Search This Blog

9.2.09

பெரியாரின் தத்துவத்திற்குப் பல அடையாளங்கள்- ஆ.இராசா ஆய்வுரை


தந்தை பெரியார் கொள்கைகளை, சொத்துக்களை சேதாரம்
இல்லாமல் பன்மடங்கு பெருக்கியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள்
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல 50 ஆண்டு பொன்விழாவில்
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பாராட்டு


தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளை சேதாரம் இல்லாமல் பார்த்துப் பன் மடங்கு பெருக்கியிருக்கிறார் தமிழர் தலைவர் மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழாவில் 11.1.2009 அன்று தகவல் தொழில் நுட்பத் தொடர்புத்துறை மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன்விழா

நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன்விழா நிகழ்ச்சியில், கலந்துகொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில், உங்களோடு உரையாடுவதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்பதை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இரண்டு காரணங்களுக்காக நான் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். உலகத்தில் தோன்றிய எத்தனையோ புரட்சியாளர்களுக்கு அவர்கள் செய்து முடித்த புரட்சிகளுக்குப் பின்புலமாய் அடையாளமாய், பரிமாணமாய் ஒன்றிரண்டு காரணிகள் இருப்பதுதான் வழக்கம்.

மார்க்சியம் ஏற்படுத்திய மாற்றம்

மார்க்சியம் இந்த மண்ணில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது உண்மைதான். அந்த மாற்றம் ஒரு புற மாற்றம். அவரே ஒப்புக் கொண்டு ஆங்கில வார்த்தையில் சொல்வதென்றால் அவர் தூக்கிப் பிடித்தது மெட்டீரியலிசம் என்ற பொருளியல் சார்ந்த புரட்சியே தவிர, சமூகத்தில் ஓர் அக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற கட்டளை அவருடைய கம்யூனிச அறிக்கையில்கூட இல்லை.

இந்தியாவில் காங்கிரஸ் இயக்கம் உள்ளிட்ட, முஸ்லிம்லீக் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சித்தாந்தங்கள் தோன்றியிருக்கின்றன. தலைவர்கள் தோன்றியிருக்கின்றார்கள்.

மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்

ஆனால் இந்தத் தலைவர்களும், அவர்களுக்குப் பின்னாலே இருந்த தத்துவங்களும் ஏதோ ஒரு பரிமாணத்தில் மட்டும்தான் ஒரு காரணியாகத்தான் ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றன; மாற்றத்தைக் கொண்டு வந்து இந்த மண்ணிலே சேர்த்திருக்கின்றன.

தந்தை பெரியாரும் அவருடைய இயக்கமும் மட்டும்தான்

ஆனால் நானறிந்த தலைவர்களில், நானறிந்த இயக்கத்தில், தந்தை பெரியாரும், அவருடைய இயக்கமும் மட்டும்தான் நமக்குத் தெரிந்த அடையாளங்களைக் காட்டிலும் தெரியாத பல களங்களில் உள்ள அடையாளங்களையும் காட்டி, பல பெருமைகளை, மாற்றங்களை கொண்டு வந்து சேர்த்த ஒரே தலைவர், ஒரே இயக்கம் பெரியாரும், அவருடைய இயக்கமும் தான். அதற்கு அடையாளமாகத்தான் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கின்றேன்.

ஏனென்றால் பெரியார் என்றால் அவர் கடவுள் மறுப்பாளர், பெரியார் என்றால் அவர் ஒரு நாத்திகவாதி, பெரியார் என்றால் மதம் வேண்டாம் என்று சொன்னவர்.

பெரியார் இன்னும் 100 வருடத்திற்குத் தேவைப்படுகின்றார்

பெரியார் என்றால் கடவுள் வேண்டாம் என்று சொன்னவர் மட்டுமல்ல அந்த கடவுள் அச்சுகளைப் போட்டு உடைத்தவர் என்கின்ற செய்திகள்தான் நம்முடைய மாணவர்களின், இளைஞர்களின் மூளையில் அதிகமாகத் திணிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பெரியார் நாத்திகக் கொள்கையைத் தாண்டி, பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கின்றார். இன்னும் நூறு வருடத்திற்கு அவர்தான் இந்த சமூகத்திற்குத் தேவைப்படுகின்றார் என்பது இந்த நிகழ்ச்சியின் ஒரு பெரிய ஊக்கமாக அமைகிறது என்பதை நான் விரும்புகின்றேன்.

80 ஆண்டுகளுக்கு முன்னாலே

ஏனென்றால் இங்கே பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள். எண்பது ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு சொத்திலே பங்கு வேண்டும் என்று அய்யா சொன்னார்கள்.

பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.
விபச்சாரிகளும் என் மாநாட்டிற்கு வரவேண்டும்


இதை எல்லாம்விட 80 ஆண்டுகளுக்கு முன்பு விதவைகளும், தங்களை விபச்சாரிகள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களும், என்னுடைய மாநாட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லுகின்ற மன வலிமையும், துணிச்சலும் இந்தியாவில் ஒரே ஒரு தலைவருக்குத்தான் இருந்திருக்கிறதென்றால் அவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மட்டும்தான்
(பலத்த கைதட்டல்).
அந்த விதத்தில் நான் எண்ணிப் பார்க்கின்றேன். உலகத்தில் எத்தனையோ தலைவர்கள், கட்டமைப்பு இயக்கங்கள் அடுத்தத் தலைமுறையில் நசிந்து போகும்.

அல்லது அந்த இயக்கம் தளர்ந்து...


அல்லது அந்தத் தத்துவத்தின் மீது ஒரு மிகப்பெரிய ஆக்கிரமிப்புப் போர் நடந்து, புரட்சி நடந்து தத்துவ சேதாரம் நடக்கும் - அல்லது அந்த இயக்கம் தளர்ந்து போகும்.
எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. நான் இந்தத் தத்துவத்தாலே வளர்ந்தவன். இந்த இயக்கத்திலே தொண்டராக இருந்தவன். இந்த இயக்கத்திலே என் வாழ்நாளில் அரசியல் பணி தொடங்கியவன். பொது வாழ்க்கையில் அந்த அடிப்படையோடு எண்ணிப் பார்க்கின்றேன்.
இரண்டு விதங்களில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தந்தை பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார் என்பது ஒரு புறமிருக்க தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை யார் தொடர்ந்து ஆற்றப் போகிறார்கள் என்கின்ற கவலை 1970, 80-களில் இருந்த காலகட்டத்தில், தந்தை பெரியார் சிறுகச் சிறுக சேர்த்த இந்த சொத்துகளை எல்லாம் எப்படி நாம் பாதுகாக்கப் போகிறோம் என்பதைக் காட்டிலும் இந்த சமூகத்திற்கு எப்படி பயன்படுத்தப் போகிறோம். யாரால் அது முடியும் என்று கேள்விகள் எழுந்த காலங்கள் உண்டு.

சொத்துகளை எல்லாம் பாதுகாத்து..

இன்றைக்கு நான் எண்ணிப் பார்க்கின்றேன். தத்துவத்திற்கும் சேதாரம் இல்லாமல் அவர் சிறுகச் சிறுக கடினப்பட்டு சேர்த்த இந்தச் சொத்துகளை எல்லாம் நம்முடைய ஆசிரியர் அவர்கள் பாதுகாத்தது மட்டுமல்ல, செழுமைப்பட்டு இந்தச் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற தலைவராக நம்முடைய ஆசிரியர் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

வியர்வையை, ரத்தத்தை சிந்தி...

எனவே, தத்துவம் தோற்றுவிடாமல் காக்கின்ற நீங்கள் இந்தத் தத்துவத்தை உருவாக்குவதற்கு இந்தத் தளத்தை கட்டமைப்பதற்கு எவ்வளவு கடினப்பட்டு, வியர்வை, ரத்தத்தை சிந்தி அவர்கள் சேர்த்தார்களோ, அதைப் பல மடங்காகப் பெருக்கியது மட்டுமல்லாமல், பெருக்கிய இந்த சொத்துகளை எல்லாம் தமிழனுடைய சொத்துக்கள் என்கின்ற அந்த அடையாளத்தை ஏற்படுத்திய உங்களை முதலில் வணங்கக் கடமைப்பட்டிருக் கின்றேன்.

தந்தை பெரியார் தன் நிலைகளை மாற்றியிருக்கின்றார்

தந்தை பெரியார் அடிக்கடி சொல்வார். நான் என் நிலைகளை மாற்றியிருக்கின்றேன். ஆனால் இதை எல்லாம் எனக்காக நான் செய்து கொண்டதில்லை. இந்தச் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக செய்திருப்பேனே தவிர வேறு அல்ல என்று சொல்லியிருக்கிறார்கள்.

நான் எண்ணிப் பார்க்கின்றேன். தந்தை பெரியாரின் தத்துவங்களை இன்றைக்கும், நாளைக்கும் இனி வருகின்ற காலங்களுக்கும் எடுத்துச் சொல்லுகின்ற ஊடகமாக ஒரு உண்மையான இயக்கம் இருக்கிறதென்று சொன்னால் அது திராவிடர் கழகத்தைத் தவிர, அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர, இன்னொரு இயக்கம் பெருமை தேடிக் கொள்வதற்கு இடமில்லை என்பதை இந்த நிகழ்ச்சி உறுதி செய்திருக்கிறது.

பெரியாரின் தத்துவத்திற்குப் பல அடையாளங்கள்

ஒரு இயக்கம் சமூகத் தளத்தில் ஆற்றியிருக்கின்ற பணி நான் என்னுடைய உரையின் துவக்கத்தில் சொன்னேன். ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஒரு பரிமாணம் இருக்கும். ஆனால் பெரியாரின் தத்துவத்திற்கு எத்தனை அடையாளங்கள்?
ஜாதி ஒழிய வேண்டும் என்று விரும்பினார். அதற்காக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இன்றைக்குப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். அத்தோடு தந்தை பெரியார் அவர்கள் நிறுத்தவில்லை. அதனால்தான் நான் சொன்னேன். செங்கல்பட்டு மாநாட்டிற்கு தந்தை பெரியார் அவர்கள் அழைப்பு விடுத்த நேரத்தில் விதவைகள் என்று சொல்லப்படுகிறவர்களும், விபச்சாரிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றவர்களும் இந்த மாநாட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னார்.
அப்படியானால் பெண்ணுரிமையில் அவர் கொண்டிருந்த நாட்டம் பெண்ணுரிமையில் அவர் காண விரும்பிய மறுமலர்ச்சி விடியல் எப்படிப்பட்டது என்பதை இந்த ஆண்டுகளைப் படித்தவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே பார்த்த ஒளிப்படக் காட்சியில் இல்லை. முகம் சுளிப்பதற்கு அல்ல. அவர்களின் முக மலர்ச்சியை சமூகம் அங்கீகரிக்கின்ற வகையில் இந்தத் தொண்டு தேவைப்படுகின்றது என்பதை நம்முடைய ஆசிரியர் அவர்கள் இந்த நிறுவனத்தின் மூலம் நமக்கு நிரூபித் திருக்கின்றார்கள்.

தி.க., தி.மு.க.வைத் தவிர...

பெரியோர்களே! தோழர்களே! எண்ணிப் பாருங்கள். தந்தை பெரியாரைத் தவிர, தந்தை பெரியாரின் இயக்கத்தைத் தவிர, நூறு சதவிகிதமல்ல. முழுக்க முழுக்கத் தத்துவார்த்த ரீதியாகவும் களப்பணி மூலமாகவும் இந்த சமூகத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று வாழ்ந்த ஒரு தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் பெரியார் இயக்கத்தைத் தவிர, திராவிடர் கழகத்தைத் தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர, இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இல்லை.

இந்தியாவில் எந்த சமூக இயக்கமும் இல்லை என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அச்சாணியாக ஆசிரியர், -அம்மா

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த இயக்கம் தொடர்ந்து ஒரு நீரோட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அச்சாணியாக ஆசிரியர் அவர்களும், அம்மா அவர்களும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதிலே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இன்றைக்கும் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை, அண்ணா அவர்களுடைய கொள்கைகளை நெஞ்சிலே நிறுத்தி அரசியல் என்றால் ஏதோ முதலீடு செய்து, அந்த முதலீட்டை பலவாறாகப் பெருக்குகின்ற, வியாபாரம் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், சினிமா காட்சியும், சின்னத் திரைகளும் அரசியலுக்கு, மேடைக்கு வரும் என்பதல்ல.

தத்துவம்தான் மண்ணை ஆள வேண்டும்

கோட்டைக்கும் போக முடியும் என்கின்ற நம்பிக்கை வளர்ந்து வருகின்ற காலத்தில் இல்லை, எங்கள் தத்துவம் மட்டும்தான் இந்த மண்ணை ஆளவேண்டும்.

அதிலே தமிழர்கள் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக பெரியார், அண்ணா என்ற இரு தீபங்களை கையிலே ஏந்தி கோட்டையிலே அமர்ந்திருக்கின்ற ஒரு ஒப்பற்றத் தத்துவத் தலைவராகத்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு அடையாளமாகத்தான் இங்கே அவர் தன்னுடைய அறிமுக உரையிலே இந்த இல்லத்தைப் பற்றிப் பேசுகிறபொழுது கூட, அண்ணாவை, பெரியாரை சொன்னார்கள். இன்னொன்றை நான் பதிவு செய்ய வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் பல நேரங்களில் மனம் உருகி எழுதியிருக்கின்றார். அதிலே அவர் எழுதிய எழுத்துகளில் மிக முக்கியமான தலையங்கம் மிக முக்கியமான அறிக்கையை அம்மா நாகம்மையார் அவர்கள் மறைந்த பொழுது எழுதினார்கள்.

என்னுடைய சுகம் போயிற்று என்று சொல்வேனா, எனக்கிருந்த ஒரே சொத்து போயிற்று என்று சொல்வேனா? இல்லை எனக்கிருந்த ஒரே அடிமை போய்விட்டது என்று சொல்வேனா? என்றெல்லாம் சொல்லிவிட்டுச் சொன்னார்.

தன்னுடைய மனைவி இறந்த பொழுது எந்த ஒரு குடும்பத் தலைவனும், அப்படி யாரும் சொல்லியிருக்க முடியாது. ஆனால், தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகின்றார்.

எனக்கிருந்த தடை நீங்கிற்று

எல்லாவற்றையும் சொல்லி விட்டு, எனக்கிருந்த தடை நீங்கிற்று. இனிமேல் என்னுடைய வாழ்க்கையைத் தமிழர்களுக்காகத்தான் செலவிடப் போகிறேன் என்று சொல்லுகின்ற அந்தத் துணிச்சலைப் பெற்ற ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

தன் மனைவி மறைந்ததைக் கூட ஊக்கமாக எடுத்துக்கொண்டார்

ஆக, தன்னுடைய மனைவியின் மரணம் கூட, சோகத்திற்கு உட்பட்டதுதான். ஆனால் எனக்கு சமூகப் பணிக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது. தடை மட்டுமல்ல - அதுவே ஒரு ஊக்கமாகவே எடுத்துக் கொள்ளுகிறேன் என்ற துணிச்சலைப் பெற்ற ஒரு தலைவன். இந்தச் சமூகத்தில், இந்த மண்ணில், இந்த உலகத்தில் உண்டென்றால், அவர்தாம் தந்தை பெரியார்.

தந்தை பெரியார், அன்னை நாகம்மையார் பெயரில் இயங்கு கின்ற இல்லம் எனக்கு இருந்தத் தடை போய்விட்டது என்று சொல்ல ஒரு கணவனுக்கு, ஒரு தலைவனுக்கு துணிச்சல் வந்ததென்றால், அந்தத் துணிச்சலோடு இந்த இல்லம் அந்தப் பெயரைத் தாங்கியிருக்கிறது.

புரட்சியை வித்திடுகிற குழந்தைகளாக...

எனவே, இதிலே வாழுகின்ற குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த பகுத்தறிவுவாதிகளாக, சிறந்த கொள்கை வீரர்களாக சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் ஒரு புரட்சியை வித்திடுகிற அளவுக்கு மானமுள்ளவர்களாக, அறிவு உள்ளவர்களாக வரவேண்டும் என்று இந்த நேரத்திலே என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்து தந்தை பெரியாரின் கொள்கைகளை மட்டுமல்ல, தந்தை பெரியாரின் சொத்துகளை மட்டுமல்ல, தந்தை பெரியாரையே இன்னும் உயிரோடு உலவவிட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மகத்தான காரியத்தை நம்முடைய ஆசிரியர் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் இந்த நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தை கட்டிக் காப்பதைப் போல் தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கொள்கைகளையும், தமிழ்ச் சமுதாயத்திற்காக அரசின் மூலமாகவும், இயக்கத்தின் மூலமாகவும் அரசியலில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த இரு தலைவர்கள் வாழுகிற காலத்தில்

இந்த இரு தலைவர்களும், வாழுகின்ற காலத்தில், தமிழர்களும், தமிழ்நாடும் எல்லா விடுதலையும் அடையவேண்டும் என்பதற்கு என்னுடைய விருப்பத்தை இந்த மேடையிலே பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல இந்தக் கொள்கை இந்த இளம் பிஞ்சுகளின் மனதிலே எழுதப்பட வேண்டும். வேரூன்றப் பட வேண்டும் என்கின்ற அந்தக் கருத்தையும் தெரிவித்து,

நம்மால் ஆன பணிகளை மேற்கொள்ள சூளுரைத்து... இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டதற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வாழ்க பெரியார்; வாழ்க அவர்களுடைய கொள்கைகள். தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையைத் தொடர்ந்து பரப்பி வருகின்ற செயலாற்றி வருகின்ற ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்து - தலைவர் கலைஞர் அவர்களுடைய வழியில் அரசியலிலும், தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை சமூகத் தளத்தில் தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு நம்மால் ஆன எல்லாப் பணி களையும் மேற்கொள்வோம் என்று இந்த நேரத்திலே சூளுரைத்து விடைபெறுகின்றேன். நன்றி.

- இவ்வாறு மத்திய அமைச்சர் ஆ.இராசா உரையாற்றினார்.

---------------நன்றி:"விடுதலை" 8-2-2009

6 comments:

Unknown said...

//தன்னுடைய மனைவியின் மரணம் கூட, சோகத்திற்கு உட்பட்டதுதான். ஆனால் எனக்கு சமூகப் பணிக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது. தடை மட்டுமல்ல - அதுவே ஒரு ஊக்கமாகவே எடுத்துக் கொள்ளுகிறேன் என்ற துணிச்சலைப் பெற்ற ஒரு தலைவன். இந்தச் சமூகத்தில், இந்த மண்ணில், இந்த உலகத்தில் உண்டென்றால், அவர்தாம் தந்தை பெரியார்.//

பெரியார் என்னை வியப்புக்கு மேல் வியப்படைய வைக்கிறார்.
துணிச்சலின் பெயர் பெரியார்தான்

அக்னி பார்வை said...

ஐயா,

நேரம் கிடக்கும் பொழுது நிச்சயம் நான் கடவுள் படம் பார்க்கவும், விளிம்பு நிலை மக்களை பற்றி மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்

Thamizhan said...

பெரியார் அவர்களுடைய மனித நேயக் கொள்கைகளிலே திளைந்துவிட்டவர்கள் அனைவரும் இதே எண்ணங்களுடன் தான் இருப்பார்கள்.
பெரியார் தந்த துணிவுதான் எதிரிகளைச் சமாளித்துத் தமிழகத்திற்கு முடிந்ததைச் செய்து வரும் மானமிகு மாண்புமிகு ராசா அவர்களைப் பெரியார் தொண்டர்கள் பாராட்ட வைக்கிறது.
அனைத்துத் தமிழர்களும் நாகம்மை குழந்தைகள் இல்லம்,திருச்சி பெரியார் வளாகம்,தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் இவ்ற்றிற்கு குழுக்களாகச் சென்று பார்த்து வர வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழன் அய்யா

தமிழ் ஓவியா said...

நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் நான் கடவுள் படம் பார்க்கிறேன் . மிக்க நன்றி தோழர் அக்னி