13.11.38இல் சென்னையில், திருமதி நீலாம்பிகை அம்மையார் தலைமையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.இராமசமி அவர்களுக்கு பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பெரியார் என்று அழைக்ப்பட்டு வந்தாலும் இம்மாநாட்டில் இருந்துதான் அனைவரும் ஈ.வெ.இராமசமி அவர்களை பெரியார் என்றே அழைக்கலாயினர்.
பெரியாருக்கு பட்டம் கொடுக்கப்பட்ட மாநாடு பற்றி "விடுதலை" தந்த படப்பிடிப்பு இதோ:
சாதிப் பெயரை பெயருக்குப் பின்பு ஒட்டி அழைப்பது என்பது இந்நாட்டில் வெகுகாலமாக இருந்துவந்த வழக்கமாகும். அது ஒரு மரியாதையாகவும் பார்ப்பனிய சமூக அமைப்பில் கருதப்பட்டது. அந்தவகையில் தந்தை பெரியாரும் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்றே அழைக்கப்பட்டார். 'நாயக்கர்' என்றாலே அவரைத்தான் குறிக்கும் என்ற அளவிற்கு நிலைமை இருந்தது. குடி அரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் 18.12.1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25.12.1927 முதல் 'குடி அரசு' இதழ் நாயக்கர் பட்டத்தைக் கைவிட்டது. அதன்பின் அய்யா அவர்களைக் குறிப்பிடும் பொழுது 'பெரியார்" என்ற சொல்லைச் சேர்த்துக் குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது என்றாலும் 'பெரியார்' என்பதை ஒரு மாநாட்டின் தீர்மானம் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த கருத்தாக வெளியானது என்பது, சென்னையில் நடைபெற்ற "தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில்" தான். அத்தகைய சிறப்புமிக்க மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பை இங்குப் பதிவு செய்கிறோம்.
'தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு 5000 பெண்கள் விஜயம்
பல்லாயிரக்கணக்கான ஆண்கள் வெளியில் நின்றிருந்தனர்'
சென்னை 13.11.1938 முற்பகல் 1.00 மணிக்கு சென்னை பெத்துநாயக்கன்பேட்டை கிருஷ்ணாங் குளத்தையடுத்து காசி விஸ்வநாதர் கோயில் முன்பிருந்து தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டு ஊர்வலம் புறப்பட்டது. மாநாட்டுத் தலைவர் திருவாட்டி திருவரங்க நீலாம்பிகை என்ற நீலக்கண்ணியம்மையார், தோழர்கள் தாமைரைக்கண்ணியம்மையார், பண்டித நாராயணியம்மையார், டாக்டர் தருமாம்பாள், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார், மலர் முகத்தம்மையார், கலைமகளம்மையார் முதலியோரும் தலைவர் தோழர் ஈ.வெ.ராமசாமி, தோழர் அ.பொன்னம்பலம் உள்ளிட்ட 5000-த்திற்கு மேற்பட்டவர் ஊர்வலத்தில் கலந்து வந்தனர். மாநாட்டுத் தலைவர், திறப்பாளர், வரவேற்புக் கழகத் தலைவர்களைக் கோச்சில் வைத்து அழைத்துவரப்பட்டது ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க் கொடிகளை ஏந்தி தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! தமிழ்ப் பெண்கள் வாழ்க! தமிழர் வாழ்க! என்ற கோஷங்களிட்டு வந்தனர். தமிழ்ப் பெண்கள் தமிழ் வாழ்த்துகள் பாடி வந்தனர். ஊர்வலத்தில் பெண்கள் மட்டிலும் 2000 பேர்கட்கு மேலிருந்தனர். ஊர்வலம் குப்பையா தெரு, தங்கசாலைத் தெரு, ஆதியப்ப நாயக்கன் தெரு. வால்டேக்ஸ் ரோடு ஆகியவைகளின் வழியாக வந்து, சரியாக 2 மணிக்கு மாநாட்டு கொட்டகையாகிய ஒற்றை வாடை நாடக கொட்டகைக்கு வந்து சேர்ந்தது.
மாநாட்டு கொட்டகை
ஊர்வலம் வரும் முன்பே கொட்டகையிலும், கொட்டகைக்கு வெளியிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பியிருந்தனர். கொட்டகையில் ஒலிபெருக்கிக் கருவி அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் பெண்கள் 5000 பேர்கட்கு மேல் கலந்து கொண்டனர், மாநாட்டுக் கொட்டகை வாழைமரங்களாலும், கொடிகளாலும், வரவேற்பு வளைவுகளாலும் மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியில் நிற்போர்கட்கும் கேட்குமாறு ஒலி பெருக்கி அமைக்கப்பட்டிருந்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியில் இருந்தே பேச்சுகளைக் கேட்டனர்.
முதலில் தலைவர், திறப்பாளர்களை வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. பின்னர் மாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்கி திருவாட்டி மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் மூவரசர் தமிழ்க் கொடியை ஏற்றிவைத்தார்.
திருவாட்டிகள் சி. கலைமகள்பட்டு, தாமரைக்கண்ணியம்மையார், பார்வதியம்மையார் முதலியவர்கள் தமிழ்ப்பாட்டுக்கள் பாடினர், பின்னர், திருவாட்டி- திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை தலைமையேற்குமாறு வரவேற்புக் கழக தலைவர் கேட்டுக் கொண்டார். அதை ஆதரித்து திருவாட்டிகள் மூவாலூர் இராமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், இராணியம்மாள் (தோழர் அண்ணாதுரையவர்கள் மனைவி) ஆகியோர் பேசினர்.
டாக்டர் எஸ். தருமாம்பாள் மாநாட்டுத் தலைவருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுத்தார்.
தலைவர் தமது தலைமை பிரசங்கத்தை, ஆற்றினார், திருவாட்டி பார்வதியம்மையார் அவர்கள், ஈ.வெ.ரா. நாகம்மாள் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். பின்னர் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேறின.
------------------- விடுதலை 14.11.1938.
தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நிறைவேறிய தீர்மானங்கள்.
சென்னை நவ14. ஆண்களில் தோழர்கள், தலைவர். ஈ.வெ.ரா., அ. பொன்னம்பலம், வேலூர் அண்ணல் தங்கோ, கனகசபை, குடந்தை ஜி.சுப்ரமணியம், எஸ்.ஏ.ரவூப், காஞ்சி பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார், சாமிஅருணகிரிநாதர், அ.சுப்பையாபிள்ளை, நகரதூதன் ஆசிரியர் மணவை திருமலைசாமி, சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி.பாலசுப்ரமணியன், பாரிஸ்டர் கே.சி. சுப்ரமணியம் செட்டியார், பல்லடம் பொன்னுசாமி, டாக்டர் சிற்சபை நடராசன், முருகேசன், தேவசுந்தரம், அரங்கநாதம், கணேசம், குமரகுரு, மாஜிமந்திரி எஸ்.முத்தையாமுதலியார், கோதண்டராம முதலியார் பி.ஏ.பி.எல்., சுந்தரராவ்நாயுடு பி.ஏ., பி.எல்., திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை, ரெவரெண்ட் அருள் தங்கையா, ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி நாதன், மாயவரம் சம்பந்தம், சிந்தாதிரிப்பேட்டை ராகவேலு, அமிர்தவாசகம் மணியர், காஞ்சி சி.பி.தண்டபாணி, டாக்டர் வானமாமலை, நெல்லையப்பபிள்ளை, பி.ஏ.பி.எல்., வேலூர் பி.பெரியசாமி முதலியார். ஷர்புதீன் சாகிப், கவுன்சிலர் ஆர். சுப்ரமணியம், பி. சிவசங்கரன், காஞ்சிபுரம் தங்கவேலு முதலியார், ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார், (கடலூர்) கே.கே. ஆறுமுக முதலியார், இளஞ்சிய முதலியார், டி.வி. ஆதிசேஷ முதலியார், பண்டிட் எஸ்.எஸ் ஆனந்தம், கவுரவ மாஜிஸ்ட்ரேட் எம்.வரதராஜன், கயபாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கா ரெட்டியார், முத்துமல்லா ரெட்டியார், ஆர் என்.என் சாஸ்திரியார், வேலூர் புருஷோத்தமன், என். தண்டபாணி, நவசக்தி திரு.வி.உலகநாத முதலியார் ஆகியோரும் முக்கியமானவர்களாவர்.
மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டிதோழர்கள் எஸ்.ஆர்.கண்ணம்மாள், ஈ.வெ.கி. ரங்கநாயகி அம்மாள், வரகனேரி ஜபமாலை அம்மையார், மாத்தூர் விசாலாட்சி அம்மையார், ராமசுப்பையா விசாலாட்சி, அலமேலு மங்கைத்தாயாரம்மாள், திருப்பத்தூர் அன்னபூரணி-கந்தசாமி, சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமி வைரத்தம்மாள், அண்ணாமலை நகர் வித்துவான் செந்தமிழ் சச்சிகிருஷ்ணமூர்த்தி, மாஜி மந்திரி, சர்.பி.டி. ராஜன், தலைவர் எஸ்.எஸ் பாரதியார், குடந்தை ஆர்.கி.வெங்கட்ராம்நாயுடு, கே.கே. நீலமேகம், வாணியம்பாடி சண்முக முதலியார், எஸ்.வி.லிங்கம், மாயவரம் சபாபதி, திருவையாறு திருவள்ளுவர் மாணவர் சங்கத்தார் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். தலைவரால் கொண்டுவரப்பட்டு, பல பெண்மணிகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின.
நிறைவேறிய தீர்மானங்கள் வருமாறு : -
1. இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்துவருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாததாலும் அவர் பெயரை சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் "பெரியார்" என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம் மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.
2. மணவினை காலத்தில் புரோகிதர்களையும், வீண் ஆடம்பர செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3. மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்று பட்டு ஒரு சமூகமாய் வாழ்வதற்கு இன்று பெருந்தடையாய் இருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம் மாநாடு ஆதரிக்கிறது.
4. தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரை இம் மாநாடு கேட்டுக் கொள்வதுடன், பிற மொழிகள் தமிழ் மொழிக்கு விரோதமாக பள்ளிகளில் கட்டாயப் பாடமாக வைக்கக் கூடாதென தீர்மானிக்கிறது.
5. சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாக இருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ்சென்ற பா.வே.மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது. அவர் தெலுங்கர் என்று கூறியதையும், நாடார் சமூகத்தை கேவலமான வார்த்கைகளால் கூறியதையும், தோழர் மு.இரா கவையங்கரர், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்டு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறியதைக் கண்டிப்பதுடன், தமிழறிவும் நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னை மீறிக்கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், அய்க்கோர்ட்டாரும் கவனித்து ஆவன செய்யும்படி இம் மாநாடு தீர்மானிக்கிறது.
6. சென்னை லார்டு எர்ஸ்கின் பிரபு அவர்கள் மதுரையில் காங்கிரஸ் மந்திரிகள் அரசாங்கத்தை நன்றாக நடத்தி வைக்கிறார்கள் என்று பேசியதைப் பார்த்தால், தங்கள் காரியம் நடந்தால் போதுமானதென்றம், பார்ப்பனரல்லாத தமிழர்கள் நிலை எப்படியானாலும் தங்களுக்குக் கவலையில்லை என்பதைக் காட்டுகின்றதாகையால், கவர்னர் அவர்களின் அவ்வபிப்ராயத்தை வன்மையாகக் கண்டிக்கிறது.
7. இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் தங்கள் கமிட்டிக் கூட்டத்திலும் மாநாட்டிலும் கட்டாய இந்தியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைக் கண்டிக்கிறது!
8. இந்திய மாதர் சங்கம் என்பது சில பார்ப்பனப் பெண்களும் பார்ப்பன அன்புபெற்ற தாய் மொழியறிவில்லாத சில பெண்களும் கூடிய கூட்டமெனக் கருதுகிறது.
9. இம் மாகாணத்தில் எப்பகுதியிலாவது பெண்களைக் கூட்டிக் கட்டாய இந்தியை நிறைவேற்ற வீரமிருந்தால் இந்திய மாதர் சங்கத்தார் செய்துபார்க்கட்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
10. இந்தியை எதிர்த்துச்சிறைசென்ற ஈழத்து சிவானந்த அடிகள், அருணகிரி சுவாமிகள், சி.என் அண்ணாதுரை. எம்.ஏ. உள்ளிட்ட பெரியார்களையும், தொண்டர்களையும் பாராட்டுகிறது.
11. வகுப்புத் துவேஷக் குற்றம் சாட்டி 153 எ. 505 ஸி செக்ஷன்களின் கீழ் 18 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்த காங்கிரஸ் அரசாங்கத்தைக் கண்டிப்பதுடன், மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்று சிறை சென்ற தோழர் பி. சாமிநாதனை இம் மாநாடு பாராட்டுகிறது.
12. தோழர்கள் சண்முகானந்த அடிகளும். சி.டி. நாயகமும் சிறைசெல்வதை இம் மாநாடு பாராட்டுகிறது.
13. சென்னை நகர் தமிழ் நாடாதலாலும், தமிழர்கள் முக்கால் பாகத்து மேல் வாழ்ந்து வருவதாலும் இதுவரை முனிசிபாலிட்டியார் வீதிகளின் பெயரை ஆங்கிலத்திலும், தமிழிலும் விளம்பர பலகைகளில் போட்டு வந்திருக்க இப்போது புதிதாக தெருக்களுக்கு பெயர் போடுவதில் ஆங்கிலத்தில் மட்டும் போடப்பட்டு வீதிகளின் பெயர் தமிழில் போடமாமலிப்பதால் ஆங்கிலமறியாத மிகுதியான தமிழ்மக்கள் தெரு பெயர் தெரியாமல் தொல்லைப்படுவதை நீக்க தமிழிலும் வீதிகளின் பெயர் போடவேண்டுமென, சென்னை நகர சபையாரையும், மற்ற தமிழ்நாட்டு நகரசபைகளையும் இம் மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
14, சென்னை ரயில் நிலையத்தில் பீச், போர்ட், பார்க் என தமிழில் எழுதியுள்ளதை முறையே கடற்கரை, கோட்டை, தோட்டம் என தமிழில் எழுத வேண்டுமெனவும் அப்படியே ரயில் பயணச்சீட்டு (டிக்கெட்) களிலும் எழுத வேண்டுமெனவும் ரயில்வே கம்பெனியாரையும் சென்னை அரசாங்கத்தாரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
15. ஒரு அணா, நாலணா நிக்கல் நாணயங்களில் நாணயங்களின் மதிப்பைக் குறித்திருப்பதில் சுமார் மூன்று கோடிக்கு மேல் உள்ள தமிழ் மக்களுக்கு விளங்கும்படியாக தமிழிலும் குறிப்பிட வேண்டுமென அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
16. சென்னை அரசாங்க இந்திய மருத்துவப் பள்ளி சித்த வகுப்பில் நடைபெறும் பாடங்கள் ஒவ்வொன்றும் ஆங்கிலத்திலேயே பெரும்பாகம் நடைபெற்று வருவதை நிறுத்தி எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே நடத்த வேண்டுமெனவும், சித்த வகுப்பில் சேரும் மாணவர்கள் பள்ளிக் கூடப்படிப்பை ஆங்கிலத்தில் படித்து முடித்திருக்க வேண்டும் என்று கட்டாயாமிருப்பதை எடுத்து தமிழில் ஒரளவு இலக்கிய அறிவுடைய மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் சென்னை அரசாங்கத் தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
17. இந்திய மருத்துவப்பள்ளியில் சித்த மருத்துவ வகுப்புக்கு வேண்டிய பாடங்களில் உடற்கூறு, உடற்தொழில், கெமிஸ்ட்ரி என்னும் ரஸாயன நூல், மெட்ரியா, மெடிக்கா, பிள்ளைபெறுநூல், முதலியவை தமிழில் இருப்பதாலும், அதனை அச்சிட்டு மாணவர்கட்கும், மற்றவர்கட்கும் பயன்படும்படி செய்விக்க அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
18. மேற்கண்ட பாடபுத்தகங்களில் உடற்கூறு, கெமிஸ்ட்ரி, மெட்ரியா மெடிக்கல் முதலிய புத்தகங்கள் அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்டவைகளை அரசாங்கத்தாருக்கு அச்சிடக்கொடுக்க இசைந்துள்ள சென்னை தென் இந்திய வைத்திய சங்கம் நிறுவியவரும், அமைச்சருமாகிய பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம் அவர்கட்கு இம் மாநாடு நன்றி செலுத்துகிறது.
19. வியாபாரப் பத்திரிகைகளைப் போலல்லாமல் தமிழர் முன்னேற்றம் ஒன்றையே கருத்திற்கொண்டு பெரிய கஷ்டங்களுக்கிடையே ஒயாது உண்மையாய் உழைத்து வரும் விடுதலை, குடியரசு, நகர தூதன், பகுத்தறிவு, ஜஸ்டிஸ், சண்டே அப்சர்வர் முதலிய பத்திரிகைகளைத் தமிழ்ப் பெண்மணிகள் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி படிக்க வேண்டுமாய் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.
20. பத்திரிகைகளின் வாயிலாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றையே எண்ணி தமிழர் இயக்கங்களைக் கேவலப்படுத்தி வெளிவரும் 'ஆனந்தவிகடன்,' தினமணி, தமிழ்மணி முதலிய தமிழ்ப் பத்திரிகைகளைத் தமிழர்கள் இனி வாங்கக் கூடாதெனவும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.
21கணவனை இழந்த இளம் பெண்களின் துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு ஆதரிக்கிறது.
22. தமிழ்நாட்டில் 100-க்கு 95 மக்கள் கண்ணிருந்தும் குருடராய், தாய்மொழியில் கையெழுத்து போடத் தெரியாத நிலைமையில் இருக்கையில் சென்னை முதல் மந்திரியார் அதற்காவன செய்யாமல் அதற்கு மாறாக இந்தியை கட்டாயமாக செய்திருப்பதையும் அதனை கண்டிக்குமுகமாகத்தான் தமிழ்நாட்டுப் பெருமக்களும், அறிஞர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாபெருங் கூட்டங்கள் கூட்டி தெரிவித்தும், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் பிடிவாதமாகயிருப்பதையும் இதைப்பற்றி தங்களுக்குள்ள மனக்கொதிப்பைக் காட்டும் முறையில் அமைதியாக மறியல் செய்பவரை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
23. தமிழ் மொழியைக் காப்பாற்றும் முறையில் இந்தியைக் கண்டித்து மறியல் செய்து சிறை புகுந்த வீரர்களுக்கு இம்மாநாடு மனமார்ந்த நன்றி செலுத்துகிறது,
தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப் பெண்கள் நிலைமையை விவரித்தும் தோழர் ஈ.வெ.ரா ஒரு சொற்பொழிவாற்றினார்.
பின்னர் தீர்மானங்களை ஆதரித்தும் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய நிலைமையை விளக்கியும் தோழர்கள் மீனாம்பாள் சிவராஜ், பண்டிதை ஆர். கண்ணம்மாள். கலைமகளம்மையார், இராமமிர்தத்தம்மையார், கமலாம்பாள், சிறுமி குஞ்சிதமணி, நீலாயதாட்சி, பண்டித திருஞான சம்பந்தம், சாமி சண்முகானந்தம் ஆர்.நாராயணி அம்மாள், மலர்முகத்தம்மையார், சாமி அருணகிரி நாதர், இராணி அம்மையார் (தோழர் அண்ணாதுரை மனைவி) தோழர் அண்ணாதுரை அன்னையார் ஆகியோர் பேசினர்.
தலைவர் முடிவுரைக்குப் பிறகு தோழர் வ.பா. தாமரைக்கண்ணம்மையார் நன்றி கூறினார். தோழர்கள் பார்வதியம்மையார், தாமரைக்கண்ணம்மையார்வாழ்த்துப் பாடினர்.
இரவு 9 மணிக்கு தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! பெண்ணுலகு தழைக்க என்ற பேரொலிகளிடையே மாநாடு இனிது முடிவுற்றது.
--------------------நன்றி:- "விடுதலை" 16.11.1938.
Search This Blog
13.11.08
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்று முதல் இன்றுவரை பார்ப்பனர்களும்,அவர்களின் அடி வருடிகளும் "பெரியார்""தந்தை பெரியார்" என்பதைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பார்-அட்-லா சொன்னார்"What is Mahatma to you is Periyar to us!"அவருக்குப் போட்ட மாலையை,அப்போது பெரியார் சிறையில் இருந்ததால்"என் தோள்ளுக்குப் போட்ட மாலையை என் தலைவரின் காலுக்குக் காணிக்கையாக்குகிறேன்"என்று பெரியாரின் புகைப் படத்துக்குப் போட்டார்.
காஞ்சி சங்கராச்சாரி( அப்போது இருந்தவர்) ஒரு சமயம்
வடலூர் இராமலிங்க அடிகளாரிடம் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சம்ஸ்கிருதம் தான் என்றாராம்,வட் மொழி அறிஞ்ரான வள்ளலார் உடனே சொன்னாராம்"அப்போ தந்தை மொழி தமிழ் தான்" என்று.
புரியாததுகளும்,புரியாதது போல நடிப்பதுகளும் தந்தை பெரியார் என்ன வென்று இந்த நாளிலே எழுபதாவது ஆண்டு விழா நாளிலேயாவது புரிந்து கொள்ளட்டும்.
தங்களின் பின்னூட்டங்களைத் தொடர்ந்து படித்துவருகிறேன்.
தொடர்ந்து எழுதவும்.
பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கும் சூத்திர மரமண்டைகளுக்கு இது உரைக்கட்டும்.
நன்றி.
Post a Comment