Search This Blog

5.2.09

ஈழத் தமிழர் வாழ்வுரிமையும் - நமது கடமையும்!




உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று

இலங்கையில் நடைபெறும் போரைத் தடுத்து நிறுத்த
அய்.நா. போதிய அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும்

சிதம்பரம் கோயிலை அரசு கட்டுப்பாட்டுக்குக்
கொண்டு வந்தமைக்காகப் பாராட்டு

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்




5.2.2009 வியாழன் காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடல் - துரை. சக்ரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம்

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகத் தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர் முத்துக்குமார் மறைவிற்கு இக்கூட்டம் தன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அதுபோலவே மலேசியாவில் வாகனத்தில் பாய்ந்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர் ஸ்டீபன் ஜெகதேசன் மறைவிற்கும் இக்கூட்டம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதுபோன்ற தற்கொலைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று எல்லாத் தரப்பினரையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 2 (அ):

ஈழத் தமிழர் வாழ்வுரிமையும் - நமது கடமையும்!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக மேற்கொள்ளப்படவேண்டிய செயல் முறைகள் குறித்து தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வரவேற்று, அவற்றிற்கு ஆதரவு தெரிவிப்பது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 2 (ஆ):

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, மலேசியா போன்ற நாடுகள் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் காட்டும் ஆர்வம், அக்கறைகூட இந்திய அரசு ஆக்க ரீதியான முறையில் காட்டவில்லையே என்கிற அதிருப்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் இருந்து வருவதை மத்திய அரசுக்கு இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. போரை நிரந்தரமாக நிறுத்திட, உளப்பூர்வமாகச் செயல்படுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்தக் காலகட்டத்தில் நிரந்தரப் போர் நிறுத்தமும், அரசியல் ரீதியான தீர்வும் தான் முதன்மையானது என்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டுவதுடன், விடுதலைப்புலிகளைப் புறக்கணித்துவிட்டு பேச்சுவார்த்தை என்பதோ, அரசியல் தீர்வு என்பதோ நடைமுறைக்கு ஒத்துவராத - பயன்படாத ஒன்று என்பதையும் இக்கூட்டம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2 (இ):

தமிழ்நாட்டின் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் முற்றிலும் விரோதமாக செயல்படுவோருக்கு கேடயமாக அமைந்திருப்பதையும் இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடக்க முதலே இப்பிரச்சினையில் தீர்க்கமான முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்நிலை தொடரும் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

கலைஞர் தலைமையில் உள்ள ஆட்சி தமிழகத்தில் இருக்கின்ற காரணத்தினால்தான், ஈழத்தமிழர் வாழ்வுரிமை பற்றிப்பேசவும், கருத்துத் தெரிவிக்கவும், போராடவும், அறப்போர் நடத்தவும் வாய்ப்பு உள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

அத்துடன், முதல்அமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சிகள் தொடர் முயற்சியாகும் நிலையில், அரசியல் கண்ணோட்டத்துடன் குறை கூறி, கொச்சைப்படுத்தினால் ஈழத்தமிழர்ப் பிரச்சினைக்கான விடிவு தள்ளிப் போகுமே தவிர, உரிய பலன் ஏற்படாது என்பது வெளிப்படையாகும்.

கூட்டணி அரசியலை உள்ளே வைத்து, வெளியே ஈழப்பிரச்சினையை அணுகுவது அப்பாவி மக்களைத் திசை திருப்புவதாகும்.

உலக நாடுகளின் கவனம் ஈழத்தமிழர்ப் பிரச்சினையின் பக்கம் திரும்பியிருப்பதும், அண்மையில் தாம்பரம் விமானப் பயிற்சிக் கூடத்திலிருந்து சிங்கள ராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப் பட்டதற்குமான காரணம் திமுக ஆட்சியில் இருப்பதால்தான் என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

தீர்மானம் எண் 2 (ஈ):

இலங்கையில் சிங்கள இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கு மிடையே நடக்கும் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இனப் படுகொலைக்கு ஆளாவதைத் தடுத்து நிறுத்த போரைக் கைவிடவேண்டும் என்றும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் பிரிட்டீஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலி பேண்ட் மற்றும் உலக நாடுகள் விடுத்த வேண்டுகோளின்படி, போரினை உடனடி யாக நிறுத்திட, அய்.நா. தேவையான முயற்சிகளை மேற்கொண்டு, இலங்கைத் தீவில் அமைதி மற்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நாட்ட இலங்கை அரசுக்குப் போதுமான அழுத்தத்தைக் கொடுக்குமாறு திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3:

சிதம்பரம் நடராசன் கோயிலை அரசு
நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தமைக்குப் பாராட்டு

சிதம்பரத்தில் உள்ள நடராசன் கோயில், ஒரு பொதுக்கோயில். தீட்சதர்களின் தனிச் சொத்தல்ல என்று கி.பி. 1888-லேயே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சர்.டி. முத்துசாமி அய்யர், ஜஸ்டீஸ் ஷெப்பர்டு ஆகியோர் கொண்ட "பெஞ்ச்" (ஏ.எஸ். அப்பல் 108, 159/1888) வழக்கில் தீர்ப்புக் கொடுத்தும், கடந்த 121 ஆண்டுகளாகத் தொடர்ந்து, சிதம்பரம் தீட்சதர்கள் தங்களது செல்வம், செல்வாக்கு மூலம் நடராசன் கோயில் தங்கள் வசமே இருக்கும் வண்ணம் நீதிமன்ற நடவடிக்கைகள் பல ஆட்சி களின் ஆதரவு பெற்று தங்கள் ஆதிக்கத்திலேயே வைத்திருந்தனர்.

பொதுமக்கள், தமிழர் அமைப்புகள், திராவிடர் கழகம் போன்றவை - பல பக்தர்கள் உள்பட பலரும் வற்புறுத்தியதை ஏற்று (எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த காலத்தில்) சிதம்பரம் கோயில் நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது - அதற்கு சென்னை - உயர்நீதிமன்றம் சென்று தீட்சதர்கள் தடை ஆணை வாங்கிவிட்டனர்.

இதன் பிறகு கலைஞர் அரசால் மேல்முறையீடு செய்யப்பட்டு, வழக்கு நடத்தி, நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். அது செல்லாது என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் சென்று நடத்திய வழக்கில், (மனித உரிமை பாதுகாப்பு மய்யம் என்ற அமைப்பும் வழக்கில் தன்னை இணைத் துக் கொண்டது (Implead) ஜஸ்டீஸ் பானுமதி அவர்கள் வழங்கிய தீர்ப் பின்படி, அது பொதுக்கோயில் என்றும், அதில் தவறுகள் ஏற்படாமலி ருக்க, கண்காணிக்க இந்து அறநிலையப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரி நியமனம் செல்லும் என்றும், அதுபோலவே, ஆறுமுகசாமி போன்ற பக்தர்கள் கோயிலுக்குள் தேவாரம், திருவாசகம் பாடலாம் என்றும் தீர்ப்பில் தெளிவாகக் கூறி, ஒரு வாரத்திற்குள் உடனே கோயில் நிர்வாகத்தை ஏற்று இந்து அறநிலையத் துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டதையொட்டி, உடனடியாக அதன் நிர்வாகத்தினை ஏற்று சிதம்பரம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்கும் நிலையை உருவாக்கிய கலைஞர் ஆட்சியின் கடமை தவறாத செயலைப் பாராட்டி, அறநிலையப் பாதுகாப்பு அமைச்சர், ஆணையர் முதலிய அனைவரும் துரிதமாக செயலாற்றியமைக்காகவும், இச்செயற் குழு பாராட்டுகிறது. இந்தப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தியும், வழக்கு மன்றம் நாடியும் ஒத்துழைத்தவர்களுக்கும் இக்கூட்டம் தன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 121 ஆண்டுகளாக இருந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணும் வகையில் நடுநிலையோடு தீர்ப்பைத் தந்த மாண்புமிகு ஜஸ்டீஸ் திரு. பானுமதி அவர்களுக்கு இச்செயற்குழு பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறது.

-------------------- நன்றி:-"விடுதலை" 5-2-2009