. சுப்பையாவினுடைய சிறை வாழ்க்கை - அவர் சிறையிலே நடத்திய வாழ்க்கை - நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். (கைதட்டல்)

சுப்பையாவின் சிறை வாழ்க்கை நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்

சிறைச்சாலையில் - ஆயிரம் பேர் மூன்றாவது பிளாக் என்ற பெரிய பிளாக்கில் அடைக்கப்பட்டோம். நான், மன்னை, அன்பில் தர்ம லிங்கம், திருச்சி எம்.எஸ். மணி என்று பல பேர் உள்ளே இருந்தோம். நான் எவ்வளவு நாள் இப்படியே ஆயிரம் பேர் கூடிப் பேசிக் கொண்டே இருக்க முடியும் என்று அங்கேயே வகுப்புகளை நடத்தத் தொடங்கினோம். திருக்குறள் வகுப்பு - இராமாயண எதிர்ப்பு வகுப்பு - என்று இப்படி பகுத்தறிவு வகுப்புகளை அங்கே நடத்திக் கொண்டிருந்தோம். அப்படி நடத்திய

நேரத்தில் அங்கே ஒரு அரசாங்கத்தையும் உருவாக்கினோம். அந்த அரசாங்கத்தில் - அப்போதே பாருங்கள் - நான் முதல் அமைச்சர் - கல்லக்குடி போராட்டத்திலே சிறை சென்ற போது அந்த அரசாங்கத்திற்கு நான் முதல் அமைச்சர். அண்ணன் ராம. சுப்பையா அவர்கள் உணவு அமைச்சர். முல்லை சத்தி செய்தித்துறை அமைச்சர் - வெளியிலே இருந்து வருகின்ற கடிதங்களையெல்லாம் பிரித்துப்பார்த்து - அவர் பதில் எழுத வேண்டும். அதிலே உள்ள ரகசியத்தையும் சொல்கிறேன், இப்போது சொல்வதால் ஒன்றும் தவறில்லை, சொல்லலாம். சில பேர் சிறைச்சாலைக்கு வந்தவர்கள் வெளியே போக வேண்டுமென்று விரும்பி ரகசியமாகவே கடிதம் எழுதுவார்கள் தாய் தந்தைக்கு. என்னை வந்து அழைத்துப் போகிறீர்களா, அல்லது சிறையிலேயே சாகட்டுமா என்று கேட்டு எழுதுவார்கள். அப்படி எழுதுகின்ற கடிதங்களை முல்லை சத்தி என்னிடம் கொண்டு வந்து காட்டுவார். இருவரும் சேர்ந்து கிழித்துப் போட்டு விடுவோம். அது வெளியே போய்ச் சேராது. சென்றால் அல்லவா அவர்கள் நடவடிக்கை எடுக்க. (சிரிப்பு)

ராம. சுப்பையா அவர்கள் உணவமைச்சர். அப்போ தெல்லாம் என்ன உணவு? தி.மு.கழக ஆட்சி 67இல் ஆரம்பித்த பிறகு தான் உணவிலே திருத்தம். இட்லி கொடுத்தார்கள். அதற்கு முன்பெல்லாம் கஞ்சி, சோளம் போன்றவைதான் கிடைக்கும். இதையெல்லாம் மாற்றினோம். இருந்தாலும் அந்தச் சோளக் கஞ்சியை சக தோழர்களுக்கு - தன்னுடன் சிறையிலே இருக்கின்ற தோழர்களுக்கு - என்னெப்பா செய்வது? சாப்பிட்டுத் தானே ஆகவேண்டும், தலைவர் சாப்பிடலியா? அண்ணா வேலூர் சிறையிலே இருந்து சாப்பிடவில்லையா, பெரியார் பெல்லாரி சிறையிலே இருந்து சாப்பிடவில்லையா என்று அவர்களுக்கெல்லாம் அறிவுரை கூறி, அதைச் சாப்பிட வைத்து, தாயாக விளங்கியவர் அண்ணன் இராம. சுப்பையா என்பதை நாம் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு தியாக உள்ளம் படைத்தவர் அவர். நான் ஒன்று சொல்கிறேன். கொஞ்சம் விரசமாகக் கூட இருக்கலாம். விரசம் என்றால், திரைப்படங்களிலே பார்க்கின்ற விரச மல்ல. நான் சொல்லி நீங்கள் புரிந்து கொள்கின்ற விரசம் தான். வார்த்தையைத் தான் நான் அப்படிச் சொல்லுகிறேன். எல்லா சிறைச் சாலைகளிலும் தி.மு.கழக ஆட்சியிலே கழிப்பிடங்களை நாங்கள் உருவாக்கினோம். ஆனால் அந்தக் காலத்தில் பொது கழிப்பிடம்தான். ஒரு கழிப்பிடம் என்றால் 30 அறைகள் இருக்கும். அறைகள் என்றால் 30 கற்கள் வைக்கப்பட் டிருக்கும். அதிலே போய் ஒரேயடியாக சிறையிலே இருக்கின்ற அத்தனை தோழர்களும் முண்டியடித்துக் கொண்டு சென்று, அவரவர்களுடைய அவசரத்திற்கு தகுந்தாற்போல் போய் அமர்வார்கள். அப்படிப்பட்ட ஒரு இடம் அது தான் சிறையிலே கழிப்பிடம். இதையெல்லாம் சொன்னால் சிறைச்சாலையிலா, அப்படியா என்று யாரும் பயப்படத் தேவையில்லை. இப்போதெல்லாம் நம்முடைய ஆட்சியிலே இதனை சரி செய்து விட்டோம். ஏனென்றால் அங்கே இருக்கின்றவர்களும் மனிதர்கள் தான் என்ற அந்த உண்மையை உணர்ந்து அதை இன்றைக்கு நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கின்ற அரசாக நம்முடைய அரசு இருக்கின்றது. ஆகவே தைரியமாக சிறைச்சாலைக்குச் செல்லலாம் நல்ல காரியங்களுக்காக. அப்படி வைக்கப்பட்ட அந்த அடுக்கப்பட்ட கற்களின் மீது ஏறி அமர்ந்து தங்களுடைய காலைக் கடன்களை முடித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அண்ணன் ராம. சுப்பையா அவர்கள் நின்று கொண்டு எல்லோரையும் உள்ளே அனுப்பி நீங்கள் போகணுமா? போங்கள் என்று உள்ளே அனுப்பி - உள்ளே அனுப்பி ஒரு பீடியோ அல்லது சிகரட்டோ இல்லாமல் யாரும் உள்ளே செல்ல முடியாது. அவ்வளவு துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும்.

ராம. சுப்பையா பீடி குடிக்க மாட்டார். இருந்தாலும் ஒரு பீடியை வாங்கி பற்ற வைத்து, அதன் புகை வெளியே வந்தவுடன், அந்தப் பீடியைக் கொண்டு போய் இன்னொ ருவர் வாயில் திணித்து, இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னால் - எவ்வளவு பெரிய தியாக உள்ளம் வேண்டுமென்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதைச் செய்வார். அது மாத்திரமல்ல, அவர் போய் உட்கார்ந்து விடுவார். அவரைப் பார்த்தவுடன், ஓகோ நீங்களும் வந்து விட்டீர்கள், நான் எழுந்து போகிறேன், நீங்கள் அமருங்கள் என்று சொல்லுவார். இதெல்லாம் இப்போது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையிலே, திருச்சி சிறைச்சாலையிலே ஒவ்வொரு நாளும் நாங்கள் அனுபவித்த காட்சிகள் இது. அப்படிப்பட்ட - சின்ன விஷயத்திலே கூட தியாகம் செய்யத் தயாராக இருந்த ஒருவர் - தன்னுடைய இயக்கத் தோழர்களுக்கு வரக் கூடிய துன்பத்தை தாங்கிக் கொள்கிற பழக்கம் அவர்களுக்கு வர வேண்டும். அந்தத் துன்பம் கூட அவர்களுக்கு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டுமென்று எண்ணுகின்ற ஒரு உத்தமத் தோழராக, தாயாக, தந்தையாக, தனயனாக, எங்களை யெல்லாம் அரவணைத்து காப்பாற்றிய அண்ணனாக சிறைச்சாலையிலே இருந்தவர். சிறைச்சாலைக்கு வெளியே வந்த பிறகும் ஒவ்வொரு நாளும் எங்களைச் சந்திக்க வேண்டுமென்பதிலே அவர் அளவற்ற ஆர்வமுடையவர். எங்களைச் சந்தித்தாலே, என்னையோ, பேராசிரியரையோ, கழகத்தின் காவலர்களையோ சந்தித்தால் அதிலே அவருக்கு ஒரு இன்பம். அப்படிப் பட்ட ஒரு குடும்பம் காரைக்குடியிலே இருந்து அந்தக் குடும்பத்தின் செல்வங்கள் - இங்கே பேசினார்களே - நம்முடைய வீரபாண்டியன் - முத்துராமன் - செல்வ மணி - இவர்கள் எல்லாம் எந்த அளவிற்கு இயக்கம் வளர்த்தார்கள் என்பதை விட - இவர்களுக்கு என்ன பெயர் என்றால் இன்றைக்கு வேண்டுமானால், நான் ஒளிவு மறைவில்லாமல் சொல்லுகிறேன் - முத்துராமன், அண்ணன் ராம. சுப்பையா வின் மகன் என்று புகழப்படலாம். ஆனால் இதே முத்துராமன், சென்னையிலே ஏ.வி.எம். ஸ்டுடியோவிலே பணியாற்ற புறப்பட்ட போது, அந்தப் பணிக்கு அவரை ஊக்கப்படுத்தியவர்கள் யார் என்பதையும் உதவியவர்கள் யார் என்பதையும் இன்றைக்கும் முத்துராமன் நினைக்கத் தவறவில்லை என்றால் நன்றியோடு அதைச் சொல்லிக் காட்டுகிறார் என்றால், அது தந்தையின் பழக்கம். நன்றி மறவாத தந்தைக்கு நன்றி மறவாத பிள்ளையாக முத்து ராமன் பிறந்திருக்கிறார்.

இராம. சுப்பையா உள்ளம்போல் திடமானவர், அழுத்தமானவர் சுப.வீரபாண்டியன்

வீரபாண்டியனை யார் என்று தெரியாமல் நான் கொஞ்ச நாள் இருந்தேன் - மன்னிக்க வேண்டும். ஏனென்றால் ராம. சுப்பையா மகன் என்றால் இப்படியா நம்மைப் பற்றியெல்லாம் பேசுவார்? என்று அவருடைய பேச்சுக்களையெல்லாம் கேட்டு, பிறகு படித்து - இது ரொம்ப வேகமாகப் போகிற பிள்ளையாக இருக்கிறதே, என்ற காரணத்தினால், வீரபாண்டியன் யார் தெரியுமா என்று சொல்லி, ராம. சுப்பையா மகன் என்று சொன்ன பிறகு தான், சொன்னவர்கள் பேச்சை நம்பி நான் ஏற்றுக் கொண்டேனே தவிர, அதுவரையில் வீரபாண்டியனைப் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது. வீரபாண்டியனைப் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டு. ஆனால் வீர பாண்டியனைப் பார்த்த பிறகு இரும்பு காந்தத்தை ஈர்த்ததா அல்லது காந்தம் இரும்பை ஈர்த்ததா - எப்படியோ இரண்டும் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கின்ற காட்சியை காணுகிறீர்கள் - (கைதட்டல்) ராம. சுப்பையா அவர்களுடைய உள்ளம் எந்த அளவிற்கு அழுத்தமானதோ, திடமானதோ அதே திடம், அதே அழுத்தம், அதே வலிமை, அதே திட்டவட்டம் இத்தனையும் சேர்ந்து சொற்களாக நம்முடைய வீரபாண்டியன் நாவிலே வெடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். (கைதட்டல்)

அவர் இடையிலே எங்கேயோ போய்ச் சிக்கினார். (சிரிப்பு) நல்ல வேளை - சிக்கியதை சில நேரங்களில் நாம் சின்ன ஆயுதங்களைக் கொண்டு எடுக்க வேண்டும். அப்படி எடுக்காமல், அவரே சிக்கலில் இருந்து வெளியே வந்து எங்கேயிருக்க வேண்டுமோ, அங்கே இன்று இருக்கின்ற காட்சியை நாம் காணுகிறோம். நான் முத்துராமனை கலை உலகத்திலே அவர் பெற்றிருக்கின்ற பெருமையை அறிவேன். ஏ.வி.எம். நிறுவனத்தில் அவரிடம் அவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையும், அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் அவர் ஏற்றுக் கொண்டிருந்த பொறுப்புக்களையும் - அந்தப் பொறுப்புக் களை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றியதையும் கேள்விப்பட்டு, ரஜினிகாந்த் அவர்களே நேரடியாகப் பாராட்டிய அந்தக் காட்சியையெல்லாம் கண்டு நானே பெருமைபட்டேன். ஒரு அண்ணன் என்ற முறையிலே மகிழ்ச்சியடைந்தேன். அண்ணன் மகன் என்ற முறையிலே நான் பெருமைப் பட்டேன்.

செல்வமணியை பற்றியெல்லாம் எனக்கு அதிக அறிமுகம் இல்லை. தொகுப்புரை ஆற்றிய போதே புரிந்து கொண்டேன். மொத்தத்திலே ஒரு தமிழ்க் குடும்பம் - அந்தக் குடும்பத்தின் தலைவனை இன்றைக்கு நூற்றாண்டு விழா கொண்டாடிப் பாராட்டுகின்றது. அதில் நமக்கும் பங்களித்திருக்கிறது என்று நான் பெருமையடைகிறேன். இந்தப் பெருமையை எனக்கும் பேராசிரியருக்கும், தமிழர் தலைவர் இளவல் வீர மணி அவர்களுக்கும், இங்கே வருகை தந்துள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கும், அவ்வை அவர்களுக்கும், ராம. நாராயணன் அவர்களுக்கும் வழங்கிய அண்ணன் ராம. சுப்பையாவின் குடும்பத்தாருக்கு என்னுடைய நன்றியை, வாழ்த்துக்களை, பாராட்டுக்களை தெரிவித்து வாழ்க அண்ணன் ராம. சுப்பையா அவர்களின் தியாகம் - அவர்களுடைய தொண்டு பரவுக என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.


----------நன்றி: "முரசொலி"

0 comments: