Search This Blog

4.5.08

ஜாதி ஒழிப்புக்கான முக்கியப் பிரகடனம்!

தந்தை பெரியார் அவர்களின் கொள்கை - அதாவது திராவிடர் கழகத்தின் கொள்கை என்பது ஜாதியை முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதாகும்.

இந்தப் போராட்டத்தில் திராவிடர் கழகம் பல காலக் கட்டங்களிலும் பல வடிவங்களில் போராடி வந்திருக்கிறது.

உணவு விடுதிகளில் "பிராமணாள் போர்டு" அழிப்பு - இராமாயண எதிர்ப்பு, மனுதர்மம் எரிப்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவு எரிப்புப் போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து திராவிடர் கழகம் நடத்தி வந்துள்ளது. ஜாதி ஒழிப்பு மாநாடுகளையும், இடைவிடாத பிரச்சாரங்களையும் செய்து வருகிறது.

ஜாதி ஒழிப்பில் மிக முக்கிய கரு - கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் கோயிலில் அர்ச்சகர் உரிமை ஈட்டுவதற்கான போராட்டத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிக் கொடுத்தார்கள். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சையும் துறந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் காலத்திலும் சரி, அதனைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, இதற்காகப் பல வடிவங்களிலும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும்கூட, திராவிடர் கழகத்தின் ஆதரவுக்கு இந்தப் பிரச்சினையை நிபந்தனையாக வைத்த நேரத்தில், தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள், திராவிடர் கழகத்தின் நிபந்தனையை ஏற்று, திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், அதனை ஏற்றுக்கொண்டதோடு, ஆட்சிக்கு வந்த நிலையில், அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானத்தை ஒருமன தாக நிறைவேற்றி அதன்பின் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. (G.O. (MS) No.118 Tamil Development Culture and Religious Endownments (RE 4-2) 23rd May 2006).
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல முக்கிய கோயில்களில் 69 விழுக்காடு அடிப்படையில் அர்ச்சகர்ப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் முக்கிய கோயில்களில் எல்லாம் தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராகும் புரட்சிகரமான மாறுதல் உருவாக இருக்கிறது.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், சமுதாய அமைப்பில் இது ஒரு மாபெரும் திருப்புமுனை; அழிக்க முடியாத வரலாற்றுக் கல்வெட்டாகும்.

ஜாதி ஒழிப்புத் திசையில் அடுத்தகட்டமாக பல முக்கிய தீர்வுகள் காணப்பட வேண்டியுள்ளன.

(அ) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு இருக்கிறதே தவிர, ஜாதி ஒழிப்புக்கு இடம் இல்லாத வகையில் இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் "ஜாதி" (Caste) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1973 டிசம்பர் 8, 9 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பட்ட "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்" கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"சாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்படவேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்படவேண்டும்; சாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்யவேண்டும்; இதனை வெறும் மன மாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைபிடித்தாலும் அது சட்ட விரோதம்" என்று அரசியல் சட்டத்தின் 17 ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள "தீண்டாமை" (“Untouchability”) என்பதற்குப் பதிலாக, "சாதி" (“Caste”) என்ற சொல்லை மாற்றி, சாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண் டும் என்று 1973 இல் டிசம்பரில் நடைபெற்ற அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்த வைக்க திராவிடர் கழகம் தொடர்ந்து பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

(ஆ) கிராமப்புறங்களில் குறிப்பாக தேநீர்க் கடைகளில் இன்னும் இரட்டை தம்ளர் முறை இருப்பது மனிதத் தன்மைக்கும், அரசின் சட்டத் திற்கும் பெரும் சவாலும் அவமானகரமானதுமாகும். மிகக் கடுமையான முறையில் இரும்புக்கரம் கொண்டு இந்த முறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது.

(இ) ஜாதி ஒழிப்பு இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதிப் பட்டம் கொடுக்காமல், அவர்களுக்குப் பல்வேறு தனிச் சலுகைகளும், குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பிலும் அளிக்க ஆவன செய்யுமாறு மாநில, மத்திய அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இட ஒதுக்கீடு பெறும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரைக் குறிப்பிடும்பொழுது அவர்களின் தனிப்பட்ட ஜாதியைக் குறிப்பிடாமல், S.C., S.T., B.C., M.B.C.என்கிற முறையில் குறிப்பிடலாம் என்று இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

(ஈ) திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருபால் இளைஞர்களும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வதையே முதன்மை நோக்கமாகவும், செயலாகவும் கொள்ளுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

(உ) இட ஒதுக்கீட்டினால் ஜாதி உணர்வு வளரும் என்ற பிரச்சாரம் இட ஒதுக்கீட்டை எதிர்ப்போர் தொடக்க முதலே சொல்லி வரும் புரட்டுப் பிரச்சாரமாகும்.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்று வளர்ந்து வருவோரிடையே ஜாதி மறுப்புத் திருமணங்கள்தான் பெருகி வருகின்றன என்பதை திராவிடர் கழகப் பொதுக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

(ஊ) ஜாதியின் மிச்ச சொச்சங்களை ஆணி வேர், சல்லி வேர், பக்க வேர் உள்பட அழித்திடும் பணியில் போர்க்கால அடிப்படையில் திராவிடர் கழகம் ஈடுபடுவதை முதன்மையாகக் கருதி, அதற்காகப் பிரச்சாரம், போராட்டம், நிபந்தனை என்கிற முறையில் - எந்த விலையும் கொடுத்து, அர்ப்பணிப்புத் தன்மையுடன் முழு மூச்சில் வீச்சில் பாடுபடுவது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு கட்டளைத் தீர்மானமாக நிறைவேற்றிப் பிரகடனப்படுத்துகிறது.

(எ) ஜாதியை மய்யமாகக் கொண்டு அரசியல் கட்சிகளைத் தொடங்கும் - நடத்தும் அமைப்புகளை அடையாளம் கண்டு நிராகரிக்கு மாறு தமிழினப் பெருமக்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. ஜாதி உணர்வு - தமிழின உணர்வை அழித்துவிடும் என்பதால், ஜாதி உணர்வுக்கு இடம் கொடுக்கவேண்டாம் என்று தமிழர்களை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

(ஏ) முதற்கட்டமாக நாடு தழுவிய அளவில் ஜாதி ஒழிப்பு விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இதற்காகப் போராட இளைஞர் களைத் தயார்படுத்தும் தன்மையிலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங் களையும், ஜாதி ஒழிப்பு மாநாடுகளையும் திட்டமிட்ட வகையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

-----------3-5-2008 இல் நடந்த திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களிலிருந்து

0 comments: