Search This Blog
22.11.08
சோ கூட்டம் கற்பிக்கும் அபாண்டங்களை இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள் செய்யலமா?
தீக்கதிரா - துக்ளக்கா?
* புலிகள் தமிழ் மக்களின் எழுச்சியின் பிரதிநிதிகள் அல்ல
* தமிழ் மக்களின் எழுச்சியை வைத்து அரசியல் தீர்வுக்கு முயற்சிக்க மறுத்த அமைப்பு - தற்கொலைப் படையை உருவாக்கி தனிமைப்பட்ட அமைப்பு
* தற்கொலைப் படையை உருவாக்கி தற்கொலைப் படையின் தாக்குதலால் பாமரர்களையும் குழந்தைகளையும் பலி வாங்கியது விடுதலைப்புலிகள்.
* மீதமிருக்கும் குழந்தைகளை யும் குண்டுகளாக்கி கொல்லக்கூடிய அமைப்பு இது.
* இதன் மூலம் உலக மக்களின் வெறுப்பையும், இராணுவத்திற்கு உறு தியையும் உருவாக்கக் கூடியது.
* தமிழ் மக்களையும் அவர்களை நேசிக்கும் தலைவர்களையும் அதிகம் கொன்று வருவது இலங்கை அரசல்ல - புலிகளே!
* இளம் சிறார்களை மூளைச் சலவை செய்து தற்கொலைப் படை யாக்கும் கொடுமையைக் கண்டு கொதிக்காத நெஞ்சங்கள் இருக்க முடியுமா?
* இந்தக் கொடுமையை கண்டே புலிகளுக்குத் தஞ்சம் கொடுக்கும் 46-க்கும் மேற்பட்ட நாடுகள் விடு தலைப் புலிகளின் அமைப்பைத் தடை செய்துள்ளன.
* இந்திய அரசின் இராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டு, ஆயுதங்களும் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் புலிகள் அன்று; ஏன் இந்திய அரசு புலிகளை ஆதரிக்க வேண்டும்? பின்னர் அதனை ஒடுக்க இலங்கை அரசுக்கு ஏன் உதவ வேண்டும்? இதன் விளைவாக ஒரு காலத்தில் இரு தரப்பினரின் நம்பிக் கையைப் பெற்றிருந்த இந்திய அரசு அவநம்பிக்கையைச் சம்பாதித்துக் கொண்டது.
* எனவே நார்வே நாடு சமரசத் தூதுவராக ஆனது. அதுவும் பின்னர் பின் வாங்கியது!
- இவ்வளவையும் எழுதியிருப்பது துக்ளக் இதழாகத் தான் இருக்கும் திருவாளர் சோ ராமசாமி அய்யர்தான். இவ்வளவு வன்மத்தோடு எழுதக் கூடியவர், தமிழின வெறுப்புக்கு அவர்தானே ஏகப்பிதா - எனவே துக்ளக்க்கில் வெளிவந்துள்ள கட்டுரையில் ஒரு பகுதிதான் மேலே எடுத்துக்காட்டியிருப்பது என்று பலரும் நினைக்கலாம்.
ஆனால் உண்மை வேறாகயிருக்கிறதே! இவ்வளவையும் பட்டியல் போட்டுக் காட்டியிருப்பது இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் சி.பி.எம்.) கட்சியின் அதிகாரப் பூர்வமான நாளேடான தீக்கதிர் ஏட்டில் தான் (19.11.2008). தோழர் வே. மீனாட்சிசுந்தரம் தான் இந்தக் கட்டுரையாளர் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்னொரு பக்கம் - என்பது கட்டுரையின் தலைப்பாகும். இவ்வளவையும் எழுதிவிட்டு என்ன தீர்வினைத் தருகிறார் இந்த மார்க்சியவாதி?
இலங்கையை ஈழம், சிங்களம் என்று இரு நாடுகளாகப் பிரித்தால்தான் அங்குள்ள தமிழ் மக்கள் இன மானத்தோடு வாழ வழி பிறக்கும்; தமிழ் பிழைக்கும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் - கலைஞர்கள் சிலர் உணர்ச்சி வயப்பட்டுத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்களே, இது சரிதானா? ஒரு இனம், ஒரு நாடு என்ற கட்டத்தை மானுடம் தாண்டிப் பல மொழிகள் பல பண்பாடுகள் கொண்ட கலவையாக நாடுகள் ஆகிற போக்கு நவீன ஆக்கமாக உள்ளதே; அந்த நிலையில் உணர்ச்சி வயப்பட்டு பிரிவினை கோரி குருதி சிந்துவதால் யாருக்கு லாபம்? இன்பத் திராவிட நாடு கோரிய உணர்வை இப்பொழுது நினைத்தாலும் சிறு பிள்ளைத்தனம் என்று நெஞ்சில் முள்ளாகக் குத்தவில்லையா? பிற மொழி அறிஞர்களும் போற்றுகிற செம்மொழித் தமிழைக் காக்கவும் வளர்க்கவும் இலங்கைத் தமிழர்கள் நிரந்தரமாக பலி ஆக வேண்டுமா? புலிகளைத் தவிர மற்ற தமிழ் அமைப்புகள் உலக அனுபவத்தை பார்த்து ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அமைப்பு என்ற கோட்பாட்டை ஏற்கிற பொழுது இங்குள்ளவர்கள் தனி ஈழம்தான் தீர்வு என்று முழங்குவது சரிதானா? சிங்கள மொழி பேசுபவர்கள் அனைவரும் வெறியர்கள் என முத்திரை குத்தி வெறுப்பதால் என்ன பலன்? அரசுகள், இயக்கங்கள் ஆகியவற்றின் வர்க்கத் தன்மைகளை பார்க்க மறுப்பது சரிதானா? - இவ்வாறு தீக்கதிர் கட்டுரையில் தீட்டப்பட்டுள்ளது.
ஈழத் தீவிலே தமிழ்ப் போராளிகள் ஆயுதங்களை ஏந்தியது எந்த கட்டத்தில்? எடுத்த எடுப்பிலேயே இந்த முடிவுக்கு அவர்கள் வந்தார்களா? அவர்கள் ஆயுதங்களை ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏன்? என்பது குறித்து சிந்தித்தால்தான் அது மார்க்ஸிய பார்வையாக இருக்க முடியும்.
சோ ராமசாமி, இந்து என் ராம் போன்றவர்கள் சகட்டு மேனிக்கு எழுதுவதுபோல காம்ரேட் ஒருவர் எழுதுவதுதான் நெஞ்சில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது. ஈழத் தமிழர்கள் தந்தை என்று மதிக்கப்படும் செல்வா என்ற செல்வநாயகம் காந்திய வழியில்தானே போராடினார்? ஜனநாயக வழிமுறையில் தேர்தல்களை யெல்லாம் சந்தித்து உண்டே. அவையெல்லாம் கோழைத் தனமாகத் தான் மதிக்கப்பட்டன.
1956-ஆம் ஆண்டிலே இலங்கையிலே என்ன நடந்தது? சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி (Only Sinhala Act) என்று சட்டம் இயற்றப்பட்டதே!
1956 ஜூன் 5-ஆம் தேதியன்று தந்தை செல்வா தலைமையில் கொழும்பில் உள்ள காலி முகத்திடல் OWUP என்னும் இடத்தில் பட்டினிப் போராட்டத்தை நடத்தியபோது சிங்கள இனத்தவர்கள் உருட்டுக் கட்டைகளால் குருதி சொட்டச் சொட்ட தாக்கினார்களே - சிலர் அடித்துத் துவைக்கப்பட்டு பக்கத்தில் ஓடிய ஆற்றில் வீசி எறியப்பட்டார்களே!
அந்த ரத்தக் களரியோடு நாடாளுமன்றத்திற்கு அந்த அறப் போராளிகள் சென்ற போது, அன்றைய பிரதமர் பண்டாரநாயகா எப்படி நடந்து கொண்டார்? அவர்களைப் பார்த்து கேலியாகச் சிரித்தார் கெக்கலி கொட்டினார். எதற்காக இப்படி அடிவாங்கிச் சாகிறீர்கள்? சிங்களவர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள். தமிழ் என்றெல்லாம் பேசாதீர்கள் இனிமேல் சிங்களம்தான் ஆட்சி மொழி என்று கூறினாரே -
அடுத்து பத்து நாள்களிலே என்ன நடந்தது? கொழும்பிலிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள கல்ஓயா (Gall E Face of Gound) எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டனவே! 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனரே!
1972-இல் திருமதி பண்டார நாயகா கொண்டு வந்த சட்டம் என்ன? இலங்கையில் அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் இனத்தால் சிங்களர்களாகவும் மதத்தால் பவுத்தர்களாகவும் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதே!
தோழர் மீனாட்சி சுந்தரம் சொல்லுவதுபோல இலங்கையின் ஒன்றுபட்ட ஆட்சியில் சுயாட்சி என்ற கோட்பாடு பற்றி எழுதியுள்ளாரே - இதன் பொருள் என்ன?
இலங்கை என்கிற சிங்கள இனத்தின் கீழ் புத்த மதத்தின் கீழ், தங்கள் தாய்மொழியான தமிழ் ஆட்சி மொழி என்கிற தகுதியையும் இழந்து இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ, தமிழர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூற வருகிறாரா?
இந்தியாவில் சங்பரிவார்கள், சிறுபான்மை மதத்தவர்களைப் பார்த்துக் கூறி வருகிறதே - குடிமக்கள் உரிமையும் இன்றி வாழத் தயாராக வேண்டும்! என்று வெறிக் கூச்சல் போடுகிறார்களே! அதே நிலை தானே இலங்கைச் சட்டத்தின் உள்ளடக்கம்! சங்பரிவார்க் கூறும்போது கோபம் கொப்பளிக்கிறது. சிங்களவர்கள் பற்றிக் கூறும் போது மட்டும் சினம் வராமல் போவது - ஏன்?
இன்றைய இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஏற்காததுமாக என்ன சொன்னார்? இனி இங்கு ஒற்றை ஆட்சி முறைதான் என்று அறிவிக்க வில்லையா?
1987 ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் கிழித்து எறிந்து தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்குப் பகுதி இணைப்பை ரத்து செய்து விடவில்லையா?
ஜனதா முக்தி பெரமுனா (ஜெ.வி.பி) ஜாதிகா ஹெலா உருமயா மற்றும் சிங்கள உருமயா ஆகிய கட்சிகளுடன் உறவு வைத்துதானே தேர்தலில் போட்டியிட்டார்
இந்தக் கட்சிகளுடன் கூட்டு வைத்திருப்பது அடால்ஃப் ஹிட்லருடன் கூட்டு வைத்திருப்பதற்குச் சமம் என்று முன்னாள் அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா இந்து ஏட்டுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டாரே (9.11.2005)
கம்யூனிசம் பேசும் அந்த ஜெவிபியின் பிரதிநிதிகள், இந்திய மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுகள் கட்சி நடத்திய மாநாட்டில் (பஞ்சாபில்) சிறப்பு விருந்தனர்களாகக் கலந்து கொண்டனர் என்ப தும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
விடுதலைப்புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும் தனிமைப்படுத்தப் பட்டது என்றும் கூறுகிறார். அது உண்மையா?
விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பாகவே இரவும் பகலுமாக பாடுபடும் ஏடுகளுக்கு இங்கு பஞ்சம் கிடையாது. அதே நேரத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு - விடு தலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் 51 விழுக்காடு என்று கூறுகிறதே. இது தான் புலிகள் மக்கள் செல் வாக்கை இழந்து விட்டனர். தனிமைப்படுத்தப்பட்டனர் என்பதற்கான அத்தாட்சியா?
