Search This Blog

22.5.08

தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்

பொதுத்தொண்டு செய்தோமா?

அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?

"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.

தன்னலத்தால் என்ன நடக்கும்

"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"

பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்

கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்
கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்;
"வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு
வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும்
கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள்
கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்
பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்
பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல.

தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்

"அப்படியா! அறியாத படியால் சொன்னேன்;
அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை
எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்
இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ?
மெய்ப்படிநம் அறிஞரின் சொற்படிந டந்தால்,
மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்.
முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்" என்றாள்.

தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்

"இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்,
எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்.
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்.
மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்.
விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்
உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்" என்றான்.
"பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்
பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான்" என்றாள்.

--------புரட்சிக்கவிஞர் அவர்கள் எழுதிய "குடும்பவிளக்கு" நூலிலிருந்து

0 comments: