Search This Blog

11.2.09

சிதம்பரம் நடராஜர் கோவில் - தீட்சிதர்களின் தனிச் சொத்தல்ல! உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவரம்








(1) சிதம்பரம் சபாநாயகர் கோயிலுக்கு நிருவாக அலுவலரை சட்டப் பிரிவு 45 (1) இன்படி நியமனம் செய்ததை உறுதிப்படுத்தி அறநிலையத்துறை ஆணையர் 31-7-1987 இல் பிறப்பித்த ஆணையை எதிர்த்து பொது தீட்சிதர்களின் செயலாளர் மேல் முறையீடு செய்தார். ரிட் மனு எண். 18249/2006 - தீர்ப்பு நாள் 2-2-2009

ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, நிருவாக அலுவலர் பொறுப்பேற்றுப் பணியாற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் - அதற்குப் பொது தீட்சிதர்கள் எல்லா ஒத்துழைப்பும் அளிக்கவேண்டும் என்ற நீதியரசர் ஆணையிட்டார்.

வழக்கு விவரம்

சபாநாயகர் கோயில் என்பது ஒரு பொதுக் கோயில் - முன்பிருந்த அறநிலைய வாரியம் தனது ஆணை எண். 997 நாள் 8-5-1933 இல் தமிழ்நாடு சட்டம் II- 1927 இன் பிரிவு 6(18) மற்றும் 6(20)களின்படி இம்மாதிரி அறிவித்தது.

இது தனியார் கோயில் என்று அ.வ. 16/ 1933 இல் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் வழக்கு தொடுத்தனர். மாவட்ட நீதிமன்றத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் செய்துகொள்ளப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பொதுக்கோயிலாக அறிவிக்கப்பட்டாலும், செயல்முறைக்கு வராத நிலையில் சட்டப்பிரிவு 65 இன் படிக்கான கோயில் என அரசாணை எண்.894 நாள் 28-8-1951 இல் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் வழக்கு போட்டனர். அரசாணை நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

கோயிலில் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடைபெறுவதையும் நிருவாக முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி, நிருவாக அலுவலர் நியமிக்கப்பட இருப்பதையும் தெரிவித்து ஒரு அறிவிக்கை அரசால் 20-7-1982 இல் வழங்கப்பட்டது. இதனையும் தீட்சிதர்கள் எதிர்த்து 9-8-1983 இல் உயர்நீதிமன்றம் சென்றனர். காரணம் கேட்கும் அறிவிக்கை என்ற அளவில் இதனை எடுத்துக்கொள்ளலாம் என்று உயர்நீதி மன்றம் தெரிவித்து ஆணையிட்டது.

அதன்படி தீட்சிதர்களின் முறையீடுகளை ஆய்ந்து அரசு அவற்றை ஏற்க மறுத்து, கோயிலின் நிருவாகத்தைக் கவனிக்க மட்டுமே நிருவாக அலுவலர் நியமிக்கப்படுகிறார் எனவும், இது தீட்சிதர்களின் உரிமைகளில் குறுக்கீடு செய்வதாக அமையாது என்றும் விளக்கமான ஆணைகளை 31-7-1987 இல் அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்தார்.

நியமிக்கப்பட்ட நிருவாக அலுவலர் 10-8-1987 இல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். எனினும் இந் நியமனத்தை எதிர்த்து மீண்டும் தீட்சிதர்கள் ரிட்மனு 7843/ 1987 தாக்கல் செய்தனர். நியமனம் பற்றி ஏதும் கூறாமல், நிருவாக அலுவலரின் பதவிப் பணிகள் பற்றிய சட்டப்பிரிவு 3 அய்த் தேக்கி வைத்து உயர்நீதி மன்றம் ஆணையிட்டது.

பிறகு 11-2-1997 இல் தீட்சிதர்களின் ரிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மறு ஆய்வு மனு போட்டனர். அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவுக்கு மேல், சட்டப்பிரிவு 114 இன்படி, அரசிடம் சீராய்வு மனு தரலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப தீட்சிதர்கள் கொடுத்த மனுவும் அரசாணை 168 நாள் 9-5-2006 இன்படி நிராகரிக்கப்பட்டது. அந்த ஆணையை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டின் பேரில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீட்சிதர்கள், சட்டப்பிரிவு 28-இன்படி தம் கடமைகளைச் செய்யவில்லை, கணக்குகள் பராமரிக்கவில்லை, கோயிலுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளைக் கணக்கில் கொண்டுவரவில்லை என்கிற காரணங்களால் - கோயிலின் நிருவாகத்தைச் செம்மையாகச் செய்திடும் நோக்குடன் நிருவாக அலுவலர் நியமிக்கப்படவேண்டியது முற்றிலும் அவசியமானது என அரசு தெரிவித்தது.

மதச் சிறு பிரிவினரின் கோயில் (Religious Denomination) என்றும் இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 26 இன்படி, மதச் சிறுபிரிவினரின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்றும் நிருவாக அலுவலரின் நியமனம் தீட்சிதர்களின் மதச்சார்பான செயல்களில் குறுக்கீடு செய்வதாகும் எனவும் தீட்சிதர்களின் தரப்பில் வாதாடப்பட்டது.

நடராசன்கோயில், பொதுக்கோயில் என்றும் மதச்சிறுபிரிவினருக்கானது அல்ல என்றும் அரசுத் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டு - நிருவாக அலுவலரின் கடமைகள் தனியாக வரையறுக்கப்பட்டுள்ள நிலை அமைந்துள்ளதால் - அது தீட்சிதர்களின் உரிமைகளில் தலையிடுவதாக அமையாது என்பதும் எடுத்துக் கூறப்பட்டது.

1885 ஆம் ஆண்டிலேயே, இந்தக் கேள்வி எழுப்பப் பட்டபோது, நீதிபதிகள் முத்துசாமி அய்யரும், ஷெப்பர்டும் 17-3-1890 இல் அப்பீல் வழக்கு 108 / 1888 மற்றும் 159/ 1888 ஆகியவற்றில் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்: பொதுமக்கள் வந்து வழிபடும் கோயிலாகத் தொன்மைக் காலந்தொட்டே இக்கோயில் உள்ளது என்பதும் நடராசன் கோயில் தனியார் கோயில் என்பதற்கு ஆதாரமாக சிறு துளியளவு ஆதாரம் கூடக் கிடையாது என்பதும் இன்றளவும் கூட அனைத்துச் சைவர்களாலும் இக்கோயில் பொதுவான வழிபாட்டிடமாக உள்ளது!

இந்தக் கோயில் மதச் சிறுபிரிவுக்கானது என்றும் அரசமைப்புச் சட்டக் கூறு 26 இன்படி அளிக்கப் பட்ட சிறப்பு உரிமைகளின்படி தீட்சிதர்களுக்கு மட்டுமே முழு ஆதிபத்ய உரிமை உள்ளது எனவும் நிருவாக அலுவலரை நியமித்த செயல் அவ்வுரிமைகளில் தலையிட்டுக் குறுக்கீடு செய்வதாகும் எனவும் வாதிடப்பட்டதற்குத் தீர்ப்பில் விளக்கமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது:

அரசமைப்புச் சட்டக்கூறு 26 இன்படி மதச் சிறு பிரிவு என்பது - மத, அற அமைப்புகளை அமைத்துப் பராமரித்து, தம் மதச்சார்பான செயல்களைத் தாமே கவனித்து, அதற்கான அசையும், அசையாச் சொத்துகளை வாங்கிச் சேர்த்து, அவற்றைச் சட்டப்படி நிருவாகம் செய்து வரும் அமைப்புகளாகும்.

ஆறுமுகசாமி என்பவர் தாம் கோயிலில் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தீட்சிதர்களால் பலமுறை தாக்கப்பட்டும் தடுக்கப்பட்ட நிலை இருப்பதால், இந்த வழக்கில் தம்மையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து ஆணையிடவும் கோரி, இடைமனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

நியமனம் செய்யப்பட்ட நிருவாக அலுவலரின் செயல் அதிகாரங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தம் கோரிக்கை தொடர்பாக ஏதும் செய்ய முடியாதவாறு நிருவாகம் இருப்பதால் தம்மை வழக்கில் இணைத்து வாதாட அனுமதி கோரினார். தேவாரம், திருவாசகம் பாடிட அனுமதி அரசாணை 53 நாள் 29-2-2008 இன்படி வழங்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறி, அதன்படி பாடியபோது தம்மைத் தீட்சிதர்கள் தாக்கினர் என்பதையும் சுட்டிக் காட்டி அவரின் வழக்குரைஞர் வாதாடினார்.

