Search This Blog

28.5.08

கல்வி பற்றி தந்தைபெரியார்




கல்வி என்பது யாது?

கல்வி என்பது எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ளும் படியான ஆற்றல் பெறுவதே தவிரக் கற்பித்தவற்றை மனப் பாடம் செய்து ஒப்பிப்பதல்ல.

ஆனால் பலர் கல்வி அதனால் பெறப்பட வேண்டிய அறிவு ஆகியன பற்றி வேறு விதமாகக் கூறுகிறார்கள் போலிருக்கிறதே?

பெரும்பாலும் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்பதும், மோட்சத்தை அடைவதுதான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப் பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்ற வனாகவே ஆக்கப்படுகிறான்.

நம் மக்களுக்கு அறிவில்லை என்று கூறமுடியுமா? அறிவிருக்கிறது என் றால் அவர்கள் ஏன் முன்னேற வில்லை?

பெரும்பாலான மக்கள் மவுடீகத்திலிருக்கிறார்கள். அறிவு எல்லாருக்கும் இருக்கிறது. பயன்படுத்துகிற விதத் தில்தான் கவலையின்றி இருக் கிறார்கள். இரும்பு போன்றது அறிவு. இரும்பைக் கொண்டு கடப்பாறை, கோடெறி, கம்பி, துப்பாக்கி, பீரங்கி, கத்தி எது வேண்டுமானாலும் செய்யலாம். பயன்படுத்துகிற, செயல் படுத்துகிற விதத்தில்தான் மாற்றம் இருக்கிறது

மக்களின் மவுடீகத்தைப் போக்கிப் பகுத்தறிவு போன்றவற்றை அவர்களுக்கு அளிக்க முடியுமா?

சகலத்திலும் பகுத்தறி வைப் பயன்படுத்தும் துணிவையும், சுதந்திரத்தையும் உண்டாக்கும் கல்வி இங்கு நாத்திக மாகவும், மத விரோதமாகவும், தேசியத்துக்கு விரோதமாகவும் கருதப்படுகிறதே.

தாங்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முன் நம் நாட்டில் கல்விக் கூடங்கள் பெருகியிருக்கவில்லையா?

முட்டாள்தனமாகக் கோயில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்று கூறினார்களே ஒழியக் கல்விச் சாலை இல்லாத ஊரில் குடி இருக்காதே என்று கூறவே இல்லை.
நம் நாட்டுச் செல்வர்கள் இதில் தங்கள் ஆர்வத்தைக் காட்டவில்லையே ஏன்?
பசுவுக்கு மடம் கட்டி வைத்தான். படிக்கப் பள்ளிக் கூடம் கட்டவில்லை. நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் முன்பு சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் கடவுள் கொடுத்தது என்று கூறிக் கோயில் கட்டி வைத்தார்கள்.

நம் இன்றைய தேவை என்று எதைக் கூறலாம்?

இப்போது நமக்கு வேண் டியதெல்லாம் கோயிலில்லை. பள்ளிக் கூடம்தான். 1000 சாமிகள் கூடிக் கூட ஒரு மனிதனின் மயிரைக்கூட அசைக்க முடியாது. அறிவால் பல அதிசய அற்புதங்களைச் செய்யலாம். மேல் நாட்டார் செய்து காட்டுகின்றார்கள். அதனால் அறிவை வளர்ப்பதற்கு அடிப் படையான கல்விக் கூடங்கள் தான் இன்று நமக்கு மிகமிகத் தேவை.

உண்மையிலேயே கல்விக் கூடங்கள் மிகவும் அவசியமானவை என்று தாங்கள் கருதுகிறீர்களா?

எப்படி உடல் நோயை நீக்குவதற்கு மருத்துவம் அவசியமோ அது போல மக்களுக்கு மடமை நோய் நீங்கக் கல்வி ஸ்தாபனங்கள் அவசியம்.

கல்வி கற்பதன் குறிக்கோளாக நாம் எதைக் கருத வேண்டும்?

கல்வியினுடைய குறிக் கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக்கூடாது. அறிவை வளர்க்க நமது இழிவையும், முட்டாள் தனத்தையும், மூட நம்பிக்கையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்.

கல்வி பெறுவதில் நம் மக்களுக்கு வேறு ஏதேனும் தடை உண்டா?

படிப்பு நமது நாட்டில் மிகவும் அவசியமாய் இருந்தும் எல்லோரும் சுளுவில் அடை யக் கூடியதாயில்லை. தகுதிக்கு மேலானதும், தாங்க முடியாத பணச் செலவு வைப்பதாயு முள்ளது. அதுவும் விஞ்ஞா னம், அறிவு, தன்மான உணர்ச் சியை பை அளிப்பதாயில் லாவிடில் பயனில்லை. எந்த விதமாயினும் இவைகளைப் பெறத்தக்க கல்வி பயில் வது அவசியம்.

கல்வியின் தேவை பற்றி அய்யா மேலும் ஏதேனும் கூற முடியுமா?

கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தன் வாழ் நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப் படுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல் வாழ்க்கை வாழத் தகுதியுடைய வனாக்குவது என்பதாகும். அதாவது, ஒவ்வொரு காரியத் துக்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக் கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்டக்கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடு சுய அறிவோடு வாழத் தகுதியுடை யவர்களாக வேண்டும்.

0 comments: