Search This Blog

12.5.08

மார்க்சிஸ்டுகளுக்கும்- பெரியாரிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு?

தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அரசு உருவாக்கிய வார்த்தை. பஞ்சமர்கள், சூத்திரர்கள் என்பது மநுதர்மம் உருவாக்கிய சொல்லாடல்கள். தலித்துகள், தலித் அல்லாதவர் என்பது நவீன தலித் இயக்கங்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடிய வார்த்தை.

முதலில் அனைவரும் இந்த சமூகம் ஒரு சமத்துவமற்ற சமூகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தின் முன்னோடிகளை நாம் படிக்க வேண்டும். நம்முடைய கல்விமுறை இதை போதிப்பதில்லை. நான் சமூகவியலில் முதுநிலைப்பட்டம் வாங்கியவன். எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடத்திட்டம் போலியானது. இந்தச் சமூகத்தின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள அது உதவவில்லை.

ஒரு கட்டிடம் கட்ட வரும் பொறியாளர் செங்கல் வைச்சா கட்டிடம் வந்துடப்போகுது. எதுக்காக ஆழமாத் தோண்டறீங்க, கடைக்கால் எல்லாம் போடறீங்கன்னு கேட்டா எவ்வளவு முட்டாள்தனமா இருக்குமோ அவ்வளவு முட்டாள்தனமானது நம் சமூகம். இப்பல்லாம் யாரும் சாதி பார்க்கிறதில்லை, அப்படியே ஆரம்பிச்சு இயங்க வேண்டியது தான் என்ற முட்டாள்தனமான புரிதலோடு தான் இன்றைக்கு சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சமூகம் நம் ஒவ்வொருவரையும் தொந்தரவு செய்ய வேண்டும். நாம் நடக்கும் சாலையில் ஏன் ஒருவர் மட்டும் செப்டிங் டேங்க் கழுவ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். மலத்தை வாயில் திணிப்பது தவறில்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறுகிறார். ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? என்பது மாதிரியான கேள்விகள் தலித்துகளுக்கு மட்டுமோ, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமோ எழ வேண்டிய அவசியமில்லை. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவருக்கும் எழ வேண்டும்.

இந்த சமூகத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நம் முன்னோடிகளான அம்பேத்கர், புலே, பெரியார் போன்றவர்களையெல்லாம் படிக்க வேண்டும். அவர்களின் தத்துவ வழிகாட்டுதலின்படிதான் இந்த சமூகத்தை சீர்திருத்த முனைய வேண்டும். இந்த சீர்திருத்தத்திலும் இட ஒதுக்கீடு கேட்டுக்கொண்டு, நீ தலித்துக்காக போராடிக்கொள், நான் பிற்படுத்தப்பட்டோருக்காக போராடிக் கொள்கிறேன், என் போராட்ட எல்லை இதுவரை தான், உன் போராட்ட எல்லை அதுவரை என்று பேசுவது அயோக்கியத்தனம்.

இந்த சாதியாலான சமூகத்தை சமத்துவமிக்க ஜனநாயகப்பூர்வமான பண்பாடுள்ள சமூகமாக (அது பவுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் எதார்த்தத்தில் அது பவுத்தமாகத் தான் இருக்கிறது) மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

பவுத்தத்தில் பார்ப்பனரையும் இணைத்துக் கொண்டீர்களே என்ற கேள்விக்கு புத்தர், பவுத்தத்தில் வந்த பிறகு பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பிரிவே கிடையாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நமக்கு அதிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. பார்ப்பனர்கள் அங்கு போய் பவுத்தத்தையும் சீர்குலைத்து விட்டனர். எனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பாடம் கிடைத்திருக்கிறது.

எனவே பார்ப்பனர் அல்லாத அனைவரையும் இணைத்துக் கொள்ளலாம். இந்தியாவில் பார்ப்பனர் அல்லாத ஆறாயிரம் சாதியினர் வசிக்கின்றனர். இவர்களால் தான் இந்த பிரமிடு அமைப்பு வலுவாக உள்ளது. அதை விட்டு வெளியேறுவதன் மூலம் தான் இந்த அமைப்பை தகர்க்க முடியும்.

மதமாற்றத்திற்கு தலித்துகள் ஒத்துக்கொண்டாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா? தனக்குக்கீழே ஒருவன் இருக்கிறான் என்ற சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தானே?

பெரியார் தான் இதை சரியாகச் சொன்னார். பஞ்சமர் பட்டம் பறையனை விட்டுப் போகாதவரை சூத்திரர் பட்டம் உன்னை விட்டுப்போகாது என்றார். பார்ப்பான் தலையில் பிறந்தான், அவன் காலில் பிறந்தான்னு மநுதர்மம் பிரிக்கிறது. பெரியார் சொன்னார், ‘பறையனும் பள்ளனும் தான் சரியாக அம்மா, அப்பாவுக்கு பொறக்க வேண்டிய இடத்தில் பொறந்திருக்கான். சூத்திரன் எல்லாம் விபச்சாரிக்கு பொறந்திருக்கான்’ என்று தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தியும், ஆதிக்க சாதிகளைப் பார்த்து ‘நீ இந்த சாதியில் பிறந்ததற்காய் வெட்கப்பட வேண்டும்’ என்றும் சொல்கிறார். பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் சூத்திரர் என்று சொல்வதற்கு அர்த்தம் இதுதான். ‘உன் சாதியைச் சொல்லி பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை, நீ விபச்சாரிக்குப் பிறந்தவன்’ என்று சொல்கிறார்.

பெரியார் ஒருபோதும் தலித் மக்களை திட்டினவர் கிடையாது. ஆதாரமே இல்லாமல் சிலர் அவரை தலித் விரோதியாக காட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். அவர் மீண்டும் மீண்டும், ‘இந்துவாக இருக்காதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே!’ என்றுதான் சொன்னார். அதை நிர்வாணத் தன்மையோடு ‘சூத்திரர்களே’ என்று சொன்னார். அதை இவர்கள் ‘கௌரவம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் ‘சுதந்திரமே வேண்டாம், வெள்ளைக்காரனே ஆட்சியில் இருக்கட்டும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நம் நாட்டிற்கு இந்துநாடு என்று பெயர் வைப்பதற்கான சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. பேசாமல் வெள்ளைக்காரனே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றார். இந்த பிறவி இழிவைப் போக்குவதற்கு வெள்ளைக்காரன் காலைக்கூட நக்குவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.

‘இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விடும், தொழில் தொடங்குவார்கள், பணம் கிடைக்கும் எல்லாம் சரி என்னுடைய சூத்திரத் தன்மை எப்போது நீங்கும்?’ என்ற கேள்வியைத் தான் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் பெரியார் மீண்டும் மீண்டும் கேட்கிறார்.

நான் படித்து விட்டேன், உயர்ஜாதியினர் என்று சொல்லக்கூடியவர்கள் வகிக்கும் எல்லா பதவிகளிலும் நானும் வந்துவிட்டேன். இந்தியாவின் முதல் குடிமகனாகவும் பதவி கிடைத்து விட்டது. அதனால் என்னை பிராமணனாக நீங்கள் ஒத்துக்கொண்டீர்களா?

‘தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை உள்ளிட்ட வன்கொடுமைகளை எதிர்த்தால் போதும், மதத்தைத் தொடவேண்டியதில்லை’ என்ற கருத்தின் அடிப்படையில் சில முற்போக்கு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்துகின்றனவே?

ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏழையாகப் பிறந்ததால் நான் கீழ்சாதி இல்லை. என்னுடைய உரிமைகள் மறுக்கப்பட்டதால் நான் கீழ்ச்சாதி ஆக்கப்படவில்லை. நான் கீழ்ச்சாதியில் பிறந்ததால் தான் என்னுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

‘இந்த இரட்டை டம்ளர் ஒற்றை டம்ளராகி விடுகிறது. கோவிலில் நுழையும் உரிமை கிடைத்து விட்டது’ என்றே வைத்துக் கொள்வோம். இதனால் எப்படி சாதி ஒழிந்து விட முடியும்? கோவிலில் நுழையும் உரிமை ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது. அதனால் அவர்களது சூத்திரத்தன்மை போய்விட்டதா?

உரிமைகளைக் கொடுத்து விட்டால் தலித்துகள் மேல்சாதி ஆகிவிடுவார்கள் என்றுதான் எல்லா இயக்கவாதிகளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கே.ஆர்.நாராயணனுக்கு எல்லா உரிமைகளும் இருந்தது. இப்போதும் அவரை பறையன் என்றுதானே சொல்கிறார்கள்? இதற்கு என்ன பதில் என்றுதான் நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

இன்றைக்கு பார்ப்பனர்களை விட பிற்படுத்தப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். அதனால் அவர்களது சூத்திரத்தன்மை போய்விட்டதா? அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரன். அவன் ஒரு முதலாளி என்று சொல்லிக்கொண்டு கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். அவன் எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் அவன் ஒரு சூத்திரனாகத் தான் சாகப்போகிறான், அதில் ஒரு பெருமையும் இல்லை என்கிறேன் நான். இதுதான் கம்யூனிஸ்டுகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் உள்ள வேறுபாடு.

‘சாதி ஒழிப்பு என்பது இமயமலையில் தலையில் கல்லை வைத்துக் கொண்டு தலைகீழாக ஏறுவது’ என்று பெரியார் குறிப்பிடுவார். அந்தப் பிரச்சனை குறித்துப் பேசுவதற்கு இங்கு இயக்கவாதிகள் தயாராக இல்லை.

இந்தப் பிரச்சனையை விட்டுவிட்டு பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்று பேசித் திரிகிறார்கள். அம்பேத்கர் அதைத்தான் கேட்டார், “பாட்டாளிகள் எந்த அடிப்படையில் ஒன்று சேர்வார்கள்? கூப்பிட்டவுடன் இணைந்து வந்துவிடுவார்களா?” என்று. எல்லாருமே சாதி ரீதியாக பிரிந்து கிடக்கும்போது புரட்சிக்கு மட்டும் எப்படி ஒன்று சேர்ந்து விடுவார்கள்?

இந்துப் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்குவதை தவிர வேறு வழியே இல்லை. அதை இவர்கள் யாரும் செய்யவே இல்லை. ‘நான் இந்துவாகவும் இருப்பேன், கோவிலுக்கும் போவேன், பார்ப்பானை வைத்து எல்லா பூஜை, புனஸ்காரங்களையும் செய்து கொள்வேன். நீ என்னை பிற்படுத்தப்பட்டவன் என்றோ, தலித் என்றோ சொல்லக்கூடாது’ என்பது அப்பட்டமான முரண்பாடு.

இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருந்தால் ஆறு லட்சம் சேரிகளும் இருக்கின்றன. தலித்துகளின் உடல் உழைப்பு தொடர்ந்து தேவைப்படுவதால் அவனை அறியாமையிலேயே வைத்திருக்கிறார்கள். அவன் விழிப்புணர்வு பெற்று விட்டால் பிள்ளையாரை யார் தூக்குவது? அதனால் நீயும் இந்து தான் என்று கூறிக் கொள்கிறார்கள்.

பெரியார் இந்து மதத்தைக் கேள்வி கேட்டார். அதே நேரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்று கடைசிவரை போராடினார். இது முரண்பாடாக இல்லையா?

கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. அதை ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கலாம், மறுப்பவர்களும் இருக்கலாம். அதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கான உரிமை வேண்டும் என்பது தான் பெரியார் கேட்டது.

பெரியார், திராவிடர் கழகத்தினர் கடவுள், இந்துமதம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே கோவில் நுழையும் உரிமையை கேட்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்டுகள் இந்து மதத்தையோ, கடவுளையோ, சாதியையோ கேள்வி கேட்பதில்லை. கோவில் நுழைவுப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை மட்டும் நடத்துகிறார்கள். அது எந்தக் காலத்திலும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது.

இந்து மதம், இந்துப் பண்பாடு இவற்றிற்கு எதிராகப் போராடுவதும், இவற்றை ஒழிப்பதுவுமே அனைத்து மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் வழியாகும்.

-------------- ‘தலித் முரசு’ பத்திரிக்கை ஆசிரியர் புனிதபாண்டியன் அவர்கள் "கீற்று" க்கு அளித்த நேர்காணலிலுருந்து

0 comments: