Search This Blog

29.5.08

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை?






பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழ்ந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்


(கவிஞர் காசி ஆனந்தன்)

பெரியாரின் அருமை பெருமை தெரிய வேண்டும் என்றால் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த 'பிரபாவதி' படத்தில் இடம்பெற்ற காட்சி போதுமானது. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.

படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.

"ஏண்டா என்னை மிதிச்சே?' கோபத்தோடு கேட்பான் அசுரன்.


"இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்' என்பார் கலைவாணர்.

"பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி' என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.

'நீ சூத்திரன். பிரமாவின் தொடையில் இருந்து பிறந்தவன். நான் பிராமணன். பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவன். உனது சுயதர்மம் ஏனைய மூன்று வர்ணத்தாருக்கும் அடிமை வேலை செய்வது.

ஒரு சாதியான் மற்றொரு சாதியானுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தினாலும், அது நன்மையைப் பயக்காது. தன் தொழிலைக் செய்யாவிடினும் அவ்வளவாகக் குற்றமில்லை. ஆனால் பிறசாதியார் தொழிலை செய்யவே கூடாது.' (பகவத் கீதை அத்தியாயம் 3, பாடல் 35)

ஏமாற்றப்பட்ட தமிழன் வர்ண தர்மம் ஆண்டவன் கட்டளை, அழித்தெழுத முடியாத விதி என நம்பினான்.

சிந்திப்பது
எங்களுக்கு
எளிதாக இருக்கிறது!

நாங்கள்
தலையில்
இருந்து பிறந்தவர்கள்!

அவனை
ஓங்கி உதைத்தான்!

இவன்
சொன்னான்
உதைப்பது எங்களுக்கு
எளிதாக இருக்கிறது!

நாங்கள்
காலில்
இருந்து பிறந்தவர்கள்!



என்று கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்குப்போல் அன்றைய தமிழனால் செய்ய முடியவில்லை.

ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் கீதையை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் இராசகோபாலச்சாரியார் 1956இல் தமிழ் நாட்டில் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிக் கூடங்களில் அவனவனும் தனது குலத்துக்குரிய தொழிலைச் செய்யவதற்கு வேண்டிய கல்வி கற்பிக்கப்பட வேண்டும். சிரைக்கிறவன் பிள்ளை சிரைக்க வேண்டும். வெளுக்கிறவன் பிள்ளை வெளுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆரிய தர்மத்தை நிலைநாட்ட பார்ப்பனியம் எடுத்த கடைசி முயற்சி இராசகோபாலச்சாரியாரின் குலக் கல்வித் திட்டமாகும்.

இந்த வர்ணதர்மத்தை மகாகவி பாரதியார் பொறுக்கி எடுத்த சுடு சொற்களால் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும்
பார்ப்பாருக்கு இன்னொரு நீதி என்று
சாத்திரம் சொல்லுமேயானால் அது
சாத்திரம் அல்ல சதியெனக் கண்டோம்
. (பாரதியார் கவிதைகள்)

பெரியாரை சுயமரியாதைப் பாதைக்கு இட்டுச் சென்றதே பார்ப்பனர்கள் இந்த குலத்துக்கொரு நீதியை சமையல் கட்டுவரை கொண்டு சென்றதே.

1923இல் தந்தை பெரியார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். சேரமாதேவி என்ற ஊரில் வ.வே.சு. ஐயர் குருகுலம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி ஒரு குருகுலத்தை நடத்தி வந்தது. அந்தக் குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு வேறாகவும் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு வேறாகவும் தனித் தனியாகப் பந்தி போடப்பட்டது.

அந்தக் காலம் பார்ப்பனர்களுடைய செல்வாக்கு அங்கிங்கு இன்னாதபடி எங்கும் கொடி கட்டிப் பறந்த காலம். கல்வி அவர்களது ஏகபோக உரிமையாக இருந்த காலம். நீதியரசர்கள் தொடங்கி சாதாரண அலுவலக எழுத்தர்வரை பிராமணர்களே பதவிக் கதிரைகளில் அமர்ந்து கோலோச்சிய காலம்.

தனிப் பந்தி உணவு பரிமாறும் முறையை பெரியார் எதிர்த்தார். ஆனால் அவரது எதிர்ப்பு வெற்றி அளிக்கவில்லை. பார்ப்பனர்கள் சாத்திரங்களைக் மேற்கோள் காட்டி தனிப் பந்தியை நிறுத்த மறுத்தனர்.

வேறு வழியில்லாமல் 1925 இல் பெரியார் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை உதறி எறிந்துவிட்டு அதிலிருந்து வெளியேறினார்.

பெரியாரின் வெளியேற்றம் அவரது வாழ்க்கைப் பாதையை மட்டுமல்ல தமிழினத்தின் தலைவிதியையும் மாற்றி அமைத்தது.

காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். பார்ப்பனீயத்தின் முகத் திரையைக் கிழித்து மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் தமிழ் மண்ணில் விதைக்கப்பட்டிருந்த நச்சுக் கருத்துக்களை, மூடநம்பிக்கைகளை, புராண இதிகாச புளுகு மூட்டைகளை, புரட்டுக் கதைகளை அக்குவேறு ஆணி வேறாகப் பிடுங்கி எறிந்தார்.

'கடவுளை மற மனிதனை நினை' என்பது பெரியாரின் முழக்கமாகும்.

1937 ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்கு நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதே ஆண்டு கட்டாய இந்தி பள்ளிக்கூடங்களில் திணிக்கப்பட்டது. கட்டாய இந்தியை எதிர்த்து தமிழகம் எரிமலையாக வெடித்தது. துப்பாக்கிகள் பேசியதில் இரண்டு தமிழர்களது உயிர் பறிக்கப்பட்டது. பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது உருவப் படத்தை நாற்காலியில் வைத்து நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

தனது கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல குடியரசு, புரட்சி, விடுதலை, உண்மை போன்ற ஏடுகளை ஆரம்பித்து அவற்றின் வாயிலாக பகுத்தறிவு பரப்புரை செய்தார்.

'பகுத்தறிவு' ஏட்டை ஆரம்பித்தபோது பெரியார் அதன் கொள்கைபற்றி பின் கண்டவாறு பிரகடனம் செய்தார்.

'பகுத்தறிவு ஏடு வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்துக்கோ, சாத்தி;ரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்திரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும் ஆற்றலையுமே துணையாகக் கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும்.'

1935 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட 'விடுதலை' இன்று மட்டும் சாதி ஒழிப்பில், இன நலத்தில், மொழி மீட்சியில், வகுப்புரிமையில், பண்பாட்டுப் புரட்சியில், பகுத்தறிவுப் பரப்புரையில், பார்ப்பன ஆதிக்க ஒழிப்பில் தமிழர் நலங்காக்கும் அரணாய், ஆயுதமாய், மாமருந்தாய் திகழ்கிறது!

தான் தொடக்கிய ஏடுகளுக்குத் தனித் தம்pழில் பெயர் சூட்டியதன் மூலம் தனித் தமிழ் இயக்க எழுச்சிக்கு பெரியாரே வழிகாட்டினார். தமிழிசையின் தந்தையும் அவர்தான்.

பெரியார் விதைத்த வித்துக்களில் ஒன்றேனும் சோடை போனது கிடையாது. அவர் விதைத்த விதைகள் இன்று ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேரோடி கனிதரும் கற்பகச் சோலைகளாகக் காட்சி தருகின்றன.

பெரியார் பார்ப்பனரல்லாதார்க்கு கல்வி வேண்டும் என்றார். பார்ப்பனரல்லாதார்க்கு அரச அலுவலகங்களில் இடம் வேண்டும் என்றார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார். ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றார். பெண்களுக்கு மணவிலக்க உரிமை வேண்டும் என்றார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றார். விதவைக்கு மறுமணம் வேண்டும் என்றார்.

இந்து மதத்தில் கறைபடிந்துபோன தேவதாசி முறை ஒழிய வேண்டும் என்றார். சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். சாதி அடிப்படையில் யாரும் இழிதொழில் செய்யக் கூடாது என்றார்.

தேவதாசி முறை தமிழீழத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் பல நூற்றாண்டு காலம் இருந்திருக்கிறது. சுந்தரர் திருமணம் செய்து கொண்ட பரவை நாச்சியார் இந்த சாதியைச் சேர்ந்தவர்தான்.

தேவதாசி முறை சுலபத்தில் ஒழிக்கப்படவில்லை. அதற்குப் பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

'தோழர்களே! இந்நாட்டில் தேவதாசி முறை ஒழிக்கப்படது என்றால் எவரால்? எங்களால்தான். எங்கள் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது அது ஒழிக்கப்பட்டது. தேவடியாள் என்று ஒரு சாதியா? இவர்கள் எல்லாம் யார்? நமது அக்காள் தங்கையர்களாக இருந்தவர்கள்தானே! இப்படிப் பல சாதியிலிருந்தும் ஆண்டவன் பேரால் பொட்டுக்கட்டி விட்டனர். தாசித் தொழில் பழகித் தேவடியாள் ஆனார்கள்.

இந்தத் தேவதாசித் தடைச் சட்டம் சட்ட சபையில் வந்தபோது வைதீகர்கள் எல்லாம் எதிர்த்தனர். சத்தியமூர்த்தி ஐயர் 'இது கடவுள் காரியம் இதில் கை வைப்பதா?' என்றார். அதற்கு டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் எழுந்து 'அந்தக் காரியத்தை நாங்கள் ஏதோ இத்தனை நாள் பார்த்து வந்தோம். இனி அப் புண்ணிய காரியத்தை உங்கள் இனத்தார்களே பார்த்துக் கொள்ளுங்களேன்!' என்று கூறினார். பிறகுதான் அவர் வாயடைத்து நினறார்
(விடுதலை - 31.08.1959)

இதில் வேடிக்கை என்னவென்றால் பார்ப்பனர்களும் வைதீகர்கள் மட்டுமல்ல தேவடியாள்கள் என்பவர்களும் கூட்டம் போட்டு பெரியாரை வன்மையாகக் கண்டித்தார்கள். 'எங்கள் பிழைப்புப் போய் விட்டால் நாங்கள் என்ன செய்வது' என்றார்கள்.

இந்த அடிமை மனப் போக்கு இன்றும் தமிழரிடையே நிலவுகிறது. தமது மூளைக்குப் போட்ட விலங்குபற்றி மெத்தவும் சுய மகிழ்ச்சி அடைகிறவர்கள் இருக்கிறார்கள்.

"பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி' என்று கூறித் தலையைக் காட்டினானே அந்த அசுரன்? அவன்; போல பல சூடு சொரணை அற்ற அசுரர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

இவை ஒவ்வொன்றிலும் பெரியார் வெற்றி கண்டார். 'சூத்திரர்' 'சூத்திரச்சி' என்று உயர்சாதிப் பார்ப்பனர்களால் இழிவாக அழைக்கப்பட்ட மக்கள் இன்று நீதியரசர்களாய், அமைச்சர்களால், துணை வேந்தர்களாய், பேராசிரியர்களாய், மருத்துவர்களாய் உலா வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமை பெரியார் ஒருவரையே சேரும்.

1967 ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். அப்போது 'திமுக ஆட்சியை பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன்' என்று சொன்னார். சொன்னதோடு நிற்காமல் அமைச்சர்களை அழைத்துச் சென்று பெரியாரிடம் வாழ்த்தும் பெற்றார்.

பெரியாரையும் அவரது கொள்கைகளையும் செரிக்க முடியாதவர்கள் அவரை ஒரு அதி தீவிரவாதியாக, நாத்தீகனாகப் பார்க்கிறார்கள். ஆனால் தமிழினத்தை பீடித்துள்ள பெருநோய்க்கு தலையிடி மாத்திரை சரிப்பட்டு வராது ஊசிதான் வழி என்பது பெரியாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.அதனால்தான் பெரியார் பிள்ளையார் சிலைகளை தெருவில் போட்டு உடைத்தார். அறிஞர் அண்ணாவால் கூட அதனை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 'நாங்கள் பிள்ளையாரையும்உடைக்க மாட்டோம்! பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்!' என்றார்.

பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பு கல்லு கடவுள் என்ற மூடத்தனத்திற்கு எதிரான ஒரு குறியீட்டு எதிர்ப்பு.

பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பு ஒரு நாளில் முடிந்து விட்டது. ஆனால் இன்று இந்த மத பக்தர்களே பிள்ளையார் சிலையை விநாயக சதுர்த்தியன்று கத்தி, கோடரி, வாள்களால் கண்ட துண்டமாக வெட்டிக் கடலில் கரைக்கிறார்கள். இந்த வெறித்தனமான முட்டாள்தனத்தைப் பார்த்து மனம் உடைந்துபோன கே.சி. அனந்த கிருஷ்ணன், கோவையிலிருந்து 'தினமலர்' ஏட்டுக்கு 'பிள்ளையார் உடைப்பு வேண்டாமே!' என்ற தலைப்பில் ஒரு மடல் வரைந்துள்ளார்.

'நான் 73 வயதான மிகவும் ஆசாரமான பிராமணன். நல்ல ஆஸ்திகன். மும்;பையைப் பின்பற்றி நமது தமிழகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி மும்பை மாடலில் வெறித்தனமாக நடக்கிறது.

சாஸ்திரங்களுக்கு விரோதமாக விநாயகரைச் சாக்கடை ஓரங்களிலும், சந்துகளிலும் ஆகம விதிகளில் கூறப்பட்ட எல்லா விதிகளையும் மீறி அசுத்தமான இடங்களில் சிலை அமைக்கிறோம்.

இதில் புரளும் பணம் லட்சம் மற்றும் கோடிகளில் மது அருந்தி மாமிசமும் சாப்பிட்டு, ஆவேசத்துடன் ஆடுகின்றனர். இதனால் நிரந்தரமாக உள்ள சிறிய கோயில்கள் மற்றும் அரச மரத்தடி விநாயகர்கள் அனாதையாகி விட்டனர். விநாயகர் சிலை ஊர்வலங்களும், விசர்ஜன விழாவும், விநாயகர் உருவச் சிலைகளைக் காலாலும், கையாலும் ஏறி மிதித்து கழிகளாலும் அடித்து உடைக்கும் அநாகரிகங்களும் அரங்கேறுகின்றன. தேவையா இந்த அசிங்கம்?

மேலும், கொழுக்கட்டை சுண்டல் செய்து படைத்து அதை ஏழை எளியோர்க்கெல்லாம் பிரசாதமாகக் கொடுக்கலாமே! ஈ.வெ.ரா.,வை விடக் கேவலமாக (அவர் 50ம் ஆண்டுகளில் களிமண் பிள்ளையாரை ஒருநாள்தான் உடைத்தார்) நாம் பிள்ளையார் உடைப்பு விழா (போலீஸ் பந்தோபஸ்துடன்) நடக்கிறது. இந்து முன்னணித் தலைவர் ராஜகோபாலன் மனம் வைத்தால் உடனே இதைச் சரி செய்யலாம். வேண்டாம் இந்த ஓட்டு வேட்டை அரசியல்!'


திரு. அனந்த கிருஷ்ணன் சொல்வது போல் இந்து மதத்தில் காணப்படும் மூட பக்தியே நாத்தீகர்களை உருவாக்க உதவுகிறது!

பெரியார் பற்றிக் குறிப்பிட்ட திரு.வி.க. 'பெரியார் இந்நாட்டின் முடிசூடா மன்னர்' என்றார்.

பேரறிஞர் அண்ணா சொன்னார் 'பெரியார் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே என்பதை அறிய வேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த கசலகலா வல்லுனர்களும், வெறும் சாமியாடிகளைக் கூடக் கண்டித்துப் பேசச் சக்தியற்றுக் கிடந்த காலை, பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திவே வீசி. நச்சுமரங்களை வேரொடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதையும் உணர வேண்டும். தமிழகத்தின் தன்மானத்திற்கே வித்தூன்றிய தலைவர்.

பெரியார் தமிழினத்தின் இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றிய முழு நிலா! திசை காட்டும் கலங்கரை விளக்கு! மூடத்தனத்தை சுட்டெரித்த எழு ஞாயிறு! தமிழரின் மீளாத் துயில் நீக்கி அவர்களின் தலை விதியை மாற்றி எழுதிய பகுத்தறிவுப் பகலவன்.

---------- நக்கீரன் - " முழக்கம்" - செப்தெம்பர் 19, 2003

0 comments: