Search This Blog

27.5.08

ஆத்மா - மோட்சம் - பாவமன்னிப்பு யாவும் மதியற்ற கற்பனைகளே!


ஆத்மா என்று ஒன்று இருப்பதற்கே காரணம் இல்லை. கொஞ்சமும் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்றதாகும். ஆத்மா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் அப்படிப் பட்ட சொல் தமிழில் கிடையாது. அதற்கேற்ற சரியான பொருள் கொண்ட வார்த்தைகூட தமிழில் இல்லை. “ஆத்மா’ என்பது வடமொழிச் சொல்; வடமொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் ஆத்மா என்பதற்குச் சொல்லே கிடையாது. எனவே பார்ப்பனர்களால் புகுத்தப்பட்ட சொல் என்பதற்குத் தக்க சான்றாகிவிடுகிறது.

அப்படிப்பட்ட பெயர் நம்மிடையில் புகுத்தப்பட்டதன் காரணம் அதைக் கொண்டு ஒருவிதத்தில் பார்ப்பனர் நன்மை அடைவதற்கேயாகும். எத்தனையோ முறைகளில் நம் மக்களை மடையர்களாக்கி அறிவற்றவர்களாக்கிப் பிடுங்கித் தின்னும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இன்றைக்கும் எத்தனையோ முட்டாள்கள் இப்படிப் பார்ப்பனன் பேச்சைக் கேட்டுக் கருமாதி செய்கின்றனர். திவசம் செய்கின்றனர். இவற்றையெல்லாம் கொஞ்சம்கூட சிந்திப்பதே கிடையாது.

மனித வாழ்வின் பெருமை எது?

மனிதன் பொய் - புரட்டு செய்யாமல் இருக்க வேண்டியது அவசியம். மனித சமுதாயத்தில் ஒற்றுமையான வாழ்க்கை வாழ மனிதனுக்குச் சில நற்குணங்கள் தேவை தான். மற்ற ஜீவனைப் போன்று மனிதன் தனித்து வாழ முடியாதவன். சமுதாய வாழ்க்கையை அனுசரித்து வாழவேண்டியது அவசியமாகிறது. சமுதாயத்திற்குப் புறம்பாகத் தனிப்பட்ட ஒருவன் மட்டும் நடப்பானாகில் அவனை ஏனையோர் சம்மதித்து சமுதாயத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஒருவன் முழு நிர்வாணமாக (அம்மணமாக) இங்கு இருப்பானாகில் அவன் நிலையைக் கண்ட மற்றவர்கள் எல்லாரும் ஒன்றுபட்டு அதைக் கண்டிப்பார்கள். திருந்தவில்லையேல் அடித்துத் துரத்துவார்கள்.

அம்மனிதன் தான் நிர்வாணமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவானாகில் அவன் மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டு இருக்க முடியாது. மனிதனே சஞ்சரிக்காத மறைவிடங்களில் இருக்கலாம். மனிதன் அல்லாத மற்ற ஜீவராசிகள் வாழும் காடுகளில் இருக்கலாம். எனவே மனிதன் சமுதாய வாழ்க்கையை விரும்புகிறான். அதை ஒட்டியே மனிதர்கள் யாவரும் வாழ்வது இயற்கையாகி விட்டது.

மேலும் மனிதனுடைய செய்கைகள் அத்தனையும் சமுதாய வாழ்வை அடிப்படையாகக் கொண்டனவேயாகும். அதற்கென்று தான் அவன் மேற்கொள்ளுகிற ஒவ்வொன்றும் தானாகவே போய்ச் சேருகிறது. இவனுடைய மனதுக்குள் தனக்கு என்று நினைத்துக் கொண்டு செய்தாலும் அது மற்றவர்க்கும்தான் போய்ச் சேருகிறது. சட்டி, பானை செய்கிற குயவனின் பணி சமுதாய மக்களுக்கு எல்லாம் உபயோகப்படுகிறது. வீடு கட்டுபவன் சமுதாயத்திற்குப் பயன்படுகிறான். கக்கூஸ் (மலக் கழிவு) எடுப்பவனால் சமுதாயத்திற்கு நல்ல உதவி கிடைக்கிறது. இப்படி ஒருவன் முயற்சியின் பலன் மற்றவன் அடைகிறான். பலவிதத்தில் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வதனால் மனிதர்கள் கூட்டு வாழ்க்கையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒருவன் பொய், புரட்டு சொல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். நல்லொழுக்கத்துடனும், குற்றம் ஒன்றும் செய்யாமலும் இருப்பது அவசியம். அப்படிக் குற்றம் ஏதும் செய்யாமல் இருக்கும்படி பார்க்கவே அரசன் என்ற பெயரால் ஒரு தலைவனை உண்டாக்கினார்கள். அவனுக்குச் சகல உரிமைகளையும் கொடுத்துக் குற்றம் செய்தவனைத் தண்டிக்கும்படிச் செய்தார்கள். அரசனுக்குத் தெரியாமல் செய்யும் குற்றங்களைத் தண்டிக்க யாராவது வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்ற சாதனத்தை உண்டாக்கினார்கள். அதனால் எந்தக் குற்றம் செய்தாலும் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்து தண்டிப்பார் என்று அதற்கும் கட்டுக் கதைகளை ஏற்படுத்தினர். இப்படி உண்டாக்கப்பட்டவைகளுக்கு மனிதன் அடங்கி நடந்து வந்தான்.

ஆனால், இப்போது இவை இரண்டினுடைய அயோக்கியத்தன்மைகளும் வெளிப்பட்டு அவற்றிற்குள்ள மதிப்பும் போய்விட்டது. இராஜாவைப் போ வெளியே என்றோம். இராஜாவும் தனக்கு இவ்வளவுதான் மதிப்பு; இனியும் இருப்பது சரியில்லை என்று திரும்பிப் போய்விட்டான். அது மட்டுமல்ல. இந்நாட்டிலே 600க்கு மேற்பட்ட குட்டி இராஜாக்கள் எல்லாம் மூலைக்கு மூலை இருந்தனர். அவர்களும் இப்போது சொன்னதைக் கேட்டுக் கொண்டு கொடுப்பதைக் கொடு; சோற்றுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்று கெஞ்சிக் கேட்டு வாங்கும் நிலை வந்துவிட்டது. இப்படி ராஜாக்கள் எல்லாம் சாதாரண (சீட்டுக்கட்டு) இஸ்பேட் இராஜாக்களாக ஆகிவிட்டனர்.

அது மட்டுமில்லை கடவுளின் வண்டவாளம் அதற்குமேல் வெளியாகி விட்டது. கடவுளையே உருட்டித்தள்ளி உடைத்து விட்டுப் போய்விடுகிறான்! கடவுளுடைய பெண்டாட்டியை அம்மணமாக விட்டு சேலையை அவிழ்த்துக் கொண்டு போய்விடுகிறான். சாமியின் அங்கங்களையே உடைத்துவிட்டுப் போய்விடுகிறான். கடவுளையே உடைத்துச் சுக்கு நூறாக்குகின்றனர். இதுவரை எந்தச் சாமியும் ஒருவனைக் கூட வாய் திறந்து கேட்டதே இல்லை.

இப்படிச் சாமியின் யோக்கியதை வெறும் கருங்கல் என்று வெளிப்படையாகி விட்டது. சாமியின் யோக்கியதை வெளிப்பட்டது மட்டுமன்றி சாமியின் பேரைக் கூறிக் கொண்டு முதல் நம்பர் அயோக்கியன் எல்லாம் வாழ முடிகிறது. அது மட்டுமல்ல, நல்லவர்களை எல்லாம் பெரும் அயோக்கியர்களாக்குகிறது கடவுள். நல்ல காரியத்திற்கென்று உண்டாக்கப்பட்டது போய், சும்மா இருந்தாலும் பாதகம் இல்லை. அந்தக் கடவுளால் மனிதனிடம் அயோக்கியத்தனமும், பித்தலாட்டமும் தான் வளர முடிகிறது. அப்படிப்பட்ட கடவுள் நமக்கு எதற்கு? அவற்றால் மென்மேலும் கெடுதல்தான் விளையுமே அன்றி நன்மை ஒன்றும் ஏற்பட வழியே கிடையாது.

எனவே எப்படி அரசன் ஆட்சியை விட்டுப் போனது போல் கடவுள்களும் வந்த வழியே போகிறதுதான் முறையாகும். நம் முடைய நாட்டு எல்லைக்குள் ஒரு குட்டிக் கடவுள்கூட இருக்கக்கூடாது. கடவுளைக் கூறிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனக் குஞ்சுகூட இருக்கவும் கூடாது. இவை எல்லாம் நம் மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்து கொண்டு எதையும் சிந்திக்கும் அறிவில்லாது இருந்த காலத்தில் தேவைப்பட்டனர். இப்போது இவை தேவையற்றவையாகும். ஆனால் இந்த 1956ஆம் ஆண்டிலும் அவைகள் இருந்து கொண்டிருக்கின்றன என்றால் அது நம்முடைய முட்டாள்தனத்தைக் குறிக்கின்றது என்றே கூற வேண்டும்.

மற்றும் மனிதன் செய்கிற பாவ புண்ணியம் என்பதைப் பற்றிச் சிந்தித்தால் அதனுடைய யோக்கியதையும் வெளிப்படும். புண்ணியம் செய்தவன்தான் மோட்சமடைய முடியும். பாவம் செய்தவன் மோட்சமடைய முடியாது. ஆனால் பார்ப்பனனுக்குத் தானதர்மம் செய்வதால் அதுவே பெரிய புண்ணியம் என்று நம்பும்படி செய்துவிட்டனர்.

இப்படி இந்து மதத்தில் மட்டும் இல்லை. கிறிஸ்தவ மதத்திலும் இருக்கிறது. பாதிரிகள் கூறுகிறபடி கேட்டால் பாவம் மறைந்து போகுமாம். அதாவது பாவ மன்னிப்புச் சீட்டு வாங்குதல் என்ற முறை ஒன்று உண்டு. அதன்படி பாதிரியிடம் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கினால் பாவம் போய்விட்டதாகப் பொருள். இப்படியே பாதிரி பாமர மக்களிடம் பொருளை வாங்கிக் கொண்டு, நான் உங்கள் பாவத்தைப் போக்க மன்னிப்புச் சீட்டுக்கள் கொடுக்கின்றேன் என்று மக்களிடம் பணம் சுரண்டிக் கொண்டு வந்தான். இதனால் நாட்டில் நல்லவன்கூட அயோக்கியத்தனம் செய்துவிட்டு மன்னிப்புச் சீட்டு வாங்கினான். எந்தவிதமான அயோக்கியத்தனம் பொய், புரட்டு, கொலை பாதகம் செய்துவிட்டு சுலபமாக மன்னிப்புச் சீட்டு வாங்குவதன் மூலம் அப்படிச் செய்த பித்தலாட்டங்களின் கொடுமையெல்லாம் மறைந்து போய்விடுகின்றனவாம்! இந்தத் துணிவின் பேரில் எவனும் சர்வசாதாரணமாகக் கெட்டுப் போக முடிகிறது.

இதைக் கண்ட ஓர் ஆராய்ச்சிக்காரன் அந்தப் பாதிரிக்குப் புத்தி கற்பிக்க முற்பட்டான். அவனும் இரண்டொரு நாள் பாவமன்னிப்புச் சீட்டு வாங்கி வந்தான். வழக்கம் போல் வாங்கி வந்து ஒரு நாள் பாதிரியிடம் இதுவரை செய்த பாவத்துக்கு மட்டும்தான் மன்னிப்புச் சீட்டுக் கொடுப்பீர்களா? என்று கேட்டான். அதற்குப் பாதிரி செய்த பாவம், செய்கிற பாவம், செய்யப்போகிறபாவம் இப்படி முக்காலத்தில் செய்யப்படும் பாவம் அனைத்துக்கும் மன்னிப்புச் சீட்டுக் கொடுப்போம்; அதுவும் பாவத்தின் தரம் இவ்வளவு என்பது மட்டும் இல்லை. திருடினாலும், கொள்ளையடித்தாலும், விபச்சாரம் செய்தாலும், இன்னும் எப்படிப்பட்ட பாதகத் தொழில் செய்தாலும், அவைகள் அத்தனைக்கும் மன்னிப்புச் சீட்டு உண்டு என்றார். பாதிரிக்குக் காசு வேண்டும். இப்படிக் கூறிவிட்டான்.

அப்படியானால் நான் ஒரு இடத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அப்படிக் கொள்ளையடிப்பதால் உண்டாகும் பாவத்திற்கு மன்னிப்புச் சீட்டு முன்பே கொடுக்க வேண்டுகிறேன் என்று அவன் கேட்டான். பாதிரியும் சரியென்று அதற்கென்று கட்டணத் தொகையைக் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிக் கொண்டு மன்னிப்புச் சீட்டு கொடுத்து விட்டான். மறுநாள் இரவு அந்த மன்னிப்புச் சீட்டுடன் பாதிரியின் வீட்டிலேயே புகுந்து கொள்ளையடிக்கச் சென்றான். பாதிரியைக் கட்டி இழுத்து உதைத்து நீ சேர்த்து வைத்த பொருளை எல்லாம் கொடு என்று கேட்டு துன்புறுத்தவும் அதற்குப் பாதிரி அடப்பாவி! மாபாதகம் செய்கிறாய்! நீ செய்யும் தொழில் மிகப் பாவம் நிறைந்தது! இதற்கு நரக வேதனை தான் அடைய வேண்டும் என்று ஏதேதோ தான் உதைப்பட்ட வேகத்தில் உளறிக் கொட்டினான். ஆனால் கொள்ளையடிக்க வந்தவன், பாதிரி சாமிகளே! நான் இதற்குமுன்பே பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கி வைத்திருக்கிறேன்; இதோ பாரும், என்று பாக்கெட்டில் (சட்டைப் பையில்) இருந்த சீட்டை எடுத்துக் காட்டினான்.

உடனே பாதிரி என்ன முட்டாள்தனமான காரியத்தைச் சிறிதும் யோசிக்காமல் செய்து விட்டோம்! நம்முடைய பித்தலாட்ட மூட்டையை அவிழ்த்துக் கொட்டி விட்டானே! இச்செய்தி எங்கிலும் பரவினால் நம் கதி என்ன ஆகும்? என்று பயந்து அந்தக் கொள்ளைக்காரனிடம் நீ இரவில் கொள்ளையடிக்க வந்தாய்! நான் பகலில் கொள்ளையடிக்கிறேன். இதுதான் வித்தியாசம் என்று கூறி நாம் இருவரும் நண்பர்களாக வேண்டும்; இனி நான் இத் தொழிலை விட்டு விடுகிறேன். என்னை மன்னித்துக்கொள் என்று வேண்டினானாம்.

அப்படிப் பாதிரிகளின் பித்தலாட்டம் வெளுத்தது
. அது முதல் அப்படிப்பட்ட பாவ மன்னிப்புச் சீட்டைக் கொண்டே கிருஸ்தவ மதத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. ஒருசிலர் திருந்தினார்கள். மற்றவர்கள் இன்னமும் முட்டாள்களாக இருக்கின்றனர். அதைப் போன்றுதான் இந்து மதத்தில் பாவம் செய்த மனிதனை மேல் உலகில் தண்டிக்கிறார்கள். கடவுள் செய்யும் வேலையை நம்முடைய போலீஸ்காரர்கள் (காவல்துறையினர்) செய்யும் வேலைக்கு ஒப்பிட்டுக் கூறலாம். யாராவது ஒருவன் சிறுநீர் கழிக்க உட்காருகிறான் என்பதைப் போலீஸ்காரன் பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விடுவான்.

உட்கார்ந்தவன் காரியத்தை முடித்துக் கொண்டு சும்மா இருந்துவிடுவான். உட்கார்ந்தவன் காரியத்தை முடித்துக் கொண்டு எழுந்திருக்கும் சமயம் பார்த்துப் போய் பிடித்துக் கொள்வான். முன்னாலேயே பிடித்துக் கொண்டால், நான் உட்காரப் போனேன்; ஆனால் சிறுநீர் கழிக்கவில்லையே என்று வழக்குப் பேசுவான் அல்லவா? அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆளை வசமாகப் பிடித்துக் கொண்டால்தான் காரியத்தைச் சாதிக்கலாம் என்பதற்காக இப்படிச் செய்வதுண்டு. இவற்றுக்கெல்லாம் காரணம் ஏதாவது அன்றைக்குக் காஃபி சாப்பிட கிடைக்காதா என்பதற்கேயாகும். அதற்குக் குற்றம் செய்தவனும் கூடியவரை சமாளித்துப் பார்த்துவிட்டு வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்று ஒன்றுக்குப் பாதியாவது கொடுத்து விடுவான்.

இப்படி இங்கு நடக்கிறதென்றால் நம்முடைய கடவுள்களும் அப்படி இருக்கின்றன. ஒருவன் பாவம் செய்யும்போது அந்தப் பாவத்தைச் செய்யாமல் இருக்க வேண்டிய முறையில் தடுக்காமல் பாவம் செய்வதைப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு அதன் பிறகு அவன் மேலோகம் சென்றவுடன் தண்டனை கொடுக்கிறதாம். பிறகு கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? புளுகினாலும் பொருந்தப் புளுகவில்லையே என்பதைக் கண்டு பரிதாபப்படும் அளவில் தான் இருக்கிறது.

மேலும் தோழர்களே! இன்றைக்கு நீத்தார் நினைவுநாள் என்ற பெயரில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சி கருமாதி என்ற பெயரால் பார்ப்பனர்களால் நடத்தப்படுகிறது. இன்றைக்குப் பெரும்பான்மையினர் அம்முறைகளைப் பின்பற்றுவது நின்று போய் விட்டது. ஒரு சிலர் மட்டும் மற்றவர்களின் முக தாட்சண்ணியத்திற்கும், மற்றவன் நம்மைப் பரிகாசம் செய்வானே என்பதற்கும், இவனுடைய தகப்பன் செத்துப் போனதற்கு இவன் என்ன செய்தான் என்று தூற்றுவார்களே என்பதற்கும் அந்நிகழ்ச்சி செய்வது உண்டு. அந்த நிகழ்ச்சி தங்கள் தரத்திற்கேற்ற பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்வார்கள் மற்றும் சிலர் நூற்றுக்கணக்கில் செலவு செய்து செய்வார்கள், ஒன்றும் இல்லாதவன் மற்றவனிடம் வட்டிக்கு வாங்கியாவது செய்து விடுவான். இப்படி இது ஏன் செய்கிறோம்? செய்வதால் பலன் என்ன? செய்யா கெடுதல் என்ன? என்பதை சிந்திக்காமலே அடுத்த வீட்டுக்காரன் ஏளனம் செய்வானே என்பதற்காகிலும் செய்வது உண்டு.

இவையெல்லாம் தன் முன்னோர்களைத் திருப்திப்படுத்துவதற்கென்று எண்ணுவது மிகவும் முட்டாள்தனமாகும். அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்றதாகும்.

மனிதன் தன் வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே ஆகும். புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன் கூட இருக்க மாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சி செய்து புகழ் அடைய விரும்புகிறான். ஒருவன் பணக்காரன் ஆகி அதன் மூலம் தன்னை மற்றவர்கள் இலட்சாதிபதி, கோடீசுவரன் என்று புகழ வேண்டும் என்று விரும்பி வியாபாரத் துறையில் பெருக்குகிறான். உத்தியோகத்தில் உள்ளவன் தன்னைக் கலெக்டர் என்று புகழ வேண்டும். தன்னை மந்திரி என்று புகழ வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்தந்த உத்தியோகத்தை அடைய முயற்சி செய்கிறான். இப்படியே மனிதன் புகழைத் தேடிப் பலவழிகளிலும் முயற்சி செய்கிறான்.

ஆனால், மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின்பற்றுகையில் மிகவும் தவறான முறையில் பின்பற்றுகிறான். தனக்குப் புகழ் வேண்டும் என்ற எண்ணத்தின் மீது முயற்சி செய்கிறான். எப்படியோ இம் முறையை மாற்றிவிட்டனர். உண்மையில் புகழ் அடைய விரும்புகிற முறையைப் பின்பற்றாமல் மிகவும் தவறான முறையில் பின்பற்றுகிறான். இதனால் அவன் செய்த முயற்சி எல்லாம் வீணாகின்றன. இன்றைக்கு ஒருவர் தன்னுடைய வீடு என்று ஒரு வீட்டைக் கட்டினால் நாளை இவர் இறந்து போனபிறகு அது அவருடைய மகனுடைய வீடு. மகன் இறந்தவுடன் பிறகு அவனுடைய வீடு என்று அவன் பெயர் இருக்கிறது. இன்னமும் இவனுடைய காலத்திலேயேகூட இவன் கடன்பட்டு அந்த வீடு ஏலத்தில் போனால் ஏலத்தில் வாங்கியவனுக்குச் சொந்தமாகிறது. இன்றைக்கு முதலியார் வீடு நாளைக்கு ஏலம் எடுத்த சாயபுக்குச் சொந்தமாகிறது. சாயபு விற்று விட்டால் அதை நாடார் வாங்கினால் நாடாருடைய வீடு. இப்படிப் பலருக்குச் சொந்தமாகிறது.

ஆனால் மனிதன் தனக்கு என்று பெரும் பொருளைச் சேர்த்து வைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்துபோய் விடுகிறது. ஆனால் மற்றவர்களின் நலனுக்கு என்று சிறிதளவு மதிப்புள்ள பொருளை விட்டுச் சென்றாலும், அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும். எனவே மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத் தேடுவதற்குச் செய்யும் முயற்சி அத்தனையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்திற்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.


--------------- தந்தைபெரியார் -நூல்: மனிதவாழ்வின் பெருமை எது? பக்கம் 21 - 30

0 comments: