ஆராய்ச்சியாளர்களிடத்தும், சீர்திருத்தக்காரர்களிடத்தும், உண்மை ஒழுக்கமுள்ளவர்களிடத்தும் இவருக்கு அதிக அன்புண்டு. தமிழ்ப் பெரியார் மறைமலையடிகளிடம் இவருக்கு எப்பொழுதும் பெருமதிப்பு உண்டு. அவருடைய ஆராய்ச்சிகளிலும், கொள்கைகளிலும் பல இவருக்கு உடன்பாடு. இதற்குப் பின்வரும் நிகழ்ச்சி ஒரு சான்றாகும்.
1927 - இல் உயர்திரு மறைமலையடிகள், தமது திருமகள் நீலாம்பிகை அம்மையாருக்கும், திருவாளர் திருவரங்கம் பிள்ளையவர்களுக்கும் திருமணம் நடத்திவைத்தார். இத்திருமணம் மயிலாப்பூர் கபாலீச்சுரர் கோயிலில் நடைபெற்றது. கோயில் குருக்கள் இதில் கலந்து கொண்டார். இச்சமயம் அங்கிருந்த தோழர் என். தண்டபாணி பிள்ளை ஒரு சண்டையைக் கிளப்பிவிட்டார். "கோயிற் குருக்கள் பார்ப்பனரல்லவா? அவரை வைத்துத் திருமணம் செய்யலாமா?" என்றார். திரு. மறைமலையடிகள், "அவர் பார்ப்பனரல்லர், ஆதி சைவர். அவரை ஆதரிப்பது என் கொள்கைக்கு முரண் அல்ல" என்று ஏதோ கூறினாராம். பிறகு இது சம்பந்தமாகக் 'குடி அரசு'ப் பத்திரிக்கையில் எழுத்துப் போர் நடைபெற்று வந்தது. அப்பொழுது பெரியார், அடிகள் செய்தது தவறு என்பதை எழுதிவிட்டு, மேலும் எழுதியது இதுவாகும்:-
" உயர் திரு சுவாமி வேதாசலம் அவர்களும், திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் தமிழ்நாட்டிலேயே தமிழ் மக்களின் நாகரிக விஷயமாய்த் தக்க ஆராய்ச்சியுள்ளவர்கள். ஏனையவர்களை இவர்களுக்குச் சமமானவர்கள் அல்லது இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று சொல்ல வேண்டுமேயல்லாமல், இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்ல முடியாது என்பத நமது அபிப்பிராயம்." ( 11 -09-1927 'குடிஅரசு' )
என்று எழுதினார். இதன்பிறகும் திரு. மறைமலையடிகளின் செயல் குற்றமுற்றதென்றும், குற்றமற்றதென்றும் கூறிப் பலர் கட்டுரைகள் வரைந்தனர். "கோயில் குருக்கள் பார்ப்பனரல்லர்" என்பது ஒரு சாரார் கொள்கை. அவர்கள் இப்பொழுதுள்ள முறையில் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள் என்பது மற்றொரு சாரார் கொள்கை. முன்னைய கொள்கையை ஆதரிப்பவர் திரு. மறைமலையடிகள் பின்னைய கொள்கையை ஆதரிப்பவர் பெரியார். இதில் இருவருக்கும் முரண்பாடு. இதனாலேயே திரு. நீலாம்பிகையார் திருமணம் பற்றிய வழக்கு நீடித்தது. இறுதியில் பெரியார் அப்பொழுது எழுதியது இது :-
"உயர் திரு சுவாமி வேதாசலம் அவர்களும், திருவாளர்களான கா. சுப்பிரமணிய பிள்ளை, திரு. வி.கலியாணசுந்தர முதலியார் இவர்கள் நம்முடைய சுயமரியாதை, சமத்துவம், மனிதத்தன்மை ஆகிய கொள்கைகளுக்கு உடன்பட்டவர் என்றும், மத, சமய ஆராய்ச்சி விஷயமாய் யாராவது நமக்கு இடையூறு செய்யவந்தால் நாம் அவைகளையும் லட்சியம் செய்யப்போவதில்லையானாலும், அப்போர்ப்பட்ட இடையூறுகளுக்கும் அம்முறையிலுங்கூட நமக்கு இப்பெரியார்கள் பின்பலமாய் இருக்கிறார்கள் என்கிற தைரியத்திலேயே அவர்களை மலைபோல் நம்பி வருகிறோம்."
(03-10-1927 'குடிஅரசு')
இது பெரியாருடைய உண்மைத்தன்மையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகும்.
------ சாமி. சிதம்பரனார் அவர்கள் எழுதிய "தமிழர்தலைவர்" நூலிலிருந்து பக்கம் 156 157
Search This Blog
6.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment