Search This Blog

18.5.08

கண்ணுக்குத் தெரியாத கடவுளால் பயன் என்ன?

தோழர்களே, இன்று நான் பேசப் போவது உங்களுக்கு சந்தோஷமாக இருக்காது. ஏனெனில் நீங்கள் அநேகமாய் இன்று நடக்கும் உற்சவத்திற்காக வந்தவர்கள் மிகுந்த பக்திவான்கள். நானோ அவற்றையெல்லாம் வீண் தெண்டம் என்றும், புரட்டு என்றும் சொல்லுகிறவன். அது மாத்திரமில்லாமல் உங்களது கடவுள் உணர்ச்சி, மத உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, தேச உணர்ச்சி, ஆகியவைகளையும் உங்களது சமூகத்தில் வெகு காலமாய் இருந்து வரும் பழக்க வழக்கங்களையும் குற்றம் சொல்வதோடல்லாமல் அடியோடு அழித்து ஒழித்துவிட வேண்டுமென்றம் சொல்லுகிறவன்.

இதை நீங்கள் பொறுத்துக் கொண்டிருப்பீர்களா என்பது எனது முதல் சந்தேகமாகும். நீங்கள் பொறுத்தாலும் சரி, பொறுக்காவிட்டாலும் சரி, அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால், உங்களிடம் நான் முதலிலேயே என்னிஷ்டப்படி பேச அனுமதி வாங்கிவிட்டேன். ஆனால், நீங்கள், நான் பேசுவதைப்பற்றி வருத்தப்படுவதற்குமுன் ஒரு விஷயத்தை மாத்திரம் கவனித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். அதென்னவென்றால் நான் ஏன் இப்படி பேசுகிறேன்? இதனால் எனக்கு என்ன லாபம்? இந்தப்படி பேசுவதனால் எனக்குப் பணம் கொடுப்பார்களா? ஒரு மனிதன்-எனனைப் போல் வயது சென்ற “கிழவன்” ஒருவன், ஜாதியைக் குற்றம் சொல்லவும், கோவிலைக் குற்றம் சொல்லவும், மதத்தைக் குற்றம் சொல்லவும், கடவுளைக் குற்றம் சொல்லவும், கோவிலைக்குற்றம் சொல்லவும், தேசத்தைக் குற்றம் சொல்லலம், அரசாங்கத்தைக் குற்றம் சொல்லவுமான ஒரு கஷ்டமும்-துக்கமுமான காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? நான் இதற்கு முன் இவைகளையெல்லாம் ஒரு காலத்தில் ஆதரித்திருப்பது உங்களில் பலருக்கு நன்றாகத் தெரியும். தேசியத்திற்காக பல தடவை சிறை சென்றதும், உங்களுக்கு தெரியும். அப்படியிருக்க இப்போது இப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதை யோசித்துப் பாருங்கள். இவைகளால் மக்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மை என்ன என்று யோசித்துப் பாருங்கள்.
உலக சரித்திரம் கிடைத்த காலந்தொட்டு ஜாதி, மதம், கடவுள், தேசம், சமூகம், அரசாங்கம் ஆகியவை இருந்து தான் வந்திருக்கின்றன. இவைகளைப்பற்றி அபிமானங்களும், சீர்திருத முயற்சிகளும், பெரியார்களும், மகாத்மாக்களும் அவ்வப்போது தோன்றியும், பல சீர்திருத்தக் காரியங்களைச் செய்தும் தான் வந்திருக்கின்றனர். இவைகளெல்லாம் மனித சமூகத்-திற்கு என்ன பயன் அளித்திருக்கின்றன? குறைந்தது ஒரு 1,000 அல்லது 2,000 வருஷ சரித்திரங்களையே எடுத்துக் கொண்டீர்க-ளேயானால், அன்றைக்கும், இன்றைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.

சர்வத்திற்கும் கடவுளே ஆதாரபூதம் என்றும் அவர் அருள் பெறுவதே எல்லாவற்றிற்கும் அவசியமான தென்றும் கருதிம எந்தக் காரியம் செய்தாலும், எந்தப் பேச்சைப் பேசினாலும், கடவுளை நினைத்து கடவுளை °தோத்தரித்துப் பிறகு தான் மற்ற காரியங்களை செய்து வந்தோம்.

அது மாத்திரமா? கோயிலில்லா ஊரில் குடியிருப்பது பாவம், என்று காடு மேடுகளில் எல்லாம், ஊர் கிராமங்களிலெல்லாம் கோயில்கள் கட்டினோம். சில கோயில்கள் கோட்டை-கள் போல் கொத்தளங்கள் போல் கட்டி பல சுற்றுப் பிரகாரங்கள் விட்டு, மதில்-களும், வானளாவக் கோபுரங்களும் கட்டி, தங்கத்திலும், வெள்ளியிலும், தாமிரத்திலும் சாமிகள் செய்து ரத்தினங்களால் நகை போட்டு, ஊரில் யார் பட்டினிக் கிடந்தாலும், எந்தக் குழந்தைக்குப் பால் இல்லாவிட்டாலும், யார் யாருக்கு வேட்டி துணி இல்லாமல் நிருவாணமாய் இருந்தாலும், யாருக்கு பேண்டு இல்லாமல் இருந்தாலும் சிறிதும் லட்சிய-மில்லாமல் பால், பழம், பஞ்சாமிர்த அபிஷேகமும், ஆராதனையும், பட்டு பீதாம்பர உடையும், வருஷாவருஷம் கல்யாணம், திருவிழாக்காளும், வைப்பாட்டி திருவிழாக்களும் செய்த வண்ணமாய் இருந்ததுடன் மக்களில் கோடிக்கணக்கான பேருக்கும் நாள் ஒன்றுக்கு ஒரு வேலை சாப்பாட்டிற்கும் விதி இல்லா-விட்டாலும் எண்ணிலடங்கா கடவுள்களுக்கு தினம் தினம் 4 வேளை, 5 வேளை, 6 வேளை மூட்டை மூட்டையாய் பொங்கிப் போட்டு ஆராதனை அம்சை செய்து வந்தோம்.

இவ்வளவுதானா? ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு சாமிக்கும் வருஷம் 10 லட்சம், 20 லட்சம் வரும்படி வரும்படியான பெருமை-களையும், சொத்துக்களையும் தேடி வைத்-தோம். மத விஷயத்திலும் எத்தனையோ லட்சக்கணக்கான பெயர்கள் அடிக்கடி உயிரைக் கொடுத்து மதத்திற்காக என்று தலையைச் சிரைத்தும், கத்தரித்தும், முகத்தைச் சிரைத்தும் வளர்த்தும், காதை ஓட்டை செய்தும், மூக்கை ஓட்டை செய்தும், மண்ணைப் பூசியும், சாம்பலைப் பூசியும் சேற்றைப் பூசியும், சாணியை சாப்பிட்டும், மூத்திரத்தை குடித்தும், பட்டினிக் கிடந்தும் மற்றும் என்ன என்னவோ காட்டுமிராண்டித் தனமான காரியங்களைச் செய்தும் மதத்தைக் காப்பாற்றினோம்.

இதுபோலவே தேசத்திற்கு என்று அடிபட்டும், உதைபட்டும், சிறை சென்றும், தூக்குமேடையில் உயிர் விட்டும் அன்னிய தேசத்தாருடன் உயிர் விட்டும் போர் புரிவ-தென்னும் காரியத்தில் 10 லட்சக்கணக்கான பேர் உயிர் விட்டும் தேசாபிமானம் காட்டி-னோம்,. இவ்வளவும் இன்று என்ன ஆயிற்று? பழைய நிலையை வளர்க்கின்றதா? அல்லது புதியதாக ஏதாவது சவுகரியம் செய்ததா? யோசித்துப் பாருங்கள்.

இனி ஜாதி, மதம், கடவுள், தேசம், அரசு ஆகிய எவற்றிற்கும் சிறிதும் இடம் கொடாமலும், மனித அபிமானத்திற்காக மேல் கண்-டவைகளில் எதை வேண்டுமானாலும் இழக்கவும் தயாராய் இருக்க வேண்டும். அன்று தான் எல்லோரும் மனிதர்களாக இருக்க முடியும். இதனால் ஆபத்து ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்றே எண்ணுகின்றேன். ஆனால், இவைகளை நீங்கள் நன்றாய் யோசித்துப் பாருங்கள். பழைய காரியங்கள் பயனளிக்காததாலேயே தான் இதைப் பேசுகிறேன். உங்கள் புத்தியைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டதைச் செய்யுங்கள். நான் சொல்லுவது குற்றமாகவும், துவேஷமாகவும் இருந்தாலும் இருக்கலாம்.

கடவுள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அது எல்லோருக்கும் ஒன்று-போல் இல்லாமல் மக்களை பாழ்படுத்துகிறது. ஒவ்-வொருவரும் ஒவ்வொரு அர்த்தம், ஒவ்வொரு குணம், ஒவ்வொரு தோற்றம் சொல்லு-கிறார்கள். இந்த மாதிரி இப்போது ஏதாவது ஒரு வஸ்துவைப்பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி சொன்னால் அதை நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்களா? அல்லது அந்த வஸ்துவை நம்புவீர்களா? எந்தக் கடவுளுக்கு எப்படிப்-பட்ட தத்துவார்த்தம் சொன்னாலும் அதனால் ஏற்படுகின்ற பயன்யாசம் என்பதும் யோசிக்க வேண்டிய காரியமாகும்.

கோவில்களை எல்லாம் இடித்துவிடுவதால் எந்தக் கடவுளுக்கும் எவ்வித நஷ்டமும் ஏற்பட்டுவிடாது. ஆகையால், யாரும் பயப்பட வேண்டாம். அனாவசிய செலவும், மதியீனமும் விலகிவிடும். நீங்கள் எந்தமுறையில் கடவுளை நிர்ணயித்தாலும், எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர மூடநம்பிக்கை கடவுளைவிட, குருட்டுப் பழக்க மதத்தைவிட சீர்திருத்தக் கடவுளும், பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய் சாதித்துவிடப் போவதில்லை.

ஆகவே, எந்த வழியில்-எந்த மாதிரியில்- எவ்வளவு நல்ல முறையில் கடவுளையும், மதத்-தையும் , வேதத்தையும் சிருஷ்டித்துக் கொண்டாலும் அது மனித சமூகப் பெரும்பான்மை மக்களுக்கு ஆபத்தையும், கேட்டையும், பிரிவினையும், முரட்டுத்தனத்தையும், குரோதத்-தையும், அடிமைத்தனத்தையும் உண்டாக்கியே தீரும். இதுவே இன்றைய எல்லா மதத்தினு-டையவும் அனுபவம் - பிரத்தியட்ச அனுபவம்.

ஆதலால், கடவுள், வேதம் என்கின்றதான கற்பனைகளை ஒழிப்பதும் அழிப்பதும் தான் மனிதனுக்கு உண்மையான விடுதலையே ஒழிய, மனிதனை கடவுள் உணர்ச்சியில் புகுத்தி - மதவெறியில் ஆழ்த்தி - வேதத்திற்கு அடிமையாக்கி கல்லில் முட்டிக் கொள்ள கோவிலுக்குள் தள்ளுவதும் மிகவும் மோசமும்-கெடுதியுமான காரியமாகும்.


---------- 11,12.2.1933-ஆம் தேதிகளில் திருவாங்கூரில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது-26.2.1933 ‘குடி அரசு’ இதழில் வெளியானது

0 comments: