Search This Blog

27.5.08

முதல் பெண்ணியவாதிஇன்றைய பெண்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள்! நல்ல வாய்ப்புகள், வசதிகள், உரிமைகள், சமூக அந்தஸ்து என்று ஓரளவுக்கு மேன்மையாகவே இருக்கிறது. அவர்கள் வாழ்க்கை தரம். ஆனால், இந்த வளம் எல்லாம் ஆகாயத்திலிருந்து தானாய் வந்துக் குதித்துவிடவில்லை. எத்தனையோ மனிதர்களின் தொடர் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாய்தான் இன்றைய பெண்கள் கொஞ்சமேனும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது.
இப்படிப் பெண்களுக்காகப் போராடியவர்களில் பல பேர் பெண்கள். இவர்கள் தங்களுக்காகத் தாங்களே குரல் கொடுத்துக்கொண்டவர்கள். ஆனால், தனக்காக என்று இல்லாமல், தான் ஒரு ஆணாக இருந்தபோதும் மிகத்தீவிரமாக பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஒருவர் இருக்கிறார். அவர் தான் ராமசாமி!


ஆனால், ராமசாமி என்றால் யார் என்று இன்று யாருக்கும் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைத் தான் இயற்பெயரால் அழைப்போம். செயற்கரிய செய்த பெரும் மனிதர்களை பிரத்தியேகச் சிறப்புப் பெயரால் தானே அழைப்போம். இப்படிச் சிறப்புப் பெயர் பயன்படுத்தியே பழகிவிட்டால் காலப்போக்கில் அன்னாரின் இயற்பெயரே மறந்துபோய், சிறப்புப் பெயரே நிரந்தரமாகி விடுகிறது. திருவாளர் ராமசாமியும் அப்படிப்பட்ட மகான் தான்! இயற்பெயரே மறந்துபோகும் அளவிற்குப் பிரசித்தமான அவரது சிறப்புப் பெயர் தான் தந்தை பெரியார்!
யோசித்துப் பார்த்தால், புத்தர், கிறிஸ்து, நபி, மஹாத்மா என்ற வரிசையில் தனக்கென்று ஒரு நிரந்தரச் சிறப்பு பெயர் பெற்றவர் பட்டியலில் தந்தை பெரியாரும் ஒருவர். மற்ற நால்வரை விட பெரியார் வித்தியாசமானவர், அவர்கள் எல்லாம் கடவுளின் பெயரால் பணியாற்றியவர்கள்; பெரியாரோ கடவுளே இல்லை என்று பகிரங்கமாய்ப் பிரச்சாரம் செய்ததற்காகப் பிரசித்திபெற்றவர். ஆனால், இந்தப் பெரியார் என்னும் மாமனிதனின் பாடல் பெறாத இன்னொரு முகம் ஒன்று உண்டு. இவர் தான் இந்தியாவின் முதலும், மிக மும்முரமுமான பெண்ணியவாதி.


இன்று ஆணுக்குப் பெண் சமம் என்பது எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமூகக் கருத்து. இன்றைய பெண் ஆணுக்கு அடிமை இல்லை. அவளுக்குஆணைப் போலவே எல்லா சுதந்திரமும் உண்டு தான். இந்தப் பெண் விடுதலை எல்லாம் சென்ற நூற்றாண்டில் பெரியார் முன்பு நடத்திய பெரும் போராட்டத்தின் நேரடி விளைவு தான். கடந்த காலத்தின் கேவலங்களை ஒரு முறை நினைவு கூர்ந்தால்....அந்தக் காலத்தில் பெண்கள் பூப்பெய்வதற்கு முன்பே பால்லிய விவாகம் செய்யப் பட்டுவிடுவார்கள். இந்தக் குட்டி மாட்டுப்பெண்ணின் குட்டிக்கணவன், பாம்பு கடித்தோ, காலரா தாக்கியோ, வேறு எப்படியோ அற்ப ஆயுளில் மாண்டுபோனான் என்றால், இந்தக் குட்டி விதவைக்கு எல்லாச் சம்பிரதாயங்களையும் செய்வித்து, அவளை அமங்கலி ஆக்கி, முடிந்தால் உடன் கட்டை ஏற்றி, கணவனின் சிதையில் தள்ளிவிடுவார்கள். அப்படி இல்லை என்றால், அந்தக் குட்டிப்பெண் தன் மீத ஜீவனத்தை முழுப் பிரம்மச்சரியத்தில் கழித்திட வேண்டியது தான். இந்தக் குட்டிப் பெண்ணுக்கு மறு வாழ்வு, அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்களின் உரிமை என்ற ஒன்றே அபச்சாரமான சொல்லாகத்தான் கருதப்பட்ட்து. அமங்கலியான பெண்ணின் கதி தான் இவ்வளவு மோசம் என்று பார்த்தால், சுமங்கலியாக இருந்த பெண்ணின் நிலையும் மட்டமாகவே இருந்தது. அந்தக் காலத்துப் பெண்களுக்கு எத்தனையோ தடைகள் இருந்தன. அவர்கள் தனியே வெளியே செல்லக்கூடாது; கல்விகற்கக்கூடாது; வேலைக்குப் போக முடியாது; சுயமாய்ச் சம்பாதிக்க முடியாது; சொத்துரிமை கிடையாது; சுயசம்பாதியத்திற்கு வழி இல்லை; சுயமாய் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கிடையாது. ஆக அவளுக்கு என்று எந்தச் சுதந்திரமும் கிடையாது. அவள் ஒரு தனிப் பிரஜையாகவே கருதப்படவில்லை. அவளின் அடையாளம் அப்பா, அண்ணன், கணவன், மகன், என்று ஒரு ஆணின் அடையாளத்தோடே எப்போதும் பிணைக்கப்பட்டிருந்தது... காரணம், பெண்கள் எல்லாம் பலவீனமானவர்கள்; அதனால் அவர்களுக்கு ஒரு ஆணின் பாதுகாப்பு எப்போதுமே அவசியம் என்கிற நம்பிக்கை இருந்து வந்தது.அந்தக் காலத்து ஆண்களும் பெண்களைப் பற்றிப் பெரிதும் யோசிக்கவே இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெண்கள் இப்படி இழி நிலையில் இருப்பது தான் நம் கலாச்சார - பாரம்பரியம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்கள். பால்லிய விவாகம் தான் சரி; அப்போது தான் பெண்ணின் கற்பு 100 சதவீதம் தூய்மையாய் இருக்கும் என்று பாலகங்காதர திலகரைப் போன்ற தேசதலைவர்களும் நினைத்தார்கள். ஆனால், பெரியார் ரொம்பவே வித்தியமான மனிதர். மதமெனும் மாயவலையில் மாட்டிக்கொள்ளாத சுயசிந்தனையாளர் அவர். புதிதாய் யோசிக்கத் தெரிந்த புரட்சியாளர் என்பதனால், ஜாதி, மதம், நிறம், பாலினம், போன்ற மாயைகளை எல்லாம் தாண்டி முதிர்ந்த பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட ஞானி அவர். என்னதான் வைணவச் சடங்குகள் வழிந்த குடும்பத்தை சேர்ந்ததவராய் இருந்தாலும், வாய் கிழிய சர்வம் பிரம்ம மயம் என்று அத்வைதத் தத்துவம் பேசிவிட்டு, அதே வாயால் ஜாதியின் பெயரால் பாரபட்சம் பேசும் பச்சோந்தித்தனத்தை சிறு வயதிலேயே சகித்துக்கொள்ள முடியாதவர் பெரியார்.

ஒரு சராசரி மனிதன் ஆகாயத்தில் பறக்கும் கலனை கற்பனை கூடச் செய்யமுடியாத காலத்திலேயே, ஹெலிகாப்டரை கண்டுபிடித்த லியோனார்டோ டாவின்சியைப் போல, பெரியாரும், தம் காலத்தை மீறி யோசிக்கும் தீர்க்கசிந்தனையாளராக இருந்தார். ஒரு சமூக விஞ்ஞானியாய், தம் சமகாலத்தவர் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாத பல புதுமையான வாழ்க்கை முறைகளை முன்வைத்தார். பெண், இயற்கையிலேயே ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவள் தான் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காலத்திலேயே, பெண் எல்லா விதத்திலும் ஆணுக்குச் சரி நிகர் சமானம் என்று முதன் முதலில் பெண்ணியம் பேசியவரே தந்தை பெரியார் தான். இந்த மகளிர் சமத்துவத்திற்காகப் பல நூதனப் போராடங்களை மேற்கொண்டு, சமூக அமைப்புகளை எதிர்த்துத் தாக்கினார். அவர் காலத்தில் பெண் என்றால், அவள் உடல் அழகு, பிள்ளை பெறும் தன்மை, பணிவு, சமையல் திறன், கற்பு, ஆகியவையே போற்றுதலுக்கு உகந்தவை எனக் கருதப்பட்டன. பெரியார் இந்தப் பட்டியலில் இருந்த எல்லாவற்றையும் சாடினார்.

ஆணுக்குப் பெண் சமம் என்ற பின், பெண் மட்டும் தன் உடலை அழகுப்படுத்திக் காட்டி ஆணின் அங்கீகாரத்திற்குக் காத்திருக்க வேண்டியதில்லையே. எப்படி ஆண்கள் ஒரு காலத்தில் தாங்கள் அணிந்திருந்த கடுக்கன், குண்டலம், ஆகியவற்றைக் கழற்றிவிட்டு, குடுமிகளை வெட்டிக்கொண்டு, திலகம் அணிவதை நிறுத்திக்கொண்டு, இதற்காகச் செலவிட்ட காலத்தை உருப்படியாக உபயோகிக்கிறார்களோ, அது போலவே பெண்களும் ஒப்பனைக்காகச் செலவிடும் நேரத்தைக் கொஞசம் பிரயோஜனமாக பயன்படுத்தினால் மேல். உடை, ஒப்பனை, ஜடை, அலங்காரம் போன்ற வெட்டி வேலைகளில் செலவிடும் நேரத்தைத் தங்கள் அறிவை மேம்படுத்தப் பயன்படுத்தினால் தான் பெண்கள் முன்னேற முடியும் என்றார் பெரியார். அதனால், ஆண்கள் அணிகளைத் துறந்ததைப் போலவே பெண்களும் செய்ய வேண்டும், முழம் முழமாய், புடவையைச் சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக இருக்கிறதா, கொசுவம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிப்பதை விட, பெண்கள் எல்லாம், ஆண்களைப் போல, மேலை நாட்டுப்பெண்களைப் போல, பேண்ட்-சட்டை அணிந்துகொண்டு, முடியை வசதியாக கிராப்பு வெட்டிக்கொண்டு, பொட்டு வைக்கும் வெற்து வழக்கத்தை விடுத்து நிம்மதியாக இருக்கலாமே! என்று அறிவுரை சொன்னார் பெரியார்.

பெரியார் பல வெளி நாடுகளுக்கெல்லாம் போய், அங்குள்ள மனிதர்கள் வாழும் விதத்தைப் பரிசீலனை செய்து பார்த்து, எது முன்னேற்றத்திற்கு உகந்தது என்று சீர்தூக்கிப்பார்த்தவர். வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த பெண்கள் குட்டி முடியும், இலகு உடைகளையும் அணிவதனால், சவுகரியமாக உணர்வதைக் கவனித்த பெரியார், தன் துணைவி நாகம்மையையும் அவ்வாறே உடை அணிய சிபாரிசு செய்தார். 1930களிலேயே பழையன கழித்து, பிரயோஜனமான புதுமைகளை ஸ்வீகரித்துக் கொள்வதில் ஆர்வமுள்ள முற்போக்குச் சிந்தனையுள்ளவர் பெரியார். இது போலவே பிள்ளைப்பேறு பற்றியும், கீழ்படிதலைப் பற்றியும் பெரியார் மாறுபட்ட கருதுக்களை கொண்டிருந்தார். அவர் பெண்களை வெறும் குட்டிபோடும் இயந்திரங்களாகப் பார்க்கவில்லை, அவர்களை அறிவாளிகளாக பார்க்கவிரும்பினார். அதனால், ஆண்களைப் போலவே பெண்களும் நன்றாகப் படிக்கவேண்டும் என்று ஊக்குவித்தார். இது பற்றி பெண் ஏன் அடிமையானாள்? என்கிற அவருடைய புத்தகத்தில், பெண்ணின் அறியாமை தான் அவளை அடிமைபடுத்துகிறது, ஆனால், அறிவு அவளைச் சுதந்திரப்படுத்தும். அதனால், பெண்களை கல்வி பெற்று, பகுத்தறிவோடு வாழ்வேண்டும் என்றார். பெண் என்பவள் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டியவள் என்கிற போன தலமுறை எதிர்பார்ப்பை எல்லாம் ஏளனம் செய்தார் பெரியார். தன்னம்பிக்கை இல்லாத கோழைதான் பெண்ணை அடக்கி தன் வீரத்தைக் காட்டிக்கொள்ள முயல்வான், மற்றபடி நிஜமான வீர ஆண்மகன், பெண்களிடம் கரிசனத்தோடு தான் நடந்து கொள்வான் என்றார்.


பெண்கள் சமையல் அறையிலேயே முடங்கிக் கிடப்பதைப் பற்றியும் பெரியாரிடம் எதிர்ப்பு இருந்தது. பெண்கள் அடுப்பூதிக்கொண்டு, சதா சமையலே கதி என்று இருப்பதனால்தான் அவர்களது அறிவை உபயோகமாகப் பயன்படுத்த முடியாமல் போகிறது. அப்படி இல்லாமல், உணவுக்காக என்று தனி மையங்கள் அமைத்து, அங்கிருந்தே எல்லோருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்துவிட்டால், சமையல் எனும் செக்கிலிருந்து விடுபட்டு, பெண்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்குமே என்று யோசனை தந்தார் தந்தை பெரியார்.
தமிழ்ப் பெண்களின் உச்சக்கட்ட உணர்வான கற்பைப் பற்றியும் பெரியார் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தார். கற்பு நெறி என்பதெல்லாம், பெண்களை காலாகாலத்திற்கும் ஆணின் அடிமைகளாக்கும் பெரிய சதி. இந்தக் குறுகிய வட்டத்தை விட்டு பெண்கள் வெளியேறி சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்றார் பெரியார். இதற்காக சுயமரியாதைத் திருமணங்களைத் தோற்றுவித்தார். சாதாரணத் திருமணங்களில், பெண் வெறும் ஒரு பொருள் மாதிரி தகப்பனால் கன்னிகாதானம் செய்து தரப்பட்டு, கணவனிடம் ஒப்படைக்கப்படுவாள். ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலை வந்த பிறகு, பெண்ணைத் தொடர்ந்து ஏன் ஒரு பொருளாகவே நடத்தவேண்டும்? தனக்குப் பிடித்த துணைவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்க வேண்டுமே. அத்தோடு, அவளைத் தானமாக தருவதெல்லாம், பெண்ணை அவமானப்படுத்தும் செயல் என்பதால், ஆணும் பெண்ணும் சரி நிகராய் சம உரிமையுடன் ஒருவரை மற்றவர் இல்வாழ்க்கைத் துணையாய் ஒப்பந்தம் செய்து-கொள்ளும் ஒரு கவுரவமான, கண்ணியமான, நவீன திருமணத்தை அறிமுகப்படுத்தினார் பெரியார். இந்த முறையில் ஆணும் பெண்ணும் தங்கள் சுய கவுரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்ததால், இது சுயமரியாதைத் திருமணம் என்று பிரபலமானது. ஒன்றும் புரியாத, எப்படியும் பின் பற்றாத வேதங்களை எல்லாம் ஓதிக்கொண்டிருக்காமல், சுயமரியாதை முறையில் சமகாலமொழியில், எல்லோருக்கும் புரியும் விதத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டு இல்வாழ்க்கையில் இணைந்-தவர்கள் பலர். இன்று வரை தமிழ்ப் படங்கள் எல்லாம் தாலி செண்டிமெண்டைப் பற்றி ஆஹா-ஓஹோ என்று பிதற்றிக்கொண்டிருக்க, அன்றே பெரியார்: கால் நடைகளுக்குத் தான் ஓடிவிடக்கூடாதென்று ஒரு மூக்கனாங்கயிறு கட்டுவார்கள், பெண் என்ன விலங்கா? அவளுக்கு எதற்கு ஒரு கழுத்துக் கயிறு என்றார். அப்படியே கயிர் கட்டித்தான் ஆகவேண்டும் என்றால், ஆணும் பெண்ணும் சமம் ஆகிவிட்ட காரணத்தினால், பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவதைப் போல, ஆணுக்கும் பெண் தாலி கட்டலாம், அல்லது, இருவருமே, தாலி கட்டும் அபத்தச் சடங்கைக் கைவிடலாம், என்றார்.

தாலி இன்றி, வேத மந்திரங்கள் இன்றி, திருமணம் செய்தால் அமங்கலம் ஆகிவிடுமோ என்று பயந்தவர்க்கெல்லாம் சீதையையும், தமயந்தியையும், பாஞ்சாலியையும் உதாரணமாய்க் காட்டினார் பெரியார். இந்தப் பெண்கள் எல்லாம் சாஸ்திரச் சம்பிரதாயப்படி மணம் முடித்தவர்கள் தாம். ஆனால், அவர்கள் திருமணம் செழித்துவிடவில்லையே!. இந்தச் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப் படி செல்லுபடியாகுமா என்ற சிக்கலும் இருந்தது. ஆனால், அறிஞர் அண்ணா தமிழ்நாடு முதல் அமைச்சரானதும் முதல் வேலையாக இந்தச் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிவிட்டதால், பெரியாரின் இந்த நவீனத் திருமணம் மிகப் பிரபலம் ஆனது. அறிவாளிகள் மத்தியில் இந்தத் திருமணம் அமோக வரவேற்பைப் பெற ஒரு புதிய சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது.


இத்தகைய சுயமரியாதைத் திருமணத்திற்குப் பிறகும், ஒரு பெண்ணுக்கு தன் கணவனைப் பிடிக்கவில்லை என்றால், வெறுமனே கல்லானாலும் கணவன் என்ற வெற்று செண்டிமெண்ட் பார்த்து தன் வாழ்வை வீணடித்துக்கொள்ளாமல், அந்த விவாகத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை பெண்களுக்கு இருக்க-வேண்டும் என்று பெரிதும் போராடினார் பெரியார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமையோ, மறுமணம் புரியும் உரிமையோ இல்லை. இதை எதிர்த்து பெரியார் பல காலம் பிரச்சாரம் செய்து, அந்த உரிமைகளையும் பெண்களுக்காகப் பெற்றுக்கொடுத்தார். அதுவும் தவிர கணவன், மனைவி என்ற சொற்களை பெரிதும் சாடினார் பெரியார். இருவரும் சரிசமம் என்ற பின், பெண்ணை மட்டும் மனையோடு கிடப்பவள் என்று அர்த்தப்படுகிற சொல்லால் அழைப்பதை அவர் விரும்பவில்லை. அதனால் தம்பதியினர் இருவருக்கும் பொதுவான விளிச்சொல்லாய், துணைவர், இணையர் என்ற சம நிலை அர்த்தப்படுகிற பதங்களைப் பயன்படுத்த ஊக்குவித்தார். இதே போல எல்லாத் துறைகளிலும் மகளிர்க்காக அயராது உழைத்தார் பெரியார். சம உரிமை, சம வாய்ப்பு, சம கல்வி, சம ஊதியம், சம சொத்துரிமை என்பவை மட்டும் இன்றி, விபச்சார ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களின் துஷ்பிரயோக ஒழிப்பு என்று பலப் பல சமுதாய மாறுதல்களை ஏற்படுத்தினார்.

அவரது சிந்தனைத் தெளியும், தர்க்கத் திறனும், எல்லாருடைய கண்களையும் திறந்து, மனதையும் விசாலமாக்க, படித்தவர்கள், புத்திசாலிகள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றார் பெரியார். அவரது கருத்துக்களைப் பல மேதாவிகள் பின்பற்ற ஆரம்பிக்க, படிப் படியாக, அதுவே நாகரிகத்தின் உச்சக்கட்ட வெளிபாடானது. பெண்களைக் கண்ணியமாய் நடத்துவதே நாகரிமானது.

பெரியாரின் நிழலில் பெண்கள் எல்லாம் புதுத் தெம்பும் தெளிவும் பெற்று, தங்கள் சுயமரியாதையை உணர்ந்துகொண்டு விழிப்-புற்றார்கள். பெரியாரும், பெண்களை ஊக்குவிக்கும் விதமாய், இந்தியாவிலேயே முதல் முறையாய், பெண்களின் மாநாடுகளை கூட்டினார். இப்படி 1938 ஆம் ஆண்டு அவர் கூட்டிய மாநாட்டில் தான், பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தங்களின் முன்னேற்றத்-திற்காகப் பெரிதும் பாடுபட்ட அவருக்குப் பெரியார் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினர். அன்று முதல் ஈ.வெ.ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக மாறினார். இதே மனிதர் தான் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, கடவுள் நிராகரிப்பு என்று பலப் பல சமூகச் சீர்திருத்தங்களைச் செய்திருந்தார். ஆனால், மகளிர் நலனுக்காக அவர் ஆற்றிய சேவை தான், வெறும் ராமசாமியாக இருந்தவரை தந்தை பெரியார் என்கிற மாமனிதன் ஆக்கியது. பெரியாரும், தான் இந்தப் பெயருக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை நிறுவித்தார். அவர் தோற்றுவித்த திராவிடர் கழகம் என்கிற சமூக நல அமைப்பை தன் துணைவி திருமதி மணியம்மையிடம் விட்டுச்சென்றார். அது வரை எந்தத் தலைவரும் தன் நிறுவனத்தின் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைத்தாகச் சரித்திரமே இல்லை. ஒரு வேளை பெண்களால் பெரிய பொறுப்பு வகிக்கமுடியுமா என்று மற்றவர்கள் சந்தேகப்பட்டார்களோ என்னவோ? ஆனால், பெரியாருக்கு பெண்ணின் திறன் மீது எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி, பெரியாரின் பெண்ணியக் கருத்துக்களை அமல்படுத்தும் விதமாகவே, இந்தியாவின் முதல் - முற்றிலும் பெண்களுக்கான பொறியியல் கல்லூரி, தஞ்சை அருகே உள்ள வல்லம் எனும் ஊரில் கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கெல்லாம் சீருடையே பேண்ட்-சட்டை தான். யோசித்துப் பாருங்களேன், இன்று வரை தமிழ்க் கலாசாரத்தின் பெயரால், பெண்கள் கல்லூரிகளுக்கு பேண்ட்-சட்டை போட்டுக்கொண்டே வரக்கூடாது என்று மெத்தப்படித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் எல்லாம் கறார் ஒடுக்குமுறை செய்வதைப் பார்த்தால் உடனே புரிகிறது, பெரியார், உண்மையிலேயே தன் காலத்தை மிஞ்சிய மாபெரும் முற்போக்குச் சிந்தனையாளர் தான். இந்தப் பெரிய மனிதருக்கு இன்றைய எல்லாப் பெண்களும் நன்றி சொல்லக்கடமைப் பட்டுள்ளோம், இன்று நாம் இந்த உயரத்தில் இருக்கக் காரணமே அவர் தான். பெண்களை அடக்குமுறைப் படுத்த முயலும் சாமானிய ஆண்களுக்கு மத்தியில் பெண்களின் மேம்பாட்டிற்காகப் போராடினாரே, அவர் தாம் பெரியார்! எப்பேர்ப்பட்ட பெரியார்!


--------- டாக்டர் ஷாலினி - மனநல மருத்துவர் - (மார்ச் 2008-The Ritz இதழில் வெளிவந்த "The male Feminist" கட்டுரையின் தமிழ் வடிவம்)

----- நன்றி: "உண்மை" மே 16-31

0 comments: