Search This Blog
27.5.08
ராமாயணம் என்பது சரித்திரமோ வாழ்க்கை வரலாறோ அல்ல. அது இந்து இதிகாசத்தின் ஒரு பகுதி
வராதா? வரக்கூடாதா?
கலைஞர் கடிதம்
(உடன்பிறப்பே; நீண்ட காலமாக எனக்கு ஓர் ஆசை; பிராமணர் ஒருவர் ஆசிரியராக இருக்கும் வகுப்பில், மாணவர்கள் சிலர் அவரைக் கேள்வி கேட்டு; அவர் தனது மொழியில் பதில் அளிக்கும் விதமாக; “ஒரு கேள்வி பதில் தொகுப்பு” எழுதவேண்டும் என்று! அதுதான் இது!)
மாணவன்: அய்யா! இராமர் பாலம் என்றால் என்ன? சேது கால்வாய்த் திட்டத்துக்கு அது எப்படி இடைஞ்சலாகும்?
ஆசிரியர்: இது தெரியாதோ, மண்டூ! மண்டூ! சமுத்திரத்திலே திட்டு திட்டாக மணல் மேடு உருவாகி, அது ரொம்ப நீளத்துக்கு பாலம் போல இருக்குடா மண்டு; அதைத்தான் இராமர் பாலம்னு பெரியவா சொல்றா! அந்தப் பாலம் குறுக்கே இருந்தா சேதுக் கால்வாயிலே கப்பல் எப்படி போக முடியும்? அதனாலதான் அந்த மணலை எல்லாம் அகற்றி, அப்புறம் கப்பலை விடப் போறாளாம்.
மாணவன்: அப்படின்னா . . . ராமர் பாலத்தை இடிச்சே ஆகணுமா?
ஆசிரியர்: அப்படித்தான் - மத்திய சர்க்காரும், மாநில சர்க்காரும் பொறியாளர்களும் சொல்றாங்க!
மாணவன்: ஓ! அதாவது மணல் குவிஞ்சு வரிசையா திட்டுத் திட்டா நீளமா இருக்கு - அதைப் பார்க்க பாலம் மாதிரி இருக்கு-
ஆசிரியர்: ஸ்பஷ்டமா சொன்னேடா - அதுதான் இராமர் பாலம் - சாட்சாத் இராமபிரான் கட்டின பாலம்.
மாணவன்: ஏன்சார்? அந்தப் பாலத்திலே அடிக்கல் நாட்டு விழா கல்லு - பாலத் திறப்பு விழா கல்லு எல்லாம் இப்பவும் இருக்குதா? . . . அதாவது; அனுமார் தலைமையிலே இராமன் திறந்து வச்ச பாலமா?
ஆசிரியர்: ஆமாம் - பதினேழு லட்சம் வருஷத்துக்கு முன்னாடி திறப்பு விழா நடந்த பாலம்! - முப்பத்து முக்கோடித் தேவர்களும் அந்த விழாவுக்கு வந்து மலர் மாரி பொழிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மாணவன்: நான் கேள்விப்பட்டேன் சார்; முப்பத்து முக்கோடித் தேவர்களும் அந்தப் பாலத்திலே ஏறி நின்று பூ மாரி பொழிஞ்ச போது - அவ்வளவு ஜனக்கூட்டத்துக்கு கனம் தாங்காம அந்தப் பாலம் இடிஞ்சு விழுந்ததாமே? ஏன் சார்; பாலம் இடிஞ்சா பக்கத்திலே புதுப்பாலம் கட்டுறாங்களே; இப்ப கூடப்பாருங்க; நம்ப சென்னை அடையாறுல; ஒரு பழைய பாலத்தை; கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சரா இருந்தப்ப இடிச்சுட்டு புதுசா “திரு வி.க. பாலம்” என்ற ஒரு பாலம் கட்டியிருக்காரே?
ஆசிரியர்: டேய் - குறும்பா! குதர்க்கமெல்லாம் பேசாதே - சேது கால்வாய்த் தோண்டுறேன் - தமிழ்நாட்டை வாணிபத்திலே பொருளாதாரத்திலே வளமாக்கிறேன்னு; வீண் கதை பேசிகிட்டு; ராமனோட சாபத்துக்கு ஆளாகப் போகுது ஒரு கூட்டம்!
மாணவன்: ஆசிரியர் அய்யா; அப்படின்னா சேது திட்டம் வராதுன்னு சொல்லுங்க!
ஆசிரியர்: வராதுன்னு சொல்லலேப்பா; வரக்கூடாதுன்னு சொல்றேன் - சேலம் இரும்பாலைத் திட்டம்னா இவாளே கொண்டு வர்ரா - நெய்வேலி இரண்டாவது சுரங்கமும் இவா கோரிக்கையேதான் - தூத்துக்குடி உரத் தொழிற்சாலைக்கும் இவாளே உரிமை கொண்டாடுரா - வெளிநாட்டு முதலீடு களுக்கும் இவாளே காரணம்கிரா! செம்மொழின்னா இவாதான் - இப்ப சேது கால்வாயும் சேந்துட்டா தலை கீழா நிப்பா! கையிலே புடிக்க முடியாது. - அதனாலதான் இராமர் பாலமோ - இராவணன் பாலமோ ஏதோ ஒன்னைச் சொல்லி; தடுத்து நிறுத்தறது நம்மவா தர்மம்!
மாணவன்: ராமாயணம் என்பது உண்மையில் நடந்ததுதானே சார்?
ஆசிரியர்: ஏண்டா, அம்பீ! நம்ப இராஜாஜி எழுதிய புத்தகத்துக்கு அவரே முன்னுரை எழுதும்போது - அதாவது ராமாயணம் என்பது சரித்திரமோ வாழ்க்கை வரலாறோ அல்ல. அது இந்து இதிகாசத்தின் ஒரு பகுதி என்று சொல்லியிருக்கிறார்னு நான் போன வாரம் சொல்லிக் கொடுத்ததை மறந்துட்டியா?
மாணவன்: அய்யா; திராவிடர் கழகத்தினர் சார்பில் தயாரிக்கப்பட்ட “பெரியார்” திரைப்படத்துல கூட இதப் பற்றி ஒரு காட்சி வருது அய்யா?
ஆசிரியர்: ஆமாம், ஆமாம்! சரியாக கவனிச்சிருக்கே, ராமர் பாலம் கட்ட அணில் உதவி செய்தது, அத ராமர் பாராட்டி தடவிக் கொடுத்ததாலத்தான் அணில் முதுகிலே மூன்று கோடு இருக்கிறதா ஒரு கதை சொல்லிக்கிட்டிருந்தோம். அதைக் கெடுக்கிற மாதிரி, அந்தப் படத்துலே, சீதை முதுகிலே ராமர் கைபடவே இல்லையான்னு ஒரு கேள்வி கேட்டு எல்லோரையும் சிந்திக்க வச்சுட்டா!
மாணவன்: ராமாயணத்தைப் பத்தி நேருஜி அவர்களே கூட அவருடைய புத்தகத்திலே ஏதோ எழுதினதா சொல்வாங்களே அய்யா?
ஆசிரியர்: “ராமாயணம் என்பது ஒரு காவியமல்ல. அது திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தைப் பற்றி மிகைப்படுத்தி, பல அறிவிற்குப் பொருந்தாத கதைகளைப் புகுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை” என்று நேருஜி அவர்கள் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களிலே குறிப்பிட்டதாக அவருடைய “டி°கவரி ஆஃப் இண்டியா’’ புத்தகத்திலே இருப்பது உண்மைதான்.
மாணவன்: சார், இன்னைக்கு “தமிழ் ஓசை” பத்திரிகையிலே கூட “ராமர் பாலம்” பற்றி அ.முதுகுன்றன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாரய்யா?
ஆசிரியர்: சமத்து, அதக் கூடப் படிச்சிருக்கியே? அந்தக் கட்டுரையாளர், “இராமர் பாலம்” என்பது மணல் கயிறு என்றே வர்ணித்திருக்கிறாரே? சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்ப வர்கள் மக்களுக்காகக் கடவுளா? கடவுளுக்காக மக்களா என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூட எழுதியிருக்கிறாரே! மேலும் அந்தக் கட்டுரையிலே “வேதங்களோ, உபநிஷதங்களோ இராமவதாரத்தைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. மகாவிஷ்ணு ராமனாகப் பிறந்தது உண்மை என்றால், மகாவீரரும், புத்தரும் தோன்றி நடமாடி யிருக்க முடியாது” என்றே குறிப்பிட்டிருக்காரு! நம்மவா சொல்றதுக்கு எதிர்ப்படையா வந்ததையெல்லாம் நீ படிச்சிருக்கே!
மாணவன்: அய்யா! நீங்க சொன்ன மணல் திட்டுகளைப் பற்றி நேற்று கலைஞர் கருணாநிதி எழுதுன ஒரு கேள்வி பதிலிலே கூட கடலியலாளர் ஒருவர் எழுதியதைச் சுட்டிக் காட்டி, தெற்கே உள்ள மணல் திட்டுக்களை ராமர் கட்டியிருந்தா, வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அய்யா?
ஆசிரியர்: டேய்! நீ வேண்டும்னே இந்தக் கேள்வியையெல்லாம் யாரோ சொல்லிக் கேக்குறியா? முதல்லே சரித்திர ரீதியாக கேட்டே, பிறகு இதிகாச புராண ரீதியாக கேட்டே, இப்ப என்னடான்னா கடல் விஞ்ஞான ரீதியா கேக்குறியே?
மாணவன்: சார், சார், தப்பா நினைச்சுக்காதீங்க! வகுப்புல உள்ள ஒரு சில பசங்க இது போல கேக்குற கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியாமத்தான் உங்களைக் கேட்டு தெரிஞ்சுக்க முயற்சி செய்தேன், ஆனால் நீங்க கூட அவங்களுக்கு ஆதரவாதானே எல்லாத்தையும் சொல்றீங்க!
ஆசிரியர்: ஆமாண்டா சாமி! இன்னும் சொல்லப்போனா, நம்மவா ஆட்சியிலே, வாஜ்பாயி பிரதமரா இருந்தபோது சேது கால்வாய்த் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறோம். அதைத்தான் நாடாளுமன்றத்திலேயே அந்தத் துறை அமைச்சர் ஆதாரபூர்வமா புட்டு புட்டு வச்சிட்டான்!
மாணவன்: சார்! சார்! அப்படின்னா ராமர் பாலம் என்கிறது ஒரு தடைக்கல்; அவ்வளவுதானா?
ஆசிரியர்: எத்தனை தடைக்கல் போட்டா என்ன! அந்த மத்ய அமைச்சர் பாலு கேக்கப் போறானா? - மகா கெட்டிக்காரனாச்சே - மறுப்புக்கு மேலே மறுப்பு சொல்லி - இந்த மாதிரி திட்டங்களையெல்லாம் சாதிக்கிறவனாச்சே . . .
மாணவன்: ஆசிரியரய்யா அப்படின்னா, நான் சொல்றதை கேளுங்க . .
ஆசிரியர்: என்ன?
மாணவன்: எப்படியும் சேது கால்வாய் வரப்போகுது - கப்பல் அந்த வழியாக போகப் போகுது - அதனால் இப்பவே அவங்களோட நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டுட்டு போகலாமே . . .
ஆசிரியர்: ஆமாண்டா - அதுவும் சரிதான் - சேதுக்கால்வாய்த் திட்டம்; நிறைவேற்றியே தீருவாம்.
(எல்லோரும்; “நிறைவேற்றியே தீருவோம்” என்று முழக்கமிடுதல்)
அன்புள்ள
மு.க
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment