Search This Blog

12.5.08

உத்தப்புரம் “உயர்” ஜாதியினர் சிந்தனைக்கு!

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் நடந்துவரும் நிகழ்வுகள் இந்த 2008-லும் இந்த மனப்பான்மையா என்ற வினாவை எழுப்பு கிறது. அப்பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினரிடையே ஏற்பட்ட பகைமையின் காரணமாக, சச்சரவுகள் காரணமாக, தாழ்த்தப்பட்டோர் தங்கள் பகுதிக்கு வராமல் தடுப்பதற்கென்றே பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 10 மீட்டர் உயரம், 400 மீட்டர் நீளத்தில் ஊருக்கு நடுவே தடுப்புச் சுவர் எழுப்பியிருந்தனர்.

எந்தக் காரணத்துக்காக இது எழுப்பப்பட்டு இருந்தாலும், இது பச்சையான தீண்டாமைக் கடைப்பிடிப்பின் நினைவுச் சின்னம்தான் என்பதில் அய்யமில்லை.

இந்தச் சுவர் அகற்றப்படவேண்டும் என்று தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் எண்ணியதில் எள்ளளவும் குற்றமில்லை. ஏதோ ஒரு கோபத்தில் அதனைச் செய்திருந்தாலும், அதன் பிறகாவது சுவரைக் கட்டியவர்களே அதை இடித்துத் தள்ளியிருக்கவேண்டும். நீண்ட காலம் அந்தச் சுவர் அப்படியே இருந்தது கூட ஆச்சரியமானதுதான்.

நீண்ட இடைவெளி விட்டே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தலையிட்டு நீண்ட சுவரின் இடையில் 15 அடி நீளத்தில் பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியரே முன்னின்று இதனைச் செய்திருக்கிறார். இடிப்பதற்குமுன் சம்பந்தப்பட்டவர்களிடம் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தையை மாவட்ட ஆட்சியர் நடத்தியும், அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்காததால், வேறு வழியின்றி ஒரு பகுதி சுவரை இடித்து வழி திறக்கப்பட்டது. இதன்மூலம் ஒரு அவமானச் சின்னம் அகற்றப்பட்டதற்காக இரு தரப்பினரும் வரவேற்கவேண்டும். முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தக்க நடவடிக்கையை பெரும்பாலோர் வரவேற்று இருக்கின்றனர்.

சுவர் முழுவதுமே இடிக்கப்படுவதுதான் நியாயம் என்றாலும், சூழ்நிலை சூடாகாமல் தடுக்க ஒரு இதமான அணுகுமுறையை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். எப்படியோ ஒரு சுமூகச் சூழலை ஏற்படுத்த அரசே மேற்கொண்ட இந்த முயற்சியை முந்திக்கொண்டு பிள்ளைமார் சமூகத்தார் வரவேற்று இருந்தால், பழைய வெறுப்பு மறைந்து பெருமை வந்து சேர்ந்திருக்கும். அதற்கு மாறாக ஊரையே காலி செய்துவிட்டு மலையடிவாரத்தில் போய்த் தங்குவதும், குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலை வரிடத்தில் சரண் செய்தலும் எந்த வகையிலும் விரும்பத்தக்கதல்ல.

ஜாதீய உணர்வின் பிடியிலிருந்து அவர்கள் விடுபடவில்லை என்கிற பழிதான் அவர்களை வந்தடையும். வட்டாட்சியரிடம் பேசமாட்டோம் என்பதும், மாவட்ட ஆட்சியரிடம்தான் பேசுவோம் என்று கூறுவதோடு அல்லாமல், இதுதான் சந்தர்ப்பம் என்று பல நிபந்தனைகளை வைப்பதும் எந்த வகையிலும் நியாயமல்ல.

மாவட்ட ஆட்சியரே நேரில் சென்றும், தீர்வுக்கு ஒத்துழைக் காதது விவேகமானதல்ல.
பிள்ளைமார் சமூகத்தில் படித்தவர்கள் இருக்கக் கூடும். அதிகாரிகள் இருக்கக்கூடும்; முற்போக்குச் சிந்தனையாளர்கள் அறவே இல்லை என்றும் கருத முடியாது. அத்தகையவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் தங்கள் கடமையினைச் செய்ய முன்வரவேண்டும். இந்த நேரத்தில் அவர்கள் இதனைச் செய்ய முன்வராவிட்டால், என்றென்றைக்கும் குற்ற உணர்வை சுமந்து திரிபவர்களாக ஆகிவிடு வார்கள்.

குற்றமோ தீண்டாமை அனுசரிப்பது சம்பந்தப்பட்டது - இதில் நிபந்தனைகளைக் கொண்டுபோய்த் திணித்தால், அதைவிட மிக மோசமானதாகும். சட்டத்தை அமல்படுத்தவேண்டிய அவசியத்தை அரசுக்கு அவர்கள் உருவாக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம். சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் முதலமைச்சரின் நடவடிக்கையை வரவேற்றுள்ள நிலையில், அதற்கு மாறாக பிள்ளைமார்கள் நடந்துகொண்டால் அனைத்துக் கட்சிகளின் ஆதர வினையும் அறவே இழந்துவிடக் கூடிய ஆபத்தும் ஏற்பட்டுவிடும்.
பழியைப் போக்கிக் கொள்வதற்கும், இரு தரப்பிலும் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஏற்பாட்டின்மூலம் இருதரப்பு மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கும் கிடைத்திட்ட இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தன மானதாகும்.

அரசாங்கத்தின் நல்லெண்ணத்தைப் பலகீனமாகக் கருதினால், அதன் விளைவு, கேடாகத்தான் முடியும். எப்படி நடந்துகொள் கிறார்கள் என்பதைப் பொறுமையாகவே எதிர்பார்ப்போம்.


----------- "விடுதலை" தலையங்கம் 09-05-2008

0 comments: