Search This Blog
2.2.09
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து லண்டனில் ஒரு லட்சம் தமிழர்கள் பேரணி
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து
லண்டனில் ஒரு லட்சம் தமிழர்கள் பேரணி
இங்கிலாந்து பிரதமரிடம் மனு கொடுத்தனர்
இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி லண்டனில் ஒரு லட்சம் தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடந்தது. விடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்யுமாறு இங்கிலாந்து பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள வன்னி காட்டுக்குள் இரண்டரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் மரணப் பிடியில் சிக்கி இருக்கின்றனர். அவர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டுகளை வீசி வருகிறது. இந்த இனப்படு கொலையை கண்டித்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இனப் படுகொலைக்கு எதிராக இங் கிலாந்து அரசு குரல் கொடுக்க வலியுறுத்தி இங்கிலாந்தில் நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) மாபெரும் பேரணி நடந்தது. தலைநகர் லண்டனின் மையப்பகுதியில் உள்ள மில்பேங்க் என்ற இடத்தில் இருந்து பாராளு மன்றம் வழியாக டெம்பிள் பிளேஸ் வரை நடந்த அந்த பேரணியில் ஒரு லட்சம் தமிழர்கள் பங்கேற்றனர்.
இங்கிலாந்தில் ஆங்காங்கே வசித்து வரும் தமிழர்கள், பிற்பகல் 1 மணியில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்தனர். ஒரு மணி நேரத் துக்குள் ஆயிரக்கணக்கில் தமி ழர்கள் திரண்டதால் பிம்லிகோ, வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பேரணிக்கு வந்த அனைவருமே தாங்களே சொந்தமாக வாசகங்களை எழுதி அட்டைகளை எடுத்து வந்தனர்.
இலங்கை இனப்படு கொலையை கண்டிக்கும் படங்கள் தொங்கவிடப்பட்ட வாகனங்களும், ஓவியங்களும் இடம்பெற்றன. `இலங்கை அரசே, தமிழ் இன அழிப்பை நிறுத்து', `எங்களுக்கு தமிழீழம் வேண்டும்', தமிழகத்தின் உணர் வுகளை கொச்சைப்படுத்தாதே' போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஊர்வலத்தில் வந்தவர்கள் வைத்திருந்தனர்.
முத்துக்குமார் படம்
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்த இளைஞர் முத்துக்குமாரின் படத்தையும் ஏராளமான தமிழர்கள் எடுத்து வந்தனர். மேலும், `நீதியின் உறைவிடமான மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசமே இலங்கையில் தமிழினத்தை அழித்து வருகிறது' என்றும் பேரணியில் சென்றவர்கள் கோஷமிட்டனர்.
இந்த பேரணியில் இரண்டு தலைமுறைகளுக்கு மேல் இங்கிலாந்தில் இருக்கும் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள், சமீபத்தில் லண்டன் வந்தவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
இலங்கையில் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கவும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவும் இங்கிலாந்து அரசும், அய்.நா. சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரணியில் பங்கேற்ற தமிழர்கள் வலியுறுத்தினர்.
லண்டன் போலீசார் பிரமிப்பு
கடுங்குளிருக்கு இடையே இவ்வளவு பேர் பங்கேற்ற பேரணி இதுவாகத்தான் இருக்கும் என்று லண்டன் நகர போலீசார் தெரிவித்தனர்.
லண்டன் மாநகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, பேரணி தொடங் கும்போது ஆயிரத்துக்கு அதிகமானோர் மட்டுமே இருந்தனர். பேரணி தொடங்கிய பிறகு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்'' என்றார். மேலும், தமிழர்கள் நடத்திய பிரமாண்டமான பேரணியை விமானத்தில் பறந்தபடியே போலீசார் கண்காணித்தனர்.
பேரணியின் இறுதியில் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரதமருக்குக் கோரிக்கை
இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் தமிழ் ஈழ மக்களுக்கு எனது அக்கறையை வெளிப்படுத்துகிறேன். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள தங்களு டைய சொந்த நாட்டை மீட்க நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறேன். தனி தமிழ் ஈழ தேசம் அமைவது மட்டுமே தமிழ் மக்களின் உரிமைக்கும், சுயாட்சிக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
ராணுவத்துடன் நடை பெறும் போரில் உயிரை இழந்த பெண்கள், குழந்தை களுக்கு எனது உணர்வை தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளேன். இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் முழு ஜனநாயக உரிமையுடன் வாழ வேண்டும். எனவே `விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என இந்த நாட்டின் (இங்கிலாந்து) சட்டத்துக்கு கட்டுப்பட்ட குடிமகன் என்ற முறையில் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
- இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவில் ஒவ்வொரு தமிழரும் தனித் தனியாக கையெழுத்திட்டுள்ளனர்.
-------------------நன்றி:- “விடுதலை” 2-2-2009
Labels:
பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
THANK YOU FOR PUBLISHING,
THIS IS BIGINING,JUST IMMAGINE END WILL BE.....AMBI
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment