Search This Blog

24.2.09

திராவிடர் கழகம் என்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும்.




தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக
இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினால்

அந்தச்சட்டத்தைதிராவிடர் கழகம்கொளுத்தும்!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

தொல்.திருமாவளவன் - சுப. வீரபாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றினால், திராவிடர் கழகம் அதைக் கொளுத்தும் என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

மத்திய அரசின் மசோதா தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தலையில் விழுந்த பேரிடி என்று தொல். திருமாவளவன் கூறினார். தமிழர் தலைவர் ஆசிரியர் மிகச் சரியான தருணத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளார் என்று சுப. வீரபாண்டியன் கூறினார்.

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான மசோதாவில் சமூகநீதிக்கு எதிரான சரத்துகள் சேர்க்கப்பட்டதைக் கண்டித்தும், சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்துரை சிபாரிசுகளை இணைத்தும் காலம் தாழ்த்தாமல் இந்த மசோ தாவை, இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் திராவிடர் கழகத்தின் சார்பில் அதுவும் 24 மணி நேரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (24.2.2009) காலை 11 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொல். திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு தேவையற்ற பல குழப்பங்களைச் செய்துள்ளது. ஏற்கெனவே உள்ளதிலேயே கை வைத்துவிட்டது மிகுந்த வேதனை அளிக்கிற ஒரு செயலாகும்.

தலையில் இடி விழுந்த செய்தி இது

ஏறத்தாழ 47 நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை மத்திய அரசு உரு வாக்கியிருப்பது ஏழை, எளிய மக்களின் தலையில் இடி விழுந் ததைப் போன்ற ஒரு செயலாகக் கருதுகின்றோம்.

இதுபோன்ற கருத்து எதிர்காலச் சந்ததியினரை மிகப்பெரிய கொடுமையில் ஆழ்த்தக்கூடிய ஒன்றாகும்.

நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்கள் உரிய நேரத்தில் இந்தப் பிரச்சினையை வெளிக்கொணர்ந்து மக்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தி யாகும்.

தமிழர் தலைவர் வழியில் போராடுவோம்

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் ஒன்று சேர்ந்து நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்களுடைய வழியிலே விடுதலைச்சிறுத்தைகளும் இணைந்து போராடுவோம். வந்துள்ள ஆபத்தைத் தடுப்பதற்காகத்தான் ஆசிரியர் அய்யா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

எம்.பி.க்களும் வற்புறுத்தவேண்டும்

தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 எம்.பி.க்கள் ஒற்றுமையாக இருந்து இட ஒதுக்கீட்டில் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வரக்கூடிய இந்த ஆபத்தை நாடாளுமன்றத்திலே எடுத்துச் சொல்லி தடுத்திட வேண்டும். இதிலே அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய தலைமையிலே இட ஒதுக்கீட்டை சமூகநீதியைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.

தமிழர் தலைவர் உரை

அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய சிறப்புரை வருமாறு:-

உயர் ஜாதிக்கார பார்ப்பன ஆதிக்கத்தினர் இட ஒதுக்கீட்டை ஒழிக்க தந்திரமான முறையில் இறந்த சடலத்திற்கு அலங்காரம் செய்வது போன்ற காரியத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழகம் என்றைக்கும் முதலிடம்

இட ஒதுக்கீடு, சமூக நீதி என்றால் என்றைக்கும் தமிழகம் தான் முதலிடம் வைத்து வழிகாட் டியாக இருந்து கொண்டிருக்கின்ற மாநிலமாகும்.

இன்றைக்கு 47 கல்வி நிறுவ னங்களில் இட ஒதுக்கீட்டை மூடியிருக்கிறது மத்திய அரசு. கதவு முழுவதும் ஓட்டையைப் போட்டு வைத்து விட்டு கதவை சாத்தி வைத்திருக்கின்றோம் என்றால் அது முறையானதா? அதை ஏற்க முடியுமா?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சகோதரர்களை பிரித்தாளும் முயற்சியில் உயர் ஜாதிக்கார ஆதிக்க வர்க்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரின்
கண்களில் மிளகாய்ப் பொடி


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் துவியுள்ளனர். இவர்களிடமும் பிளவு மனப்பான்மையை உருவாக்குகின்றனர்.

47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உள்ளே புக முடியாது. சுதர்சன நாச்சியப்பன் தலைமை யிலான பரிந்துரையை உதா சீனப்படுத்தினர். 2008 டிசம்பர் 23இல் மாநிலங்களவையில் இந்த இட ஒதுக்கீடு மசோதா அவசர அவசரமாக - ஒதுக்கப்பட்டு இரண்டே நிமிடங்களில் நிறை வேற்றப்படக் காரணம் என்ன?

செய்த கோளாறுகள் என்னென்ன?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களின் நலத் துறைக்கு இந்த மசோதா அனுப்பப்படவில்லை. பழங்குடி யினரின் அமைச்சகத்திற்கும் இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட வில்லை. தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகச் செயல்பட்டு வரும் சட்டரீதியான அமைப்பான பூட் டாசிங் தலைமையிலான தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு இந்த மசோதா கொண்டு செல்லப்பட வில்லை.

இது ஒரு அப்பட்டமான சட்ட மீறலான செயலாகும். மேலும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கண்களுக்குக் கூட இது காட்டப்படவில்லை.

இந்திய அரசமைப்பின் சட்டம் 338இன் துணைப் பிரிவு 9இன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கொள்கைகளை உருவாக்கும்பொழுது மத்திய மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் கருத்தினைக் கேட்கவேண்டும்.

இந்த சட்ட நடைமுறையையும் கண்மூடித் தனமாகத் தூக்கி எறிந்துவிட்டு மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது எவ்வளவு பெரிய அநீதி - கொடுமையாகும்.

கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையிலே வை என்பது போல மத்திய அரசு இத்தகைய கொடுமையான செயலை செய்துள்ளது.

மரண அடிபோல்

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மரண அடி கொடுத்துள்ளது. சமூக நீதிக்கு மாபெரும் கேட்டினை மத்திய அரசு செய்துள்ளது.

45 நாள்களுக்கு உள்பட்ட மத்திய, மாநில அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட் டுள்ளது. அவசர காலங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மத்திய மாநில அரசு வேலைக்கான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது.

47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது

அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவைச் சார்ந்த பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக் கீடு கிடையாது. சம்பந்தப்பட்ட துறைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட வில்லை.

சட்டத்தைக் கொளுத்துவோம்

நாங்கள் சொல்லுகின்ற இந்தக் கருத்துக்களை மீறி சட்டத்தை நிறைவேற்றினால் அந்த சட் டத்தை வீதிகளில் போட்டு கொளுத்துவோம் (பலத்த கைதட் டல்).

திராவிடர் கழகம் என்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களைப் பிரித்தாள முடியாது.

அதேபோல கிரிமீலேயர் என்பதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்ட வர்களையும் பிரித்தாள நரித்தந்திரத்தை கையாண்டுள்ளனர்.

தமிழக அரசு விழிப்போடிருக்க வேண்டும்

தமிழக அரசும் இதில் விழிப்போடு இருந்து கண்காணித்து இந்த ஆபத்துகளைத் தடுத்திட வேண்டும். தட்டினால் திறக்கப்படும் என்கிறார். அப்படித் திறக்கா விட்டால் கதவுளை உடைத்தெறியவும் நாங்கள் தயங்கமாட் டோம்.

சமூக நீதி என்பது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சலுகை அல்ல, அது ஏதோ பிச்சை அல்ல. அது உரிமை; உரிமை.

அந்த உரிமையை நிலைநாட்டுகின்ற வரை திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்.

சுப. வீரபாண்டியன்

அடுத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தனது உரையில், நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் சொன்னது போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை என்றைக்கும் பிரிக்கவே முடியாது. அவர் சொன்னது போல கத்தரிக்கோலின் இரு கத்திகளிடையே சிக்கினால் என்ன ஆகும் என்பதை உயர் ஜாதியினர் எண்ணிப் பார்க்க வேண்டும். எப்பொழுதும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். மிகச் சரியான நேரத்தில் நம்முடைய தமிழர் தலைவர் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளார் என்றார்.

முன்னதாக க.பார்வதி, செ.வை.ர. சிகாமணி, கோ.வீ. ராகவன், ஆவடி இரா.மனோகரன் ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை அரை மணி நேரம் முழங்கினர்.


----------------- நன்றி:-"விடுதலை" 24-2-2009

4 comments:

Unknown said...

தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப் பட்டோரும் ஒற்றுமையாக இருந்து இச்சதியை முறியடிக்க வேண்டும்.

Anonymous said...

மக்களை அறிவூட்டுவதை விடுத்து இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் வீண் தான். சும்மா போட்டோவுக்கு போஸ் குடுக்கத் தான் சரி.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு

தமிழ் ஓவியா said...

//pukalini கூறியது...

மக்களை அறிவூட்டுவதை விடுத்து இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் வீண் தான். சும்மா போட்டோவுக்கு போஸ் குடுக்கத் தான் சரி.//

மிகச் சிறப்பான கண்டுபிடிப்பு. இதுக்கெல்லாம் ஆஸ்கார் அவார்டு கொடுக்காமல் வேற எதுக்கோ கொடுக்கிறார்கள்.

யாருடைய உழைப்பையும் விமர்சனம் என்ற பெயரில் கொச்சைப்படுத்தாதீர்கள் புகழினி