Search This Blog

16.5.08

தீர்ப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல

டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் இயக்குனராக இருந்த டாக்டர் வேணுகோபால், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ‘அது தவறு. எனக்காக ஒரு சட்டத்தை உள்நோக்கத்தோடு கொண்டு வந்து வெளியேற்றுகிறார்கள்’ என்று டாக்டர் வேணுகோபால் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டார். தீர்ப்பு அவருக்குச் சாதகமாக வந்தது. உடனே பதவியும் ஏற்றார். அது பற்றி திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணியிடம் பேசினோம்...

புதுடெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குனராக டாக்டர் வேணுகோபால் மீண்டும் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அது தவறு என்கிறீர்கள். அதாவது, வேணுகோபால் உயர் சாதி வகுப்பினர் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே விமர்சிக்கின்றீர்களா?

‘‘இல்லை. இந்த விவகாரத்தை முழுதும் தெரிந்து கொள்ளாதவர்கள் கூறும் வாதம் இது. கடந்த பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியின்போது, இந்த வேணுகோபாலுக்கு அறுபது வயது முடியும் நேரம். அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், இவரது பதவிக் காலத்தை நீட்டிப்புச் செய்தார். பொதுவாக ஓர் அரசு, தனக்கு வேண்டிய, நல்ல செயல்பாட்டில் உள்ள ஒருவருக்குப் பதவிக்காலம் முடிந்த பிறகும் ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை பதவி நீட்டிப்புக் கொடுப்பது வழக்கம்தான்.

ஆனால், டாக்டர் வேணுகோபால் விஷயத்தில் நடந்ததே வேறு. பா.ஜ.க. ஆட்சியில், அவருக்குப் பதவி நீட்டிப்புக் கொடுப்பதற்காக நிர்வாகக்குழு கூடி, கொடுக்கலாம் என முடிவெடுத்தார்கள். ஆனால் மினிட் புத்தகத்தில் ஏதும் எழுதவில்லை. அதன் பிறகுதான் அவருக்கு ஒரே நேரத்தில் ஐந்தாண்டுகளுக்குப் பதவி நீட்டிப்பு என கொண்டு வந்தார்கள். நிர்வாகக் குழுவில் உள்ளவர்களுக்கே அது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு யாருக்கும், எந்த மாநிலத்திலும் சரி இப்படி ஒரேயடியாக பதவி நீட்டிப்புச் செய்ததில்லை. அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை.

அடுத்து, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைகிறது. பா.ஜ.க. அரசாங்கம் கொண்டுவந்த அதிகார மீறல் உத்தரவு ஒன்று, இந்த காங்கிரஸ் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்தும் என்றால் எப்படி? பொதுவாக, ஓர் அரசாங்கம் ஒருவருக்குப் பதவி நீட்டிப்புக் கொடுத்திருந்தாலும் அடுத்த அரசு வந்து அவரை மாற்றுவதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா? சாதாரணமாக, அட்வகேட் ஜெனரல், அட்டானி ஜெனரல்... இந்த மாதிரி துறையிலிருப்பவர்களெல்லாம் தங்களுக்குச் சாதகமாக இருக்கமாட்டார்கள் என்றால், அவர்களை அனுப்ப உரிமை இருக்கிறது. இது ஒரு வழக்கமான நடைமுறை.’’

டாக்டர் வேணுகோபால், அடிப்படையிலேயே தகுதியிழந்தவர் என்கிறீர்கள். அதுதான் எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது?

‘‘அந்த விஷயத்திற்கு வருகிறேன். அப்படி ஐந்தாண்டு காலம் பதவி நீட்டிப்புப் பெற்று இயக்குனர் பதவியில் நீடித்திருந்த சமயம், அதாவது காங்கிரஸ் தலைமையிலான அரசு வந்து, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தபோது, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் உள்ள உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் செய்தார்கள். அதைத் தூண்டி விட்டதே வேணுகோபால்தான். நோயாளிகளுக்குக் கூட மருத்துவம் பார்க்க மாட்டோம் என்றார்கள். மரணத்தோடு விளையாடினார்கள். இதே நீதிமன்றம், ‘ஏன் நோயாளிகள் பக்கம் செல்லவில்லை’ என்று அப்போது கேட்டது. அதன் பிறகுதான் இவர்கள் நோயாளிகளைக் கவனித்தார்கள். போராட்டம் நடத்திய டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது மேலிடம். வேணுகோபாலோ ‘அது முடியாது’ என மறுத்தார். அதாவது நிர்வாகத்தின் மேலிடம் சொன்னதற்கே எதிராக நடந்தார். இது பணி ஒழுங்கீனம் இல்லையா?

ஆக, பணி நிர்வாக ஒழுங்கீனம் செய்தவர் வேணுகோபால். அதனால்தான் அவரை மாற்ற வேண்டும் என முயற்சித்து அவரை மாற்றினார்கள். உடனே இதற்கு ஓர் உள்நோக்கம் கற்பித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ§க்கும் இவருக்கும் ஏதோ தனிப்பட்ட விரோதம், காழ்ப்புணர்ச்சி என்பதைப் போலச் சித்திரித்து விளக்கம் சொல்லி வந்தார்.

இது சம்பந்தமாக ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். உடனே வேணுகோபால் பதவி நீட்டிப்பு பிரச்னையும் வந்தது. அப்போது அவர், ‘என்னை உள்நோக்கத்தோடு வெளியேறச் சொல்கிறார்!?’ என்று அமைச்சர் மீதே குற்றம் சாட்டினார். அதற்கு மத்திய நிர்வாகம், ‘அவர் பதவியில் நீடித்தால் நிர்வாகம் கெடும். ‘எய்ம்ஸ்’ நிறுவனம் வீணாகிவிடும். நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்’ என்று எடுத்துச் சொன்னது. சொன்னவுடனேயே அந்த வழக்கில் வேணுகோபாலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவில்லை. அப்போது ‘இந்தமாதிரி ஒரு குழப்பம் எதற்கு? ஒருவருக்கு எத்தனை வயதுவரை பதவி நீட்டிப்புத் தரலாம். எந்த வயது வரை பதவியிலிருக்கலாம் என்ற விதிமுறையை சட்டரீதியாகவே கொண்டுவரலாமே. அது எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையுமே’ என்று டெல்லி உயர்நீதிமன்றமே கூறியது. அதன் பேரில்தான் வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்க முடிவெடுத்தார்கள்.’’

இதைத்தானே ‘டாக்டர் அன்புமணி உள்நோக்கத்தோடு செய்தார்’ என்கிறார் வேணுகோபால்?

‘‘இல்லவே இல்லை. டெல்லி உயர்நீதிமன்றம். வயது வரம்பு ஒன்றை நிர்ணயித்து பதவி நீட்டிப்புத் தர சட்டம் கொண்டு வரலாமே என்று உத்தரவிட்டதல்லவா. அதன் பேரில்தான் மத்திய அமைச்சரவை கூடியது. முடிவெடுத்தார்கள். அதன்பிறகுதான் ‘65 வயதுக்கு மேல் இயக்குனர்கள் அந்த மாதிரி பதவியில் இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த நேரத்தில் வேணுகோபாலுக்கு 65 வயதானது. உடனே அவர் ‘இது எனக்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம்’ என்று கூறினார். அது எப்படி சரியாகும்? இன்று அவர் அந்தப் பதவியில் இருப்பார். நாளை வேறொருவர் வரலாம். சட்டம் என வந்து விட்டால், அது எல்லோருக்கும் பொருந்தும்தானே. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே வயது வரம்பு 65 தான். அரசியல் சட்டப்படி அதற்குமேல் பதவியிலிருக்க முடியாது. அப்படியிருக்கும் போது, சட்டம் வேணுகோபாலுக்காக மட்டுமே என்றால் சரியாகுமா என்று தான் கேட்கிறேன்.’’

அந்த சட்டம் வேணுகோபாலுக்காகக் கொண்டு வரப்பட்டது. அதனால் செல்லாது என்ற தீர்ப்பைத்தானே உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கிறது?

‘‘அதெப்படி அவர்கள் கொடுக்க முடியும்? அப்படி கூறுவதிலும் ஒரு சட்டப் பிரச்னை இருக்கிறது. ஒரு தனிநபருக்கு அல்லது தனியாக ஓர் அமைச்சருக்கு உள்நோக்கம், குரோத உணர்ச்சி இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், ஓர் அமைச்சரவைக்கே இருக்கிறது என்று சொல்ல முடியாது. சட்டப்படி சொல்லவும் கூடாது. அதுவும் நாடாளுமன்றம் பற்றி அப்படிச் சொல்லக் கூடாது. நாடாளுமன்றம் என்பது இறையாண்மை உள்ள இடம். அதனால் அந்த நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால், அந்தச் சட்டத்திற்கு கெட்ட எண்ணம்_ உள்நோக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாது.

அதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். சென்னை மாநகர மேயராகத் தேர்வானார் ஸ்டாலின். ஒருவரே இரண்டு பதவி வகிக்க முடியாது என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். ஜெயலலிதா என்ன மாதிரியான உள்நோக்கத்தோடு அப்படி ஒரு சட்டத்தை இயற்றினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு என்ன செய்ய முடியும்? சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதானே. அதனடிப்படையில் மதிப்பளித்துத்தானே ஸ்டாலின் ஒரு பதவியை, அதாவது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்? இது நடந்த நிதர்சனமாயிற்றே! சட்டமன்றத்திற்கு உள்ள அதே அதிகாரம்தானே நாடாளுமன்றத்திற்கும் உள்ளது. எப்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பு சரியாகும்?

அடுத்து இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீர்ப்பு வந்த அரைமணி நேரத்திலேயே டாக்டர் வேணுகோபால் மீண்டும் பதவியேற்கும் படம் ஊடகங்களில் வெளியாகிறது. எப்படி சாத்தியம்? உச்சநீதி மன்றம் போட்ட உத்தரவின் நகல் அவ்வளவு விரைவில் வேணுகோபால் கைக்கு எப்படிக் கிடைத்தது? அதே போன்று ஒரு சாதாரண குப்பனுக்கும், சுப்பனுக்கும் கிடைக்குமா? குறைந்தபட்சமாகப் பார்த்தாலே உத்தரவு நகல் கிடைக்க 24 மணி நேரமாவது ஆகுமே. அங்கே ‘செல்வாக்கு’ சங்கிலித்தொடர் மாதிரி இருக்கிறது பாருங்கள்! அந்தச் செல்வாக்கின் பின்னணி என்ன? நியாயமாகவே இந்தச் சந்தேகம் ஒருவருக்கு வராதா?’’

ஆக நீங்கள் உச்சநீதி மன்றத்தின் அந்தத் தீர்ப்பையே தவறு என்கிறீர்கள்?

‘‘சமூக உணர்வுள்ள, சமூக நீதிக்காகப் பாடுபடக்கூடிய யாராக இருந்தாலும், தவறு செய்தால் _ அது நிறுவனங்களாக இருந்தாலும், அதைக் கண்டிக்கக் கூடிய நேர்மையான துணிவு தேவை. எங்களைப் பொறுத்தவரை, அதாவது திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் கடவுள்களையே இல்லை என்று கூறி மறுக்கக் கூடியவர்கள்; விமர்சிப்பவர்கள். இந்நிலையில், கடவுளுக்கும் மேற்பட்டவர்கள் என்ற கருத்திலே இருக்கக்கூடியவர்கள் அல்ல இந்த நீதிபதிகள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுடைய முடிவுகளிலும் தவறுகள் ஏற்படுவது உண்டு. அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் எல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை இங்கே நினைவுபடுத்த வேண்டும். ‘மேல்முறையீடு (அப்பீல்) செய்வதற்கு அதற்குமேல் ஒரு கோர்ட் இல்லை என்ற காரணத்தால் தான் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதே தவிர, மற்றபடி கடைசி அறிவாளி மனிதர் அங்குதான் உட்கார்ந்திருக்கிறார் என்பதல்ல!’ என்று கூறினார்.

நான் சட்டம் படித்தவன் என்கிற முறையில் இன்னொரு கருத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீதிபதிகளுக்குத்தான் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாதே தவிர, நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறு என்று சொல்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. நீதிபதிகளின் எத்தனையோ தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யர் பல தீர்ப்புகளை எதிர்த்து விமர்சனம் செய்து அண்மையில்கூட கட்டுரைகள் எழுதி வருகிறார். தீர்ப்புக்கு மாறுபட்டு எழுதி வருகிறார். இப்படி நிறைய உதாரணங்களைக் கூற முடியும்!’’

இப்படி நீதிமன்ற தீர்ப்பையே தவறு என்று விமர்சிக்கும் உங்கள் மீது நடவடிக்கை பாய்ந்தால் என்ன செய்வீர்கள்?

‘‘இப்படி நான் பேசுவதாலேயே, என்மீது ஏதாவது சட்டவிளைவுகள் வந்தால் அதற்கு முழுப் பொறுப்பேற்க நான் தயாராக இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் அந்த வாய்ப்பை ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதி மேலும் பல விளக்கப்பட வேண்டிய விஷயங்களை நீதிமன்றங்களிலேயே, அது உச்சநீதிமன்றமாக இருந்தாலும், நானே நேரில் சென்று விளக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன்.’’

இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி பதவி விலக வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் எதிர்ப்புக்குரல் வலுவாக எழுந்து வருகிறதே?

‘‘இதில் டாக்டர் அன்புமணிக்கு என்ன தொடர்பு? அவரை ஏன் பதவி விலகச் சொல்ல வேண்டும்? இது பார்லிமெண்ட் கொண்டு வந்த சட்டமாயிற்றே. மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி இருந்தாலும், அல்லது வேறு யாராவது இருந்தாலும் சட்டம் ஒரே சட்டம்தானே. பார்லிமெண்ட் கொண்டு வந்த சட்டத்துக்கு அன்புமணி மட்டுமே எப்படிப் பொறுப்பாவார்? எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு உள்நோக்கம் என்னவென்றால், அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சமூக நீதியை விடாமல் வற்புறுத்திக் கொண்டு வரக்கூடிய ஓர் அமைச்சர் என்பதாலும், தமிழ்நாட்டிலிருந்து சமூக நீதிக்காகப் போராடக் கூடிய இந்தக் கூட்டணியைச் சார்ந்தவர் என்பதாலும்தான் அவர்களுக்கு அந்தக் காழ்ப்புணர்ச்சி; அவ்வளவுதான்!’’

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் நீங்களும் தொடர்ந்து விமர்சன மோதலில் இருந்து வருகிறீர்கள். ஒருவருக்கொருவர், ‘நீ மோசம். நான் மோசமில்லை’ என்று அறிக்கையில் தாக்கிக் கொள்கிறீர்கள். அதை மறந்துவிட்டு அன்புமணிக்காக இப்போது வக்காலத்து வாங்குகிறீர்களே?

‘‘நான் ஒவ்வொரு பிரச்னையையும் தனித் தனியாகப் பார்க்கிறேன். சொந்தக் காழ்ப்புணர்ச்சி, கருத்து மோதல் என நான் பார்ப்பதில்லை. பார்க்கவும் மாட்டேன். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் நிலைப்பாட்டிலிருந்து, பல விஷயங்களில் இன்னமும், இன்றளவும் நான் மாறுபட்டுத்தான் இருக்கிறேன். அவருடைய பல யோசனைகள், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தக் கண்ணோட்டத்தில் அன்புமணி விவகாரத்தைப் பார்க்க முடியாது. நியாயத்தின் அடிப்படையில்தான் பார்க்க வேண்டியுள்ளது. எதையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அணுகாமல், கொள்கை அடிப்படையில் தான் அணுகுவோம் என்பதற்கு இந்த விவகாரமே சாட்சி!’’


-----------திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 18-05-2008 "குமுதம்" இதழுக்கு அளித்த நேர்காணல்

0 comments: