Search This Blog
5.2.09
இந்தியா இலங்கை அரசுக்கு உதவி செய்வது எந்த வகையில் நியாயமானது?
கல்லின்மேல் எழுத்து
இந்தியா எந்த வகையிலும் இலங்கை அரசுக்கு உதவி செய்யக்கூடாது என்ற கருத்து வெகுகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது.
அதேபோல, சிங்கள இராணுவத்திற்கு எவ்விதப் பயிற்சியும் இந்தியா அளிக்கக்கூடாது என்றும் பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியும் வந்திருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வு எத்தகையது என்பதை இந்திய அரசு நன்றாக உணர்ந்திருந்தும்கூட, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் இந்திய அரசு நடந்துகொள்ள வில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.
சிங்கள இராணுவத்துக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டபோது, எதிர்ப்புக் கிளம்பியதால் உடனே அதனை ரத்து செய்து, வட மாநிலத்திற்குக் கொண்டு சென்று பயிற்சியைக் கொடுப்பதும், ராடார் போன்ற கருவிகளை இலங்கைக்கு வழங்குவதும், இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி உதவி செய்வதும் எந்த வகையில் நியாயமானது?
அதேநேரத்தில் அப்படியெல்லாம் எந்த உதவிகளையும் இந்தியா செய்யவில்லை என்று பொறுப்பு வாய்ந்த இராணுவ அமைச்சரே கூறுவது எல்லாம் சரிதானா?
ஈழத்தில் நடைபெற்ற சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகள் காயமடைந்தனர் என்ற செய்திகள் எல்லாம் எதனைக் காட்டுகின்றன?
கடல்புலிகளைத் தாக்கி அழிப்பதற்கு இந்தியாவின் உதவி பெருமளவு இருந்தது என்று கூறி இலங்கை இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தாரே, அதன் பொருள் என்ன?
இப்பொழுதுகூட தாம்பரத்தில் இராணுவப்படை முகாமில், சிங்கள இராணுவத்தினர்க்குப் பயிற்சி அளிக்கப்பட இருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலையிட்டு அதனைத் தடுத்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நொடிதோறும் கொல்லப்பட்டு வரும் ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக கொந்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்து சிங்கள இராணுவத்தினர்க்குப் பயிற்சி அளிக்க முயலுகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்களின் உணர்வை இந்திய அரசு எப்படி எடை போடுகிறது?
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொடர்ந்து மத்திய அரசையும், காங்கிரசையும் எச்சரித்துக் கொண்டே வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடு விளையாடிப் பார்த்தால், அது நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதன் எதிர்விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறி வருகிறார்.
48 மணிநேரம் போர் நிறுத்தம் என்றும், இடைவெளியில் ஈழத்தமிழர்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தாரே - அதிலாவது அவர் அறிவு நாணயத்துடன் நடந்து கொண்டாரா? பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த தமிழர்களையும் கொன்று குவித்ததே சிங்கள இராணுவம் - இந்தியா ஏன் கண்டிக்கவில்லை?
ராஜபக்சேயின் வார்த்தைகளை நம்பிப் பெரும்பான்மை மக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வர மறுத்ததன் நியாயம் இதன்மூலம் வெளிப்படவில்லையா?
தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் கேடயமாகப் பயன் படுத்திக் கொண்டு இருப்பது உண்மையானால், இந்த மக்கள் எல்லாம் அவர்களைவிட்டு வெளியேறி இருக்க மாட்டார்களா?
சிலர் கூறுவதுபடி விடுதலைப்புலிகள் தமிழ் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாகவே வாதத்துக்காக ஒப்புக்கொள்வோம்.
தமிழ் மக்களின் பரிதாப நிலை என்னவாக இருக்கும்? ஒரு பக்கம் விடுதலைப்புலிகள், இன்னொருப் பக்கம் சிங்கள இராணுவம் என்ற கிடுக்கிப்பிடியில் சிக்குண்டு கிடக்கிறார்கள் என்றுதானே பொருள்!
அப்படியானால், எப்படியும் அத்தமிழ் மக்களைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற உணர்வும், கடமையும் பல மடங்கு அதிகரித்துவிடவில்லையா?
எந்த வகையில் பார்த்தாலும் ஈழத்தில் நடைபெறும் மனிதப் படுகொலையைத் (Genocide) தடுக்கவேண்டியது மிகமிக அவசியமாகிவிட்டது.
இந்த நேரத்தில் இந்திய அரசோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ இந்தக் கண்ணோட்டத்தோடு செயல்படத் தவறினால், தமிழ் மக்கள் அழிக்கப்படும் பழிக்குப் பொறுப்பேற்கவேண்டி வரும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.
----------------நன்றி: "விடுதலை" 5-2-2009
Labels:
பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//இந்த நேரத்தில் இந்திய அரசோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ இந்தக் கண்ணோட்டத்தோடு செயல்படத் தவறினால், தமிழ் மக்கள் அழிக்கப்படும் பழிக்குப் பொறுப்பேற்கவேண்டி வரும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.//
பழி பாவம் என்பதையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகத் தெரிவில்லை.
தமிழகத்தின் ஒட்டு மொத்த உணர்வையும் மீறி இலங்கைக்கு இந்தியா உதவுவது வேதனை அளிக்கிறது.
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவாமல் இருக்க ஏதாவ்து வழி இருந்தால் சொல்லுங்கள்.
மத்திய அரசு என்ற பல்லக்கில் அமர்ந்து தானே சோனியா கண்ணாமூச்சி விளையாடுகிறார்....பல்லக்கை கவிழ்த்து விடுவதில் கலைஞர் கூட்டணிக்கு என்ன பிரச்சனை ஐயா...ஈழத்தில் எல்லோரும் மரித்த பின் என்ன நடவடிக்கை எடுத்து என்ன பயன்...எதற்காக கொஞ்சம் கூட காரணமற்ற மனிதாபிமானமற்ற காலதாமதம்...மற்றவர்களை ஏன் குறை கூற வேண்டும்...அப்படி கலைஞருக்கு வேறு நிர்பந்தங்கள் இருக்கும் என்றால்.. இந்தப் பிரச்சனையில் மாற்ற எல்லோருக்கும் இருக்கும் நிர்பந்தங்களும் நியாயமானதே...
Post a Comment