Search This Blog
3.2.09
பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டுமா?
பெரியாரின் நூல்களை
நாட்டுடைமையாக்க வேண்டுமா?
தமிழர் தலைவரின் தர்க்க ரீதியான பதில்
பொங்கல் புத்தாண்டு அன்று (14.1.2009) சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் சென்னை தியாகராயர் நகர் - தியாகராயர் கலை அரங்கில் என்னை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் மாநாடு போல் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து
சாரு நிவேதிதா சொன்ன ஒரு செய்தி
இறுதியிலே ஒன்று இங்கே சாரு நிவேதிதா அவர்கள் ஒரு கருத்தைக் கடைசியிலே சொன்னார்கள். நான் புத்தகக் கடைக்குப் போனேன். அங்கு ஒரு கடையில்தான் பெரியார் புத்தகம் இருக்கிறது. அதை உடனடியாக நாட்டுடைமையாக்கவேண்டும் என்ற சொன்னார்கள். நாங்கள்தான் அதற்கு உரிமைபெற்றவர்கள் என்றாலும் என்ன, அதற்குத் தடை எங்கே உள்ளது? என்பதை இந்த அறிஞர்கள் கூடியுள்ள இந்த அரங்கம் தெரிந்துகொள்ளவேண்டும். பெரியார் அவர்கள் சமுதாயத்தை எப்படிப் புரட்டிப் போட்டார்கள் என்பதைப்பற்றி அவர்கள் சொன்னார்கள்.
எங்களுக்கு இருக்கின்ற அச்சம்
எனவே, எங்களுக்கு இருக்கின்ற ஓர் அச்சம், தயக்கம் எல்லாம் யார் வேண்டுமானாலும் பெரியார் புத்தகத்தை வெளியிடலாம் என்று சொல்லி அவருடைய சொற்களைப் புரட்டி மாற்றிப் போட்டு விட்டால் இப்பொழுது ராமாயணத்திலே ஒரு பதிப்பிலே வந்ததுகூட, அடுத்த பதிப்பிலே இல்லை - எடுத்து விடுகிறார்களே! அதுபோன்ற நிலை பெரியாருக்கு, பெரியாரின் எழுத்து, பேச்சு நூல்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலைதான் பெரியார் தொண்டர்களாக இருக்கக்கூடிய எங்களுக்கு (பலத்த கைதட்டல்).
எங்களுக்கு இப்பொழுதுகூட பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கி, பணம் பெறவேண்டும் என்ற எண்ணம் எல்லாம்கூட ஒன்றும் கிடையாது..
இரண்டு நிபந்தனைகள்
தாராளமாக ஆக்கலாம். ஆனால் ஒன்று - எந்த அரசாங்கமானாலும் எங்களுடைய இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டால், நான் பொறுப்பானவன் சொல்லுகின்றேன் - இந்தச் செய்தியை தெளிவாக மற்றவர்கள் அறிந்துகொள்ளட்டும்.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, நாளைக்கே கூட நாங்கள் தயார் - இரண்டு நிபந்தனைகட்கு உட்பட்டு.
பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கினால்...
ஒன்று பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கிய பிறகு அதிலே இருக்கிற ஒரு சிறு சொல், புள்ளி, கமாவைக்கூட மாற்றக்கூடாது - மாற்றினால் அங்கே பெரியார் இருக்க மாட்டார். திரிபுவாதம் நுழைந்துவிடும் (பலத்த கைதட்டல்).
வேறு கருத்துக்கு உரியார் வந்துவிடுவார். ஆகவே அந்த ஆபத்திலிருந்து பெரியார்தாம் எழுதினதை பாதுகாக்கப்பட வேண்டும்!
இரண்டாவது நாட்டுடைமையாக்கப் படுகின்றபொழுது பெரியார் கொள்கையை ஏற்ற ஒரு அரசாங்கம் இருக்கும் பொழுது எல்லோரும் பெரியார் நூல்களை வெளியிடுவார்கள்.
சமயச் சார்புள்ள அரசாங்கம் வந்தால்...
ஆனால், நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி நாளைக்கு வேறு ஒரு அரசாங்கம் - சமயச் சார்புள்ள ஒரு அரசாங்கம் காவி நிறம் படைத்த அல்லது வேறு ஒரு நிறம் படைத்த அரசாங்கம் வந்து பெரியார் நூல்களை வெளியிடக் கூடாது என்று அவர்கள் நிறுத்திவிட்டார்களேயானால், அய்யா அவர்களுடைய நூல்களை வெளியிட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.
இப்படிப்பட்ட ஒரு பேரபாயம் உள்ளே பதுங்கி இருக்கிறது. இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஒப்புக் கொண்டு யாரும் எந்தக் காலத்திலும் இதை வெளியிடாமல் இருக்க முடியாது. அனுமதிபெற்று பலருக்கும் வெளியிடுவதற்கு உரிமை கொடுத் திருக்கின்றோமே! பெரியாரின் கருத்துகளை மாற்றி அரசாங்கம் வெளியிட்டால்கூட அதை நிறுத்த முடியாது.
பார்ப்பான் என்று சொல்ல எத்தனை பேர் தயார்?
ஒரு சிறு உதாரணம் சொல்லுகின்றேன். தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பான் என்ற சொல்லை மட்டும்தான் பயன்படுத்தியிருப்பார். பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர் என்று சொல்லியிருக்கின்றார். அது வெறுப்பினால் அல்ல. ஒருவர் பிராமணன் என்றால் இன்னொருவர் சூத்திரன் என்று ஒப்புக்கொள்கின்றோம் என்று பொருள் என்று சொன்னார். அதற்கு உதாரணம் சொல்லும்பொழுது சொன்னார்.
ஒரு தெருவில் நான்கு வீடுகள் இருக்கின்றன என்றால் ஒரே ஒரு வீட்டுக்கு முன்னால் மட்டும் இது பதிவிரதை வீடு என்று போர்டு எழுதியிருந்தால் பக்கத்து வீட்டுக்காரன் நிலை என்ன?எவன் வேண்டுமானாலும் கதவைத் தட்டமாட்டானா? என்று கேட்டார்கள் (சிரிப்பு).
ஆகவேதான் ஒவ்வொருவருக்கும் மற்ற வீட்டுக்காரிகள் கதவைத் திறந்து - இல்லிங்க, இந்த வீடும் பதிவிரதை வீடு தானுங்க, போர்டு மட்டும் நாங்கள் போடவில்லை என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? என்று கேட்டார்கள் (கைதட்டல்).
தமிழ் இலக்கிய அறிஞர்கள் இங்கே இருக்கின்றீர்கள் . இலக்கியத்தில் எந்த இடத்திலும் பிராமணன் என்றே சொல் கிடையாது. தமிழ் இலக்கியத்திலே.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட என்ற பாடல் சிலப்பதிகாரத்தில் உண்டு.
ஏன் பாரதியே கூட பாடியிருக்கின்றாரே!
பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே
சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி பாடியவர் பார்ப்பனப் பாரதி!
எனவே அது இலக்கியச் சொல்லே தவிர, கொச்சைப்படுத்தக் கூடிய சொல் அல்ல. பார்ப்பன நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இருந்தாலும் கூட, அதை மேடையிலே இன்றைக்கு பலபேர் பயன்படுத்துகின்ற நிலையிலே கூட, பார்ப்பனரை பார்ப்பனர் என்று அழைக்கக் கூடிய துணிவு எங்களைத் தவிர மற்றவர் களுக்கு வராத நிலையையே நாம் பார்க்கிறோம்!
கடவுள் ராமன் போன்ற கருத்துக்கள் ஆனால் பெரியாருடைய எழுத்துகள் வருகின்ற பொழுது அப்படிப்பட்ட கருத்துகள் - அதுபோலவே கடவுளைப்பற்றி, புராணங்களைப்பற்றி, ராமனைப் பற்றி, அவர் எழுதியிருக்கிற பல செய்திகளை நாங்கள் அதெல்லாம் வெளியிட முடியாத அளவுக்குத் தடுத்துவிடுவோம் என்று சொல்லக்கூடிய சூழ்நிலை அபாயம் அந்த புரட்சிகரமான தலைவருக்கு, சமூகப் புரட்சியாளருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொடர்ந்து நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் நூல்களை அப்படியே மாற்றிடாமல் (களஞ்சியங்களை - கால வரிசைப்படி) வெளியிட்டுக் கொண்டு வருகின்றோம். இன்னும் கேட்டால் அதை வெளியிடுகின்ற நேரத்திலே கூட ஒரு முன்னுரை எழுதி சிலது முரண்பாடுகளாகக் கூடத் தோன்றலாம். உங்களுக்கு எந்தக் காலத்தில் அவர் பேசினார்? எப்பொழுது பேசினார்? என்ற தேதி உட்பட, எந்தச் சூழ்நிலையில் என்பதை எல்லாம் இணைத்து வெளியிட்டிருக்கின்றோம்.
எதிர்காலத்தில் குழப்புவதற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக! அதற்கு முன்னுரை எழுதியிருக்கின்றோம். பெரியார் களஞ்சியங் கள் இதுவரை 32 பாகங்களுக்கு மேலே வந்திருக்கின்றன. (ஒவ் வொன்றும் 300 பக்கங்கள்). அவருக்கு நாம் நன்றியை செலுத்து கின்றோம்.
அபவாதம் தீரும்
காரணம், இப்படி ஒரு தெளிவை உருவாக்குவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தாரே! இதைப்பற்றி ஒரு மயக்கம் இனி தீர்ந்து விடும் (கைதட்டல்) என்று நினைக்கிறோம். இதைப்பற்றி சிலர் கூறுகின்ற அபவாதம் தீர்ந்துவிடும் என்று சொல்லி நல்ல வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றி கூறி, காலம் அதிகமாகி விட்ட காரணத்தால் நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக மன்னிப்பைக் கூறி - வந்த நண்பர்களுக்கு என்னுடைய கருத்து களைச் சொன்னேன். அவர்களைப் புண்படுத்துவதோ, சங்கடப் படுத்துவதோ, என்னுடைய நோக்கமல்ல. அவர்களுடைய கருத்து சிறப்பானது. அவர் அவருடைய கருத்தைச் சொல்ல உரிமை படைத்தவர். நாங்கள் எங்களுடைய கருத்துகளைச் சொல்ல உரிமை படைத்தவர்கள்.
ஆனால் ஒருவருக்கு ஒருவர் பட்டிமன்ற மறுப்புரையாளர்கள் அல்லர். மதிப்புரையாளர்கள் தான். ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் மதிக்கக் கூடியவர்கள் தான் என்பதை நான் உறுதிப் படுத்தி மனிதர்கள் மனிதத்தைப் பெற வேண்டும். மனித நேயத்தைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் புத்தகங்கள் பயன்பட வேண்டும் என்று கூறி முடிக்கின்றேன்.
- இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
------------------நன்றி: -"விடுதலை"3-2-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//தமிழ் இலக்கிய அறிஞர்கள் இங்கே இருக்கின்றீர்கள் . இலக்கியத்தில் எந்த இடத்திலும் பிராமணன் என்றே சொல் கிடையாது. தமிழ் இலக்கியத்திலே.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட என்ற பாடல் சிலப்பதிகாரத்தில் உண்டு.
ஏன் பாரதியே கூட பாடியிருக்கின்றாரே!
பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே
சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி பாடியவர் பார்ப்பனப் பாரதி!
எனவே அது இலக்கியச் சொல்லே தவிர, கொச்சைப்படுத்தக் கூடிய சொல் அல்ல. பார்ப்பன நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.//
பார்ப்பனர்கள் புரிந்து கொள்கிறர்களோ இல்லையோ, கண்டிப்பாக பார்ப்பனரல்லாதவர்கள் இதைப் புரிந்து கொண்டு பார்ப்பானை சாமி என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்.
Post a Comment