கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது.கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும் இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும், ஆனவையும் தானேயொழிய கடவுளால் ஆவது, ஆனது என்பதாக எதுவுமே இல்லை. மழை ஏன் வருகிறது? வெள்ளம் ஏன் வருகிறது? இடி ஏன் இடிக்கிறது? காற்று, புயல் ஏன் அடிக்கிறது? பூகம்பம் ஏன் ஏற்படுகிறது? எரிமலை ஏன் எரிந்து நெருப்புக்கூழ் வழிகிறது? திடீரென்று ஏன் மலைகள் தோன்றுகின்றன? திடீரென்று ஏன் தீவுகள் தோன்றுகின்றன? கப்பல் ஏன் கவிழுகிறது? ஆகாயக் கப்பல் ஏன் ஓடாமல் கீழே விழுந்து நாசமாகிறது? இரயில்கள் ஏன் கவிழ்கின்றன? பஸ்கள் ஏன் மோதிக் கொள்கின்றன? பிரயாணம் செய்யும் வாகனங்கள் ஏன் அபாயத்திற்குள்ளாகின்றன? அதனால் ஏன் மக்கள் சாகின்றார்கள்? கொடிய விஷ நோய்கள் ஏன் ஏற்படுகின்றன? மக்கள் ஏன் 100 வயதுக்குமுன் சாகிறார்கள்? மக்கள் ஏன் பிறக்கிறார்கள்?
நம் நாட்டில் மக்கள் 60, 70, 75 வயது ஏன் வாழ்கிறார்கள்? ஒரு நாட்டில் மக்கள் 23 ஆண்டு 32 ஆண்டு 47 ஆண்டு ஏன் வாழ்கிறார்கள்? ஒரு காலத்தில் 23 ஆண்டு வாழ்ந்த மக்கள் மற்றொரு காலத்தில் 50 ஆண்டு ஏன் வாழ்கிறார்கள்? நாட்டு வைத்தியம் உள்ள காலத்தில் அதாவது ஆங்கில (இங்கிலீஷ்) வைத்தியம் இல்லாத காலத்தில் சராசரி 15 வயது வீதம் வாழ்ந்த மக்கள் ஆங்கில மேல்நாட்டு வைத்தியம் ஏற்பட்ட பிறகு மனிதர்கள் சராசரி 70 வயது 75 வயது எப்படி வாழ்கிறார்கள்? கடவுள் நம்பிக்கை, பிரார்த்தனை, சாந்தி, மந்திரம், நீர் மந்திரித்தல், விபூதி மந்திரித்தல், அர்ச்சனை முதலியவற்றில் மாத்திரமே நம்பிக்கை இருந்த காலத்தில் - கி.பி. முதல் நூற்றாண்டில் - சராசரி 10 வயதே வாழ்ந்து வந்த மனிதன் இன்று அவற்றையே நம்பாமல் மேல்நாட்டு வைத்தியம் செய்து கொள்ளுபவன் 75 வயது வரை எப்படி வாழ்கிறான்? பிள்ளை பெறும் வாய் சின்னதாக இருப்பதாலும், வயிற்றில் உள்ள குழந்தைகள் குறுக்கே வளர்ந்து விட்டதாலும், பிறப்பு தடைப்பட்டு செத்துப் போன தாயும், பிள்ளையும் அதிகமிருந்தது. ஆனால், தற்போது பிள்ளை பெறும் துவாரத்தைக் கிழித்துப் பெரிதாக்கியும் வயிற்றைக் கிழித்தும் எடுத்த பிள்ளைகள் உயிரோடு பிறந்து நன்றாய் எப்படி வளர்கிறது? இவற்றிற்கெல்லாம் விஞ்ஞான முறையில் (அறிவு சிந்தனை முறையில்) காரணங்கள் இருக்கின்றனவா, இல்லையா?இந்த விவரங்களை சரிவர அறியாத மக்கள்தானே கடவுள் இருக்கிறது என்று கருதுகிறார்கள்! கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளுக்கு என்று என்ன வேலை கொடுக்கிறார்கள்? எல்லா மக்களும் தங்களுக்கு மறைக்கப்பட வேண்டிய அவயம் (உறுப்பு) இருக்கிறது என்று அறிந்தே ஆடை அணிந்து மறைத்துக் கொண்டு நடக்கிறார்களே, அது போலவே கடவுள் இல்லை, கடவுளால் தங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை, எதுவும் இல்லை என்று அறிந்தும்கூட பழக்கம் காரணமாக நம்புவதாகக் காட்டிக் கொண்டு எல்லாக் காரியத்தையும் தானே செய்து கொள்ள வேண்டியது என்று உறுதியாய்க் கருதியே நடந்து கொள்கிறார்கள். இதன் பயனாய் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறான்.
கடவுளுக்கு உருவம் கற்பித்தவனும், கடவுளை மனிதன் போலச் சிருஷ்டித்தவனும், கடவுளுக்கு பிறப்பு, இறப்பு, மனிதன் போன்ற குணம், பெண்டு, பிள்ளை, சோறு, துணி, வசிக்க வீடு என்று கற்பித்தவன் எவனும் தன்னைக் கடவுள் நம்பிக்கைகாரன் என்றுதான் நினைத்துக் கொள்கிறானேயொழிய, இவை கடவுள் நம்பிக்கைக்கு மாறான செய்கையென்று அவன் கருதுவதில்லை. தனக்கோ தன் பிள்ளைகுட்டி, தாய் தந்தைக்கோ சிறுநோய் வந்தாலும் உடனே டாக்டரை அணுகுகிறவன் எவனும் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றும் கருதுவதில்லை. ``அது வேறு விஷயம், இது வேறு விஷயம்'' என்றே நினைக்கிறான்; அல்லது டாக்டரையும் நம்புகிறான், மருந்தையும் நம்புகிறான், கடவுளையும் நம்புகிறான், அதுவும் பல கடவுள்களில் தனக்கு வேண்டிய கடவுளையே நம்புகிறான்! மற்றும் கடவுள் நம்பிக்கைக்காரன் கோயில்களை நம்புகிறான். அவற்றிலும் ஒரே கடவுள் உள்ள கோயில்களில் ஒரு ஊர் கோயிலை பெரிதாகவும், மற்ற ஊர் கோயிலை சிறிதாகவும் மதிக்கிறான். அதுபோலவே ஒரு ஊர் குளத்தைப் பெரிதாகவும் ஒரு ஊர் குளத்தை மட்டமாகவும் மதிக்கிறான். இந்த பேதம் சமுத்திரத்தில்கூட காட்டுகிறான். ஒரு ஊர் சமுத்திரம் பெரிதாகவும் (விசேஷமாகவும்) மற்ற ஊர் சமுத்திரம் சாதாரணமானதாகவும் மதிக்கிறான்.150 கோடி மக்களால் மதிக்கப்படும் ஏசுகிறிஸ்து, ``கோயில்கள் எல்லாம் கள்ளர் குகை; திருட்டுப் பசங்கள் வசிக்கும் இடம்'' என்று சொன்னார்! அது மாத்திரமல்ல, சுமார் 40 கோடி மக்களால் ``மகாத்மா என்று கருதப்படும் காந்தி, ``கோயில்கள் விபசாரிகள் விடுதி, குச்சுக்காரிகள் வீடு'' என்று சொன்னார்! கடவுள் நம்பிக்கைக்காரர்களால் யார் இதை நம்புகிறார்கள், அனுசரிக்கிறார்கள்?கக்கூசு எடுப்பவர்களுக்கும் ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ அதுபோல கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.இதனால் 300 கோடி மக்கள் வாழும் உலகம் வளர்ச்சி கெட்டு எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாய் இருக்கிறது?
50 கோடி மக்கள் வாழும் நமது ``இந்தியா''வை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை சாமி, எத்தனை கோயில், எத்தனை தீர்த்தம், எத்தனை சொத்து, எத்தனை சாமியார், எத்தனை எத்தனை பக்தர் முட்டாள்கள்! எவ்வளவு சொத்து பணவிரயம் - நேர விரயம் - முயற்சி விரயம்?படித்தவர்களில் எத்தனை அறிவிலிகள்! புலவர்களில் எத்தனை முட்டாள்கள்! இலக்கியங்களில் எத்தனை அழுக்கு ஆபாசம் இருந்து வருகின்றன!இதற்கு பரிகாரம் புலவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரேயடியாக ``கடவுள் இருக்கிறது என்பது முட்டாள்தனம்; இனிமேல் புலவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள் (``நாத்திகர்கள்'') என்று பிள்ளைகளுக்கு பிரச்சாரங்களில், காலட்சேபங்களில் பகுத்தறிவு பற்றியே பேசுவது; பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலக்கியங்களை இகழ்வது'' என்று உறுதி செய்து கொண்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய், நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது, சேர்க்கக் கூடாது. இப்படிச் செய்யாவிட்டால் இனி எந்தப் புலவருக்கும் மதிப்பு இருக்காது! கண்டிப்பாய் மதிப்பு இருக்காது!! இலக்கியங்கள் கொளுத்தப்படும்!!!
------------- 20.10.1967 ``விடுதலை'' நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.
Search This Blog
8.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment