Search This Blog

22.2.09

கடவுள் - மதம் ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா ?



அறிவுள்ள மனிதர்க்கு அடையாளம் எது?

மனிதன் என்பவன் பகுத்தறிவு உடையவன்; சிந்தனா சக்தியோடு எந்தக் காரியத்தையும் செய்யக்கூடிய சக்தி உடையவன்; இன்று நல்ல அனுபவங்களையும் வளர்ச்சித் தன்மையையும் பெற்று நாளுக்குநாள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பவன்.

ஒரு மணிக்கு 1000, 2000, 3000 மைல் வீதம் ஆகாயத்தில் பறக்கிறவனாக இருக்கிறான்; பத்தாயிரம் மைலுக்கப் பாலுள்ள மனிதனிடம், பக்கத்தில் இருப்பவனிடம் பேசுவதுபோலப் பேசுகிறான். அது மாத்திரமல்லாமல், அப்படிப் பேசுகிற மனிதனை நேருக்கு நேராகக் காணுகிறவனாக இருக்கிறான்; சூரிய மண்டலத்தை அளந்துவிட்டான்; சந்திர மண்டலத்துக் குப் போய் வந்து கொண்டிருக்கிறான்.

அநேக வியாதிகளுக்கு மருந்துகள், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்து விட்டான். சராசரி அய்ந்து வருஷம், பத்து வருஷமே வாழ்ந்த மனிதர்கள் - இப்போது சராசரி 50 முதல் 75 வயது வரை வாழ்கிறார்கள்.

இப்படிப்பட்ட மனிதனுக்கு இவை எல்லாம், இந்த சக்திகளெல்லாம் இல்லாத காட்டு மிராண்டிக் காலத்தில் அதாவது 1000, 1500, 2000, 3000 வருஷங்களுக்கு முன்னால் இருந்த மூடமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட - கடவுள், மதம், வேதம் இவைகளைக் கற்பித்துக்கூறிய தலைவர்கள், இனியும் இன்றைக்கும் வேண்டுமா? அவைகளால் ஏதாவது பலன் உண்டா? என்பவைகளைப் பற்றி மனிதன் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

முதலாவது "கடவுள் என்றால் என்ன?" என்று தெரிந்தவன் - யாராவது, ஒருவனாவது இருக்கிறானா?

"கடவுள் தன்மை இன்னது" என்று தெரிந்தவர்களில் ஒருவனாவது அதை நம்பி, அதைப்போல் நடக்கிறவன் ஒருவனாவது இருக்கிறானா? மனிதன் கடவுள் செயலை (விதியை) நம்புகிறானா? அல்லது, தன்செயலை (மதியை) நம்புகிறானா? வரையறுத்துக் கூற முடியுமா?

"கடவுள் எங்கும் இருக்கிறான்" என்ற சொல்லுகிற அறிவற்றவர்களே - கடவுளுக்குக் கோயில் (இருப்பிடம்) கட்டுகிறார்கள்.

"கடவுளுக்கு உருவமில்லை" என்று சொல்கிற புத்தி ஈனனே அந்தக் கடவுளுக்கு உருவம், அதுவும் பல்வேறு உருவங்கள் கூறியிருக்கிறான்.

"கடவுளுக்கு ஒன்றும் வேண்டியதில்லை" என்ற சொல்லுகிற முட்டாள்களே -அந்தக் கடவுளுக்குச் சோறு, பெண்டாட்டி, வைப்பாட்டி முதலியவைகளை அமைக்கிறார்கள்.

"கடவுள் யோக்கியர்" என்று சொல்லுகிற முட்டாள்களே அந்தக் கடவுள் அவனைக் கொன்றார், இவனைக் கொன்றார், திருடினார், விபச்சாரத்தனம் செய்தார், அவன் மனைவியைக் கெடுத்தார், இவர் மனைவியை அபகரித்தார் என்றெல்லாம் கூறிப் பண்டிகைகள் நடத்து கிறார்கள். இவை யாவும், இவை போன்றவையும் ஒருபுறமிருந்தாலும், இப்படிப்பட்ட கடவுளால் மனிதன் அடையும் பயன் என்ன என்று சிந்தித்தால் என்ன பதில் கிடைக்கிறது?

கடவுளினால் ஒன்றும் பயனில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும் மேற்கண்ட முட்டாள் தனமான, காட்டுமிராண்டி அயோக்கியத்தனங்கள் ஒழிக்கப்படுவதற்காகவாவது கடவுள் - மதம் ஒழிக்கப்பட வேண்டாமா என்று கேட்கிறேன்.


ஒழுக்கத் துறையில், அறிவுத்துறையில் இவ்வளவு கேடுகள் இருப்பது மாத்திரமல்லா மல் - பொருளாதாரத் துறையில் எவ்வளவு கேடுகள், நட்டங்கள் ஏற்படுகின்றன? இந்தக் கேட்டிற்குப் பயன் என்ன?

அயோக்கியர்கள், மடையர்கள், சோம்பேறிகள், பிழைக்கிறார்கள் - மக்களை ஏய்க்கிறார்கள் என்பதில்லாமல் நற்பயன் என்ன என்று கேட்கிறேன்.

இவை மட்டுமா?

சமுதாயம் எவ்வளவு பிரிவுற்று, சின்னா பின்னப்பட்டுக் குதறிக் கிடக்கிறது?

எதற்காக "இந்து"; எதற்காகக் "கிறிஸ்தவம்"; எதற்காக "முஸ்லிம்" முதலிய மதங்கள் வேண்டும்? இவர்களுக்குத் தனித்தனி வேதம், வேஷம், செய்கைகள் முதலியன எதற்காகத் தேவையாக இருக்கின்றன? இவைகளால் பிரிவினை உணர்ச்சியல்லாமல் சமுதாயத்திற்கு நலனென்ன என்று கேட்கிறேன். கடவுளாலும், இந்த வேதங்களாலும் பிரிவினை உணர்ச்சி தவிர வேறு பலன் என்ன என்று கேட்கிறேன்.


இவைகளெல்லாம் ஒருபுறமிருந்தாலும், இவற்றால் மனிதனின் அறிவுகெட்டு, வளர்ச்சி பாழாகி - இந்த இருபதாவது நூற்றாண்டிலும் மனிதன் அறிவிற்கும், சிந்தனைக்கும் எற்றபடி வளராமல் தேங்கிக் கிடக்கிறான். இது எவ்வளவு பெரிய கேடு? மனித வாழ்வினால் எந்த மனிதன் கவலை, தொல்லை, அடிமைத்தனம் இல்லாமல் இருக்க முடிகிறது? ஏன் பிறக்க வேண்டும்? ஏன் சாக வேண்டும்? இவை இரண்டுமில்லாமல் செய்துகொள்ள மனிதனால் முடியாதா? பாழும் "கடவுளால்" தான் இது முடியாததாக இருக்கிறதே!

பிறப்பித்தல், சாகடித்தல் (ஆக்கல், அழித்தல்) என்ற இரண்டைத் தவிர, "கடவுள்" வேறு வேலை எதைப் பார்க்கிறானாம்? இந்தக் காரியத்திற்கு "ஒரு கடவுள்" - "பல கடவுள்கள்" ஏன்?

ஆகவே, தன்னைப் பகுத்தறிவுள்ள மனிதன் என்று உணர்ந்த எவனும் மனித சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்றால், தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தோம் என்று கூறிக் கொள்ளவோ வேண்டுமானால் கடவுள் மதம் வேதங்கள் ஒழிக்கப்பட, தன்னால் கூடியதைச் செய்ய வேண்டும். இதுதான் அறிவுள்ள மனிதர்க்கு அடையாளம் என்பது என் கருத்து.

-------------- தந்தைபெரியார் - "விடுதலை" தலையங்கம் 18.10.1972

3 comments:

Unknown said...

//கடவுளினால் ஒன்றும் பயனில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும் மேற்கண்ட முட்டாள் தனமான, காட்டுமிராண்டி அயோக்கியத்தனங்கள் ஒழிக்கப்படுவதற்காகவாவது கடவுள் - மதம் ஒழிக்கப்பட வேண்டாமா என்று கேட்கிறேன்.//

ஒழிக்கப் பட்டே ஆக வேண்டும். என்னளவில் நான் ஒழித்து விட்டேன். இப்படி ஒவ்வொருவரும் செய்தால் கண்டிப்பாக ஒழித்துவிடலாம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு

YUVA said...

Am not getting the point, If you saying some points, justify it. Seems your thoughts are free flowing. Everybody has the same right, if you are a non-believer, other person might be a believer. There is no clear picture what is god, who is god etc, Its all beliefs. So, instead of cribbing, write something which supports your view.