Search This Blog

16.2.09

இந்து மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டுமென்பது மாபெரும் முட்டாள்தனமாகும்


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க".

என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

------------------------------------------------------------------------------

9. மதம்


இந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை
உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம்
மக்கள் உணர வேண்டுகிறேன்.


தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர,
அதற்கு வேறு காரணமோ, ஆதாரமோ, இல்லை. தீண்டாமை என்பது ஒரு சாதியானை மற்றொரு சாதியான் (மனிதனுக்கு மனிதன்) தொடக் கூடாது என்பதற்குத்தான் நாம்
பயன்படுத்துகிறோமே ஒழிய மற்றெதற்கு பிரஸ்தாப தீண்டாமையைப் பயன்படுத்துகிறோம்? அதுவும் அப்படிப் பயன்படுத்துவதும் இந்துக்கள் என்னும் இந்து மதத்தாருக்குள் இருந்து வருகிறதே - நடந்துவருகிறதே ஒழிய, மற்ற யாருக்குள் இருந்துவருகிறது?


சிந்தித்தால் விளங்கும்

ஆகவே, தீண்டாமை இந்து மதத்தின் காரணமாக, இந்துக்கள்
என்பவர்களுக்கும் மாத்திரம் சாதி காரணமாக மேல்சாதி என்பவர்
களுக்கும், கீழ்சாதி என்பவர்களுக்கும் மாத்திரம் சாதி காரணமாக
இருந்து வரும் காரியமே தவிர, தீண்டாமை மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை மக்கள் நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

ஆகவே, சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய
வேண்டும் என்பதும், இந்து மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை
போக வேண்டுமென்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர,
சிறிதும் அறிவுடமையாகாது என்பது எனது கருத்து.


நமது வாழ்வில் சாதியும், மதமும் இன்று பார்ப்பானிடமும்,
கோயிலினிடமும், அதாவது “பிராமணர்களிடமும் கடவுளிடமு” ந்தான்
இருந்து வருவதை நல்ல வண்ணம் உணருகிறோம். அதாவது,
கடவுளால் தான் நாம் இந்துவாகிறோம். பார்ப்பானால்தான் நாம்
சூத்திரனாகிறோம்.


நாம் ஒரு இந்து என்றால், நமக்கு நாம் கண்ணால் பார்க்க
முடியாத காதால் கேட்க முடியாத வேதம், சாஸ்திரம்
ஆகியவைகளையும் - நம்மை இழிமகனாக்கும் தர்மங்களையும்,

பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாக சரஸ்வதி, லட்சுமி பார்வதிகளையும், மகான்களையும், அவதாரங்களாகிய கந்தன் - கணபதி, ராமன் - கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்தைகளையும் இவற்றைக் குறிக்கும் புராணங்கள், இதிகாசங்கள் நெற்றிக்குறிகள் முதலியவைகளையும் நம்பியாக வேண்டும்.



கயிறு திரிப்புக் கதைகள்

இவ்வளவுதானா! மற்றும் பாகவதம், விஷ்ணு புராணம், பக்த விஜயம், பெரிய புராணம், ஆழ்வார்கள் நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும். பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோவில் குள தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமுத்ரிகாலட்சணம், நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய் - பூதம், மந்திரம் - சாந்தி கழித்தல், சூரியன் கதை, கிரகணக் கதை முதலியவைகளையும் நம்ப வேண்டும்.


இவற்றில் எதை நம்பாவிட்டாலும் நாம் இந்துவாக மாட்டோம். இந்த நிலையில் உள்ள இந்துவும் சூத்திரனுமாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொன்னால், அதில் சாதியோ சாத்திர அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்து மதமல்ல; பார்ப்பன மதம்!

ஆகவே, மானமுள்ள அருமைத் தமிழ் மக்களே! நமக்கு உண்மையில் தீண்டாமையென்னும் சாதிக் கேடும் இழிவும் நீங்க வேண்டுமானால், “இந்து” மதத்தை விட்டு நீங்கியாக வேண்டும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை.

இந்து மதம், இந்து சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பன சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகுமேயல்லாமல் - தமிழ்நாட்டில் தமிழனுக்கு என்று சூத்திரன் - தீண்டப் படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது; மாற்றமடையவும் முடியாது.


எது வேண்டும்?

ஆகவே, தமிழன் தனக்கு, இந்த மதம் வேண்டுமா, சூத்திரப் பட்டமும் தீண்டாமையும் ஒழிய வேண்டுமா என்பதைப் பற்றி அறிவோடு, மானத்தோடு, நல்ல வண்ணம் சிந்தித்து, முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மானம் பெறுவதும், ஈனசாதித்தனம் ஒழிவது அவசியம்

எனப்பட்டால் -

முதலாவதாக, நெற்றிக் குறியினை ஒழித்துத் தள்ளுங்கள்.

இரண்டாவதாக, கோவிலுக்கும் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.


மூன்றாவதாக, இந்து மதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள்.


பார்ப்பானை பிராமணன் என்று சொல்லாதீர்கள்.


---------------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 21 - 23

3 comments:

anna said...

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers

Unknown said...

//தமிழன் தனக்கு, இந்த மதம் வேண்டுமா, சூத்திரப் பட்டமும் தீண்டாமையும் ஒழிய வேண்டுமா என்பதைப் பற்றி அறிவோடு, மானத்தோடு, நல்ல வண்ணம் சிந்தித்து, முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.//

மதங்கள் மாயட்டும்! மனிதம் மலரட்டும்!!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ்