சமுதாயச் சிர்திருத்தத்தில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவதாக, சமுதாயச் சடங்கு-களைத் தீர்ப்பதற்காக, அந்தச் சடங்களின் காரண, காரியங்கள் மூலம் என்ன என்பது பற்றிக் கவலைப்படாமல் மேலாக சீர்திருத்தம் செய்வது. இரண்டாவதாக, சமுதாயக் குறைபாடுகள் ஏன், எப்படி வந்தன என்று கண்டறிந்து, அந்தச் சங்கடங்களுக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படைகளை ஒட்டி சமுதாயச் சீர்திருத்தம் செய்வது.
உதாரணமாக, ஓர் ஊரில் அடிக்கடி மலேரியா வருகிறதென்றால் ஆஸ்பத்திரி வைத்து, போர்டு போட்டு, மருந்து கொடுத்து, தற்காலிகமாய் நோயைப் போக்கும் வைத்தியர்கள் போன்றவர்கள் முதலாவது வகையினர். மலேரியா வருவதன் காரணத்தைக் கண்டறிந்து, அக்காரணங்களை ஒழித்து அந்த ஊரைச் சுத்தமாக்கி, மலேரியா வரவொட்டாமல் செய்வது என்ற சுகாதாரப்பணி செய்வது போன்றவை இரண்டாம் வகையினர் - நாங்கள்.
தீண்டாமையை ஒழிக்க வைத்தியர்கள் - டாக்டர்கள் போல் முயன்று, தீண்டப்படாதவர் என்பவர்களுக்கு எல்லா இடங்களிலும் சமத்துவம் அளிக்கவேண்டும் என்பது-போன்ற சீர்திருத்தங்கள் செய்பவர் பலர். ஆனால், நாங்கள் தீண்டாமை ஏன்? எப்படி வந்தது? என்றுபார்க்கிறோம். மதத்தால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற பதில் வருகிறது. மதத்தால் ஏன் தீண்டப்படாதவர்கள் என்று கேட்கின்றோம்? அது சாஸ்திர சம்மதம் என்கிறார்கள். இந்த சாஸ்திரம் எப்படி வந்தது என்றால், அது ‘ஆண்டவன் ஆணை’ என்கிறார்கள். அப்படியானால், தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவு அளிக்கும் சாஸ்திரத்தையும், அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும் என்கிறோம்.
அந்தப்படி இல்லாமல், சமுதாய சீர்திருத்தம் என்ற பெயரால் சில சீர்திருத்தங்களைத் தீண்டாதவர்களுக்குச் செய்து கொடுத்தாலும், அவர்கள் தீண்டப்படாத மக்கள் என்ற சாதியில் அல்லது அரிஜனங்கள் என்ற சாதியில்தான் இருப்பார்களே தவிர அந்தப் பெயர் ஒழியாது. அதனால் திராவிடர் கழகம் இவைகளின் அஸ்திவாரங்களைக் கண்டு பிடித்து - அதாவது சாதி முறை எந்த உருவத்திலும் எதிலும் இல்லாமல் அவைகளைத் தவர்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது.
இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.
---------------- தந்தைபெரியார் - வத்தலக்குண்டில், 13.4.1950இல் சொற்பொழிவு, ‘விடுதலை’, 16.4.1950
Search This Blog
18.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment