Search This Blog
21.11.08
சங்பரிவார்க் கும்பலின் வெடிகுண்டுக் கலாச்சாரம் எங்கெங்கெல்லாம் ஊடுருவியுள்ளது?
கூட்டமல்ல - வகுப்பறை!
நேற்று (20.11.2008) சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரை கூட்டமல்ல - வகுப்பறை என்று - வந்தோர், கேட்டோர் அனைவரும் வெளிப்படையாகப் பேசினர் - பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
ஒரு வகுப்பு 45 மணித்துளிகள் என்பார்கள் - அதுபோலவே அமைந்தது அவர் எடுத்துக் கொண்ட நேரமும்; 8.15 மணிக்குள் கூட்டம் முடிந்து மக்கள் கலைந்து செல்லும் ஒரு அதிசயத்தை திராவிடர்கழகம் தான் செய்திருக்கிறது. பார்வையாளர் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி இது.
சங்பரிவார்க் கும்பலின் வெடிகுண்டுக் கலாச்சாரம் எங்கெங்கெல்லாம் ஊடுருவி தன் விகார முகத்தைக் காட்டிக் கொண்டு இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த உரை மக்கள் நினைவுத் திரையில் படமாகக் காட்டப்பட்ட காட்சிகள் அவை.
நாடு எத்தகைய ஆபத்தான நிலையில் - கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை தக்க நேரத்தில் காட்டப்பட்ட சிகப்பு விளக்கு எச்சரிக்கை அது.
இசுலாமிய தீவிரவாதம், இசுலாமிய தீவிரவாதம்! என்று கோயபல்சு பாணியில் பிரச்சாரம் செய்த ஒரு கூட்டம் திருடன் திருடன் என்று கூவிக் கொண்டே உண்மையான திருடன் தப்பித்துக் கொள்ளும் வ(ப)ழி முறையைக் கையாண்டுள்ளதைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்துக் கொடுத்த ஆதாரவுரையிது.
அண்மையில் வெளிவந்த தகவல்கள், சேதிகள் என்ன கூறுகின்றன?
இராணுவத்தில் பணியாற்றும் முன்னாள் இந்நாள் அதிகாரிகளே வெடிகுண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்; குண்டுகள் தயாரிப்பது எப்படி என்பதை பயிற்சி கொடுத்து ஆள்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளனர் என்ற உண்மை அம்பலத்துக்கு வரவில்லையா?
ஒரு இராணுவ அதிகாரிதான் பிடிபட்டுள்ளார். இன்னும் இது போன்ற ஆர்.எஸ்.எஸ்.கார அதிகாரிகள் இராணுவத்தில் ஊடுருவியுள்ளனர் என்ற தகவல்களும் வெளிவரவில்லையா?
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தொலைநோக்கோடு - இராணுவத்தையே காவிமயமாக்கிட வேண்டும் என்ற வெறியோடு மிகப் பெரிய சதித் திட்டத்தோடு செயல்பட்டுள்ளனர் என்பது இப்பொழுது அம்பலமாகிவிடவில்லையா? இராணுவத்துறை என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு உயிரினும் மேலான முக்கிய துறையாயிற்றே!
ஒரு பாட்டில் விஸ்கிக்காக காட்டிக் கொடுத்த கூர்ம நாராயணன் போன்ற பார்ப்பனர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டபோதே நாடு அதிர்ந்தது. ஒருவர் என்கிற நிலையிலேயே அந்த அதிர்வு என்றால், இன்று ஆயிரக்கணக்கில் இராணுவத்தில் குவிந்து கிடக்கிறது காவிக் கூட்டம் என்று நினைக்கும்போது நெஞ்சம் படபடக்கவில்லையா? குருதி உறைந்துவிடவில்லையா? இது எங்கே போய் முடியும் என்ற அச்சம் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் உள்ளத்திலும் நெருப்புக் கேள்வியாக அனல் கக்கவில்லையா?
எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் இந்த இராணுவ ஊடுருவல் கும்பலை வெளியேற்றவில்லையென்றால், ஒரு நாள் நாட்டில் என்ன நடக்கும் என்ற திகில் மக்கள் நலம் பேணுவோர் மனத்தில் எல்லாம் உலுக்கத்தானே செய்யும். இராணுவத்தில் மட்டுமல்ல - நிருவாகத்திலும்கூட அனைத்து மட்டங்களிலும் இலட்சக்கணக்கான சங்பரிவார்க்கூட்டம் கூடாரம் அடித்துள்ளதே - நங்கூரம் பாய்ச்சி உள்ளதே.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) போய், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ஆனால் நிருவாகத்தில் நிலைத்து நிற்பவர்களின் செயல்பாடுகளில் காவி நாற்றம்தானே மூக்கைத் துளைக்கிறது?
அணு ஒப்பந்தம் முதல் பல்வேறு பிரச்சினைகளைப் பேசிக் கொண்டு இருக்கிறோம். அதற்கெல்லாம் அப்பனான பிரச்சினை - நாட்டை காவி கவ்விக் கொள்ளப் போகிறதா? - மதச்சார்பின்மை மணம் வீசப் போகிறதா? என்பதுதான்.
இடதுசாரிகளுக்கு இதில் ஒரு தெளிவு இருக்க வேண்டாமா? அணு ஒப்பந்தத்தைச் சொல்லி, இன்றைய நிலையை குப்புறக் கவிழ்த்து விடலாமா?
இந்துத்துவா வெறியர்களை சிம்மாசனத்துக்கு அழைத்துச் செல்ல சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா? அப்படி நடப்பது வரலாற்றுக் குற்றமும், பழியும் ஆகாதா?
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களிடத்தில் எதைக் கொடுக்கப் போகிறோம்? எந்த வகையில் அவர்களைத் தயாரிக்கப் போகிறோம் என்பதுதானே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும்? அணு ஆயுத ஒப்பந்தத்தை நாங்களும் எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இடதுசாரிகளின் குரலை தாங்களும் முன் வைப்பதாக பேசிக் கொண்டே இடதுசாரிகளின்பிரச்சாரத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட நயவஞ்சக தந்திர யுக்தியை பயன்படுத்திக் கொண்டே தங்களின் காவிக்கொடியை டில்லி செங்கோட்டையில் ஏற்றப் பார்க்கின்றனர் என்பதை நாம் உணரா விட்டால் வேறு யார்தான் உணரக் கூடும்? விபரீதம் வெடிக்கும் முன்னே தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். காரியம் கெட்டுப் போகு முன்னே கருத்தூன்றிக் கவனிக்க வேண்டும்.
இடதுசாரிகள் நெருங்கிச் செல்லும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் காவிகளின் பக்கமா? சமதர்மவாதிகளின் பக்கமா?
கடந்த கால அனுபவம்தானே சரியான ஆசான்? அது நமக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கவில்லையா?
நவீன நீரோ மன்னன் நரேந்திரமோடி பதவிஏற்பு விழாவுக்குத் தனி விமானத்தில் பறந்து சென்ற - பா.ஜ.க. அல்லாத ஒரே முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அல்லவா!
நரேந்திரமோடியை நல்வரவேற்புக் கூறி போயஸ்தோட்டத்துக்கு வகை வகையான வகையில் விருந்து அளித்து உபசரித்தது எந்த உள்ளத்தோடு? மாலேகான் பிரச்சினை இந்தியத் துணைக் கண்டத்தையே கலக்கிக் கொண்டு இருக்கிறதே இதுகுறித்து ஒரே ஒரு சொல் கூறியதுண்டா இந்த அம்மையார்? இவரை நம்பித்தான் மதச் சார்பின்மையைக் காப்பாற்றப் போகிறார்களா? குதிரை காணாமற் போனபின் இலாயத்தை இழுத்துப் பூட்டியாது பயன்?
இடதுசாரிகள் சிந்திக்கட்டும்! வெகு மக்கள் கருத்தூன்றிப் பார்க்கட்டும். எதிர்காலத்தைப் பொறுப்போடு எண்ணுவோம் - செயல் படுவோம் - இவைதான் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் உரையின் சாரம். அசை போடுங்கள் அறிவு நடை போடுங்கள்.
---------------- 21-11-2008 "விடுதலை"யில் - மின்சாரம் அவர்கள் எழுதியது.
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கலைஞரைப் பிடிக்காத பாண்டியரும்,
காங்கிரசைப் பிடிக்காத கம்யூனிஸ்டும்
கடைசியில் சேருமிடம் கழிசடை தான்
என்றால் இது கொள்கையல்ல,
கொள்ளைதான் என்பதைத் தமிழகம் நன்கு புரிந்து கொள்ளும்.
கொள்ளையர்களுடனும்,கொலைகாரர்
களுடனும் சேர்ந்து மதவாதத்திற்கு வால் பிடிப்பது வெட்கமும்,வேதனையும் பட வைக்கிறது.
த. பாண்டியனின் தப்பான முடிவை
தமிழகம் ஏற்றுக் கொள்ளாது.
அவர் மேல் மரியாதை வைத்திருக்கும் நம்மைப் போன்றவர்கள் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது.
எப்படியிருப்பினும் சங்பாரிவாரின் அங்கம் ஜெயலலிதா. அதை நாம் சொல்லியா த. பா. தெரிந்து கொள்வது. வெடகம்.
Post a Comment