Search This Blog

14.5.08

காரணம்-பெரியார் ---- காரியம்-கலைஞர்

தந்தை பெரியார் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி கேட்டார்

1971-லே கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கின்றார். அப்பொழுது ஒரு கூட்டத்திலே தந்தை பெரியார் அவர்கள் கேட்டார். நான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பட்டி யலைப் பார்த்தேன். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் கூட சென்னை உயர்நீதிமன்றத்திலே நீதிபதியாக இல்லை.

பெரியாருக்கு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பாராட்டு

இது இந்த ஆட்சியில் நடக்கவில்லையானால், வேறு எந்த ஆட்சியில் நடக்க முடியும் என்று கேட்டார். அய்.ஏ.எஸ். அதி காரிகளை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர். அன்றைக்கு அமைச்சராக இருந்த திருமதி சத்தியவானி முத்து அவர்களுடைய தலைமையிலே சென்னையில் அந்தப் பாராட்டுக் கூட்டம் நடந்தபொழுது அய்யா அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டார். உடனே எங்களை அழைத்துச் சொன்னார்கள். நீங்கள் இதை ஒரு தலையங்கமாக எழுதுங்கள். முதல்வர் அவர்களுடைய கவனத்திற்குப் போகவேண்டும் என்று சொன்னவுடனே நாங்கள் விடுதலையிலே ஒரு தலையங்கம் எழுதினோம். கலைஞர் அவர்கள் முதலில் படிக்கின்ற ஏடு - விடுதலை.


முதலில் கலைஞர் அவர்கள் படிக்கின்ற ஏடு - விடுதலை

கலைஞர் அவர்கள் முதலில் படிக்கின்ற ஏடு - விடுதலை. அன்று முதல் இன்றுவரை. அதைப் பார்த்தவுடனே, சட்ட அமைச்சர் செ. மாதவனை அழைத்தார். அன்றைக்கு தலைமை நீதிபதியாக இருந்தவர் ஜஸ்டிஸ் வீராசாமி இவர்களை அழைத்தவுடனே பெரியார் நியாயமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். சமூக நீதியை சொல்லியிருக்கின்றார்.

தாழ்த்தப்பட்ட நீதிபதியைத் தேடினார்

எனவே உடனடியாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் சென்னை நீதி மன்றத்திலே நீதிபதியாக உட்காரவேண்டும் என்று அதற்கு பட்டியல் கொடுங்கள் என்று கேட்டார். மாவட்ட நீதிபதிகள் பட்டியலிலே 12-ஆவது நீதிபதியாக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வரதராஜன் என்ற ஒருவர் அவருடைய பெயரை எடுத்து உடனடியாக டெல்லிக்கு அனுப்பி நேராக தமிழக சட்ட அமைச்சரை அனுப்பி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வரதராஜன் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆக்கிய பெருமை முதல்வர் கலைஞரைச் சார்ந்தது. இதைவிட மிகப் பெரிய சமுதாய புரட்சி வேறு கிடையாது.
அதே வரதராஜன் அவர்கள்தான் உச்சநீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி

---------ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் 26-4-2008 அன்று அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையிலிருந்து --"விடுதலை" 5,6-5-2008

0 comments: