Search This Blog

16.5.08

இம்சையும் அகிம்சையும்

தாய்மார்களே! தோழர்களே!

புலிக்கு சீறுவதும் மற்ற ஜீவன்களைக் கொல்வதும் இயற்கை. ஆனால், மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன். மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்-சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழ்த்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது.

ஆனால், அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத் தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறிவிட்டது. அதுவும் காங்கிரஸ் இயக்கம் பாமரர்களிடம் செல்வாக்குப் பெற்ற பின்னர்தான் குறிப்பாகக் காந்தியார் சகாப்தத்தில் - அரசியல் வாழ்வைப் புராண இதிகாசப் போலித் தத்துவ மத வேஷத்தில் நடத்தியதால், மக்களும் கெட்டு தானும் ஒழியும்படியான இக்கதி ஏற்பட்டது. அவர், வாயால் அகிம்சை என்று கூறினால் போதும், பயன் இம்சையாக இருக்கட்டும் என்று கருதிக் கவலைப்படாமல் பாமரர்களை என்றைக்கு நடத்தினாரோ அன்று முதல் நாட்டில் இம்சையே மக்களுக்கு உற்சாகமாகவும், வாலிபர்கள் காலிகளாக, குழப்பக்காரர்களாகவும் ஆன காரியங்கள் நாட்டில் வளர்ந்து, அப்படிப்பட்ட நியாயங்-களை தேசபக்தியாகவும், தேசியமாகவும், மத பக்தி, கடவுள் பக்தி, கடவுள் - மதங்களைக் காப்பாற்றும் உயர் தொண்டு பக்தியாகவும் ஆகிவிட்டது.
இவை ஒருபுறமிருப்பினும், காந்தியார் காலத்துக்குப் பின்னராவது-அவரது பரிதாபகரமான முடிவை ஒரு படிப்பினையாகக் கொண்டாவது, அரசியல் - மத இயலில் உண்மையான அகிம்சை ஏற்பட யாராவது முயற்சித்தார்களா? ஏற்படத்தான் ஏதாவது கவலைப்-படுகிறார்களா? இன்று, எல்லாத் துறைகளிலும் வெறி நாய் களியாட்டம் போல் பலாத்காரமும் இம்சையுமே தலைசிறந்து விளங்குகின்றன. கட்டுப்பாட்டுக்கு இடமே இல்லை; எங்கு பார்த்தாலும் கட்டுப்பாட்டை மீறுவதும் காலித்தனமும் கலவரமும் இம்சையுமாகவுமே இருப்பதோடு, சர்வம் பித்தலாட்டமாகவே இருக்கிறது. இவைகளை எதற்காகக் கூறுகி-றேன் என்றால், கலவரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லையென்று சலிப்புறும் நண்பர்கள் அருள் கூர்ந்து கவனிப்பதற்காகவேயாகும்.

காங்கிரஸாரின் தவறான முறையில் ஏற்பட்ட குழப்ப நிலையை ஒழித்து, நாட்டில் நல்லாட்சி நிறுவவேண்டுமென்ற பொறுப்புடைய நாமும், காங்கிரஸார் போன்றே கலவரங்களை, குழப்பங்களை விளைவிக்கும்படி நடப்பதென்பது நேர்மையாகுமா? பதவி - பட்டங்களை வெகு விரைவில் பெற வேண்டும் என்ற கொள்கையை நாம் கொண்டிருந்தால்தான் கலவர ஆர்ப்பாட்டங்களில் இறங்கி - வீரர், சூரர், தியாகி, மகாத்மா, தேசோத்தாரர்கள் என்ற பெயரெடுத்து, மக்களை ஏய்த்துப் பதவிகளில் அமர்ந்து - முப்பதாயிரம், நாற்பதாயிரம் சம்பாதிக்கக் கலவரத்தை, குழப்பத்தை, கட்டுப்பாடற்ற தன்மையை உண்டாக்கலாம்.
ஆனால், திராவிடர் கழகமோ அதன் கொள்கையோ உண்டாக்கப்பட்டது, இந்தக் குறுகிய பதவி - பட்ட வேட்டைக்காக அல்ல. திராவிடர் கழகம், தனது வலிமையையும், வரலாற்றையும், நாகரிகத்தையும், சீரையும், சிறப்பையும் மறந்து அடிமை வாழ்வு நடத்தி வரும் ஒரு பெரும் இனமக்களுக்கு - எல்லா வகையிலும் தன்மானத்தையும் அறிவு வளர்ச்-சியையும் உண்டாக்கும் இயக்கம் ஆகும்.

திராவிட மக்களை - அன்பு நெறியைப் பின்பற்றி அகிம்சா தன்மையில் வாழ்ந்து வந்தவர்-களைப் பாழும் ஆரிய புராண இதிகாச மதமானது நரி, காட்டு நாய், புலி போன்ற ஜீவன்களாக ஆக்கிவிட்டது.

திராவிட மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மனிதத் தன்மையுடன், அன்பு நெறியுடன் - மாற்றானுக்கு அடிமைப்படாமல் வாழ-வேண்டும் என்ற உயரிய கொள்கையினைக் கொண்ட நாம், கலவரம் ஏற்படட்டும்; நடப்பது நடக்கட்டும் என்று விரும்புவதாயிருந்தால் அதன் பலன் என்னவாகும்? இவைகளையும் சற்று சிந்திக்க வேண்டாமா?

நாம், நமது இலட்சியம் கைகூட நாளையே கலவரத்தில் இறங்குவதாக வைத்துக் கொள்வோம். இதனால் திராவிட மக்களாகிய நமக்குள் கலவரம் ஏற்பட்டு நாம் தாம் இம்சைக்கு ஆளாவோமேயல்லாமல், அன்னியனாகிய - இக் கலகங்களுக்குத் தூண்டு-கோலனாகிய ஒரு ஆரியனுக்காவது சிறு கஷ்டமோ நஷ்டமோ உண்டாகுமா? ஒரு ஆரியனாவது கலகத்தில் சிக்குண்டு நஷ்ட-மடைவானா? நம் இனத்தவர்கள் மீது தானே நாம் பாயவேண்டிவரும்? அல்லது, நமது இனத்தவர்களால்தானே நாம் துன்பப்பட வேண்டிவரும்? இதனால் பொதுவாக நமது இனத்துக்கும் நாட்டுக்கும் என்ன பயன் என்று கேட்கிறேன். இவ்விதக் கலவரத்தை உண்டாக்கு-வதே வீரமாக நாமும் கருதி விட்டால், நமது இலட்சியத்திற்கோ, பிரச்சாரத்திற்கோ என்ன மதிப்பும், உண்மையும் இருக்க முடியும்? கலவரம் உண்டாக்கிவிடுவது வெகு சுலபம். அதனால் ஏற்படும் பலாபலன்களை, விளைவு-களைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா?

நமக்கு எடுத்துக்காட்டாக நமது காங்கிரஸ் தோழர்களே இன்று அவஸ்தைப்படுவதை நாம் பார்க்கிறோமே! கண்டதற்கு எல்லாம் கலகத்தை உசுப்பிவிட்டு, இன்று அதே கலகக்-காரர்களால் மிரட்டப்பட்டும், அதட்டப்-பட்டும் அவதிப்படுவதை!
எனவே, கலவரத்தால் வரும் பலன் இன்றே கைகூடுவதாயிருந்தாலுங்கூட அதை விடுத்து அமைதியையும், அறிவுடைமையையும், அன்-பையும் கொண்டு - அதனால் கிடைக்கும் பலன் சற்றுத் தாமதித்து வந்தாலும், நான் அதையே பெரிதும் விரும்புவேன். அது மாத்திரமல்ல, இவ்விதக் கலவரம், குழப்பம் இல்லாத கிளர்ச்சியே மக்களுக்கும் உண்மையான நிரந்தரமான நல்வாழ்வை அடையச் செய்யும்.

-----------தந்தைபெரியார் - "விடுதலை" 25-10-1956

0 comments: