Search This Blog

12.2.09

தி.மு.க. ஆட்சி இல்லாவிட்டால் ஈழப் பிரச்சினையைப்பற்றி இந்த அளவுக்குக் கருத்துகளை வெளியிட முடியுமா?




* ஈழத் தமிழர்ப் பிரச்சினையை - தி.மு.க. ஆட்சிக்கு எதிரான செயல்பாடாக மாற்ற எண்ணலாமா?
* தி.மு.க. ஆட்சி இல்லாவிட்டால் ஈழப் பிரச்சினையைப்பற்றி இந்த அளவுக்குக் கருத்துகளை வெளியிட முடியுமா?
* எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற போக்கு வேண்டாம்!

இரு அணிகளாகவிருந்தாலும் கத்தரிக்கோல்போல் இருக்கவேண்டும் என்ற

முதல்வரின் பண்பாட்டைக் காப்பீர்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இரு அணிகளாகவிருந்தாலும், முதலமைச்சர் கலைஞர் சொன்ன கத்தரிக்கோல்போல் இருக்க வேண்டும் என்ற பண்பாட்டைக் காக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், சிங்கள சர்வாதிகாரி யாகவே ராஜபக்சே தன்னை எண்ணி இலங்கை வாழ் தமிழர்களை இனப்படு கொலை (Geocide) கூச்சநாச்சமின்றி செய்துவரும் நிலையைத் தடுத்து, போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், நிரந்தர அமைதியை அங்கே உருவாக்கவும், தாய்த் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களாகிய நாம் ஒன்று பட்டு ஓரணியில் நின்று குரல் கொடுத்தால்தான் வலிமை ஏற்படும்.

முதல்வர் கலைஞர் விடுத்த வேண்டுகோள்கள்

அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்து நாம் ஒன்றுபட்டு தமிழர் நலங்காக்க ஒன்றாக நின்று, அறவழியில் போராடுவோம் என்று முதல்வர் கலைஞர் விடுத்த வேண்டுகோள், எடுத்த பல கட்ட முயற்சிகள் உலகத் தமிழர்கள் விருப்பத்தினை - விழைவினை பூர்த்தி செய்யும் வகையில் பயன் அளிக்கவில்லை என்பது வெட்கத்திற்கும், உரியதே!

மத்திய அரசுமூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் தர எண்ணும் நாம் தமிழர்கள்) மாநில அரசினை முன்னிறுத்தி, மாநில அரசின் முதல்வ ராகவும், மத்தியில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் உள்ள கலைஞர் அவர்களின் தலைமையில் அறப்போர், வற்புறுத்தல்கள் நடத்துவதுதானே எதிர்பார்க்கும் பலனைத் தர ஒரே வழி!

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்!

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் ஈழத் தமிழர் விடியலைத் தள்ளிப் போடத்தான் உதவுமே தவிர, இப்பிரச்சினையில் அரசியல் லாபம் பெற சிலருக்கு இது மூலதனமாகப் பயன்படலாமே தவிர, ஆக்கப்பூர்வப் பயன் ஏதும் பெருமளவில் விளையுமா?

தமிழ்நாடு அரசின் முயற்சியால் விளைந்த பலன்கள்

இலங்கையில் பட்டினியால் செத்துமடியும் அப்பாவி மக்களுக்கு உணவு, குண்டுவீச்சால் அவதியுற்று மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டவர்களுக்கு மருந்துகளும் கிட்டாது அவதிக்கு ஆளான ஈழத் தமிழர்களுக்கு உணவும், மருந்தும் எப்படி கிடைத்தன? முன்பு தடுத்த சிங்கள அரசு, பின்பு அய்.நா. பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தார் மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படவில்லையா? தமிழ்நாடு அரசு சார்பிலேயே இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு (நிவாரண) நிதியை அளித்தால் ஓரளவுக்கேனும் அம்மக்களுக்கு - எம் தமிழர்களுக்குக் கிடைக்கும் நிலை அப்பொழுதுதானே ஏற்பட்டது!

இன்றோ, அதனையும் தடுக்கிறது சிங்கள அரசு! அய்.நா. அதிகாரிகளையும் உள்ளே நுழையவிடவில்லை; முல்லைத்தீவில் அவதியுறும் தமிழர்களுக்கு உணவோ, மருந்தோகூட கிடைக்காமல் தடுத்து இனப்படுகொலை நடத்துகிறது. தான் நடத்திவரும் தமிழினப் படுகொலையை விடுதலைப்புலிகள்மீது போட்டு அசல் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கிறது.

சிங்கள பத்திரிகை ஆசிரியர்கள் ஆனாலும்கூட, எவரும் இந்த இடிஅமின் இட்லர் பாரம்பரிய ஆட்சிக்கு எதிராக கருத்துக் கூறி, உண்மைகளை மனிதநேயத்தோடு சொன்னால், அவர்கள் உலகைவிட்டே கூலிப்படைகளால் அனுப்பி வைக்கப்படும் கொடுமை சர்வசாதாரணம் அங்கே!

நடுநிலை ஊடகமான பி.பி.சி., இனி நாங்கள் அந்த இலங்கை பிரிவுச் செய்திகளையே மூடுகிறோம் என்று கூறும் அளவுக்கு பேச்சு - கருத்துச் சுதந்திரம் சிங்கள அரசால் பறிக்கப்பட்டுள்ளபோது,

இங்கே நாம் முதல்வரை முன்னிலைப்படுத்தி, மத்திய அரசு மூலம் அழுத்தத்தைக் கொடுத்து இயங்குவதுதானே சரியாக இருக்கும்?

ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகசியத் திட்டம் (Hidden Agenda) வைத்து இயங்குவதால்தானே இந்த அணிகள் தோற்றம் இங்கு ஏற்பட்டது?

செத்துக்கொண்டுள்ள ஈழத் தமிழர் பிரச்சினையை ஈழப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், இங்குள்ள அரசியலுக்கு - கலைஞர் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு இது ஒரு சரியான துருப்புச் சீட்டு என்று கருதித்தானே மத்திய - மாநில அரசுகளுக்குக் கண்டனம் என்று தலைப்பிட்டு கூட்டம் பேசிடுவது-

நமது கூற்றுக்கு ஒரு கைமேல் ஆதாரம் இல்லையா? நமது முதல்வர் கலைஞர் அவர்கள், மற்றவர்கள் எதைச் சொல்லிச் செய்யாமல் விட்டார்? யாராவது விரலை மடக்க முடியுமா?

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மத்தியில் உள்ள நாடாளுமன்ற அமைச்சர் தி.மு.க. இராஜிமா செய்ய இப்போது அவரைக் குறை கூறிடும் சில அதிதீவிரத் தலைவர்கள் அதனைப் பின்பற்றி இராஜினாமா செய்ய முன்வந்தனரா? இல்லையே!

யாரும் செய்ய முன்வராத நிலை. இன்னும் சில அகில இந்திய கட்சிகள், எங்கள் தலைமையைக் கேட்போம் என்றனர்; முடிவு என்ன?

பிறகு கலைஞர் மட்டும் தனது தமிழக ஆட்சியை இழந்துவிட வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? உள்நோக்கம் மட்டும்தான் இருக்க முடியும்!

திரைமறைவில் ஒரு திட்டம்

திரைமறைவில் ஒரு (Hidden Agenda) ரகசியத் திட்டம் மூலம் தி.மு.க. இல்லாத ஓர் ஆட்சியை அ.தி.மு.க.வின் துணையோடு அமைத்து பிறகு சரண்சிங், சந்திரசேகர் ஆட்சி கவிழ்ப்புபோல வசதிப்படும் நேரத்தில் நடத்திட பேச்சுவார்த்தைகள் நடந்ததை மனச்சாட்சி உள்ளவர்கள் மறுக்க முடியுமா?

இந்த அளவுக்கு ஈழத் தமிழர் உரிமைக்கு அறப்போராட்டத்தை, செல்வி ஜெயலலிதா அரசோ, வேறு ஒரு அரசோ - தி.மு.க. - கலைஞர் அரசு அல்லாது - இங்கு இருந்தால் இப்படி குரல் கொடுக்க முடியுமா?

தலைவர்களின் பேச்சுக்குக்கூட வாய்ப்பூட்டு போட்டு வைத்து, அந்த வாய்ப்பூட்டையும் - திறந்த தலைவர் முதல்வர் கலைஞர்தான் என்பதை நன்றியும், நாணயமும் உள்ளவர்களால் மறக்க முடியுமா? இல்லை மறுக்கத்தான் முடியுமா?

மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் தீர்மானத்தை சட்டமன்றத் தில் முதல்வர் கலைஞர் முன்மொழிந்தார்களே, அப்போதுகூட இறுதி வாக்கியமாக நாங்கள் ஆட்சியை இழந்தால் தமிழ் ஈழம் வரும் நிலை ஏற்படுமென்றால், நாங்கள் ஆட்சியை இழந்தால் தமிழ் ஈழம் வரும் நிலை ஏற்படுமென்றால், நாங்கள் அதையும் செய்யத் தயார் என்று கூறினாரே, சட்டமன்றத்தில் பதிவாகி உள்ளதே - அச்சொல்லை உச்சரித்து வேறு எவர் இருந்தாலும், இன உணர்வோடு சொல்லியிருப்பார்களா? நடுநிலையோடு சிந்திக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒரு கண்ணோட்டம்,

வேறு எந்தப் பிரச்சினையும் தி.மு.க.வுக்கு எதிராக எடுபடாத நிலையில், அப்பாவி இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக உணர்ச்சிக் கொந்தளிப்பான இப்பிரச்சினையை விசிறி விட்டு குளிர் காயத்தானே திட்டம்?

அதிலும் இரண்டே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர விருக்கும் நிலையில், கூட்டணி அரசியல் மும்முரமாக நடைபெறும் நிலையில் இந்த ஆயுதம் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கிடைக்காதா என்பதுதானே இங்குள்ள பிரதான எதிர்க்கட்சிக்கும், சுற்றுக் கோள்களுக்கும், கூட்டுச் சேர இரகசிய பேரங்கள் நடத்திக் கொண்டிருக்கும் புதிய கோள்களுக்கும் உள்ள நப்பாசை?

இதை வெறும் உணர்ச்சிக்குப் பலியாகாமல், அறிவுபூர்வமாக ஆழமாக சிந்திக்க உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை எண்ணிப் பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் இதுவரை இப்பிரச்சினையில் ஈடுபாடு காட்டாத பா.ஜ.க.கூட கால் ஊன்றலாமா என்று கருதி அக்கறை காட்டுகிறது.

ஆனால், அவர்கள் நாங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்கள்; தனி ஈழம் என்பதற்கு எதிரானவர்கள் என்று தங்கள் நிலைப்பாட்டினை அவசர அவசரமாகத் தெரியப்படுத்துகின்றனரே!

இனிகூட மத்தியில் ஆட்சியில் அமருவதற்கு வாய்ப்புகள் மூன்று அணியினருக்கு உண்டு தற்போது கூறப்படும் அல்லது விருப்பப்படும் கணக்குப்படி.

1. காங்கிரஸ் தலைமையில் ஓர் அணி

2. பா.ஜ.க. தலைமையிலான ஓர் அணி

3. இடதுசாரிகள் அணி

இந்த மூன்றுக்கும் - ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை மேற்கூறிய இரண்டு கண்ணோட்டத்திலும் ஒரே நிலைப்பாடுதானே!

தி.க., தி.மு.க.வைத் தவிர வேறு யாருக்கு அக்கறை?

இவைகளை எல்லாம் பார்க்கையில் உண்மையான திராவிடர் இயக்கத்தின் இன உணர்வும், ஈழத் தமிழர் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த இனத்தாலும் மனத்தாலும் ஒன்றிய அமைப்புகள் தி.க., தி.மு.க.வைத் தவிர வேறு உண்டா?

இவர்களுக்கு இல்லாத அக்கறை மற்றவர்களுக்கு இருப்பதுபோல் (பல கட்சிகள் தொடங்கப்படவேயில்லையே!) காட்டிக் கொள்ளப்பார்க்கின்றனர். இதில் தொடர்ந்து குரல் கொடுத்து, செய்யவேண்டியவைகளை அவரவர் சக்திக்கேற்ப, எல்லையையொட்டி செய்து வரும் இயக்கங்கள் இவை. இவைகளைவிடத் தீவிரமாக வருவதை நாம் வரவேற்கவே செய்யலாம்.

யார் தலையாட்டும் பொம்மைகள்

ஆனால், அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் வேறுபாடு தெரியாமல் நடக்க மாணவர்களோ, இளைஞர்களோ முன்வரக்கூடாது!

இன உணர்வு, மொழி உணர்வு உள்ள கலைஞர் அரசைக் காட்டிலும் இப்பிரச்சினையில் அழுத்தம் கொடுக்க இன்னொரு அரசு வருவது எளிதல்ல. மேலெழுந்தவாரியாக நினைத்து, கலைஞர் அரசுக்கு எதிராகவோ அல்லது அவரது பணியைக் கொச்சைப்படுத்தி, உடன் இருப்பவர்களைத் தலையாட்டும் பொம்மைகள் என்று வருணிப்பதோ பயன் அளிக்காது! இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படும்முன், இங்குள்ள ஈழத் தமிழர் நலன் காக்க முன்வரும் நம்மிடையே போர் நிறுத்தம் தேவை!

இரண்டு அணியாக ஆக்குவதற்கு யார் காரணம் என்பதை உலகம் அறியும்; என்லும், முதல்வர் கலைஞர் அவர்கள் கூறிய கத்தரிக்கோலின் இருமுனைகள் (Two Blades of the Scissors) நினைவூட்டிடும் பண்பையாவது மற்றவர்கள் பெறவேண்டும்.

எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று நினைக்கும் போக்கு தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து மாறிடவேண்டும்.

அன்றுதான் விடிவு - விடியல் எல்லாம். ஈழத் தமிழருக்கு.


------------------ "விடுதலை" - 11.2.2009

6 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ரவி said...

//தி.மு.க. ஆட்சி இல்லாவிட்டால் ஈழப் பிரச்சினையைப்பற்றி இந்த அளவுக்குக் கருத்துகளை வெளியிட முடியுமா?"//

NOOOOOOOOO !!!!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவி

Unknown said...

வளைய தளத்தில் வந்த ஒரு ஈமெயில் இது. இதற்கு தங்கள் கருத்து என்னவோ?
------------------

ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசின் ராணுவப் படுகொலையை வெளிப்படையாக ஆதரித்து இலங்கை அரசின் இரண்டாவது தூதரகமாக செயல்பட்டு வரும் 'இந்து' நாளேடு அண்மையில் தி.மு.க. செயற்குழு மேற்கொண்ட முடிவுகளை மனம் குளிர பாராட்டி வரவேற்று தலையங்கம் தீட்டியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியும் இந்தப் பிரச்சினையில் மிகவும் உள்ளத்தைத் தொடக்கூடிய அரசியல் மேன்மை மிக்க செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக 'இந்து'வின் தலையங்கம் கூறுகிறது (பிப்.4). சிறிலங்காவில் நடக்கும் சம்பவங் களை எதிர்கொள்வதில் மிகவும் நிதானத்தோடு அளந்து செயல்படுவதோடு தனது மேதைமையான முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்தத் தலையங்கம் கூறுகிறது.
"Between them, the Dravida Munnetra Kazhagam government in Tamil Nadu and the United Progressive alliance at the Centre have shown impressive political statesmanship and footwork in responding to the challenge of digesting and responding soberty to what is happening in Sri Lanka."

மேலும் அத்தலையங்கத்தில், "தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் போர் நிறுத்தம் கோருகின்றன; விரல்விட்டு எண்ணக்கூடிய குழுக்கள் வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றன; தமிழகத்தின் கொந்தளிப்பான இச்சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தனது கவலை தமிழ் மக்களைப் பற்றித் தானேயொழிய விடுதலைப் புலிகளைப் பற்றியல்ல என்று திட்ட வட்டமாக சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப் படுத்திவிட்டார். அதுமட்டுமல்ல; கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் நடத்தி வரும் சகோதர யுத்தத்தையும், முரட்டுத்தனமான கொள்கைகளை யும் மிகவும் துல்லியமாக விமர்சித்துள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய மூன்று அரசியல் தீர்மானங்கள் இலங்கை இனப்பிரச்சினையில் இதுவரைத் தமிழகம் முன் வைத்த கோரிக்கைகளிலிருந்து மாறுபட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங் களாகும். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. வின் எதிர்பார்ப்பையும் முன் வைக்கும் பிரச்சாரத்தையும், தி.மு.க. செயற்குழு தெளிவாக திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. விடுதலைப் புலிகள் பற்றி எதுவும் குறிப்பிடாமல், அப்பாவி தமிழ் மக்களின் பாதுகாப்பும் நலன்களும் பாதுகாக்கப்பட்டு, சுமூகமான நிலை திரும்ப வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவின் தீர்மானம் கூறுகிறது. வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து, சுயாட்சி வழங்கும் வகையிலான அரசியல் தீர்வை (ஒன்றுபட்ட இலங்கைக்குள்) இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அத் தீர்மானம் கூறுவதோடு, இந்த இலக்கை அடைவதற்கு சிறீலங்கா அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதில் தமிழ்நாடு அரசினை பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய அம்சம் வேகம் பெற்று வரும் ஒரு பிரச்சினையில் - மத்திய அரசோடு தன்னையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத் துக்கான தீர்வை முன் வைத்துள்ளதுதான்!

(A commendable feature of the Tamil Nadu Government's response is the forward looking way in which it has teamed up with the Central government in responding to a fast-developing situation.)

பிரணாப் முகர்ஜியின் அறிவார்ந்த நடுநிலையான அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அவர் கொழும்பு சென்று, ராஜபக்சேயை சந்தித்து, இந்தப் பிரச்சினையை சாதுர்யத்தோடு கையாண்டதே இதற்கு காரணம். இதன் காரணமாகத்தான் மாநில அரசும், மத்திய அரசும் தங்களை ஓரணியாக்கிக் கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளின் கடந்தகால தவறுகள் பற்றி உணர வைத்து, எதிர்கால அமைதித் தீர்வை நோக்கி மத்திய மாநில ஆட்சிகளை திரும்பச் செய்துள்ளது - என்று 'சிறிலங்கா ரத்னா' விருதைப் பெற்ற 'இந்து' ராம் தனது ஏட்டின் தலையங்கத்தில் பாராட்டு மழையில் தி.மு.க.வை மூழ்க செய்து விட்டார்.

மத்திய காங்கிரஸ் ஆட்சியின் கொள்கையோடு தி.மு.க. தன்னையும் இணைத்துக் கொண்டு விட்டது என்பதே 'இந்து'வின் மய்யமான கருத்து. பார்ப்பன 'இந்து' ஏட்டிடமிருந்து கிடைத்துள்ள இந்த சான்று ஒன்று மட்டுமே தி.மு.க. மேற்கொண்ட துரோகத்தை வெளிப்படுத்துவதற்கு போதுமான தாகும்.

'இந்து' ஏடு போற்றிப் பாராட்டும் ஒரு தீர்வு திட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 'இந்து' ஏடு எதை ஆதரிக்கிறதோ, அதை எதிர்த்து எழுதினாலே போதும் என்று பெரியார், தாம் 'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது தனக்கு ஆலோசனை கூறியதாக கி.வீரமணி அடிக்கடி கூறுவார். இப்போது 'இந்து' ஏடு பார்ப்பன வெறியோடு முன் வைக்கும் கருத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு 'கலைஞரின் தூதுவராக' வீரமணி களமிறங்கியிருப்பதை தமிழின உணர்வாளர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தி.மு.க. உருவாக்கியுள்ள 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' நடத்தும் பிரச்சாரத்தில் தன்னை யும் இணைத்துக் கொண்டு தீவிரப் பிரச்சார பீரங்கியாக மாறி நிற்கும் கி.வீரமணி, கடந்த காலங்களில் எத்தகைய கருத்துகளை முன் வைத்தார்? துரோக காங்கிரசாரிடம் தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டு சேரக் கூடாது என்று கூறி, திராவிட கட்சிகள் ஓரணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்று 'திராவிட பார்முலாவை' அன்று முன் வைத்த கி.வீரமணி, இப்போது காங்கிரசின் பச்சை துரோகத்துக்கு நடை பாவாடை விரிக்கும் தி.மு.க. வோடு கைகோர்த்துக் கொண்டு காங்கிரசாரோடு ஒரே மேடையை பகிர்ந்து கொண்டு பேசி வருவதற்குப் பெயர் என்ன? தமிழர்களுக்கு எதிராக காங்கிரசின் பச்சை துரோகத்தை எதிர்த்து, தமிழகமே கொந்தளிக்கும் சூழ்நிலையில் கி.வீரமணி யின் காங்கிரசு எதிர்ப்பு முழக்கம் எங்கே போனது? ஏன் வாயடைத்துப் போனது? இதோ, உதாரணத் துக்கு ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம்:

"திராவிட இயக்கங்களான அரசியல் கட்சி களுக்கு நமது கனிவான வேண்டுகோள் என்ன வென்றால், மீண்டும் காங்கிரசுடன் சேருவது பற்றி சிந்திப்பதை ஒரு புறத்தில் தள்ளி வைத்து, நாடாளு மன்றத்திற்கான 40 இடங்களுக்கும் (புதுவை உட்பட) நீங்கள் ஒரு தொகுதி உடன்பாட்டிற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது? திராவிட பார்மூலா என்று நாம் முன்பு வற்புறுத்தியதையே மீண்டும் நினைவூட்டு கிறோம்; இதை அசை போட்டுச் சிந்தியுங்கள். அதற்கான வாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிட் டுள்ளோம். இப்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளது.

ஒத்த கருத்துள்ளவர்கள் ஏன் ஓரணிக்கு வரக்கூடாது?

மொழி (இந்தி)ப் பிரச்சினை, மாநில சுயாட்சி, திராவிடப் பண்பாட்டினை காத்தல், காவிரிப் பிரச்சினை, ஈழத் தமிழர் இனப் படுகொலை தடுப்புப் பிரச்சினை இவைகளில் உங்களால் ஒத்தக் கருத்து கொள்ள முடிகிறது; அகில இந்திய கட்சிகளால் அப்படி அதனை செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. அத்தகையவர்களுக்கு விட்டுக் கொடுத்து அவர்களோடு தொகுதி உடன்பாடு காண முயலும்போது, 25 ஆண்டுகள் நேற்று வரை ஒரே அணியில் இருந்து கோபதாபங்கள் காரணமாகப் பிரிந்த நீங்கள், மிகப் பெரும் பகையாளர்கள் போல் எவ்வளவு காலத்திற்குக் கட்சி நடத்தப் போகிறீர்கள்? ('விடுதலை' 10.3.96)
- என்று அன்று கி.வீரமணி எழுதினார்.. காங்கிரசை தனிமைப்படுத்த அன்று குரல் கொடுத்தவர். இன்று தமிழகத்தின் உணர்வாக அந்தக் கருத்து உருவாகும் போது தி.மு.க.வுடன் சேர்ந்து காங்கிரசுடன் கை குலுக்குவது, தமிழினத் துரோகம் அல்லவா?

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சர்வாதிகாரி என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தி.மு.க. ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கலைஞர் கருணாநிதி செயற்குழுவில் பேசியிருக்கிறார். இதைக் கண்டிக்காத வீரமணி, தி.மு.க. அமைத்துள்ள குழுவிலும், இடம் பெற் றுள்ளார். அப்படியானால், பிரபாகரன் சர்வாதிகாரி என்ற முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்தை கி.வீரமணி ஆதரிக்கிறாரா? இல்லை என்றால், அதை இதுவரை மறுத்து எழுதாதது ஏன்? தி.மு.க.வின் துரோகப் பாதை தான் தி.க.வின் பாதையா?

1991 இல்விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியாவில் அய்க்கிய முன்னணி ஆட்சி நீட்டித்தது. அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியே நடந்தது. அப்போது இதே கி.வீரமணி என்ன எழுதினார்? விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிக்கக் கூடாது என்று எழுதினார்.

"ஏனைய போராளிக் குழுக்களில் பலவும் தாராளமாக தமிழ்நாட்டில், இந்தியாவில் நடமாட உரிமைகள் அளித்து விட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பினை மட்டும் தடை செய்வது ஏன்?"
- என்று கேட்ட வீரமணி, அப்போது தமிழகத்தில் இருந்த கலைஞர் கருணாநிதி அரசும் இதற்கு உடன் பட்டு பழியை சுமக்கக்கூடாது என்று எழுதினார்.

"மத்திய அரசு - அய்க்கிய முன்னணி அரசு முந்தைய அதிகார வர்க்கம் விரித்த வலையில் வீழ்ந்து, அவகீர்த்தியைத் தேடிக் கொள்வதும் தமிழக தி.மு.க ஆட்சி - கலைஞர் அரசு இதில் பழியைச் சுமப்பதும் தேவையற்ற ஒன்று என்பது நமது உறுதியான கருத்து. ('விடுதலை' 15.6.96)

1996 இல் வெளியிடப்பட்ட உறுதியான கருத்து. இப்போது தி.மு.க. தலைமை விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இழிவுபடுத்திப் பேசும்போது எங்கே போய் பதுங்கிக் கொண்டது?

மத்திய அரசின் கொள்கையோடு தி.மு.க. தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டதாக 'இந்து' பார்ப்பன ஏடு கலைஞர் கருணாநிதியை பாராட்டி மகிழ்கிறது.
'இந்து' பார்ப்பன ஏட்டின் கருத்துகளை எதிர்ப்பதே பெரியார் கற்றுத் தந்த அணுகுமுறை என்று கூறி வந்த கி.வீரமணி, இப்போது 'இந்து'வின் பாராட்டைப் பெறும் கலைஞர் கருணாநிதியோடு கரம்பிடிக்க நின்று கொண்டிருப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?

திராவிடர் கழகத்தில் இன்னும் மிச்சம் மீதியுள்ள உணர்வுள்ள இளைஞர்களைக் கேட்கிறோம்,
கி. வீரமணியின் இந்த துரோகத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களா? காங்கிரஸ் கட்சித் தொண்டன்கூட இன துரோகத்தை எதிர்த்து, அக்கட்சியைக் கண்டித்து, தீக்குளிக்கும் போது பெரியார் தொண்டர்களே இந்த துரோகத்தைத் தட்டிக் கேட்காமல் வாய் மூடி நிற்கப் போகிறீர்களா? அல்லது 'உலகத்தின் ஒரே தமிழர் தலைவர் எங்கள் தலைவர்' என்று மீண்டும் பஜனைப் பாடல்களைப் பாடப் போகிறீர்களா?

தமிழ் ஓவியா said...

Tamil அவர்கள் நமது தோழர் ஒருவர் எழுதிய கட்டுரை எடுத்துப் போட்டு உங்கள் பதில் என்ன? என்று கேட்டிருக்கிறார்.

இதில் உள்ளவைகளுக்கு வரிக்கு வரி பதில் சொல்ல முடியும். அப்படி ஒரு சகோதர யுத்த விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை.

எதையும் எந்த நேரத்திலும் எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தேவை காரியம் நடக்க வேண்டும். பெரியார் இந்த அணுகுமுறையைத் தான் கையாண்டார், வீரமனியும் இதே அணுகுமுறையைக் கைYஆண்டு கொண்டிருக்கிறார் என்பது எனது கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும் அதை குறை சொல்லிக்கொண்டு காரியத்தைக் கெடுத்துவிடக்கூடாது.
அந்த வகையில் தாங்கள் கேட்ட்ட அய்யங்களுக்கு வீரமணி வர்கள் தரும் விளக்கத்தை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

"இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டுமென்ற
குடியரசுத் தலைவரின் உரை வரவேற்கத்தக்கது!

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மத்திய
அரசின் கொள்கை குடியரசுத் தலைவர் உரையாக வெளிவந்துள்ளது

நாம்அனைவரும்ஒன்றுபட்டுகுரல்கொடுப்போம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்ற இந்தியக் குடியரசுத் தலைவரின் உரையை வரவேற்று, கட்சிகளுக்குள் நடக்கும் போரை நிறுத்தி, ஒன்றுபட்ட முறையில் குரல் கொடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:-

நமது குடியரசுத் தலைவர் உரை என்பது மத்திய அரசின் கொள்கைத் திட்டங்களின் அறிவிப்பு ஆகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்!

மத்திய அமைச்சரவை கூடித்தான் குடியரசுத் தலைவர் உரையைத் தயாரிக்கும். எனவே, மத்திய அரசின் கொள்கைப் பிரகடனம் ஆகும் அது.

குடியரசுத் தலைவரின் கூற்று

அவ்வுரையில் நமது குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள், ஈழத்தில் நடைபெறும் போரை நிறுத்தவேண்டும் என்று இலங்கை அரசுக்கும், போராடும் விடுதலைப்புலிகளுக்கும் அறிவுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போரை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவேண்டும் என்று திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.

ராணுவ ரீதியான சண்டைகளால் இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள மக்களின் வேதனைகள் எங்களுக்கு (இந்திய அரசுக்கு - மக்களுக்கு) மிகுந்த மனக்கவலையை அளித்து வருகின்றன; இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகள் இயக்கமும் உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும், இராணுவம் தனது தாக்குதல்களை நிறுத்தவேண்டும், விடுதலைப்புலிகள் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும், அப்பொழுதுதான் ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குட்பட்ட அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைக்குத் தீர்வு காண முடியும் என்பதுதான் இந்திய அரசின் நிலை என்று குறிப் பிட்டுள்ளார்கள்.

முதல்வருக்கு மருந்தில்லா மருந்து

மத்திய அரசின் இந்நிலைப்பாட்டில் (1) போர் நிறுத்தம் உடனே ஏற்படவேண்டும்; (2) இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று குறிப்பிடப்பட்டதானது, மருத்துவமனையில் இருந்துகொண்டே, ஈழத் தமிழர் பிரச்சினையின் காரணமாக உடல் உபாதைகளுடன் உள்ளத்தில் வலி மிகவும் என்ற நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறிவரும் நமது தமிழினத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இந்திய அரசின் இந்தத் திட்டவட்டமான கொள்கை அறிவிப்பு சரியான, மருந்தில்லா மருந்தாகப் பயன்பட்டிருப்பது அறிய நமக்கு ஆறுதல் ஏற்படுகிறது.

முதலமைச்சரின் வரவேற்பு

முதலமைச்சரே நேற்று அந்நிலையிலும் அவ்வுரை கேட்டு (12.2.2009) அன்றே விடுத்துள்ள ஓர் அறிக்கையில்,

இன்று (12.2.2009) நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர், தமது உரையில், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்றும்; பிரச்சினைக்கு அமைதியான முறையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகள்மூலம் தீர்வு காணவேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பது;
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் எனக்கு மிகுந்த ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைந்துள்ளது (முரசொலி, 13.12.2009) எனக் குறிப்பிட்டுள்ளார்!

அறுவை சிகிச்சை நடந்ததோ 11 ஆம் தேதி, 12 ஆம் தேதி மதியமே இப்படி மருத்துவமனையிலிருந்து ஒரு முக்கிய வரவேற்பு அறிக்கை விடுத்திருப்பது அவர் களுக்கு உள்ள கவலை, அக்கறை எப்படிப்பட்டது என்பதை உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர் கள் வரை அறிவதற்கான சான்று அல்லவா?

மூன்று முக்கிய கருத்துகள்

குடியரசுத் தலைவரின் இவ் வுரையில் - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மூன்று முக்கிய கருத்துகள் தெளிவாகின்றன.

1. உடனே போர் நிறுத்தம்

2. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை

3. சிங்கள அரசும் - விடுதலைப்புலிகளும் பேசவேண்டும்

விடுதலைப்புலிகளைத் தவிர்த்த பேச்சுவார்த்தை பலன் தராது

விடுதலைப்புலிகளை ஒதுக்கிவிட்டு பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையில் உண் மைத் தீர்வாகாது என்பது இதன்மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, அதே சாக்கில் தடை செய்து, அவர்களுக்குப் போட்டியான சில சோளக்கொல்லை பொம்மை போன்றவர்களை வைத்து ஒப்புக்குக் காட்டினால், உறுபயன் விளையாது என்பதை அங்கே கிழக்கு மாகாணத்தில் நடக்கும் அரசியலைப் பார்த்தாலே புரியும்.

இப்போது பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு - எந்த நிலையில் தந்தை செல்வா போன்றவர்கள் தனி ஈழம் என்ற பிரிவினை கேட்கவேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டார்கள் என்ற சரித்திரம் அறிந்தவர்களுக்கு ஒரு செய்தி - இங்குள்ள பலர் அறியாத செய்தி - விடுதலைப்புலிகள்தான் ஏதோ தனி நாடு - பிரிவினை கேட்கத் தொடங்கியவர்கள் என்ற ஒரு தவறான எண்ணத்தை மனதிற்கொண்டு - சில அரைவேக்காடுகள் உள்பட ஆதாரமில்லாப் பிரச்சாரம் செய்கின்றன!

போர் நிறுத்தப்படவேண்டும்

அரசியல் தீர்வுபற்றி பேச்சுவார்த்தை நடந்து நிரந்தரத் தீர்வு காண இரு தரப்பினர் மேஜையில் அமர்ந்து பேசிடும் நிலையில், எந்த முறையில் அரசியல் தீர்வு என்பதை அந்த மக்களின், பிரதிநிதிகள் தான் தீர்வு காண முடியுமே தவிர, வெளியில் உள்ளவர்களான வெளிநாட்டவர்களின் கருத்துத் திணிப்பு பயன் பெறாது; இப்போது அதுவல்ல பிரச்சினை. உடனே போர் நிறுத்தப்பட்டு அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக (மருத்துவமனைகள்மீது குண்டுவீசப்பட்டு சிகிச்சை பெறும் தமிழர்கள் உள்பட) பொதுமக்கள் காக்கை குருவிகளைப் போல் குண்டுமழையால் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டாகவேண்டும்.

நிபந்தனை இல்லாத போர் நிறுத்தம்தான் உடனடித் தேவை.

வெறும் இராணுவ நடவடிக்கையால் எவ்விதப் பலனும் ஏற்படாது.

ராஜபக்சேயின் கூற்று - உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது

விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டு பிறகு அரசியல் தீர்வு என்ற இலங்கை ராஜபக்சே அரசின் நாடகக் கூற்று உலக மக்களுக்கு ஏற்புடைத்தது அல்ல.

இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை என்பதை உலகம் - உலக நாடுகள் - உணரத் தொடங்கிவிட்டது. எனவே, இந்நிலையில், மேலும் பழைய பல்லவியை இலங்கை அரசு பாடிக்கொண்டே இருப்பதால், பலனேதும் விளையாது.

தமிழ்நாடு அரசு காரணம் அல்லவா!

தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வாளர்களே, உங்கள் மனச் சாட்சிப்படிக் கூறுங்கள்.

இந்த அளவுக்கு இந்தியப் பேரரசு கொள்கை முடிவு (ளுவயனே) கூறும் அளவுக்கு நிலைமை வளர்ந்தது எதனால்? யாரால்?

தமிழக முதல்வர் கலைஞர்தம் அரசு, கட்சி - கூட்டணியில் மத்திய அரசில் இடம்பெற்று, அவர்களையும் வற்புறுத்தி அழுத்தம் கொடுத்ததால்தானே இது சாத்தியமாயிற்று?

இவரது தொடர் வற்புறுத்தல்கள்தானே இந்த விளைவை - விளைச்சலை முளைக்கச் செய்துள்ளது?

இந்நிலையில், முதல்வரை - தமிழக அரசைக் கண்டிப்பதால், குறைகூறுவதால் என்ன பயன்? மத்திய அரசு சொல்லும்போது தானே அது உலக நாடுகளின் மத்தியில் - ஏன் இலங்கைக்குக்கூட அந்த அழுத்தம்தானே ஆக்க ரீதியான பயன் தரும்?

தமிழ்நாட்டுக் காங்கிரசுகாரர்களுக்கு...

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களும் இதனைப் புரிந்து கொண்டு நிதானத்துடன் இப்பிரச்சினையை அணுகக் கடமைப்பட்டுள்ளார்கள்!

அதேபோல, மத்திய அரசின் தலைவர்களைப் பழிப்பது, கொச்சைப்படுத்துவது போன்ற அடாவடித்தனத்தில் இறங்கிடும் பொறுப்பற்ற வீண்செயல்கள், தேவையற்ற விளைவுகளை உருவாக்கி, வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியை உடைக்காமல் இருப்பது அவசரம் - அவசியம்!

தமிழக அரசும், மத்திய அரசும் இரண்டும் இந்நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை நாம் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து மேலும் வலிமையாக்கி அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கி உரிமை முழக்கம் செய்வோம்!

தேவை நமக்குள் போர் நிறுத்தம்

நமக்குள் போர் நிறுத்தம் தேவை! தேவையற்ற விமர்சனங்கள் தவிர்க்கப்படுவது பிரச்சினையின்மீது அக்கறையுள்ளவர்களின் தலையாயக் கடமையாகும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


---"விடுதலை"13.2.2009

Unknown said...

//இப்போது தி.மு.க. தலைமை விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இழிவுபடுத்திப் பேசும்போது எங்கே போய் பதுங்கிக் கொண்டது? //

புரிய வேண்டியவர்களுக்கு புரியும் வகையில் அறிக்கையில் விபரங்களைத் தெரிவித்துள்ளார் வீரமணி என்றே நானும் கருதுகிறேன்.

இதில் தமிழ் ஓவியாவின் கருத்தையே நானும் வழி மொழிகிறேன்.