தமிழ் வழிபாட்டுப் பயிற்சி மய்யத்தின் தோற்றுநரும் இயக்குநருமான சத்தியவேல் முருகன் என்பாரும் தம்மை வழக்கில் இணைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்டு மனு தாக்கல் செய்தார்.

1927 ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படியான நிருவாகத் திட்டம் அறநிலைய வாரியத்தின் ஆணை எண். 997 நாள் 8-5-1933 இன்படி வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயிலின் நிருவாகங்களை அரசு அலுவலர் கவனித்துச் செயல்பட அதிகாரங்கள் சட்டப் பிரிவுகள் 3,4,5, 8(அ), 8(ஆ), (8(1) மற்றும் 10 ஆகியவற்றில் அளிக்கப்பட்டு உள்ளன.

கோயில் தீட்சிதர்களின் சொந்தச் சொத்து என்ற தீட்சிதர்களின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது 1936 இல்! கோயில் பொதுவானது என்பதில் எந்த அய்யப்பாடும் கிடையாது.

மதச்சிறுபிரிவினர் தம் சொத்துக்களைச் சட்டப் படி பராமரிக்க உரிமை உண்டு. சொத்துகளைப் பராமரிப்பதும் மதச் சம்பந்தமானவற்றைக் கவனிப்பதும் இருவேறுபட்ட விசயங்களாக உள்ளன. மத சம்பந்தப்பட்ட விசயங்களைக் கவனிப்பது அடிப்படைஉரிமையாகவும் வேறொரு சட்டத்தால் எடுத்துக்கொள்ளப்படமுடியாததாகவும்உள்ளது; ஆனால் சொத்துகளைப் பராமரிப்பதை சட்டம் மூலம் ஒழுங்குபடுத்திட முடியும்.

மதச்சிறுபிரிவு என்பதை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி குறிப்பிடுவதுபற்றி உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் (AIR 1954 SC 282) மற்றும் 1954 SCR 1005 ஆகிய வழக்குகளில் இம்மாதிரி தீர்ப்பு அளித்துள்ளது.:

மதச் சிறுபிரிவு என்பதன் கீழ் மடங்கள் வருமா? அகராதிப்படி மதச் சிறு பிரிவு என்பது, ஒரே பெயரையும் கொள்கை, நம்பிக்கையையும் கொண்டிருக்கும் நபர்கள் ஒன்று சேர்ந்து அமைப்பை ஏற்படுத்தித் தனித்ததொரு பெயரைச் சூட்டிக்கொண்டிருப்பது ஆகும். சங்கராச்சார்யா தனியே மடத்தை நிறுவினார். அவருக்குப் பின் பலபேர் மத ஆசிரியர்களாக வந்து பலப்பல பிரிவுகளை உண்டாக்கிவிட்டனர் என்பதை இன்றளவும் காண்கிறோம். இவை மதச்சிறு பிரிவு என்று அழைக்கப்படலாம். அது போலவே, ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட சிறீவைணவத்தவர் நிச்சயமாகத் தனி மதச்சிறு பிரிவினர் ஆவர்; மாத்வரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களும் அதே மாதிரியே கருதப்படுவர். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி மடங்களை நிறுவியுள்ளனர் என்பதால் இவை மதச் சிறுபிரிவு எனச் சட்டம் கூறும் தலைப்பில் அடங்கும்.

ஆனந்த மார்க்கம்இதே பிரிவில் வருமா என்கிற கேள்வி எழுப்பப்பட்ட போது, உச்சநீதிமன்றம், ஆம்என்றே தீர்ப்பளித்தது. இவர்களும் அரசமைப்புச் சட்டக்கூறின்படிக்கான மூன்று நிபந்தனைகளையும் கொண்டுள்ளனர்.

ராமகிருஷ்ணா மடம் மதச்சிறு பிரிவில் வருமா என்ற வழக்கில் 1995 இல் ராமகிருஷ்ணனின் கொள்கைகளைப் பின்பற்றுவோர் தனி அமைப்பையும் தனிப் பெயரையும் கொண்டு இயங்கி வருவதால் இந்து மதத்தின் தனிச் சிறு பிரிவாகவே கருதப்பட வேண்டும் என்றே தீர்ப்பளித்துள்ளது.

தீட்சிதர்கள் கோயிலில் பூஜை செய்திட உரிமை படைத்தவர்கள். கோயிலில் முழுக் கட்டுப்பாடும் மன்னர்களிடமே இருந்தது. இதற்கான பல ஆதாரங்களை அரசு வழக்குரைஞர் அளித்துள்ளார்.

தீட்சிதர்கள் கோயிலைக் கட்டினர் என்பதற்கும் சிறுபிரிவுக் கோயில் என்பதற்கும் ஆதாரங்களைத் தராத நிலைதான் உள்ளது.

சிரூர் மட வழக்கில் உச்ச நீதிமன்றம், சொத்துகளை வாங்குவதற்கும் சட்டப்படி அவற்றைப் பராமரிப்பதற்கும் என இரு வேறு பிரிவுகள் சட்டத்தில் இருப்பதால், சொத்துக்களைப் பராமரிப்பது என்பது தனியாகவும் மதச்சார்பான காரியங்களைக் கவனிப்பது என்பது தனியாகவும்தான் பிரித்துப் பார்க்கப்பட வேண்டும்; இதில் மதம் என்பதற்கான விளக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விளக்கப்படவில்லை.

அமெரிக்காவில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் மதம் என்பதற்கு, படைத்தவன் பற்றிய தனிமனிதரின் நம்பிக்கை முதலிய விசயங்களையும் வழிபடு முறையையும் மதச் சின்னங்களைப் பெருமைப் படுத்திக் கும்பிடும்முறைகளையும் பொறுத்தது எனக் கூறப்பட்டுள்ளது. இது துல்லியமாகவோ, போதுமானதாகவோ அமைந்திருப்பதாகக் கருத முடியாது. மதம் என்பது நிச்சயமாக தனி நபருடைய அல்லது சமூகத்தினுடைய நம்பிக்கை பொறுத்து தானே தவிர, கடவுள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமல்ல. (Religion is certainly a matter of faith with individuals or communities and it is not necessarily theistic. There are well known religions in India like Buddhism and Jainism which do not believe in God or in any Intelligent First cause. A religion undoubtedly has its basis in a system of beliefs or doctrines which are regarded by those who profess that religion as conducive to their spiritual well being, but it would not be correct to say that religion is nothing but a doctrine or belief. A religion may not only lay down a code of ethical rules for its followers to accept, it might prescribe rituals and observations, ceremonies and modes of worship which are regarded as integral parts of religion, and these forms and observances might extend even to matters of food and dress.)இந்தியாவில், கடவுளை நம்பாத அல்லது கடவுள் சிருஷ்டி செய்தார் என்பதை ஏற்காத பல மதங்கள் - புத்தம், சமணம், போன்ற மதங்கள் உள்ளன. மதம் சில நம்பிக்கை, கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றைப் பின்பற்றுபவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட தளத்தில் உள்ளதே! வாழ்வியல் அறவழிகளை அதனைப் பின்பற்றுவோருக்கு அளிக்க முடியாத - ஆனால் சில சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபடு முறைகள் ஆகியவற்றை அளிக்கக் கூடியதாக மதம் உள்ளது. இவை பின்பற்றுவோரின்உணவு, உடை போன்றவற்றில் கூட தலையிடுவது உண்டு.

மதம் சம்பந்தப்பட்ட அமைப்பையோ, அறக் கட்டளையையோ அமைப்பது மதம், நம்பிக்கை ஆகியவற்றின் ஒரு பகுதி - அவற்றின் நிருவாகம் என்பது மதஞ்சாராத பணி என்பதும் இதனைச் சட்டப்படி ஒழுங்குபடுத்தலாம் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. (It would thus be clear that the right to establish a religious institution or endowment is a part of religious belief or faith, but its administration is a secular part which would be regulatred by law appropriately made by the legislature.)

1962 இல் மற்றுமொரு வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம் (AIR 1961 SC 1402) மதச் சிறுபிரிவு என்பது மதத்திலிருந்து உருவாக வேண்டும் என்று கூறியுள்ளதுடன் மதச் சித்தாந்தங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகின்ற வகையில், பொதுவான நம்பிக்கை, பொது அமைப்பு, மற்றும் தனித்த பெயர், ஆகியவற்றைக் கொண்டு இயங்கவேண்டும்எனவும் வரையறுத்துள்ளது.

காசி விசுவநாத கோயிலுக்கும் உத்தரப் பிரதேச அரசுக்கும் நடந்த வழக்கில் (1997 ளுஊஊ 606) சிவனை வழிபடுவோர் இந்துமதச் சிறுபிரிவினராக முடியாது என்றும் அவர்கள் இந்துக்கள்தாம் என்றும் தெளிவாகக் கூறியுள்ளது.

(In 1997) 4 SCC 606 [Sri Adi Visheshwara of Kashi Vishwanath Temple,Varanasi and others -Vs- State of U.P. and otghers], the Supreme Court held that “believers of Shiva form of worship are not a denomination sect or section of Hindus, but they are Hindus as such.

எனவே, பெஞ்ச் தீர்ப்பு( 1952(1) MLJ 557 உரைகள் உச்ச நீதிமன்றத்தின் சிரூர் மடத் தீர்ப்பு வாசகங்களின் அடிப்படையில் காணப்படவேண்டும். (AIR 1954 SC 282 மற்றும்1005) ஆகவே நிருவாக அலுவலரை நியமிப்பது தீட்சிதர்களின் உரிமைகளில் குறுக்கிடுவதாக ஆகும் என்கிற டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு இனியும் நிலைக்க முடியாத ஒன்றாகும்.

அரசமைப்புச் சட்டக் கூறு 26 இன்படி தீட்சிதர்கள் இரண்டு உண்மைகளை எண்பிக்க வேண்டும். (1) கோயிலை அவர்கள் கட்டினார்கள். (2)கோயிலை அவர்கள் பராமரிக்கிறார்கள் என்கிற இரண்டையும் தீட்சிதர்கள் நிரூபிக்க வேண்டும். ஆனால் ஒருசிறு ஆதாரம் கூட தீட்சிதர்களால் கோயில் கட்டப்பட்டது என்பதற்குக் காட்டப் படவில்லை.

இந்தக் கோயிலைச் சோழப் பேரரசு கட்டியதாக வித்வான் கே. வெள்ளைவாரணன் எழுதிய தில்லைப் பெருங்கோயில் வரலாறு எனும் நூல் கூறுகிறது.

ஆதித்தச் சோழன் கி.பி. 871 முதல் 907 வரை ஆண்ட காலத்தில் சிதம்பரம் கோயில் விமானத்தில் பொன்ஓடு வேய்ந்தான். இத்தகவல் திருத்தொண்டர் திருவந்தாதி நூலில் நம்பியாண்டார்நம்பி 11 ஆம் நூற்றாண்டில் எழுதியுள்ளார்.

கோயிலின் முதல் சுற்றுப் பாதை (பிரகாரம்) விக்கிரம சோழ திருமாளிகை என்றும், இரண்டாம் சுற்றுப்பாதை குலோத்துங்க சோழன் திரு மாளிகை என்றும் மூன்றாம் சுற்றுப்பாதை தம்பிரான் திருவீதி என்றும் மேலகோபுரம் குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் எனவும் அழைக்கப் படுவதாகத் தென் இந்தியக் கல்வெட்டு ஆய்வு எண் 22 தெரிவிக்கிறது. சோழ, பாண்டிய, பல்லவ, விஜய நகர மன்னர்கள்தாம் கோயிலின் பல பணிகளைச் செய்துள்ளனர்.

மதப்பின்பற்றலும் மதம் சாராத செயல்களும் உச்சநீதிமன்றத்தின் வழக்கு (1997-98 SCC 422) ஒன்றின் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பபட்டுளள்ளது - பணம் திரட்டுவதும் காணிக்கை பெறுவதும் மதம் சார்ந்தவை. கீதையில், எவர் ஒருவர் இலையோ, பூவோ, பழமோ, நீரோ எதை எனக்கு அளித்தாலும் நான் அவற்றை ஏற்றுக் கொள்வேன் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, காணிக்கைகளைப் பெறுவதும் அதனைப் பல்வேறு பராமரிப்புச் செயல்களுக்குப் பிரித்தளிப்பதும் மதம் சாராதவை.

(The religious practice ends with these offerings. Collection and distribution of these offerings or retention of a portion of the offerings for maintenance and upkeep of the temple are secular activities.)

ஆந்திரப் பிரதேசத்தில் லட்சுமணவாதேந்திரலு என்பாருக்கும் மாநில அரசுக்கும் நடந்த வழக்கு ( 1996-8 ளுஊஊ 705) ஒன்றின் தீர்ப்பில் மடத்தின் வருமானங்களை மடாதிபதி தன் குடும்பத்திற்கும், மதுவுக்கும் மங்கையர்க்கும் செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நிலையில் அதனை ஒழுங்கு படுத்தச் சட்டம் கொண்டு வந்தது மதம் சாராத செயல்களே எனத் தெளிவாக உள்ளது.

இத்தகைய வகையில் பிரித்துக் கூறப்பட்டவை, சேஷம்மாள் வழக்கு என்று அறியப்படும் வழக்கிலும்

உச்சநீதிமன்றத்தால் தெளிவாக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டக்கூறு 25,26 இல் அளிக்கப்பட்டு உள்ள மதஉரிமை என்பது, மதம் சாராத நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டம் செய்திட அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை உள்ளடக்கியதே!

எனவே, இவ்வாறெல்லாம் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள தீர்ப்பு முடிவுகளின் அடிப்படையில் மதம் சாராத செயல்பாடுகள் சட்டப்படிக்கான கட்டுப்பாட்டுக்குட்பட்டவை. எனவே சிதம்பரம் தீட்சிதர்கள் மதச்சிறுபிரிவு என வகைப் பாட்டுக்குள் வரமுடியாதவர்கள். எனவே நிருவாக அலுவலரின் நியமனம் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது அல்ல. அத்தகைய வாதம் சரியானதல்ல, அர்த்தம் அற்றதும்கூட.

(When examined in the light of the well-settled principles, Podhu Dikshidars are not entitled to the protection in particular clauses (b) and (d) of Article 26 of Constitution as ‘religious denomination’ in the matter of management, administration and governance of the temple under the Act. As such appointment of Executive Officer is not ultra vires the Article 25 and 26 of Constitution of India. The contention that appointment of Executive Officer is violative of Article 25 (b) and (d) is untenable and devoid of substance.)

(1) தீட்சிதர்கள் 2.2 லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள தங்கக்காசுகளைக் கருவூலக் கணக்கில் காட்டவில்லை என்பது கோட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் உதவி ஆணையரால் கண்டு பிடிக்கப்பட்டது. (2) நகைளை அழித்துப் புதிதாகச் செய்தபோது 860 கிராம் தங்கம் இழப்பு (3) தங்கமாகக் காணிக்கை அளிக்கப்பட்டது வரவில் காட்டப்பட வில்லை என்கிற பெருத்த முறைகேடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

கோயிலுக்குச் சொந்தமான 396-37 ஏக்கர் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுச் சரியான முறையில் வருமானம் பெறாத தீட்சிதர்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கோயிலில் உள்ள கடைகளிலிருந்து வரும் வருமானத்திற்கும் நுழைவுக் கட்டணம், ஆராதனைக் கட்டணம் ஆகியவற்றுக்கு தொகை ஏதும் குறிப்பிடாத வெற்றுத் துண்டுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இவை வருமானக் கணக்கில் சரிவரக் காட்டப்படாத நிலை உள்ளது.

இந்நிலையில் நிருவாக அலுவலர் இவற்றை ஒழுங்குபடுத்தி முறையாகச் செயல்படுவதற்காகத் தானே தவிர, தீட்சிதர்களைக் கோயிலிலிருந்து தனிமைப்படுத்துவதற்காக அல்ல.

(Executive Officer was appointed only to streamline the administration of the temple and not to dislocate Podhu Dikshidars from the temple.)

சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயிலின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய்என உள்ளதையும், சிதம்பரம் சபாநாயகர் கோயிலில் வெறும் 37 ஆயிரத்து 199 ரூபாய் மட்டுமே என்பதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி இத்தொகையில் 37 ஆயிரம் ரூபாய் செலவு என்றும், 199 ரூபாய் மிச்சம் என்றும் எடுத் துக்காட்டி, இடைமனுதாரரின் வழக்குரைஞர் வாதாடினார். முதல் நோக்கிலேயே, கணக்குகள் சரிவரப் பராமரிக்கப்பட வில்லை என்பதையே இது காண்பிக்கிறது.

அரசு, மதம் சாராத செயல்பாடுகளைச் செய்திட முனைகின்ற நிலையில் இடை மனுதாரர் வழிபாட்டு உரிமை கோருகிறார் என்பதை எடுத்துக் காட்டினார். அவருக்கு வழிபாடு செய் வதற்கு எல்லா உரிமைகளும் உண்டு. எனவே அவரும் வழக்காடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்.

தீட்சிதர்கள் ஏராளமான வழக்குகளைத் தொடுத்துக் கொண்டே 1982 முதல் நிருவாக அலுவலர் செயல்படமுடியாத நிலையை உருவாக்கி ரிட் மனுவுக்கு மேல் ரிட் மனுக்களாகத் தாக் கல் செய்து பிரச்சினையை இழுத்தடித்துக் கொண்டே உள்ளனர். இனிமேலாவது, கோயிலின் சொத்துக்கள் முறையான நிருவாகத்திலும் பராமரிப்பிலும் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவில் ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கோயில் நிருவாகமும் பராமரிப்பும் சீராக நடைபெறுவதற்காகக் கீழ்க்காணும் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

* நிருவாக அலுவலருக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கி சபாநாயகர் கோயிலை அறநிலையச் சட்டப் பிரிவுகளின்படியும் இணைப்பு எண். 52754 /82/எல் 1 நாள் 5-8-1987 இல் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படியும் பராமரிக்க வேண்டும்.

* தீட்சிதர்கள் நிருவாக அலுவலருக்கு உதவி, கோயில் நிருவாகத்தில் விதி முறைகளின்படி ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



---------------- நன்றி: "விடுதலை" 11-2-2009

5 comments:

போலி மதச்சார்பின்மை said...

poli matha saarpinmai pesum naaikale! cristeena pathiyum muslimma pathiyum mudugja ethavathu solli paarungada!!!!!!1

Unknown said...

மதம் என்ற பெயரில் அருவருக்கத்தக்க வகையில் பின்னூடம் இட்டிருக்கும் வெறியனை கண்டிக்கிறேன்.

மதவாதிகள் இதை ஏற்றுக் கொள்கிறார்களா?

தமிழ் ஓவியா said...

மதத்தின் கருத்தை கண்டித்த தமிழ் அவர்களுக்கு நன்றி.

நமது வலைப்பூவில் இஸ்லாம் கிறித்துவ மத மூடநம்பிக்கைகளை விமர்சித்து கட்டுரைகள் வந்துள்ளது அதைலெல்லாம் படிக்காமல் அரைகுரையாக புரிந்து கொண்டு அருவெறுப்பாக பின்னூட்டம் இடும் மதத்தின் தராதரம் எப்படிப்பட்டது என்பதை ,அப்பின்னூட்டத்தைப் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

நன்றி

Unknown said...

சிதம்பரம் கோயிலில் இவர்களது ஆட்டம் தாங்க முடியாதது. நியமிக்கப்படும் நிர்வாக அலுவலர் சிறப்பாக செயல்பட வேண்டும், இல்லையெனில் இவர்களது ஆட்டம் தொடரும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கே.வி.ஆர்