Search This Blog

17.2.09

சகிக்க முடியாத "ஆபாசமாகும்!"

15 ஆவது மக்களவைத் தேர்தல் இரண்டு, மூன்று மாதங்களில் வரவிருக்கிறது. மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு அதற்கான பூர்வாங்கப் பணியில் தங்களை மூழ்கடித்துக் கொண்டு இருக்கின்றன.

மூன்று அணிகள் என்ற நிலைப்பாடு இருக்கிறது.

1. காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)

2. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)

3. இடதுசாரிகள் முயற்சியில் உருவாவதாகக் கூறப்படும் ஒரு அணி


காங்கிரஸ் தலைமையிலான அணி என்பது மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகயிருக்கும் என்று அறியப்படுவதாகும்.

பா.ஜ.க. தலைமையிலான அணி மதச்சார்பின்மை என்பதைக் கொள்கை ரீதியாகவே ஏற்றுக்கொள்ளாத - இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க வாலைச் சுழற்றிக்கொண்டிருக்கும் அணியாகும்.

இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் மதச் சார்பற்ற தன்மையில் நம்பிக்கை கொண்டவர்களே!

இதில் மூன்றாவது அணியின் முயற்சிகள் எந்த அளவு சாத்தியப்படக் கூடியவை என்பது கேள்விக்குறியாகும்.

மூன்றாவது அணி மதச்சார்பின்மையை முன்னிறுத்தி மக்களிடத்தில் அதன் பலனைத் தானே அனுபவிக்கும் என்று கூற முடியாது. மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் அக் கட்சிக்குக் கணிசமான இடங்கள் கிடைத்தாலும், மற்ற மாநிலங்களில் அதன் பிரச்சாரம் காங்கிரஸ் செல்வாக்கைக் குறைக்குமானால், அதன் பலன் இரண்டாவது அணியான பா.ஜ.க.விற்கே சாதகமாக ஆகக்கூடும்.

அகில உலக அரசியலையே புரட்டி எடுக்கக்கூடிய இடதுசாரிகளுக்கு இந்த மதிப்பீடு தெரியாமல் இருக்க முடியாது என்பது உறுதியே!

பாரதீய ஜனதாவின் செயற்குழுக் கூட்டம் நாகபுரியில் அண்மையில் கூடி தங்களின் ராமன் கோயில் கட்டும் முழக்கத்தைக் கையில் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.

கோரக்பூரில், ராஷ்ட்ர ரக்ஷோ விஜய் சங்கல்பட் பேரணியில் பங்கேற்ற எல்.கே. அத்வானி மிக வெளிப்படையாகவே தேர்தல் வெற்றிக்காக ராமன் கோயில் கட்டுவதைக் கையில் எடுத்துக் கொள்ளப் போவதாக வெட்ட வெளிச்சமாக அறிவித்துள்ளார்.

அதைக் கையில் எடுத்துக்கொண்டதால்தான் மத்தியில் ஆட்சி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அது உண்மையாகவிருக்கும் பட்சத்தில், மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் அயோத்தியில் ராமன் கோயிலை ஏன் கட்டவில்லை? என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

இதில் மிகக் கவனமாகச் சிந்திக்கவேண்டிய ஒன்று இருக்கிறது. 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதி இடிப்பின் குற்றப்பத்திரிகையில் முதலாவதாக இருக்கக்கூடியவர் எந்தத் துணிவில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று கூறுகிறார்?

இன்னொரு மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தைத் தலைமை தாங்கி இடித்தவர் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்பது எவ்வளவு கடைந்தெடுத்த அநாகரிகம்!

இந்தியத் துணைக் கண்டத்து மக்களுக்கே இது மாபெரும் தலைக்குனிவு அல்லவா?

இதில் இன்னொன்றும் கவலைப்படவேண்டிய ஒன்று இருக்கிறது. 17 ஆண்டுகளுக்குமுன் இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கு இதுவரை முறையாக விசாரிக்கப்படாமலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்படாமலும் இருந்தது - இருப்பது - இந்தியாவில் நிர்வாகமும், நீதித்துறையும் எவ்வளவு மதிப்பிழந்து போயிருக்கிறது என்பதற்கான அப்பட்டமான அடையாளங்களாகும்.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு - மறுக்கப்பட்ட நீதி என்றெல்லாம் பொதுவாகச் சொல்லப்படுவதில் ஒன்றும் குறைச்சலில்லை. ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியமாகும்.

மேலும் ஒன்று - உலகமே எதிர்பார்க்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து நடத்துவதற்கு அத்வானியோ - அவர் அமைப்பைச் சேர்ந்தவர்களோ எந்த அளவு ஒத்துழைப்பு நல்கினார்கள் என்பதும் முக்கியமானதாகும்.

சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து நுழைந்து தப்பிக்கும் அற்பமான வழிமுறைகளையும் கையாண்டுள்ளனர்.

எந்த வகையிலும் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக வருவதற்குக்கூடத் தகுதியற்றவர்கள், ஆட்சியைப் பிடிக்கப் போவதாகக் கூறுவதெல்லாம் சகிக்க முடியாத ஆபாசமாகும்.



---------------- நன்றி: "விடுதலை" 17-2-2009

3 comments:

Unknown said...

//450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதி இடிப்பின் குற்றப்பத்திரிகையில் முதலாவதாக இருக்கக்கூடியவர் எந்தத் துணிவில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று கூறுகிறார்?

இன்னொரு மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தைத் தலைமை தாங்கி இடித்தவர் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்பது எவ்வளவு கடைந்தெடுத்த அநாகரிகம்!//

அநாகரிகம் அரசியலில் ஜகஜமாகிப் போய் வெகுநாளாகிவிட்டது.

வாக்களிக்கும் மக்கள் சிந்தித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

Unknown said...

//17 ஆண்டுகளுக்குமுன் இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கு இதுவரை முறையாக விசாரிக்கப்படாமலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்படாமலும் இருந்தது - இருப்பது - இந்தியாவில் நிர்வாகமும், நீதித்துறையும் எவ்வளவு மதிப்பிழந்து போயிருக்கிறது என்பதற்கான அப்பட்டமான அடையாளங்களாகும்.//


மனிதனின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அங்கேயும் இந்த நிலை என்றால்........

ஒண்ணும் புரியவில்லை

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ்

திருநாவு