மக்கள் ஆதரவு இல்லாமல் ஒரு நொடி நேரம் எந்த வலிமை வாய்ந்த அமைப்பும் தாக்கு பிடித்துக் கொண்டு தான் இருக்க முடியுமா?
சோ கூட்டம் கற்பிக்கும் அபாண்டங்களைச் சுமக்கும் ஒரு வேலையை இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள் செய்யலாமா?
அய்க்கிய விடுதலை முன் னணி (டி.யூ.எல்.எப்), தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (டெலோ), ஈழ மக்கள் புரட்சி கர விடுதலை முன்னணி (இ.பி.ஆர்.எல்.ஃஎப்) இவை அனைத்தும் அங்கம் வகிக்கும் அமைப்புதான் தமிழர்தேசிய அணி.
இந்த அமைப்புகள் விடு தலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் அல்ல. அதே நேரத்தில் இந்த அமைப்புகளின் நாடாளுமன்றக் குழு தலைவரான ஆர். சம்பந்தம் நவம்பர் 14-இல் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியது என்ன? விடுதலைப்புலிகளைப் போரில் வெல்ல முடியாது என்று சிங்களர்கள் மிருக பலத்தில் கூடியிருந்த நாடாளுமன்றத்திலேயே பதிவு செய் தாரே!
யாழ் நூலக எரிப்பு - சிறையில் புகுந்து போராளிகளை சிங்களக் காடையர்கள் கொன்றது - தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று விளம்பரம் செய்தது - தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது - பச்சிளங் குழந்தைகள் தங்கியிருந்த விடுதியில் குண்டு போட்டுக் கொன்றது - மக்கள் புகலிடம் தேடிய ஆலயங் களில் குண்டு போட்டது - மருத்துவமனைகள்மீது கூட ஈவு இரக்கமின்றி தாக்கி அழித்தது எல்லாம் ஒரு பொதுவுடைமைத் தோழரின் கண்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே!
இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஆயுதம் தாங்க வேண்டிய அவசியத்திற்கு ஆளான போராளிகளைக் கொச்சைப்படுத்துவதில் மட்டும் சோ ராமசாமிக்குப் போட்டியாக குதிப்பது எந்த வகையில் நியாயம்?
தன்னெதிரே தன் தாயையும், தங்கையையும் மானபங்கப் படுத்தியவனை மார்பைப் பிளப்பது என்பது மானத்தைப்பற்றி கவலைப்படு பவர்களின் செயல்தான். அதில் குற்றம் காண ஏதும் இல்லை.
ஈழப் பிரச்சினையில் வர்க்கத் தன்மைகளைப் பார்க்க மறுப்பது ஏன்? என்ற வினாவை தோழர் மீனாட்சி சுந்தரம் எழுப்பியிருக்கிறார்.
அதானே பார்த்தோம்! அந்த இடத்திற்கு வராமல் இருப்பார்களா என்ன வர்க்கத்தனம் - கொஞ்சம் விளக்கியிருக்கக் கூடாதா?
தீவிரப் பொதுவுடைமை பேசும் - சிறீலங்காவில் உள்ள ஜெவிபி தமிழர்களைப் பார்ப்பதுகூட வர்க்கப் பார்வையில் தானா?
தொட்டதற்கெல்லாம் அமெரிக்காவை விமர்சிக்கும் காம்ரேட் - விடுதலைப்புலிகள் விஷயத்தில் மட்டும் அமெரிக்காவின் உளவுத்துறையின் அறிக்கையைத் தனக்குச் சாதகமாக அழைத்துக் கொள்வதுதான் வேடிக்கை.
1) புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு 2) தற்கொலைப் படை அணியும் பெல்டைக் கண்டுபிடித்தவர்கள் 3) பெண் தற்கொலைப் படை தயாரிப்பின் முன்னோடிகள் 4) கூலிப்பட்டா ளம். எனவே பண உதவி செய்யாதீர்கள் என்று அமெரிக்க உளவுத்துறை கூறிய கூற்றை இலாவகமாக தன் கருத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார் கட்டுரையாளர்.
இதுவும் ஒரு வர்க்கப் பார்வைதான் போலும்! ஈழத் தமிழ்ப் பிரச்சினையில் இந்திய சி.பி.எம். கட்சிக்கும் அமெரிக்காவுக்கும் ஒரே கருத்துதான் என்று கொள்ள வேண்டும் - அப்படித்தானே!
இன்று உலகச் சந்தையில் நிதி மூலதனத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்துவோரை எதிர்க்க சிறிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு அவசியமாகி விட்டது. இந்நிலையில் இலங்கை துண்டு பட்டாலும் வாழ்வு சிறக்காது. அங்கு ஒரு மொழி, மத ஆதிக்கம் அரசில் நீடித்தாலும் நிம்மதி குலையும் எனவே ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி உரிமை, இதுவே சாத்தியமான தீர்வு. சுரண்டும் கூட்ட ஆதிக்கத்தை எதிர்க்கும் இலங்கை மக்களின் ஆதரவும் இதற்குக் கிடைக்கும்! என்று மங்களம் பாடி கட்டுரையை முடித்துள்ளார்.
இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால் இலங்கைகூட சிறிய நாடுதான். இந்தியாவே இணைத்துக் கொள்ளலாமா?
கியூபாவின் கதி என்ன? மலேசியாவிலிருந்து பிரிந்த சிறிய நாடான சிங்கப்பூர், மலேசியாவைவிட எல்லா வகையிலும் சிறந்த விளங்குகிறதே - இதற்கு என்ன பதில்?
ஒரு இனம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்ற அடிப்படையில் நாடுகள் விடுதலை பெறுவதனை மார்க்ஸியம் எதிர்க்கிறதா!?
கடல்சார் பல்கலைக் கழகம் கொல்கத்தாவுக்குக் கிடைக்காமல் சென்னைக்குக் கிடைக்கிறது என்றவுடன் ஒரு மத்திய அமைச்சரின் மசோதாவை வன்முறையில் பிடுங்கிய மாநிலப் பற்றாளர்கள் மற்றவர்களுக்கு இதோபதேசம் செய்வதுதான் வேடிக்கை. இது எந்த வர்க்கப் பார்வையின் பாற்பட்டது?
சிங்கப்பூர் மேனாள் பிரதமர் - நிருவாகத்தில் சிறந்த மேதை. சிங்கப்பூரின் சிற்பி என்று எல்லாம் பெயர் பெற்ற லீகுவான்யூ கூறுகிறார்
இலங்கைத் தீவு இனி ஒரு போதும் ஒன்றாக இருக்க முடியாது. அந்த ஆட்சி அமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையை கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பெரும்பான்மையான மதம் என்று மார்தட்டி சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை வேட்டையாடு கிறது இந்தியாவில் இந்துத்துவா பேசும் சங்பரிவார்க் கூட்டம்.
அதே பெரும்பான்மையைக் காட்டி, சிறு பான்மை மக்களை தமிழர்களை ஒடுக்குகிறது இவரை சிங்களப் பேரினவாத அரசு.
முன்னதை எதிர்க்கும் தீக்கதிர் பின்னதை ஆதரிக்கிறது. ஏனிந்த அணுகுமுறை? ஏனிந்த முரண்பாடு?
-----------------22-11-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Comrade Meenakshi Sundaram is possibily reacting from his caste back ground. Class is just a mask.
22,930... Can SLA publish a list?
Politicians have a different agenda even if they are communists. They conviniently forget scientific analysis. They think applying M-L frame work is scientific analysis.
Commrades: I know there is no point calling you to see the reality. Because you cannot. You think Marx told you not to see reality.
This war is happening since 1926. It was "ahimsa" till 80s.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment