Search This Blog

12.5.08

கம்பராமாயணத்தையும், கந்த புராணத்தையும் ஒழியுங்கள்

நமது நாட்டு படிப்பு ஏற்கனவே மிகவும் அக்கிரமமான படிப்பாகும். வாழ்க் கைக்கு வேண்டாத படிப்பையே கொடுப்பதும் அதற்குத் தகுதிக்கு மேலானதும் தாங்க முடியாததுமான பணச்செலவு வைப்பதுமான காரியமாகும். ஒரு பையன் காலேஜில் படிக்க வேண்டுமானால், குறைந்தது மாதம் 30-40 ரூபாயாவது செலவாகும்; ஹைஸ்கூலில் படிக்க வேண்டுமானால், மாதம் 10-15 ரூபாயாவது செலவாகும். இந்த வரும்படியுள்ள பெற் றோர்கள் நம் நாட்டில் எத் தனை பேர்கள் இருக்க முடியும்?

பிள்ளைகளைப் படிக்க வைக்க பெற்றோர்கள் படும் கஷ்டங்கள்

மானாபிமானத்தை இலட்சியம் செய்யாமல் பிச்சை யெடுக்க உரிமை பார்ப்பனர் களுக்கு இருக்கிறபடியாலும், மற்ற மக்களை நெஞ்சில் ஈவிரக்கமில்லாமல் வஞ்சிக்க ஜாதியும் மதமும் இடம் கொடுக்கிறபடியாலும், சர்க் காரும் இவற்றிற்கு வேண்டி யதற்கு மேற்பட்ட ஆதரவு அளித்து வருவதாலும் இஷ்டப்பட்ட பார்ப்பனர்கள் எல்லோரும் ஆண், பெண் அடங்கலும் படிக்கவும், கண்டிப்பாக பாஸ் செய்யவும் சவுகரியம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப் பட்ட பார்ப்பனப் பையன்களுடைய பேச்சு களைக் கேட்டுக் கொண்டு அவர்களது தூண்டுதலுக்கு ஆளாகிப் பள்ளிகளில் காலித் தனம் செய்வதென்றால், அது பார்ப்பனரல்லாத சமூகத் திற்கே மிக்கக் கேட்டை விளை விக்கும் காரியமாகும்.

பார்ப்பனரலல்லாப் பிள்ளை களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப் பதில் எவ்வளவோ கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. தரித் திரத்தையும் பட்டினியையும் சகித்துக் கொண்டு பணத்தை மீதி பண்ணிப் பிள்ளைகள் படிப்புக்கு உதவி செய்கிறார்கள்.

படிப்பதே மாணவர்கள் கடமை

மற்றும் பலர் படிப்புக்குச் செலவு செய்வது ஒரு சேமிப்பு என்று கருதி உள்ளதையெல் லாம் செலவு செய்கிறார்கள். பலர் முன்னோர் தேடி வைத்த சொத்துகளை விற்றுப் படிக்க வைக்கிறார்கள். சிலர் கடன் வாங்கிப் படிக்க வைக்கிறார் கள். இப்படிப் பட்டவர்களின் பிள்ளைகள் பள்ளியில் தங்கள் கடமை என்ன என்று அறியாமல் காலித்தனத்தை யும், போக்கிரித்தனத்தையும், பெற்றோர்களை வஞ்சிப்பதை யும், ஏமாற்றுவதையும் தேசாபி மானம் என்று கருதிக் கொண்டு அதில் விழுந்து நாசமடை கிறார்கள். பள்ளிப் பிள்ளை கள் பள்ளி வாழ்க்கை வரை யிலும் படிக்க வேண்டியதே அவர்களது கடமையாகும். படித்து வந்த பிறகு தேசாபி மானமே பெரியதென்று ஒரு வன் கருதுவானானால், காலி யாக இல்லாமல் யோக்கியனாக இருப்பானா னால், அவன் மரியாதையாகப் பள்ளிக் கூடத்தை விட்டு விட்டுத் தனது பெற்றோர்களுக்குத் தெரிவித்து விட்டு வெளியே வந்துவிட வேண்டியது யோக்கியமான காரியமாகும். இதை விட்டு விட்டுப் பள்ளிக் கூடத்தில் இருந்துகொண்டே தேசாபிமா னம் பேசுவது மிகவும் இழிவும் குற்றமுமான காரியமாகும். இவற்றை நான் பெரிதும் பார்ப்பனர் அல்லாத பிள்ளை களுக்கே சொல்லுகிறேன்.

ஆரிய புராணங்களை வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்

இராமன் ஆரியன் என்றும், இராமனது கதை ஆரியக் கதையென்றும், இராமனைக் கடவுளாக ஆக்கவே அது எழுதப்பட்டதென்றும் தெரிந்த பிறகு, ஆரியர்கள் எழுதியதையும் விட, எத்த னையோ பங்கு அதிகமான யோக்கியதை கொடுத்து எழுதப்பட்டிருக்கும் கம்ப ராமாயணத்தை ஆதரிப்பதும், போற்றுவதும், பரப்புவதும், பரப்புவதற்காகப் போலிக் காரணங்களைச் சொல்லு வதுமான தமிழ் மகன் யாராக இருந்தாலும், அவர்களை அறி வாளிகளென்றோ, மான உணர்ச் சியும், குலமேன்மையும் கொண் டவர்கள் என்றோ எப்படிக் கூற முடியும்?

தமிழருடைய எந்த நூலை யாவது ஆரியர்கள் மொழி பெயர்த்திருக்கிறார்களா, பாராட்டுகிறார் களா, உரிமை கொண்டாடுகிறார்களா? தமிழனுக்கு மாத்திரம் அப்ப டிப்பட்ட புத்தி இருக்குமா னால், ஆரியர்கள் நம்மை இழி மக்கள் என்று சொல்லு கிறார்களே என்று எப்படிக் குறை கூறமுடியும்? இராமா யணத்தை கலை கலை என்று ஆதரித்துப் போற்றிய தாலேயே இன்று தமிழ்நாட் டில் இராமாயணம் தெரி யாதவர்களோ, இராமனைக் கடவுளாகப் பாவிக்காதவர் களோ, இராவணனை இழி வாகக் கருதாதவர்களோ மிக, மிக அருமை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

கம்பராமாயணத்தையும், கந்த புராணத்தையும் ஒழியுங்கள்

தமிழர்கள் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதற் குக் காரணம் புராணங் களும் இதிகாசங்களும் அல்லாமல் வேறு எதைச் சொல்ல முடியும்? முஸ்லிம்களும் கிறிஸ்தவர் களும் ஆரியர்களுக்குத் தமி ழர்களைப் போல் அடி மைப் பட்டுக் கிடக்கவில்லையென் றால், அதற்குக் காரணம் ஆரி யர்களின் கதைகளையும், புரா ணங்களையும், கடவுள்களை யும், கோட்பாடுகளையும் மலத் தினுங்கேடாய் வெறுத்து இழிவுபடுத்தி வருவதேயாகும். இதை நாம் சரித்திரம் மூல மாகவும் பார்க்கிறோம்; பிரத்தி யட்சத்திலும் பார்க்கிறோம். நாம் ஆரியரை - ஆரியத்தை வெறுப்பர்கள் போல் வாயிலே பேசிக் கொள்கிறோமே தவிர, காரியத்தில் ஆரியத்தை எவ் வளவு தூரம் பாராட்டிப் போற்றிக் காப்பாற்றுகிறோம் என்பதற்கு இந்த இராமாயண - பெரிய புராண ஆதரிப்பே போதுமானதாகும்.

பெரியபுராணம் தொடக்கமே தில்லை வாழ் அந் தணர்க்கு அதாவது கோயில் பூசை செய்யும் பார்ப்பனனுக்கு அடியேன் என்று தொடங்கப் படுகிறது. கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு பகுத்தறிவு உணர்ச்சி யிருந்தும் நல்ல நீதிகள் இருந் தும் ஓர் இரண்டு மூன்று விஷ யங்கள் அறிவுக்கும் ஆராய்ச் சிக்கும் விஞ்ஞானத்துக்கும் பொருத்தம் இல்லாமல் இருப் பதால், அதாவது, கன்னிப் பெண் பிள்ளை பெற்றதும் அப்பம் வளர்ந்து வந்ததும் உயிர்த்தெழுந்ததும் அதாவது செத்துப் பிழைத்ததுமான இரண்டு மூன்று விஷயங்கள் இருப்பதனாலேயே அம்மதம் மேல்நாடுகளிலேயே எவ்வ ளவோ விவாதத்திற்கு வந்து நாளுக்கு நாள் எதிர்ப்பும், மதத்தை விடுகிற மக்களும் அதிகமாகிக் கொண்டே வரு கிறார்கள். அப்படியிருக்க தொட்டதற்கெல்லாம் பகுத்தறி வுக்கு முரணாகவும், ஆராய்ச் சிக்கு நிற்காததாகவும், விஞ்ஞானத்திற்குப் பொருத்தமில் லாததாகவும் உள்ளவற்றையே கடவுள் என்றும், மதம் என்றும் மகான்களென்றும் சொல்லிக்கொண்டே இருப் போமேயானால், எப்படி அவைகள் நிலைக்க முடியும்? பாமர மக்கள் இவைகளை நம்பிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் இருப்பார்களே யானால், இதை எப்படிச் சகித் துக் கொண்டிருக்க முடியும்?

ஆதலால், வாலிபர்களே, இந்தப் புத்தகங்களின் பெருமைகள் ஒழியும் வரை நீங்கள் உறங்காதீர்கள். என்ன கஷ்டம் வந்தாலும் அவற்றை ஏற்கத் துணிவு கொண்டு இவற்றை ஒழிக்க முயலுங்கள். அப்படிச் செய்வீர்களானால், நீங்கள் தமிழ் நாட்டுக்கும் தமிழருக்கும் புத்துயிர் அளித்தவர்கள்.

மானம் கருதாது பிறருக்கு நன்மை செய்வதே போற்றத்தக்க காரியம்

இன்றைய வாலிபர்கள் தங்களுக்கு மிக்க பொறுப்பு இருக்கிறதாகக் கருதவேண்டும். பெண்மணிகளும் மானம் ஈனம் என்பவற்றைக் கூட இலட்சியம் செய்யாது முன் வரவேண்டும். ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்ற ஒரு சிலராவது மானமிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை. ஒரு மனிதன் - ஒரு பெண் தன்னுடைய ஒரு ஜான் வயிற்றைக் காப்பாற்ற எவ் வளவு மானம் ஈனம் அற்று நடக்கிறார்கள். சமுதாயத் திற்கும் நாட்டிற்கும் எவ்வளவு கேடு தரும்படியான காரி யத்தைச் செய்கிறார்கள்? அவர் கள் எல்லாம் கொல்லப்பட்டுப் போய் விட்டார்களா? அவர் களுக்கெல்லாம் நாட்டில் செல் வாக்கு அற்றுப் போய் விட் டதா? ஆகையால் மானத்தை இலட்சியம் பண்ணாமல் பிறருக்கு நன்மையான காரியங்கள் என்று தோன்றுவதில் ஈடுபடு வது மிகவும் போற்றத்தக்க காரியமாகும்.
சமுதாயத்திற்காக தன்மானத்தை விடலாம் என்று கூறும் வள்ளுவர்
சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய நற்காரியத்திற்காக ஒருவன் தன்மானத்தை, இலட்சியம் செய்வானேயானால், அக்காரியம் கெட்டுவிடும் என்று வள்ளுவர் கூறியிருக் கிறார். மானத்திற்காக உயிர்விட வேண்டும் என்று சொன்ன வள்ளுவர்தான் சமுதாயத் திற்காக மானத்தையும் விட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதை என் சொல்லுகிறோம் என்றால், சுயமரியாதைக்காரர்கள் மானத்தை லட்சியம் செய்யா தீர்கள் என்று சொல்லுவது எப்படி ஒழுங்காகும் என்று சிலர் தங்களுக்குள்ளேயாவது நினைப்பார்களாகையால், அவர்களுக்காக இதைச் சொல்லுகிறோம். நமது நாட்டில் இன்று பேசப்பட்டு வரும் பொது வுடைமைப் பேச்சு முழுமுழுப் பித்தலாட்டப் பேச்சாகும். அதிலிருந்து வாலிபர்கள் தப்ப வேண்டியது முக்கியமான காரியமாகும். பொதுவுடை மைக்காரர்கள் கண்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியும், அதன் தலைவர் களையும், அதிலுள்ள சில பணக்காரர்களையும், முஸ் லீம்களையும் குறை நடத்து வதுன் அவர்களது கொள் கையாக இருக்கிறதே தவிர, ஆத்மார்த்தம் என்னும் பித்த லாட்டமே உருவாகி இருக்கிற காந்தியாரைப் பற்றியோ, பார்ப்பனரே வாழவேண்டு மென்கிற ஆச்சாரியார் கூட்டத்தைப் பற்றியோ, காட்டு மிராண்டித் தன்மையை நினை வூட்டிக் கொண்டிருக்கும் ஆத் திகரைப் பற்றியோ அவர்க ளுக்கு சிறிதும் கவலை இல்லை என்பதோடு, முன் சொன்னவர் களுக்கு அடிமையாக இருந்து பிரச்சாரம் செய்து ஆதரித்தும் வருகிறார்கள். ஆகையால் வாலிபர்கள் சர்க்கரை பூசிய விஷக் குளிகை போன்ற இன்றைய பொதுவுடைமைக் காரர்களிடத்தில் ஜாக்கிரதை யாக இருக்க வேண் டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

------------------ 21-2-43 அன்று திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சிலிருந்து சில பகுதிகள்

0 comments: