Search This Blog

14.11.08

தாழ்த்தப்பட்டோருக்கும் கிரீமிலேயரா?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதைபோல கிரீமிலேயர் (பொருளாதாரப் பசை) அளவுகோல் என்னும் கத்தி தாழ்த்தப்பட்டவர்களின் கழுத்துக்குக் குறி வைக்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிடுமோ என்கிற அய்யமும், அச்சமும் ஏற்பட்டுள்ளன.

அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் வாயிலிருந்தே வருவது - பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

அவர் அளித்த பேட்டி ஒன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் (11.11.2008) வெளிவந்துள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களிடத்தில் பொருளாதார அளவுகோலை (Creamy Layer) கொண்டுவர வேண்டிய தருணம் வந்துவிட்டது - எனினும் அரசியல் ரீதியாகப் பெரும்பான்மை கருத்து இதில் அறியப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மிக உயர்ந்த அதிகாரப் பீடத்தில் இருக்கும் தலைமை நீதிபதியிட மிருந்தே இப்படிப்பட்ட கருத்து வருகிறது என்றால் அதன் பாதிப்பு ஆணி வேர் வரை பிரதிபலிப்பு அலைகளை எழுப்பும் என்பதில் அய்யமில்லை.

சமூகநீதியை எப்படியும் ஒழித்துக்கட்டியே தீருவது என்று ஒற்றைக்காலில் தவம் இருக்கும் ஆதிக்கக் கூட்டம், இதனை மெதுவாக விவாத மேடைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

தாங்கள் படித்த வித்தைகளை எல்லாம் காட்டி அறிவு ஜீவிகள் என்று - தன் முதுகில் தம்பட்டம் கட்டி அடித்துக்கொள்ளும் பேர் வழிகள் இதற்கென்றே எச்சில் ஊறிக் கொண்டு காத்துக் கிடக்கிறார்கள்.

இவர்களுக்குத் தலைப்பாகை கட்டி தாரை தப்பட்டையுடன் பூர்ண கும்பம் கொடுத்து நடை பாவாடை விரித்து ஒரு புது உத்வேகத்துடன் வரவேற்கவே காத்துக் கொண்டிருக்கின்றன பார்ப்பன ஏடுகள்.

ஆசிரியருக்குக் கடிதம் என்ற குருச்சேத்திரம் இதற்காகவென்றே ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்றாயிற்றே!

பார்ப்பனர்கள் மட்டுமல்ல - புதிய பார்ப்பனர்களாகத் தங்களை வரித்துக் கொண்டிருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களில் சிலர்கூட எளிதாக இந்த வலையில் விழுந்து தம் பேனா திறமையினைக் காட்டுவார்கள்.

இதனைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், குறுகிய காலத்தில் மரமாகிவிடும் ஏற்பாடுகள் தாம் - தூம் என்று நடந்துவிடும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிரீமிலேயரை அறிமுகப்படுத்தியபோதே நாம் தொலைநோக்கோடு எச்சரித்தோம். இது ஏதோ பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட ஒன்று என்று தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுங்கி நிற்கக் கூடாது; நாளைக்கோ, நாளை மறுநாளோ இது தாழ்த்தப்பட்டவர் களையும் தீண்டக்கூடிய கருநாகம்தான் என்று எச்சரித்தோம்.

அது நிஜமாகவே இப்பொழுது படம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் இரு பிரிவினரும் இட ஒதுக்கீடு என்னும் அவசியத்திற்கு உரியவர்கள் ஆவார்கள். அவரவர்களுக்கு என்று தனித்தனி ஒதுக்கீடு இருக்கிறது. யார் பங்கையும் யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. இந்த நிலையில், இரு நிலைகளில் உள்ளவர்களும் சமூகநீதிப் பிரச்சினையில் கைகோத்து நின்றால்தான் மிகப்பெரிய பலமாக இருக்க முடியும். அத்தகைய காலகட்டத்தில் இடஒதுக்கீட்டில் கை வைக்க யாரும் துணியமாட்டார்கள்.


நிலை I (Class I) அதிகாரிகள் 40 ஆயிரம் பேர்களைக் கொண்ட ஒரு அமைப்பு புதுடில்லியில் கூடி தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் உள்ள இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவேண்டும் என்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ், நாள்: 27.9.1990). அப்பொழுதே நாம் எச்சரித்தோம். தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டோரும் பொது எதிரியை அடையாளம் காண வேண்டும். இருதரப்பு ஒற்றுமை பலமாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றத்தில் 520 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்றால், அதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 85 தான்.

இதில் கிரீமிலேயரையும் கொண்டு வந்து - ஓரளவு படித்து முன்னேறிய மக்களை வெளியேற்றிவிட்டால், இப்பொழுது கிடைத்திருக்கக் கூடிய எண்ணிக்கை அளவுக்குக்கூட நீதிபதிகள் வர முடியாது என்பது மலைபோன்ற உண்மையாகும்.

அதேபோல, இந்தியாவில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 7000 பேர் இருக்கின்றனர் என்றால், அதில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் எல்லாம் சேர்த்து 3000 தான். மீதி நான்காயிரமும் பார்ப்பன உயர்ஜாதி மக்களின் வயிற்றில்தான் அறுத்து வைத்து கட்டப்படுகிறது.

கிரீமிலேயரைக் கொண்டுவருவதன்மூலம் இந்த அளவு எண் ணிக்கையும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பறிக்கப் பட்டு, பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற நிலைக்குத்தான் தள்ளப்படும்.

ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து உச்ச அதிகாரத்தில் உள்ள ஒருவரிடம் நாம் பாதுகாப்பைத்தான் எதிர்பார்க்கிறோமே தவிர, வேறு திசையில் அல்ல.

இந்தக் கட்டத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக் குரலை உரத்த முறையில் எழுப்புவார்களாக!

நன்றி;"விடுதலை' தலையங்கம் 14-11-2008

7 comments:

குடுகுடுப்பை said...

இதை படியுங்கள்
குடுகுடுப்பை: இட ஒதுக்கீடு கிரீமி லேயர் என் பார்வை

T.V.ராதாகிருஷ்ணன் said...

இதை படியுங்கள்
http://tvrk.blogspot.com/2008/10/blog-post_04.html

தமிழ் ஓவியா said...

குடுகுடுப்பை பதிவை ஏற்கனவெ படித்து விட்டேன். குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் இருந்தது.

தமிழ் ஓவியா said...

டி.வி.ஆர். உங்கள் பதிவையும் ஏற்கனவே படித்துவிட்டேன்.
தங்களின் வருகைக்கு நன்றி.

குடுகுடுப்பை said...

தமிழ் ஓவியா said...

// குடுகுடுப்பை பதிவை ஏற்கனவெ படித்து விட்டேன். குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் இருந்தது.//

பெரியார் போல தெளிவாக சொல்லுங்கள்.நம்மில் ஒதுக்கபடுபவனுக்கு என்ன பதில்.

நேர்மையாக ஒரு சர்வே எடுங்கள்.தெரியும், நம்மில் ஒரு வர்க்கம் உருவாகிறது புரியும்.

தமிழ் ஓவியா said...

//பெரியார் போல தெளிவாக சொல்லுங்கள்.//

ஜாதிவாரியாகக் கனக்கெடுப்புநடத்தி அந்தந்த ஜாதிக்கு உரிய பங்கை கொடுத்தால் இப்பிரச்சினை தீர்ந்துவிடும்.
பெரியார் போல் பதில் சொல்லுவதைவிட பெரியாரே பதில் சொல்லுகிறார்.கேளுங்கள்.

"பதவிகள் வழங்குவதில், உத்தியோகம் வழங்குவதில் அரசாங்கம் எந்தச் சாதியருக்கும் எந்த மதத்திற்கும் பாரபட்சம் காட்டக்கூடாது.ஒவ்வொரு சாதிக்கும், ஒவ்வொரு மதத்திற்கும் அதை சேர்ந்த மக்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதோ,அந்த எண்ணிக்கை விகிதப்படி பதவி, உத்தியோகம் முதலியவைகளை வழங்க வேண்டும். தகுதி திறமை என்பதெல்லாம் எல்லாச் ஜாதி, மத வகுப்பிலும் சமமாக இருந்து வருகின்றன.

------பெரியார் -
"விடுத்லை' 5-3-1969

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரியாகக் கனக்கெடுப்பு பற்றி குடுகுடுப்பை அறிந்து கொள்ள மேலும் ஒரு தகவலுக்காக..


"

ஜாதி இன்னும் சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும்

ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சி - முன்னேற்றம் என்ற
கண்ணோட்டத்தில் இது தேவையான ஒன்றே!

ஜாதி இன்னும் சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நடக்க இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (Census) ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

நடக்கவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, "ஜாதி” (Caste) என்ற கலத்தில் (Column) அதைக் குறிப்பிடுவது ஒடுக்கப்பட்டவர்களது வளர்ச்சி, முன்னேற்றம் ஆகிய கண் ணோட்டங்களில் மிகவும் தேவையான ஒன்றாகும்!

நீதிபதிகளின் தீர்ப்பு

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப சமூகநீதி பெற்றிட, ஜாதி வாரி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப் படவேண்டியது அவசியம்; இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை குறிப்பிட்ட கால வரம்புக்குள் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபெ தர்மாராவ் மற்றும் எஸ். தமிழ்வாணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் தெளிவாகக் கூறியிருப்பதும் (26.10.2008) வரவேற்கத்தக்கதாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலைச் சந்தித்து 170 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியுள்ளனர் என்பதும் நல்ல செய்தியே!

சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படவில்லை

இன்று நாட்டில் உள்ள நிலையில், ஜாதியை ஒழிக்க நாம் கடுமையான முயற்சிகளை, பிரச்சாரங்களை, வேலைத் திட்டங்களை - ஜாதி மறுப்புத் திருமணங்கள் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுகிறோம் என்றாலும்கூட,

நமது நாட்டில் ஜாதிமுறை - சட்டப்படி ஒழியவில்லையே!

நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் "ஜாதி” (Caste) என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது என்பதை கர்நாடகத்தில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான எல்.ஜி. ஹாவனூர் கமிஷன் அறிக்கையிலேயே மிகவும் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது!

தந்தை பெரியார் கூட்டிய கடைசி மாநாட்டின் தீர்மானம்

அதனால்தான் ஜாதி ஒழிப்பையே தனது வாழ்நாள் தொண்டாகத் தம் மேல் போட்டுக்கொண்டு உழைத்த அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், நமது இந்திய அரசியல் சட்டத்தில் 17 ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும், சட்டப்பூர்வமாக தடைப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும் நிலையில்,

“Untouchability is abolished and its practice in any form is forbidden by law” (Article 17) என்பதில், ‘Untouchability’ என்ற சொல்லை நீக்கிவிட்டு, ஜாதி (Caste) - என்ற சொல்லைப் போட்டுவிட்டு, அடியில் விளக்கத்திற்காக (By way of Explanation - Caste includes “untouchability also) என்று போட்டுவிடலாம் என்று, தாம் நடத்திய கடைசி மாநாடான தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் (சென்னையில் 1973 டிசம்பர் 8, 9) முக்கிய தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு வெளிச்சத்தைத் தந்தார்கள். அதனை இத்தனை ஆண்டுகள் - 35 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி, சுதந்திர நாட்டில் சூத்திரன் இல்லை, பஞ்சமன் இல்லை; பார்ப்பான் இல்லை; மனிதர்கள் - உண்டு என்று காட்ட எந்த முயற்சியையும் எடுக்கவில்லையே!

பெரும்பாலும் எல்லா திருமண விளம்பரங்களில்கூட, ஜாதி - கோத்திரம் பார்க்கப்படுகின்றன; கேட்கப்படுகின்றனவே!

நெருப்புக்கோழி மனப்பான்மை வேண்டாம்!

இந்துக் கோயில் கருவறைகளில் உயர்ஜாதி பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராகி பூஜை செய்ய இயலும் என்று இதுவரை இருந்து வந்த நிலையை புதியதோர் சட்டம் கொண்டு வந்து நமது முதல்வர் கலைஞர் தலைமையில் உள்ள அரசு ஒரு சமூகச் சீர்திருத்தச் சட்டத்தை கொணர்ந்த நிலையில்கூட, அதையும் எதிர்த்து உச்சநீதி மன்றப் படையெடுப்புகள் நடைபெறாமலா இருக்கின்றன?

இந்நிலையில், சென்சஸ் - மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, மாத்திரம் ஜாதியைக் குறிக்காமல் விடுவதால் யாருக்கு லாபம்? முன்னேறிய ஜாதியரான - ஆதிக்க ஜாதியரான பார்ப்பனர் போன்றவர்களுக்குத்தானே அது கல்வி, உத்தியோகங்களை ஏகபோகமாய் அனுபவிக்க உதவிடும் - வாய்ப்புகளை ஏற்படுத்தும் மறைமுக வழியாகவிருக்கிறது?

ஜாதியை சட்டப்பூர்வமாக ஒழிக்க முன்வராத நிலையில், இப்படி ஒரு நெருப்புக்கோழி மனப்பான்மை எதற்குப் பயன்படக் கூடும்?

1931-க்குப் பிறகு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம்பற்றிய வழக்கு வந்தபோது, இதை ஒரு முக்கிய காரணமாக சில நீதிபதிகள் சுட்டிக்காட்டினரே!

1931-க்குப் பிறகு சென்சஸ் - மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடைபெறவே இல்லை; பழைய கணக்குப்படிதான், இந்த இட ஒதுக்கீடு உள்ளது என்று கூறி நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று ஆக்கிக் கொள்ள முயற்சித்தனரே!

மார்பில் முப்புரி நூல் - பூணூல் அணிந்துகொண்டே, ஜாதி யெல்லாம் போட வேண்டாம் என்று உபதேசம் செய்வதனால் அவாள் ஜாதி ஒழிப்புப் புரட்சியாளர்களாகி(?) விட்டார்கள் என்று நம்மில் பெரும்பாலோர் நம்பி ஏமாற வேண்டுமா? கூடாது! கூடவே கூடாது!

போர்க்களத்தில் நாம் எடுக்கவேண்டிய ஆயுதம் எது? என்பதை நம்முடைய எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்ற மாவோவின் பொன்மொழிதான் நமக்கு இப்போது நினைவிற்கு வருகிறது!

1962 இல் தந்தை பெரியார் சொன்னது...

1962 ஆகஸ்ட்டில் புதுச்சேரியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிகழ்த்திய பேருரையில் தந்தை பெரியார் அவர்கள் கூறினார்கள், ஜாதிப் பட்டத்தை நீக்கிவிட்டு, கல்வி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள் அனுபவிக்க ஒரு முற்போக்கு வேஷம் போடுகிறார்கள் என்றால், அதைப் புரிந்துகொண்டோம் நாம் என்று காட்ட, நீங்கள் ஜாதிப் பட்டத்தையும் போட்டுக் கொள்ளத் தயங்காதீர்கள் என்று சொல்லவேண்டிய அவசியமும் கூட வரக்கூடும் என்று தெளிவாகச் சொன்னார்கள்!

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பதில் எவ்வித முரண்பாடோ, பின்னடைவோ கிடையாது!

பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் புதுடில்லியில் பலரையும் கூட்டி எடுத்த முயற்சி மிகவும் வரவேற்கத் தக்க முயற்சி! நாம் காலங்காலமாக எடுத்துச் சொன்ன கருத்துகளின் உருவாக்கமே அது!

எனவே, மற்ற அரசியல், சமூக இயக்கங்களும், எவ்விதக் குழப்பத்திற்கும் ஆளாகாமல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, ஜாதியைக் குறித்தாகவேண்டும் என்பதை வலியுறுத்திட முன்வரவேண்டும்.

ஜாதி ஒழிப்பு சட்டப்பூர்வமானால், பிறகு இப்படி ஒரு நிலைப்பாடு தேவைப்படாது என்பதையும் ஜாதி ஒழிப்பு ஆர்வலர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

------------------ "விடுதலை" 29-10-2008