Search This Blog

12.5.08

இடர் தரும் ஒதுக்கீடுகளா ?

"தாத்தா தாழ்ந்த ஜாதி என்றால் பொருளாதாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் கொள்ளுப் பேரர்களுக்கு இடஒதுக்கீடு அவசியமா? பாட்டி சிறுபான்மை இனம் என்றாலும் பாராளும் பேரப் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு தேவையா?" - இந்த வினாவை எழுப்பியிருப்பவர் (நெல்லை சு. முத்து) எழுதியிருப் பவர் சாதாரணமானவர் அல்லர் - மெத்த படித்த மேதாவி - விஞ்ஞானி - ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர். தலைப்பே `இடர்தரும் இடஒதுக்கீடுகள் என்பதாகும்.

இப்படி வினாக்கணை தொடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தால் `இந்திரன் சந்திரன் என்று ஏற்றிப் போற்றப்படுவார்கள்.

வெகு தூரம் போக வேண்டாம். இவர் எழுதிய கட்டுரை `தினமணி யில் (7.5.2008) வெளிவந்ததே - இதற்கொரு ஆதாரமாகும்.

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான திருவாளர் வைத்தியநாதய்யர் `தின மணியின் ஆசிரியராகப் பொறுப் பேற்றுக் கொண்டது முதல் இத் தகையவர்களைத் தேடிப் பிடித்து எழுத வைக்கிறார்.
`ஒரு விஞ்ஞானியே இப்படி எழுதுகிறார் பாருங்கள் என்கிற மலைப்பை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன் - அதற்கு மேல் பகவான் செயல் என்று தன்னம் பிக்கை இல்லாத சில மருத்துவர்கள் கூறுவதை வைத்துக் கொண்டு `ஒரு மருத்துவரே கடவுள்மீது நம்பிக்கை வைக்கிறார் - அது எப்படி பொய்யாகும்? என்று பாமரத்தன மாக சிலர் வாதிடுவது இல்லையா - அதுபோன்ற யுக்தியே இதுவும்.

தாத்தா தாழ்ந்த ஜாதி - பேரன் பணக்காரன் - அதனால் பேரன் கல்விச்சூழலில் முன்னேறி விட்டான் என்பதற்கு என்ன ஆதாரம்?

இதையே ஒரு பார்ப்பனர் வீட்டை வைத்துப் பார்ப்போம். தாத்தாவும் பட்டதாரி பேரனோ முதுகலைப் பட்டதாரி - இந்தச் சூழல் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்டவர் வீட்டில் கிடையாது என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுச் சுற்றுச் சார்பு - கல்விச் செருக்குடையதாக இல்லையே. அவன் பிறந்த ஜாதி அவனைப் பிறப்பின் அடிப்படையில் கீழ்மைப் படுத்துகிறதே - இந்தச் சூழ்நிலையில் தலைமுறை தலைமுறையாகப் படிக்கும் வாய்ப்பை மத ரீதி யாகவும் சாஸ்திரங்கள் ரீதியாகவும், மன்னர்களின் சட்டங்கள் ரீதியாகவும் பெற்றுக் கொண்டிருந்த உயர் ஜாதியினருடன் சம தட்டில் வைத்து நிறுத் திப் பார்ப்பது வஞ்சனையல்லவா - ஏமாற்றும் நாடகம் அல்லவா?

பிற்படுத்தப்பட்டவர்களிலோ, தாழ்த்தப்பட்டவர்களிலோ ஏழைகளாகயிருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகள் அளித்து அவர்களை நிமிர்ப்பதுதான் ஒரு அரசின் வேலை - அதை விட்டு விட்டு சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னால் தள்ளப்பட்ட மக்கள் தொகுதியில் பொருளாதாரம் என்ற அளவுகோலைப் புகுத்தி பிளவுபடுத்துவது பெரும் மோசடியே!


பார்ப்பனர்களில் ஏழையாக இருப்பவர்கள் கல்வியில் பின் தங்கியிருக்கிறார்கள்; பணக் காரர்களாக இருப்பவர்கள் முன்னேறியிருக் கிறார்கள் என்று ஏன் சொல்லவில்லை?
பொருளாதாரத்தின் காரணமாக கல்வி வாய்ப்பு என்ற நிலையில்லாத நிலையில் அதனை அளவுகோலாக ஆக்குவது எப்படி? இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்ட நிலையில், அதில் பொருளாதார நட்டகம் நுழைய இடம் அளிப்பது அறிவு நாணயமா?


மண்டல் குழு அறிக்கையில் வெளியிடப் பட்டுள்ள ஒரு புள்ளி விவரம் இந்தப் படித்த மேதைகளின் கண்களைத் திறக்குமா என்று தெரியவில்லை.
மத்திய அரசுத் துறைகளில் முதல் நிலை (group-1) பதவிகளில் இருப்பவர்கள் பற்றிய புள்ளி விவரம் அது.
தாழ்த்தப்பட்டோர் 7.18 ரூ (SC & ST)
பிற்படுத்தப்பட்டோர் 2.59 ரூ (BC)
பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர் (F.C) 90.23ரூ

50 ஆண்டு காலமாக இடஒதுக்கீடு இருந்தும் தாழ்த்தப்பட்டோர் பெற்றுள்ள இடங்கள் 7.18 விழுக்காடு தானே! அந்தவாய்ப்புப் பிற்படுத்தப் பட்டோருக்கு இல்லாத காரணத்தால் மக்கள் தொகையில் 52 விழுக்காடாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்டோர் நிலை - தாழ்த்தப்பட் டோருக்கும் கீழாகத்தானே இருக்கிறது. விண்வெளிகூட விஞ்ஞானயாகிய திருவாளர் நெல்லை முத்து அவர்களுக்கு இந்தச் சின்னஞ்சிறு உண்மைகூடப் புரியவில்லையென்றால் அதற் காகப் பரிதாப்படுவதைத் தவிர வேறு நாம் என்ன செய்ய முடியும்!

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக் கீடு தேவை என்பது அவர்கள் சமூக நிலையை, மேலே கொண்டு வருவதற்குத்தான் என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், பின்னாளில் துணைப் பிரதமராகவும் இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் தெரிவித்த கருத்து - இந்த விஞ்ஞானிகளின் கண்களை ஒருக்கால் திறந்தாலும் திறக்கலாம்.

``பீகாரில் 10 மாடு வைத்துள்ள ஒரு யாதவருக்கு 10,000 ரூபாய் மாத வருமானம் வரும். வசதியுடன் வாழ்வார். வெறும் 1000 ரூபாய்க்குள் மாத வருமானம் சம்பாதிக்கும் ஒரு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் நினைத்தால், அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து அவர்முன் மண்டியிடச் செய்துவிட முடியுமே! அதிகாரம் இதில் யாரை எப்படி உயர்த்துகிறது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார் பாபுஜி.
சமுதாயத்தின் அடித்தட்டில் கிடந்தவருக்குத்தான் `அந்த வலி என்னவென்று தெரியும்.
இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். எதையும் அரை குறையாகத் தெரிந்து கொண்டு பேனா பிடிப்பது மெத்த படித்த வர்களுக்கு அழகன்று.

பிற்படுத்தப்பட்டோர்களுக்கு மத்திய அரசின் கல்வி நிறுவ னங்களும், வேலை வாய்ப் பிலும் இதுவரை இட ஒதுக்கீடே அளிக்கப்பட வில்லை. முதன் முதலாக இப்பொழுதுதான் கணக்கே திறக்கப்படுகிறது. இந்த நிலை யில் பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பிரிவினர் வளர்ந்து விட்டனர் என்று அடம் பிடிப்பது அறிவு நாணயமானதுதானா?

மண்டல் அறிக்கையில் கூட 20 வருடங்களுக்குப் பிறகு இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ள நிலை யில், தொடக்க நிலையிலேயே இப்படி தொல்லை கொடுப் பதும், முட்டுக்கட்டை போடு வதும் முற்போக்கான சிந் தனையா? முரட்டுத்தனமான அடாவடி எழுத்துகளா?

இந்த அதிகம் படித்த மேதாவிகள் பூமியில் காலைப் பதிக்காமல் (விண்வெளி ஆய்வு விஞ்ஞானியல்லவா!) கற்பனை வானில் பறந்து திரிகிறார்கள் போலும்.

விண்ணப்பங்களில் இன்னும் ஜாதி கேட் கிறார்களே என்று அங்க லாய்க்கிறார். இதனால்தான் ஜாதி இன்னும் இருப்பது போன்ற வளமான கற்பனை இவர்களுக்கு. இப்படி தோள் முறுக்கிக் கொண்டு எழுது கோல் பிடிப்பவர்கள் அரச மைப்புச் சட்டத்தின் வாயி லாக ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று எழுதும் துணிவு வரவில்லையே - ஏன்? இந்திய அரசமைப்புச் சட் டத்தில் (17-ஆவது பிரிவு) தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று தானே கூறப்பட் டுள்ளது. ஜாதி ஒழிப்புக்கு இடம் உண்டா? ஜாதி இருக்கும் வரை தீண்டாமை ஒழிந்து விடுமா? ஜாதியின் தீய குணம்தானே தீண்டாமை? இதைப்பற்றி எல்லாம் ஆழ்ந்த சிந்தனைப் போக்கு இல்லா மல் இடஒதுக்கீட்டினால் தான் ஜாதி இருக்கிறது என்று பேசுவது எதார்த்தமானதா?
பார்ப்பனர்கள் பொது வாக இப்படி பேசுவது - எழுவது வாடிக்கை. அப்படி சொல்லுகிற - எழுதுகிற பார்ப் பனர்கள் ஆண்டுதோறும் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதற்கென்றே ஆவணி அவிட்டம் என்ற மத நிகழ்ச் சியையே வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நெல்லை முத்துக்களுக்குத் தெரியுமா?

படித்த மேதைகளுக்குப் புள்ளி விவரங்கள் என்றால் மெத்த பிடிக்கும்.
தேசிய மாதிரிக் கணக் கெடுப்பு நிறுவனம் (NSSO) 1999-2000 ஆண்டுக்கான ஒரு புள்ளி விவரத்தைத் தந்துள் ளது. 2.24 லட்சம் பேர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு இது (பார்ப்பனர்கள் பற்றிய விவரம் இது) தொழில் நுட்பம் சாராத பட்டப் படிப்பில் பார்ப்பனர் 66ரூ; மருத்துவப் பட்டதாரிகள் - 65ரூ; பொறி யியல் மற்றும் தொழில் நுட்ப பட்டதாரிகள் - 67ரூ; விவ சாயப் பட்டதாரிகள் - 62ரூ; மத்திய அரசில் தாழ்த் தப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இருந்தும்கூட பார்ப் பனர்கள், உயர்ஜாதிகாரர்கள் இத்தனை தூரம் ஆதிக்கத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருக்கின்றனர் என்றால் இடஒதுக்கீடு என்கிற இந்த அணுகுமுறை ஏற்பாடு இல்லாவிட்டால் ஒடுக்கப் பட்ட மக்கள் எத்தகைய இருட்டறையில் அடைக்கப் பட்டு இருப்பார்கள் என்பதை சற்றே மன சாட்சியின் கதவினைத் திறந்தும், ஈரமான இதயத்துடனும், மனித உரிமை, மனித நேயம், சமத்துவம் என்ற மனிதப் பண்புடனும் சீர்தூக் கிப் பார்க்கட்டும்!

இதுபோன்ற சிந்தனையில் இருக்கும் நெல்லை முத்து போன்ற விஞ்ஞானிகள் - படித் தவர்கள் இதற்குப் பிறகாவது உண்மைகளைத் தெரிந்து கொள்வதிலும் புரிந்து கொள்வதிலும் சிந்தையைச் செலுத்துவார்களாக!


------------------ மின்சாரம் அவர்கள் 10-5-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

0 comments: