Search This Blog

17.5.08

மதம் வாழ்க்கைக்கு உதவுமா?

கடவுளைப் போலவே நமது மதங்களும் இருந்து வருகின்றன.

ஒரு மதத்துக்கு மேற்பட்ட மதங்கள் இருக்கின்றன என்றால், “அவைகள் இருக்க வேண்டியதுதான்” என்றால், அப்படிப்பட்டவர்கள் ஒரு கடவுகளுக்கு மேற்பட்ட கடவுள்-களையும் ஒப்புக்கொண்டோ, அனுமதித்தோதான் ஆகவேண்டும்.

வேண்டுமென்றால், ஒரு மதத்தைப் பார்த்து மற்ற மதக்காரன், “உன்னுடைய மதம் மதமல்ல; என்னுடைய மதம்தான் உண்மையான மதம்; கடவுளால் அனுப்பப்பட்ட அல்லது சொல்லப்பட்ட மதம்” என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஒரு மதக்காரனின் கடவுள் போலவேதான் மற்ற மதக்காரனின் கடவுளும் இருக்க-வேண்டும் என்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது?

அவற்றிற்கு ஏதாவது பரீட்சைக் கருவி உண்டா?

ஒருவனுடைய கடவுளின் குணம் போலவே மற்றவனுடைய கடவுளும் இருக்கவேண்டும் என்பதற்கு என்ன அவசியம்? அதற்கு ஏதாவது நிபந்தனை உண்டா? ஒரு கடவுளை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உரிமை இருந்தால் பல கடவுள்களை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உள்ள உரிமையை யார் தடுக்கமுடியும்? யாருக்கு அதிகாரம் யார் கொடுத்திருக்கிறார்கள்?
ஆதலால், ஒரு கடவுள் மதக்காரனே மகா உத்தமமானவன் என்றும் பல கடவுள் மதக்காரன் மோசமானவன் என்றும் சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

நாம் இங்கு மதத்தைப் பற்றி கவனிக்க வேண்டியதெல்லாம், எந்த மதமாவது மக்கள் எல்லோரையும் இன்பமாய், செழுமையாய், சமத்துவமாய் வாழ வைத்திருக்கிறதா? வாழவைக்க முடிந்ததா? என்பதுவேயாகும்.

உலகிலுள்ள எந்த மதத்தை அனுசரிக்கின்ற மக்களுக்குள்ளும், எந்த மதத்தை அனுசரிக்கிற தேசத்திற்குள்ளும் ஏழை - பணக்காரன், எஜமான் - அடிமை, உழைப்பாளி - உழைப்பின் பயனை அனுபவிக்கிறவன், பிரபு - பிச்சைக்-காரன், வித்துவான் - முட்டாள், படித்தவன்- தற்குறி, மெத்தை வீட்டில் இருப்பவன்- ஓட்டைக் குடிசைக்கூட இல்லாதவன், சுகாதார வசதி உள்ளவன் - சுகாதார வசதியில்லாதவன், மேல் மகன் - கீழ் மகன், உழைக்காமல் சாப்பிடு-பவன் - உழைத்தும் பட்டினி கிடப்பவன், அளவுக்கு மிஞ்சி வேலை செய்து சம்பாதித்துப் பணம் மீத்து வைப்பவன் - வேலையே இல்லாமல் திண்டாடுகின்றவன் - என்பது போன்ற வித்தியாசங்கள் இல்லை என்று யாராவது சொல்லக்கூடுமா? அல்லது கடவுள் சித்தம் கர்மவினை என்றால் என்ன? அல்லது கடவுள் சித்தம் என்றால் என்ன? கஷ்டம் வித்தியாசம் எல்லாம் ஒன்று போல்தானே இருக்கின்றது?

ஒரு மதத்தில், “ஆண்டிக்கும் அரசனுக்கும் வித்தியாசம் இல்லை” என்று சொல்லப்-படுமானால், மற்றொரு மதத்தில் “கழுதைக்கும் மகான்களுக்கும் வித்தியாசம் இல்லை. எல்லா உள்ளத்திலும் நானே ஆத்மாவாய் இருக்கிறேன்” என்று கடவுளே சொன்னதாக அவர்கள் வேதங்கள், வேதாந்தங்கள் சொல்லுகின்றன.

இப்படிப்பட்ட சிங்காரப் பேச்சுக்களால் பயன் என்ன?

இவற்றால் எல்லாம் மக்களை மக்கள் ஏமாற்றத்தான் முடியுமே ஒழிய ஒருவேளைக் கஞ்சிக்குப் போடவேண்டிய உப்பு மண்ணுக்குக்கூட உதவாது என்றுதான் சொல்லுவேன்.
நான் அநேக தேசம் பார்த்து இருக்கிறேன்; பல மத மக்களையும் சந்தித்திருக்கின்றேன்; எங்கும் பசிக் கொடுமை, பிச்சைக்காரர் தொல்லை, பணக்காரர்கள் கொள்ளை, ஆண்-பெண் பேதம், மனிதனுக்கு மனிதன் கொடுமை, வேலையில்லாத திண்டாட்டம் முதலிய காரியங்கள் இருந்துதான் வருகின்றன.

இதற்கு எந்த மதமானாலென்ன? பட்டினி கிடப்பவனும், பட்டினி ஆக்குபவனும் இந்து மதத்தின்பேரால் இருந்தாலென்ன? கிறிஸ்தவ மதத்தின் பேரால் இருந்தால் என்ன? இஸ்லாம் மதத்தின் பேரால் இருந்தால் என்ன? பார்சி மதத்தின் பேரால் இருந்தால் என்ன? சீக்கிய மதத்தின் பேரால் இருந்தால் என்ன? ஆரிய சமாஜ்யத்தின் பேரால் இருந்தால் என்ன? பிரம்மசமாஜ் மதத்தின் பேரால் இருந்தால் என்ன? அல்லது சைவ, வைணவ, ஸ்மார்த்த - முதலிய எந்தப் பிரிவு மதங்களின் பேரால் இருந்தால் என்ன? எல்லாம் மக்கள் வாழ்க்கை நிலையை ஒன்றுபோல் தானே நடத்துகின்றன?

இந்து மதமானது ஏழ்மைக்கும் கொடுமைக்கும், “அவனவனின் முன்ஜென்ம கர்மத்-தின் பயன்” என்றால், மற்ற மதங்கள் “கடவுள் சித்தத்தின் பயன்” என்றுதான் சொல்லுகின்றனவே ஒழிய, அதை நான் தீர்த்து விடுகின்றேன், என்னிடத்தில் ஏழை - பணக்காரர் என்கின்ற பிரிவு இல்லை என்று எந்த மதமும் சொல்லுவதே கிடையாது. வேண்டுமானால் ஒவ்வொரு சிறு காரியங்களுக்கு ஒவ்வொரு மதம் அனுகூலமாக இருக்கலாம்.

ஒரு மதத்தில் தீண்டாமை இருந்தால் மற்றொரு மதத்தில் பாராமை இருக்கலாம். இப்படி ஒவ்வொரு காரியத்துக்கு ஒவ்வொன்று அனுகூலமானதாக இருக்கலாம். ஆனால், இன்று உலகம் பூராவும் இருந்துவரும் பொருளாதார பேதம், சமூகக் கொடுமை முதலியவைகளுக்கு மதங்கள்தான் அனுகூலமாயும், ஆதரவாயும் இருந்துவருகின்றன என்பதை நான் உணர்கிறேன்.

மதத்தோடு சம்பந்தப்படாத ஏழ்மையும் தரித்திரமும் கொடுமையும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. எல்லா மதமும் சகல காரியத்தையும் ஆண்டவன் செயல் என்றுதான் சொல்லுகின்றன.

ஆனால், தனக்கு இஷ்டமில்லாத காரியங்களை மாத்திரம் அந்தக் குறிப்பிட்ட மனிதன் செயல் என்று சொல்லி ஆத்திரப்படுகின்றன.

இப்படிப்பட்ட குளறுபடியான மதங்கள் மக்களுக்கு என்ன பயனைத் தரும்? இதுவரை-யாவது என்ன பயனைத் தந்து வந்தது? ஆதலால்தான், சமதர்மத்துக்கு மதம் விரோதம் என்று சொல்ல வேண்டி வருகின்றது.

மற்றும், தோழர் ஜீவானந்தம் அவர்கள், செல்வவான் என்கின்ற தன்மையும் ஒழிந்தால் தான் பொருளாதாரக் கஷ்டம் ஒழியும் என்றார். நான் அதுவும் சரியென்றே சொல்லு-வேன்.
செல்வவான்களின் செல்வங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பதையும், அது எப்படி செலவழிக்கப்படுகின்றது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

எவ்வளவு ஏழை உழைப்பாளி மக்களின் உழைப்பின் பயனை கொள்ளை கொண்டால் ஒருவன் செல்வவானாக முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட பணம் அனாவசியமான கட்டடங்களுக்கும், கல்லுருவங்களுக்கும், கோட்டைகள் கட்டுவதற்கும், உலோக உருவங்களுக்கும், கல்யாணம், உற்சவம், தேர், திருவிழா செய்வதற்கும், சோம்பேறிகளுக்குச் சோறுபோட்டு தடிராமன்கள் ஆக்குவதற்கும், பால், நெய், எண்ணெய் குடம் குடமாகக் கல்லிலும் நெருப்-பிலும் கொட்டுவதற்கும் வீணாக்கப்படுகின்றனவா இல்லையா?

மற்றொரு புறத்தில், கல்யாணம், கருமாதி, பிறந்த நாள், புதுமை, 60-ஆம் கல்யாணம், திவசம், பண்டிகை முதலிய காரியங்களுக்கு பாழாக்கப்படுகின்றனவா - இல்லையா?
மற்றொரு புறத்தில், தாசிகள், வேசிகள், சாராய வகைகள், சூதாட்ட வகைகள், மோட்டார் கார்கள் - என்பன போன்ற காரியங்-களுக்குப் பாழக்கப்படுகின்றனவா - இல்லையா?
செல்வங்களை இந்தப்படி பாழாக்கும் செல்வவான்கள் ஒழிக்கப்பட வேண்டுமா - வேண்டாமா?

------------- 6-8-1935 அன்று குற்றாலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. “குடிஅரசு”, 11.8.1935

0 comments: